MPK 26
பிள்ளைகள் இருவரும் வருவதற்கு முன்பு வரை ஏகப்பட்ட உளைச்சல்களின் பிடியில் சிக்கியிருந்தாள் சாதனா. ஆனால் அவர்கள் பாதம் பட்ட மறுநொடியில் இருந்து அவள் மனதின் அலைப்புறுதல்கள் எல்லாம் எங்கோ காணாமல் போயிருந்தன.
இரண்டு பேரையும் கைகளுக்குள் வைத்திருப்பதென்னவோ இரண்டு பேரன்புப் பெட்டகங்களை தனக்குள் பொதிந்து வைத்திருப்பது போல் ஒரு உவகை ஊற்றைப் பெருக்கெடுக்க செய்தது.
அந்த சுகமான சொப்பனத்தில் அவள் மிதக்க அவள் கன்னத்தைத் தட்டியது மயூவின் பிஞ்சுக் கரமொன்று.
கண் திறந்து பார்த்தவள், “என்னடா?” என்றாள் மென்மையிலும் மென்மையாக.
“சாப்பிடாம நித்திரை கொள்ளுறீங்கள் அன்ட்ரி. சாப்பிட்டுப் பிறகு படுங்கோவன்.”
“ஓம் அன்ட்ரி. மத்தியான மருந்து இருக்காம் எண்டு அப்பம்மா சொன்னவா. சாப்பிட்டு மருந்தைப் போட்டுட்டுப் பிறகு நித்திரை கொள்ளுங்கோ. நான் பிளேட்டுல போட்டுக் கொண்டு வந்து தரவோ சாப்பாட்டை?” மகி கேட்க, கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு. உணர்ச்சிப் பெருக்கோடு இருவர் உச்சியிலும் முத்தம் வைத்தவள்,
“நானே போட்டுச் சாப்பிடுறன் செல்லம். பிள்ளையளுக்கு வீடு புதுசல்லோ, எங்க என்ன இருக்கெண்டு தெரியாது.” என்று மெல்ல எழுந்து கொண்டாள்.
பசி இல்லாவிட்டாலும் மருந்து போட்டுக்கொள்ள வேண்டியும் அந்த இரு மழலைகளின் அக்கறையிலும் வழமைக்கும் அதிகமாகவே சாப்பிட்டவள், அவர்கள் மறுக்க மறுக்க ஆளுக்கு இரண்டு வாய் ஊட்டியும் விட்டாள். மருந்தையும் விழுங்கிக் கொண்டாள்.
பின் சிறிது நேரத்தில் நித்திலனும் பாடசாலை முடித்து வீடு வந்து சேர்ந்திருந்தவன் தன் வீட்டில் வைத்து மயூ, மகி இருவரையும் கண்டு குதூகலத்தின் உச்சிக்குப் போனான்.
பிறகு கேட்கவும் வேண்டுமா, சாப்பாடு கூட வேண்டாம் என்று அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தவனையும் அந்த இரண்டு தேவதைகளும்தான் வற்புறுத்தி உண்ண வைத்தனர்.
மாலை மங்கும் நேரம் வந்தும் யாரும் இரட்டையர்கள் இருவரையும் கூட்டிச் செல்ல வரவில்லை.
ஆனால் வழமைக்கு மாறான வீட்டின் ஆரவாரம் அப்போதே வேலை விட்டு வந்த மாலாவின் பக்கத்து வீட்டு விநோதத்தின் காதுகளில் கேட்டு விட, அழையாத ஆமையாக வீட்டினுள் நுழைந்திருந்தது அது.
நுழைந்தவர் கண்ணில் லட்டுக் குட்டிகளாக ஒத்த உருவில் இரண்டு சிறுமிகளும் பட்டு விட வாயைப் பிறந்தார் அவர்.
“அம்மாடி! இது ஆர், ஆதித்யன் டொக்டரின்ர பிள்ளையளோ ரெண்டும்? இத்தனை வருஷம் இஞ்ச இருக்கிறன், அவருக்கு டிவின்ஸ் பொம்பிளைப் பிள்ளையள் எண்டு கேள்விப்பட்டதோட சரி. கண்ணால கண்டது கூட இல்லை. காருக்குள்ளயும் கறுப்புக் கண்ணாடி வச்சு அடைச்சுக் கொண்டு போய்த்தான் பார்த்திருக்கிறன். இப்ப என்னடாவெண்டா இந்த வீட்டில நிக்குதுகள் ரெண்டும். நீ பெரியாள்தான் சாதனா.” என்றவரின் பேச்சு சுத்தமாகப் பிடிக்கவில்லை சாதனாவுக்கு.
