MPK 27
“அப்பாட்ட என்ன கேட்கோணும் என்ர செல்லங்களுக்கு?” என்றபடி வந்து நின்றான் ஆதித்யன். அவர்களை அழைத்துச் செல்லத்தான் வந்திருந்தான்.
அவனைக் கண்டால் எல்லோருக்கும் முந்தி ஓடி வரும் நித்திலன் இன்று அமைதியாய் இருக்க, அவன் பெற்ற இரண்டும் ஒற்றைக் கால் பாய்ச்சலில் வந்து அவனிடம் தாவிக் கொண்டனர்.
மயூ, “அப்பா! இஞ்ச ஒரு அன்ட்ரி வந்தவா இப்ப. அவா எங்களைப் பார்த்து வெருட்டுற மாதிரியெல்லாம் கதைச்சவா. அப்பிடித்தான் அன்ட்ரியோடயும் ஒவ்வொருநாளும் கதைக்கிறவாவாம். அதான் அன்ட்ரியயும் நிலன் அண்ணாவையும் எங்கட வீட்ட வரச் சொல்லிக் கேட்டனாங்க. எங்கட வீட்ட எண்டா வோச்மன் மாமா அவாவை உள்ளுக்கு விடமாட்டார் எல்லோ?”
மகள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டவன் பார்வை சாதனாவில் படிந்தது.
அவள் நிலையோ சொல்லும்படியாகவே இல்லை. விளையாட்டாய் தொடங்கிய இந்த உரையாடலை விளையாட்டு என்று அவர்களுக்கு சொல்லிப் புரிய வைப்பதற்குள் இவன் வந்து நிற்பான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லையே!
தடக் தடக் என்று எம்பிக் குதித்த இதயத்துடன் அவன் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். கைகள் அவள் போட்டிருந்த பஞ்சாவியைப் (சுடிதார்) பிடித்துக் கசக்கிக் கொண்டு அவளின் பதட்ட நிலையைக் காட்டிக் கொண்டிருந்தது.
ஒருபார்வையிலே அவளின் நிலையை எடை போட்டு முடித்தவன்,
“அதுக்கு அன்ட்ரி என்ன சொன்னவா?” என்று கேள்வி மகள்களிடம் என்றாலும் பார்வையை அவளிடம் இருந்து பிரிக்கவில்லை.
அதற்குத் தான் சொன்ன பதிலை நினைத்துக் கொண்ட சாதனா கண்களை இறுக மூடிப் பக்கவாட்டில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“அன்ட்ரி என்ன சொன்னவா எண்டா, இத நாங்க மட்டும் சொல்லக் கூடாதாம். பெரியாக்கள்… அதான் நீங்களும் அப்பம்மாவும்தான் சொல்லோணுமாம். அதான் நாங்க உங்களிட்ட கேட்டு சொல்லட்டோ எண்டு கேட்டுக் கொண்டிருக்க நீங்கள் வந்திட்டீங்கள்! என்னப்பா செய்வோம்? எங்களோட கூட்டிக் கொண்டு போவமோ? நிலன் அண்ணாக்கும் நல்ல விருப்பம் எங்களோட இருக்க!”
“அப்பிடியோ? நிலனுக்கு விருப்பமோ எங்களோட இருக்க?” என்று நிலனை அவன் குறுகுறுவென்று பார்க்க, அவன் சோகமாய் தாயைத் திரும்பிப் பார்த்தான்.
“அப்பிடியில்லைப் போலயே! அவர் அமைதியா இருக்கிறதைப் பார்த்தா எனக்கெண்டா நிலனுக்கு விருப்பமில்லை மாதிரித்தான் கிடக்கு.” என்று அவன் இழுக்க…
“இல்லையப்பா… நிலன் அண்ணா போவம் எண்டு கேட்க, அன்ட்ரி அவரைப் பேசிப்போட்டா. அதான் அண்ணா பேசாம இருக்கிறார்.” என்று அவசரமாக எடுத்துச் சொன்னாள் மயூ.
“அப்ப அன்ட்ரிக்குத்தான் விருப்பமில்லை போல மயூ. அவாக்கு விருப்பமில்லாம கூட்டிக் கொண்டு போறது பிழையெல்லோ?”
“இல்லை… இல்லை… உங்களுக்கு விருப்பம் எண்டா அன்ட்ரி வருவா. ஓமெல்லோ அன்ட்ரி?” திடீரென்று தன்னிடம் இப்படி ஒரு கேள்வி திரும்பும் என்று எதிர்பாராத சாதனா தடுமாறிப் போக, ஆதித்யனுக்குக் கொண்டாட்டமாக இருந்தது.
