சாதனாவும் ஒருநொடி என்ன பேச என்று தெரியாது திகைத்துப் போய் நின்றாள்.
ஆனால் அடுத்த நொடியே ஆதித்யனின் இருமல் சத்தம் கேட்டு அவன் முகம் நோக்கித் திரும்பியவளுக்கு அவனின் பாவனை கண்டு சிரிப்பு வரும் போலிருந்தது.
எதிரில் இருப்பவரைப் பேசியே தன் வழிக்குக் கொண்டு வந்து விடுவான் என்று பெருமை பேசிய பரமேஸ்வரிக்கு அவன் மகளால் அவர் மகன் வாயடைத்து நிற்கும் இந்தக் காட்சியைக் காணக் கிடைக்கவில்லையே என்று நினைத்த மாத்திரம் சன்னமான சிரிப்பொலி அவளை மீறி வெளியே வந்து விட்டிருந்தது.
அதில் ஆதித்யன் அவளைத் திரும்பிப் பார்க்க வாயை சுருக்கிக் கொண்டவள், “மயூ! அப்பாக்குத் தண்ணி வேணுமெண்டா எடுத்துக் குடுங்கோ.” என்று அக்கறை போல் சொன்னாலும் அதில் கேலி இருந்ததோ என்று சந்தேகிக்கத் தோன்றியது ஆதித்யனுக்கு.
“அப்பா! தண்ணி வேணுமோ?”
“இல்ல, வேண்டாம். நீங்க போய் அவைக்கு ஹெல்ப் பண்ணுங்கோ போங்கோ.”
“அப்ப நீங்க நிக்கிறீங்களோ அப்பா?” பதில் வராமல் நகர்வதில்லை என்று அவன் மகள் நிற்க, இறுதியில் சாதனாதான் உதவிக்கு வந்தாள்.
“தேவையில்லை மயூ. அந்த அன்ட்ரி இரவில வேளைக்கெண்டு நித்திரை கொண்டுடுவா. பிறகு விடியத்தான் எழும்புவா. விடியத்தான் நான் உங்கட வீட்ட நிப்பனே! அதோட அப்பாவும் பாவமல்லோ, அவர் இரவு வடிவா நித்திரை கொண்டாத்தானே நாளைக்கு போய் டியூட்டி செய்யேலும்?” என்ற சரியென்று கேட்டுக் கொண்டவள், அதன் பின்னே உள்ளறைக்கு சென்றாள்.
“பிள்ளையளுக்கு முன்னுக்கு வசனங்கள் கதைக்கேக்க பார்த்துக் கதைக்கோணும்.” சிரிப்பையடக்கிய குரலில் அவள் சொல்ல முறைத்தவன்…
“எனக்கு ஒரு நிமிஷம் என்னெண்டு பக்கெண்டு போய் நிக்கிறன். உங்களுக்குச் சிரிப்புக் கேக்குதோ?”
“நீங்க அப்பிடி நிண்டத பார்க்கத்தான் சிரிப்பு வந்தது. வாயால வங்காளம் போயிற்று வாறவருக்கு இந்த நிலைமையோ எண்டு!” இன்னுமே அதிகமாய் மூண்ட சிரிப்பை உதடுகளில் அடக்கிக் கண்களில் தெறிக்கவிட்டபடி சொன்னவளின் மேல் முதல் முறையாக ரசனையாக ஓடியது அவன் விழிகள்.
“இப்பிடி சிரிக்கேக்க வடிவா இருக்கிறீங்கள்.” மனதில் தோன்றியதை மறைக்காமல் அவன் சொல்லிவிட அதற்கு என்ன எதிர்வினையாற்ற என்று தெரியாமல் அவள்தான் தடுமாறிப் போனாள்.
“ரிலாக்ஸ் சாதனா. இதுக்கெல்லாம் நிறைய யோசிக்காதேங்கோ. சும்மா மனசில பட்டதைச் சொன்னனான்.” அவன் சொல்லக் கேட்டுக் கொண்டவள் அமைதியாக இருக்க, அவன் பேச விரும்பியதைப் பேசினான்.
