மாதொரு பாகம் கொண்டான் – 28

MPK 28

சாதனா சம்மதம் சொல்லி ஒருவாரமாகியிருந்தது. அந்த விஷயத்தை ஆதித்யன் சொல்லக் கேட்டு உவகையடைந்த பரமேஸ்வரி அவளைத் தேடி வந்து தன் மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் பகிர்ந்துவிட்டுப் போயிருந்தார்.

இப்போது சாதனாவின் காலும் சரியாகியிருந்தது. முன்புபோல் அவளே ஆதித்யன் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள்.

பரமேஸ்வரிக்குத் திருமணத்தைத் தள்ளிப் போட விருப்பமே இல்லை. இந்த நொடியே நடத்தி முடித்து விடுவதென்றால் கூட அவருக்கு சம்மதம்தான். ஆனால் சாதனா வீட்டில் பேச வேண்டுமே என்று அமைதியாக இருந்தார்.

தான் பேசுவதாகக் கேட்ட போதும் சாதனா மறுத்து விட்டிருந்தாள். எந்த இடத்திலும் தன் குடும்பத்தார் அவர்களை ஒரு சொல் அவமரியாதையாக சொல்லிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

அதனால் இந்த வார இறுதியில் நானே நேரில் போய் அவர்களிடம் இது பற்றிக் கதைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டிருந்தாள்.

ஆதித்யனும் கேட்டுப் பார்த்து விட்டான்… தானும் வருகிறேன், கதைத்துப் பார்க்கிறேன் என்று! ம்ஹூம்… அவள் சம்மதிக்கவே இல்லை. அவனும் அவளுக்குத்தானே அவர்கள் வீட்டு ஆட்களின் மனநிலை தெரியும். ஆதலால் அவள் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து தள்ளி நின்றான். ஆனாலும் ஏதும் உதவி தேவையென்றால் உடனடியாக அழைக்கும் படியும் அறிவுறுத்தினான்.

அதன்படி வாகனம் அமர்த்திக் கொடுக்கிறேன் என்ற ஆதித்யனின் பேச்சையும் மீறி பேருந்தில் ஏறித் பிறந்த மண்ணை நோக்கிப் பயணித்தாள்.

கடந்த ஏழு வருடங்களில் முதல்முறை மகன் இல்லாமல், அவனைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஒரு பயணம்… யன்னலோர இருக்கை… பேருந்தின் ஆடியோ பிளேயரில் இருந்து கசிந்து வந்து கொண்டிருந்த மெல்லிசைப் பாடல்கள் எல்லாம் சேர்ந்து இந்தப் பேருந்து தான் இறங்கவேண்டிய இடத்தில் நின்றால், தான் சொல்லப் போகும் விஷயம் வீட்டினருக்குத் தெரிய வந்தால் வரப் போகும் பூகம்பத்தைப் பற்றிய நினைப்பையெல்லாம் பின்னுக்குத் தள்ளி புது ரசனை வெள்ளத்தை அவளூடு பாயச் செய்திருந்தது.

“கவனம் சாதனா. என்னெண்டாலும் கோல் ஒண்டு தாங்கோ. பிரச்சனை எதுவுமெண்டா நேர மனோ சேர் வீட்ட போங்கோ. நான் அவருக்கு சொல்லித்தான் வச்சிருக்கிறன்.”

யன்னல் கம்பிகள் காதில் உராய்ந்து, கிளிநொச்சி பேருந்துத் தரிப்பிடத்தில் இறக்கி விட்டு அக்கறை வார்த்தை கூறி அனுப்பியவன் குரலை மறு ஒலிபரப்பு செய்வதைப் போல் இருக்க, காதில் நுழைந்த இசை கூடத் தொந்தரவாகத் தோன்றியது அவளுக்கு.

யன்னல் கம்பி மீண்டும் மீண்டும் அவன் குரலில் அக்கறையாகக் கதைக்காதா என்று இருந்ததில் அரைப் பைத்தியமே என்று அவளை அவளே திட்டிக் கொண்டாள்.

இந்த சாதனா ஆதித்யனின் அக்கறைக்கு அடிமையானவள். அவன் குரல் வழி மிதக்கும் நேச ஸ்வரத்தை மூச்சுக் காற்றாக்கிக் கொண்டவள்.

சொல்ல சொல்லக் கேட்காமல் பேருந்தில் தனியாக செல்கிறாள் என்ற அதிருப்தியில் நித்திலனை உடன் அனுப்ப மறுத்து விட்டான் அவன். இவளும் மறுத்துப் பேசவில்லை. ‘வைத்துக் கொள், என் மகனை உனக்கென்றே!’ என்று விட்டு விட்டவள் நினைத்திருந்தால் அவன் மகள்களில் ஒருத்தியையோ இருவரையுமோ அவளுக்கென்று எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம். அதற்கு அவன் தடை சொல்லியிருக்கவும் மாட்டான்.

அவன் மகள்கள்! அவள் மகன்! இனி அப்படியெல்லாம் இல்லவே இல்லை. அவர்களின் பிள்ளைகளாம். பிள்ளைகளுக்குப் பாடம் எடுத்திருந்த மறுநாள் அவளுக்கும் படிப்பித்திருந்தான்.