‘நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் எத்தனை நாள் நிலுவையில் வைத்தாய்? இப்போது என் இளவரசியை சமாளி!’ என்பதுபோல் தெனவட்டான பார்வையோடு நின்றிருந்தான் அவன்.
அவன் பார்வையே அவன் தனக்கு உதவப் போவதில்லை என்பதை அவளுக்கு உணர்த்த, பாதிக்குப் பாதி என்று இரண்டு முடிவுக்கும் மத்தியில் தொங்கிக் கொண்டிருந்த ஒற்றை இழையில் தொங்கிய மனதை ஒரு பக்கமாக சேர்க்க மனதை ஒருநிலைப்படுத்த முயன்றாள்.
அதற்குள் ஆதித்யன், “அப்பாக்கு, அப்பம்மாக்கு எல்லாம் இதில விருப்பம்தான் செல்லம். உங்கட அன்ட்ரிக்கும் விருப்பம் இருந்தா தாராளமா அங்க வந்து வாழலாம். அப்பிடி வந்தா அவைக்குப் பாதுகாப்புக்கு வோச்மன் மாமாவெல்லாம் தேவையில்லை, அப்பாவே எப்பவும் அவைக்கு முதல் பாதுகாப்பா இருப்பன் எண்டு நம்பி வரேலுமெண்டா வரச் சொல்லுங்கோ.” என்ற, சாதானாவின் விழிகள் மெல்ல நிமிர்ந்து அவன் முகம் நோக்கின.
அவனும் அவளையே பார்த்துத்தான் பேசிக் கொண்டிருந்தான் ஆகையால் இருவர் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்து கொண்டன.
அவள் பார்வையில் தெரிந்த கேள்விகளுக்கும் எதிர்காலம் குறித்த அச்சங்களுக்கும் பதில் கொடுக்கும் முகமாக அவன் விழிகள் ஒருமுறை மூடித் திறந்தன, எல்லாவற்றுக்கும் பதிலாக “நான் இருக்கிறேன்!” என்பதுபோல்.
அந்த ஒரு செய்கை அவளுள் ஆயிரம் யானை பலத்தைக் கொடுக்கவே அவள் மனம் ஒரே பக்கமாய், அவன் இருக்கும் பக்கமாய் தாவிக் குதித்து நின்றது.
அந்த நேரம் சரியாக மயூவும் தந்தையிடம் இருந்து இறங்கி அவளிடம் ஓடி வந்தவள், “அப்பா ஓம் எண்டு சொல்லிட்டார் அன்ட்ரி! இனி நீங்கதான் ஓமெண்டோனும். ஓமெண்டு சொல்லுங்கோவன்…” என்று கெஞ்சும் மொழியில் கேட்க, உணர்வுப்பெருக்கை சமாளிக்க அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
“வா…வாறம் தங்கம். வாறம்.” வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பு முனையில் நின்று கொண்டிருந்தவளைக் கலவையான உணர்வுகள் வந்து தாக்கியதில் குரல் கரகரத்து மெலிதாய் வந்தது. கண்களும் தம் பங்குக்கு நிறைந்து தளும்பின.
தாய் திட்டியதில் அமைதியாக இருந்த நித்திலன், தாயின் பதில் கேட்ட மறுநொடி எல்லாவற்றையும் மறந்தவனாக, “உண்மையா நாங்க இனி அங்கயோம்மா இருக்கப் போறம்? அப்ப நான் என்ர உடுப்புகள், புத்தகம் கொப்பியள் எல்லாம் எடுத்து வைக்கட்டோ?” என்று துள்ளிக் குதிக்க,
மயூவும் அவனோடு இணைந்து,
“எல்லாத்தையும் எடுத்து வையுங்கோ அண்ணா. நானும் மயூவும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறோம்.” என்று குதித்தாள்.
சாதனா சொன்னது அவள் அருகிலேயே இருந்த மயூ, நித்திலன் இருவருக்கு மட்டுமே கேட்டிருந்தது. தள்ளி நின்றிருந்த மற்ற இருவருக்கும் இவர்களின் ஆரவாரம்தான் அவளின் பதில் என்னவென்பதை எடுத்துச் சொல்லிற்று!
விஷயம் புரிந்த மகி தானும் மயூ மற்றும் நிலனுடன் இணைந்து ஆர்ப்பரிக்க, ஆதித்யன் அமைதியான புன்னகையோடு அவர்களின் ஆர்ப்பாட்டத்தை ரசித்திருந்தான்.
அதே புன்னகையோடு சாதனாவின் புறம் திரும்பியவன் அவளும் நிர்மலமான முகத்துடன் பிள்ளைகளின் மகிழ்ச்சியை உள்வாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான்.