“சாதனா, நீங்கள் உங்கட முடிவை மனசாரத்தானே சொன்னனீங்கள்? இல்லா இன்னும் ஏதேன் நெருடலுகள் இருக்கோ? இருந்தா சொல்லுங்கோ. அதுக்குப் பதில் சொல்ல வேண்டியது என்ர கடமை.”
ஹ்ம்ம் என்று பெருமூச்சை இழுத்து விட்டவள், “நெருடல்… அது இருக்குத்தான்… ஆனா அது உங்களை நினைச்சு இல்லை. என்னை நினைச்சுத்தான். எந்தவொரு இடத்திலயும் இந்த என்ர முடிவால நீங்கள் ஒருதரும் பாதிக்கப்படாம இருக்கோணும் எண்டு கிடக்கு.”
“விளங்குது சாதனா. ஆனா மனசறிஞ்சு அப்பிடி ஒரு நிலைமையைக் கொண்டு வரமாட்டன் எண்டு உங்களுக்குள்ள நீங்க உறுதியோட இருந்தாலே காணும். அந்த நெருடலுக்கெல்லாம் அவசியம் இல்லாம நான் பாத்துக் கொள்ளுவன்.”
என்ற, அவளுக்குப் பெரும் ஆசுவாசமாக இருந்தது அவன் வார்த்தைகள்.
“உங்களுக்கு ஏதேன் முரண்பாடுகள் இருக்கா இதில? இருந்தா சொல்லுங்கோ, எனக்கும் விளக்குற கடமை இருக்குத்தானே!”
“முரண்பாடென்ன கிடக்கு? ஒண்டே ஒண்டு மட்டும்தான் சொல்லோணும். பிள்ளையளத் தாண்டியும் எங்களுக்குள்ள தனியா ஒரு உறவு இருக்கும். அது அடுத்த அடுத்த கட்டத்தைத் தாண்டுறதெல்லாம் தன்ர பாட்டில ரெண்டு பேரின்ர விருப்பத்தோடயும் நடக்கட்டும். ஆனா எங்கட உறவுக்கான மரியாதையை நீங்களும் நானும் எப்பவும் குடுத்தே ஆகோணும். அவ்வளவுதான் என்ர எதிர்பார்ப்பு உங்களிட்ட.” என்ற,
அவனை எதிர்த்துப் பேசவோ மறுக்கவோ எதுவுமே இல்லை சாதனாவுக்கு. அவன் அதர்மமாகவோ அடாவடியாகவோ எதையும் சொல்லவில்லையே! அதனால் சரியென்று தலையாட்டிக் கொண்டாள்.
அதற்கு மேல் பேசிக் கொள்ள அவர்களுக்குத் தனிமை தரவில்லை அவர்களின் பிள்ளைகள்.
தன் உடமைகளை அள்ளிக் கட்டிக் கொண்டு இரட்டையர்கள் புடைசூழ,
“எல்லாம் எடுத்தாச்சு டொக்டர். வாங்கோ போவோம்.” என்று கூவிக் கொண்டு வந்த மகனை என்ன முயன்றும் முறைக்காமல் இருக்க முடியவில்லை சாதனாவால்.
அதைக் கண்டுவிட்ட ஆதித்யன், “அப்ப நீங்க வெளிக்கிடுறதுக்கு எல்லாம் சரி? வேற ஒண்டும் செய்யத் தேவையில்லை?” என்று கேட்டான், நித்திலனை நோக்கி.
“ஓம் டொக்டர். நாளைக்குத் தேவையான உடுப்பு, புத்தகங்கள் எல்லாம் எடுத்திட்டன்.”
“அது மட்டும் காணுமோ? அம்மாட்ட சொல்லத் தேவையில்லையோ? அவாட்ட பெர்மிஷன் கேட்கத் தேவையில்லையோ? அம்மா தனியா நிக்க உங்களுக்குப் பயமில்லையோ, எண்டு கேட்கத் தேவையில்லையோ?” என்று கேட்கக் கேட்கவே தாயின் முகத்தைத் திரும்பிப் பார்த்தான்.