அன்று அவள் சம்மதம் சொன்ன மறுநாள்…

நேர்சரி முடிந்ததும் அவளைப் பார்க்க ஓடி வந்து விட்ட பிள்ளைகள் இருவரும் ஒன்று போல், “அன்ட்ரி! இனி உங்களை அம்மா எண்டு கூப்பிடட்டோ?” என்று கேட்டதும் திகைத்து விழித்தவளுக்கு அவர்கள் அப்படிக் கூப்பிட்டால் என்ற கற்பனையே நெஞ்சின் மத்தியில் இமய உச்சியின் மைனஸ் டிகிரியை உணர வைத்தது. ஆனாலும் அவசரப்பட்டு அவர்களுக்கு ஒப்புதல் கொடுக்க முடியவில்லை.

ஆதித்யனின் முதல் மனைவியின் ஆத்மா இங்கே எங்கேனும் இருந்து இதைக் கேட்டு அழுது கொண்டிருக்குமே என்று மனம் பாரமானது.

அவள் நிலை தடுமாறி நிற்பதை ஆதித்யன் எவ்வாறு உணர்ந்து கொண்டானோ சரியாக அவளுக்கு அழைத்து விட்டிருந்தான்.

ஒலிக்கும் தொலைபேசியையும் பதில் கேட்டுத் தன் வாய் பார்த்து நிற்கும் குழந்தைகளையும் மாறி மாறிப் பார்த்தவள் ஆதித்யனிடம் கதைத்து விட்டே இவர்களுக்கு முடிவு சொல்வோம் என்று…

“ஃபோன் கதைச்சிட்டு வந்து மான்குட்டியளோட கதைக்கட்டோ?” அவர்களிடம் சம்மதம் பெற்றவள்,
தொலைபேசியோடு சற்றுத் தள்ளி சென்று பிள்ளைகள் கண்ணில் தெரியும்படி நின்று அழைப்பை ஏற்றாள்.

ஹலோ கூட சொல்லாமல் அவள் அமைதியாக இருக்க, “என்ன பிள்ளையள் கேட்டிட்டினமோ?” என்று கேட்க, அவள் ஆச்சரியப்படவெல்லாம் இல்லை.

இங்கே இயக்குநர் அவன் தானே? அவனுக்குத் தெரியாமல் திரைக் கதையில் சிறு நகர்வும் இருக்காதே என்று “ம்ம்” என்றாள் மெலிதாக.

“ஏன் இப்பிடி டிஸ்டர்ப் ஆகி கதைக்கிறீங்கள்? அவை அப்பிடிக் கூப்பிடுறதில உங்களுக்கு ஏதேன் சங்கடமோ?”

“உங்களுக்கென்ன விசரோ? இதில சங்கடப்பட என்ன கிடக்கு? அவேன்ர வாயில இருந்து அப்பிடி என்னைக் கூப்பிட்டா, அது எனக்குக் கிடைச்ச பெரிய வரம் எண்டு கொண்டாடுவேன். ஆனா… உங்கட முதல் வைஃப்… அவா பாவமெல்லோ? உயிரைக் குடுத்து அவா பெத்த பிள்ளையள் என்னை அம்மா எண்டு கூப்பிட்டா, அவான்ர ஆத்மா என்ன பாடுபடும்? அதுக்காக யோசிச்சுத்தான் ஆசையாக் கேட்ட ரெண்டு பேருக்கும் பதில் கூடச் சொல்லாம வந்திருக்கிறன். அங்க இருந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கினம். பார்க்கப் பார்க்க ஒருமாதிரிக் கிடக்கு எனக்கு.” என்று தன்னையே விடாமல் பார்த்திருந்த குழந்தைகளைப் பார்த்துக் கண்கலங்கினாள். குரலும் அடைத்துப் போயிற்று.

அவள் கதைத்து முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டிருந்த ஆதித்யன்,

“அங்க எங்கயும் வைஷ்ணவி உங்கட கண்ணுக்குத் தெரியிறாவோ எண்டு பாருங்கோ.” என்று நிதானமாகக் கேட்க, இவள் என்ன கேள்வி இதென்று அமைதியாக நின்றாள்.

“உண்மைக்கும்தான் கேட்கிறேன், வைஷ்ணவி உங்கட கண்ணுக்குத் தெரியிறாவோ?” என்று மீண்டும் அழுத்திக் கேட்க, அவன் கேட்டதற்காகவே தன்னை சுற்றிலும் பார்த்தவள், “இல்லை…” என்றாள்.

“அப்ப கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயத்துக்காக… இருக்கோ இல்லையோ எண்டு இன்னும் கண்டு பிடிக்காத ஒரு குறை நம்பிக்கைக்காக கண்ணுக்கு முன்னுக்கு உங்களை நம்பி ஆசையா வந்த என்ர பிள்ளையளை ஏங்க வைக்கிறீங்களோ?” என்று கேட்டு விட, அவன் பேச்சில் இருந்த உண்மை ஆயிரம் லட்சம் செல்சியஸ் வெப்பநிலையில் அவளை சுட்டது.