பிள்ளைகளுக்கும் பிடிக்கவில்லைப் போல. சாதனாவை விட்டுத் தள்ளி நித்திலனோடு விளையாடிக் கொண்டிருந்தவர்கள், நித்திலனையும் இழுத்துக் கொண்டு சாதனாவின் அருகில் வந்து ஒட்டிக் கொள்ள, அவளும் பருந்தின் பார்வையில் இருந்து தன் குஞ்சுகளைக் காக்க முயலும் தாய்க் கோழியாக மூன்று பிள்ளைகளையும் ஒரு சேர தன் சிறகுக்குள் பொதிந்து வருடிக் கொடுத்தாள்.
“ரெண்டு பேரும் பொம்மையள் மாதிரி நல்ல வடிவா இருக்கினம். வடிவத்தானே இருப்பினம். அவேட்ட வேலை செய்யிற உன்ர பெடியனே பொலிஷ் பண்ணி விட்ட தங்கம் மாதிரி இருக்கேக்க, அவேன்ர அப்பாட்ட இருக்கிற காசுக்கு தரையில கால் படாம மேலுல வெய்யில் படாம நல்லா சத்தானதெல்லாம் குடுத்து வளர்த்தா இப்பிடித்தானே இருப்பினம்? ஆனா என்ரயளைப் பார் கறுத்த பண்டியள் மாதிரி திரியுதுகள்.”
அவரின் பேச்சில் உயிர் பதறிய சாதனா, அவர் இருக்கிறார் என்றெல்லாம் பார்க்காமல், “துப்… துப்… துப்…” என்று மூன்று முறை கண் திருஷ்டி போகத் துப்பியவள்,
“அக்கா, இப்பிடி நாவூறு (கண் வைத்தல்) பார்க்காதேங்கோ. சின்னப் பிள்ளையளை என்ன கதைக்கிறீங்கள்?” என்று அவரின் மூஞ்சைக்கு நேரேயே வெடுக்கெனக் கூற, அவர் முகம் கறுத்தார்.
“நான் சும்மாதானே சொன்னான். என்னவோ நான் சொன்னா பச்சை மரமும் பட்டுப் போற மாதிரித் துடிக்கிற? அதுவும் அந்தப் பிள்ளையளுக்கும் சேர்த்துத் துடிக்கிறாய்? ஆரேன் பார்த்தா வேற மாதிரி நினைக்கப் போகினம்.” என்றார் வெஞ்சினமாய்.
“ஏன் ஆரேன் எண்டு சொல்லுறீங்கள்? நீங்கள் எண்டு சொல்லுங்கோவன். ஆர் என்ன நினைச்சாலும் எனக்குக் கவலை இல்லை, எனக்கு நித்திலனும் இவையும் வேற வேற இல்லை. இனி இப்பிடிக் கதைக்காதயுங்கோ. அவ்வளவுதான் சொல்லிப்போட்டன்.”
“அது சரி.. உன்ர கதை தனிக் கதையா போகுது போல.”
“ஓம்… அப்பிடித்தான் போகுது. இப்ப நீங்க வெளிக்கிடுறீங்களோ, பிள்ளையள் பயப்பிடுது.”
“ச்சீ… என்ன பழக்கம் பழகி வச்சிருக்கிறாய், வீட்டுக்கு வந்தாக்கள இப்பிடியோ திரத்துறது? நாளைக்கு உனக்கு ஏதேன் அந்தரமாவத்து வந்தா நாங்கள்தான் முன்னுக்கு ஓடி வருவம். தன்ர பிள்ளையளுக்காக நிண்டதெண்டு டொக்டர் ஓடி வரமாட்டார்.” என்றவர் பேசி முடிக்கவில்லை…
“இல்லை. டொக்டர் நான் கூப்பிட்டா உடன வருவர்.” என்றிருந்தான் நித்திலன்.
அன்று தான் அழைத்ததும் வீடு தேடி ஓடி வந்தவனின் நினைவில் தாமதமின்றி அவனுக்காக ஆஜராகி இருந்தான்.
‘இவனொருத்தன் அவன்ர டொக்டரை சொன்னவுடன பாய்ஞ்சு கொண்டு… இனி அந்த மனுஷி என்ன எல்லாம் கதை திரிக்கப் போகுதோ?’ என்று மனதுக்குள் மகனை அர்ச்சனை செய்த சாதனா அவன் மேலே எல்லாம் ஒப்பிக்கும் முன்,
“நிலன்! பேசாம இருக்கமாட்டிங்களோ? நானெல்லா கதைச்சுக் கொண்டிருக்கிறன்?” என்று அதட்டி அவனை அமைதியாக்கினாள்.