அவள் அப்போதும் விடாது அவனை முறைத்திருக்க ஓடிச் சென்று அவள் முன்னே நின்றவன் அச்சுப் பிசகாமல் ஆதித்யன் கேட்ட அத்தனையையும் கேட்டு விட்டுப் பதில் வேண்டி நிற்க, அவள் முறைப்பு இன்னும்தான் கூடியது.
“அதான் எல்லாம் எடுத்துக் கட்டிக்கொண்டு வெளிக்கிட்டீங்கள்தானே ஐயா! பிறகேன் என்னட்ட வந்து நிக்கிறீங்கள்? என்னட்ட கேட்காட்டி எங்க உங்கட டொக்டர் கூட்டிக் கொண்டு போகாம விட்டாலும் எண்டுதானே என்னட்ட வந்து நிக்கிறியள்?” என்று முறைத்துக் கொண்டு கேட்க, அவன் பாவமாகத் திரும்பி மற்ற மூவரையும் பார்த்தான், எங்கே அவர்களுடன் செல்ல முடியாமல் போய் விடுமோ என்ற ஏக்கம் அதில் நிரம்பி வழிந்தது.
“அன்ட்ரி, கோபப்படாதயுங்கோ. நிலன் அண்ணாக்காக நாங்களும் சொறி கேக்கிறம். நாங்களும் உங்களிட்ட கேட்கேலத்தானே?”
“ஓம் அன்ட்ரி. நானும் சொறி. நிலன் அண்ணாவை எங்களோட விடுறீங்களோ, பிளீஸ்.” என்று காதுக்குள் கொஞ்சிய கிள்ளைக் குரலில் சாதனாவின் கோபம் பனியாய் கரைந்து போயிற்று.
“நீங்கள் ஏனடா சொறி கேட்கிறீங்கள். அதெல்லாம் வேண்டாம். உங்கட அண்ணாவை நீங்களே கூட்டிக் கொண்டு போங்கோ…” என்று புன்னகை முகமாக சொல்ல, இருவரும் அவளுக்கு நன்றியை முத்தத்தில் பரிசளித்தனர்.
ஆனால் நித்திலனோ அவள் சம்மதம் கிடைத்ததுதான் தாமதமென்று அடுத்த நொடி பறந்து போய் ஆதித்யனின் கையைப் பற்றியிருந்தான்.
அவன் செயலில் ஆதித்யன் சிரித்துக் கொண்டவன், அவன் தலையை செல்லமாகக் கலைத்து விட்டு அவன் முதுகில் இருந்த புத்தகப் பையைத்தான் வாங்கிக் கொண்டான்.
அதன் பின் சாதனாவுக்கு ஆயிரம் பத்திரங்களையும் எதுவும் தேவையென்றால் அழைக்கும்படியும் ஆயிரம் கவனம் சொல்லிப் பிள்ளைகளுடன் புறப்பட்டிருந்தான்.
அன்று அழைத்துச் சென்று பிள்ளைகளிடம் என்ன பேசினானோ தெரியாது. அடுத்தநாள் சாதனாவிடம் வந்த பிள்ளைகள் இருவரும் “உங்களை இனி நாங்கள் அம்மா எண்டு கூப்பிடட்டுமோ, அன்ட்ரி?” என்று கேட்டுப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தனர்.
அந்த அதிர்ச்சி போதாதென்று நித்திலன் வேறு, ஆதித்யனை அப்பா என்று அழைக்கவா என்று அவளிடம் வந்து அனுமதி கேட்டு அவளை மூர்ச்சையடையும் நிலைக்கு ஆக்கினான்.
ஆக ஒரே இரவில் சத்தமே இன்றி மருத்துவன் தான் நினைத்ததை நடத்தி முடித்திருக்கிறான்.
அதிர்ச்சி ஒரு புறம் என்றால்
இதை சாதிக்க எத்தனை மணித்தியாலங்கள் இந்தப் பச்சைப் பிள்ளைகளின் காதைக் குத்தகைக்கு எடுத்து உள்ளே இறங்கி இரைந்து கொண்டிருந்தானோ என்று பிள்ளைகளை எண்ணிப் பாவமாகவும் இருந்தது அவளுக்கு.