அவளிடம் கொஞ்சம் தனியாக கதைக்க வேண்டி இருந்தது அவனுக்கு. தாம் தூம் என்று ஆடும் இந்த மூன்று குட்டிகளையும் என்ன செய்யலாம் என்று யோசித்தவன், பின் அவர்கள் வழியிலேயே சென்று,
“மூண்டு பேரும் கொஞ்சம் நான் சொல்லுறதைக் கேட்கிறீங்களோ?” என்று அவர்கள் கவனத்தைத் தன்னிடம் திருப்பியவன்,
“நீங்க நினைக்கிற மாதிரி இப்ப உடன எல்லாம் ரெண்டு பேரையும் வீடு மாத்தேலாது. அதுக்கு சில வேலையள் கிடக்கு. சில இடங்களில பதிய வேணும், இனி இவை எங்கட பொறுப்பெண்டு. அதுமட்டும் ரெண்டு பேரும் இஞ்சதான் இருப்பினம்.”
அவர்கள் திருமணத்தை அவர்களுக்கு ஏற்றபடி சொல்ல, சாதனா தலை கவிழ்ந்து அவன் சொற்களைக் கிரகித்தபடி இருந்து விட்டாள். பிள்ளைகளிடம் இதையெல்லாம் விளக்குமளவெல்லாம் அவள் இல்லை. அதனால் அதை முழுதாக அவன் பொறுப்பில் விட்டு விட்டு ஒதுங்கிக் கொண்டாள் இப்போதே.
சின்னவர்கள் மூவருக்கும்தான் அவன் சொன்னதைக் கேட்டதும் முகம் தொங்கிப் போனது.
“அதெல்லாம் பதிஞ்சு முடிய எவ்வளவு நாளப்பா ஆகும்? வேளைக்கெண்டு செய்யேலாதோ?”
“செய்யலாம் மயூ. ஆனா எவ்வளவு நாளாகும் எண்டு சரியாச் சொல்லேலாது. அதுமட்டும் வேணுமெண்டா அப்ப அப்ப நிலனை நாங்கள் கூட்டிக் கொண்டு போய் எங்கட வீட்டுல படுக்க வைப்பம். இண்டைக்கு அவர் எங்களோடதான் வரப் போறார். அதால அவரின்ர பாக், ஷு, ஜூனிஃபோர்ம் எல்லாம் எடுத்து வையுங்கோ. ஓடுங்கோ மூண்டு பேரும்.” என்று அவர்களைப் படுக்கையறைக்குள் துரத்த, மற்ற இருவரும் சரி சரி என்றபடி ஒன்றையும் யோசிக்காமல் உள்ளே போக, மயூ மட்டும் பின்னால் தேங்கியவள்,
“நிலன் அண்ணா எங்களோட வந்தா அன்ட்ரி தனியவெல்லோ அப்பா? அன்ட்ரியோட நான் நிக்கட்டோ?” என்ற, சாதனாவுக்கு உருகிப் போயிற்று. தன் மகன் கூட இதை யோசிக்கவில்லையே என!
ஆனாலும் “வேண்டாம் செல்லம், இஞ்ச நுளம்புகள் கடிக்கும். சின்னப் பிள்ளையளுக்குக் கூடாது. காய்ச்சலுகள் வந்தா கஷ்டமம்மா. நீங்க அப்பாவோட போங்கோ. அன்ட்ரிக்கு இஞ்ச பயமில்லை. பக்கத்தில ஆக்கள் இருக்கினம்தானே?” என்று மறுத்து விட்டாள்.
அவளுக்குப் புரிந்தது ஆதித்யன் பிள்ளைகள் மூவரிடமும் பேச வேண்டித்தான் நித்திலனை அங்கே அழைக்கிறான் என்று. அதைக் குழப்ப விரும்பாது இப்படி சொல்லி வைக்க மயூவோ,
“பக்கத்திலதானே அந்த உம்மாண்டி (பூச்சாண்டி) அன்ட்ரியும் இருக்கிறா. அவா வந்தா பயமல்லோ உங்களுக்கு!” என்றவள் பின் அவளைக் காக்கும் வழியைக் கண்டு விட்டவள் போல்,
“அப்ப அப்பா இப்பிடிச் செய்வமோ, நாங்கள் மூண்டு பேரும் அங்க அப்பம்மாவோட கிடக்கிறம். நீங்கள் இஞ்ச அன்ட்ரியோட நில்லுங்கோவன் இரவுக்கு. நீங்கதானே சொன்னீங்கள் இனி நீங்கள்தான் அவைக்குப் பாதுகாப்பெண்டு!” என்று பொயிண்ட் பிடித்துக் கேட்க, ஆதித்யனுக்கு வெறும் வாயில் பிரக்கேறியது. (புரையேறியது)