“பிள்ளையும் சரியில்ல… தாயும் சரியில்ல… என்னவோ செய்யுங்கோ. நான் போறன். எனக்கென்ன வேலை வெட்டி இல்லையோ, இல்லா வேலைக்குப் போகாட்டிலும் சம்பளம் வந்து விழுதோ?” என்று ஜாடையாகப் பேசிக் கொண்டு நகர்ந்தவர் பின் திரும்பி,
“பிள்ளையள் வீட்ட போனாப் போல அப்பம்மாட்டயும் அப்பாட்டயும், ஏதேன் வேலை கிடந்தா தரச் சொல்லிச் சாதனா அன்ட்ரி வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற அன்ட்ரி கேட்டவா எண்டு சொல்லி விடுங்கோ என்ன?” என்ற, இரண்டு குழந்தைகளும் என்ன சொல்ல என்று தெரியாமல் சாதனா முகத்தைத் திரும்பிப் பார்த்தனர்.
“அக்கா! என்ன வேலை பார்க்கிறீங்கள்? உங்களுக்கு வேலை வேணுமெண்டா அவேன்ர வீட்டு வாசலுக்க நிண்டு போய்க் கேளுங்க. இஞ்ச நிண்டு பிள்ளை ரெண்டையும் பயப்பிடுத்தாதேங்கோ. போங்கோ காணும்.” எரிச்சலாய் சொன்னாள்.
அதன் பின்னே “பொல்லாத பிள்ளையள்… ஒருத்தரும் பெத்து வளர்க்காத பிள்ளையள்.” முனகிக் கொண்டு போனார் அவர்.
அவர் அகன்றதும் ஒரு பெரிய சாத்தான் கூட்டமே தன் பாதையில் இருந்து அகன்றதாக எண்ணி நிம்மதியானது சாதனாவுக்கு.
பிள்ளைகளின் முகத்தைப் பார்த்தவள் அவர்களின் முகத்தில் இருந்த கேள்வியில்,
“ஒண்டும் இல்ல அம்மாச்சியள். அந்த அன்ட்ரி சும்மா விளையாட்டுக்கு வெருட்டுறா பிள்ளையளை. இனி ஒருக்கா அப்பிடி செய்தா அப்பாட்ட சொல்லி அவாக்குப் பெரிய மாட்டு ஊசியா போடச் சொல்லுவம் என்ன?” என்று விளையாட்டாய் பேசியே அவர்களை சரிக்கட்டினாள்.
“இப்பிடித்தான் உங்களையும் ஒவ்வொருநாளும் வெருட்டுறவாவோ அன்ட்ரி? இஞ்ச பக்கத்திலயோ இருக்கிறா அவா?”
“ஓம் செல்லம். இஞ்ச பக்கத்தில இருந்து ஒரே கூடாம கதைக்கிறது அன்ட்ரியப் பற்றி! நீங்க சொல்லுங்கோ, அன்ட்ரி நல்லதோ? கூடாதோ?”
“அவாதான் கூடாது. எங்கட அன்ட்ரி நல்ல நல்லம். ஓமெல்லோ மகி?”
“ஓம்… அன்ட்ரி சரியான நல்லம்.” என்ற, கண்கள் பொங்க இருவரையும் ஒன்றாகக் கட்டி முத்தமழை பொழிந்தாள் சாதனா.
அவள் குடும்பத்தார் உட்பட, எத்தனையோ பேரின் வாயால் கேட்ட பல அவப்பெயர்கள் எல்லாம் இந்த சின்னச் செவ்வாய்கள் உதிர்த்த ஒற்றை வார்த்தையில் பஞ்சாய் பறந்தது போல் இருந்தது அவளுக்கு.
இந்த விடயத்தில் நித்திலனும் இவளும் ஒன்றுதான். தன்னை நல்லவள் என்று கொண்டாடும் உள்ளங்களை லஞ்சமாகப் பெற என்னவும் செய்யத் துணியும் பாலகி!
அவள் கண்ணீரைத் தவறாகப் புரிந்து கொண்ட இருவரும், “நீங்க அழாதங்கோ அன்ட்ரி, அவாக்கு அப்பாட்ட சொல்லிக் குடுப்பம்.” என்று அவள் கண்களை ஆளுக்கொன்றாகத் துடைத்து விட்டனர்.
“அவேன்ர வீட்டுக்குக் கிட்ட நீங்க இருக்கிறதாலதான் ஈசியா வந்து உங்களைப் பேசிட்டுப் போறா. நீங்க அவான்ர வீட்டை விட்டு நிறையத் தூரமாத் தள்ளி வந்து இருங்கோ அன்ட்ரி. அப்ப அவாக்கு உங்கட வீட்டை நடந்து வரக் கால் நோகும் எண்டு வரமாட்டா.” என்று சிறுபிள்ளையாய் தீர்வு சொன்னவளைப் பார்த்து சிரித்தவள்,
“அப்பிடி எங்க தள்ளி வாறது? அன்ட்ரிக்கு அப்பிடி இஞ்ச ஒரு வீடும் இல்லையே! வேணுமெண்டா உங்கட வீட்டை வரட்டோ?” என்று எதையும் அர்த்தம் செய்யாமல் விளையாட்டாய்தான் கேட்டாள் அவள்.
ஆனால் அவர்கள் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு, “ஓம்… அன்ட்ரி அப்ப அப்பிடிச் தெய்வம் நாங்கள். எங்கட வீட்ட எண்டா வோச்மன் மாமா அவாவை உள்ளுக்க விடவே மாட்டார்.” என்று மயூ சொல்ல…
மகி, “இப்பவே நிலன் அண்ணான்ர, உங்கட உடுப்பு எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வாங்கோ வீட்டை போவம்.” என்று அப்போதே அவர்களை அங்கிருந்து கிளப்பப் பார்க்க சாதனாவுக்குத் திணறியது அவர்கள் அன்பு.
வயது வந்து அனுபவங்கள் பல கண்டும் துவேஷமும் நயவஞ்சகமுமாய் உடனிருப்போரை ஒழிக்கத் துடிக்கும் பெரியவர்கள் மத்தியில் அதைச் சமாளித்து பொழுதன்றும் மூச்சடைக்கும் மனித வாழ்வை வாழ்வதைக் காட்டிலும், நடைமுறைச் சாத்தியங்கள் ஏதும் தெரியாது, தனக்கொரு துன்பம் என்றதும் அதை உடனே களைந்துவிடத் துடிக்கும் இந்த சிற்றன்னங்களின் காலடியில் காலத்துக்கும் செருப்பாய் வாழ்ந்துவிட்டுப் போகலாம் போலிருந்தது.
அவள் மனசாட்சி வேறு ‘ஆதித்யனைத் திருமணம் செய்தால் இவர்கள் உன் மகள்கள் என்ற பெருமிதம் அடையவே இதற்கு நீ சம்மதிக்கலாம்.’ என்று அவளைத் தூண்டி விட்டது.
“உண்மையாத்தான் சொல்லுறீங்களோ, நானும் நித்திலனும் உங்களோட வந்து இருந்தா உங்களுக்கு விருப்பமோ? இல்லா அன்ட்ரி கேட்டுட்டேன் எண்டுறதுக்காக சொல்லுறீங்களோ?”
அவர்கள் உள்ளத்தின் மெய் அறிய மீண்டுமாய் கேட்டாள்.
“உண்மையா எங்களுக்குச் சந்தோஷம். விடிய எழும்பேக்க அங்கேயே எழும்பி எங்களுக்குத் தலை இழுக்கலாம். இரவுக்கும் அங்கேயே இருப்பீங்கள். நிலன் அண்ணாவும் எங்களோட சேர்ந்து ஹோம் வேர்க் செய்வார். நல்ல ஜொலியா இருக்கும்.” மயூ குதூகலமாய் சொல்ல மகியும் ஓம்… ஓம்… என்று ஒத்து ஊதினாள்.
“ஓம் என்ன? அப்ப நாங்கள் அங்கேயே போவமா அம்மா?” நித்திலனுக்கும் அவர்கள் உற்சாகம் தொற்றிக் கொள்ளக் கேட்க,
“நீர் கொஞ்சம் சும்மா இரும் நிலன்.” என்று அவனை அடக்கிய சாதனா, ‘உன்ர ஆர்வம் ஏன் எண்டு எனக்குத் தெரியும்தானே? அப்பிடியே அவரோட ஒட்டிக் கொண்டு திரிஞ்சு அவர் என்னெண்டு தும்முறார் இருமுறார் எண்டு அதையும் அப்பிடியே செஞ்சு பார்க்க!’ மனதுக்குள் மகனை வாரிக் கொண்டவள், மான்குட்டிகளிடம் திரும்பி…
“ஆனா அதை என்னெண்டு நீங்கள் மட்டும் சொல்லுவீங்கள்? உங்கட அப்பா, அப்பம்மா எல்லாரும் சேர்ந்தெல்லோ சொல்லோணும்? நீங்கள் சின்னப் பிள்ளையள் இப்பிடிப் பெரிய முடிவுகளை எடுக்கலாமோ?”
அவர்கள் வார்த்தைகள் மனதை நிறைத்தாலும் பெரியவளாக அவர்கள் விட்ட தவறை எடுத்துக்காட்ட வேண்டிய கடமையை செவ்வனே செய்தாள்.
அவர்களுக்கும் அது புரிந்து விட, “ஓம்… என்ன அன்ட்ரி!” என்று சோகமானவர்கள் பின், “அப்ப அப்பாட்ட கேட்டு வந்து சொல்லட்டோ நாங்கள்?” என்று கேட்டு முடிக்கவில்லை,
“அப்பாட்ட என்ன கேட்கோணும் என்ர செல்லங்களுக்கு?” என்றபடி வந்து நின்றான் ஆதித்யன்.