“சொ… சொறி டொக்டர். நான் பிழை விட்டுட்டன். நீங்க ஃபோனை வையுங்க. நான் என்ர பிள்ளையளிட்ட போறன்.”

“இருங்கோ சாதனா. முழுசா கதைச்சிட்டுப் போகலாம். பிறகு எனக்கும் வேலை வந்திடும்.” என்று தடுக்க, அவளும் மனமே இல்லாமல் சரியென்று பின் வாங்கினாள்.

“நேற்று நான் இதைப் பற்றிக் கதைக்கத்தான் நித்திலனையும் கூட்டிக் கொண்டு போனனான். உங்களுக்கு ஏன் இதை நான் இவைக்குள்ள அவசரமா திணிச்சனான், பொறுமையா அவையே மாத்திக் கூப்பிட்டிருப்பினம் எண்டு யோசிக்க வரலாம். ஆனா என்னைப் பொறுத்தமட்டில இதுதான் சரி.

அவை அம்மா, அப்பா எண்டு கூப்பிட்டாலும் கூப்பிடாட்டிலும் அவைக்கு அந்த இடத்தில இருக்கப் போறது நாங்கள்தான் எண்டேக்க ஏன் அவையை அப்பிடிக் கூப்பிடப் பழக்கக் கூடாது சொல்லுங்கோ? உரிமையை உணர்ந்து அவை கூப்பிட வெளிக்கிடேக்கு முன்னம் ஆரேன் அவையின்ர மனசைக் குழப்பி வேற்றுமையைக் காட்டி விட்டினமெண்டா மயூ, மகியாக்கள் உங்களைச் சித்தியெண்டும் நிலன் என்னை சித்தப்பா எண்டும்தான் கூப்பிடுவினம்.” என்ற, அந்த செனாரியோவே பிடிக்காமல் சாதனாவின் முகம் சுழிந்தது.

“அதைக் கேட்க உங்களுக்கு எப்பிடி இருக்குமோ தெரியா, எனக்கு எப்பிடி ஒருநாள் வரவே கூடாது.”

“எனக்கும் அது வேண்டாம்.” அவசரகதியில் சொன்னாள் அவள்.

ஆதித்யன் சிரித்துக் கொண்டவன், “அதான் அவை கூப்பிட்டுக் கூப்பிட்டே தங்கட உரிமையை உணரட்டும் எண்டு கதைச்சனான். அவைக்கும் அதில பெரிசா எந்த தயக்கமும் இருந்த மாதிரி இல்லை. இனி நிலனும் நீங்களும் இஞ்ச நிரந்தரமா இருக்க வேணுமெண்டா, நீங்க சாதனாவை அன்ட்ரி எண்டு சொல்லாம அம்மா எண்டு சொல்லோணும் எண்டு உங்கட மான்குட்டியளிட்டயும் நீங்க என்னை அப்பா எண்டு கூப்பிடோணும் எண்டு நிலனிட்டையும் சொல்ல, ஒண்டா ஒரே வீட்டில இருக்க என்ன செய்றதுக்கும் ரெடியா இருந்த அவையும் ஓமெண்டிட்டினம்.” என்று நேற்று தான் நிகழ்த்திய பெரிய மாற்றத்தை சிம்பிளாக சொல்லி முடிக்க, சாதனாவுக்குத்தான் மலைப்பாக இருந்தது, அவனின் சிந்தனைக் கோணத்தையும் செயலாற்றும் வேகத்தையும் நினைக்க!

“மற்ற ரெண்டு பேரும் ஓகே, மகி நீங்க சொல்லிட்டீங்க எண்டு ஓமெண்டிருப்பா. நிலன் நீங்க சொல்லைக்கு முதலே ஓமெண்டிருப்பார். ஆனா மயூ கட்டாயம் குறுக்குக் கேள்வி கேட்டிருப்பாவே! அவா என்ன கேட்டவா, அவாக்கு என்ன பதில் சொன்னீங்கள் எண்டு சொல்லேலயே!” என்றவனை மெச்சிக் கொண்டான் ஆதித்யன்.

“பதவி குடுத்தவுடனேயே சரியா வேலை செய்றீங்கள்! எந்தப் பிள்ளை எப்பிடி எண்டு வடிவா கணிச்சு வச்சிருக்கிறீங்கள். அவா கேட்டவாதான், அப்ப வைஷ்ணவி அம்மா என்னப்பா எண்டு!” என்று அவன் சொல்லி முடிக்க முதல் இவள் கலங்கி விட்டாள்.

“இதுக்குதான் நான் யோசிச்சனான். பிள்ளையளின்ர மனசில பதிஞ்சு இருக்கிறதை வில்லங்கமா புடுங்கி எறிஞ்சா, அவேன்ர மனசு வேண்டாம எல்லாம் யோசிச்சு இருக்கிறதும் கெட்டுடும். பேசாம நான் அன்ட்ரியா இருந்தே அவேற்ற இருந்த பாசத்தை வாங்கிட்டுப் போயிருப்பன்.” என்று அவள் படபடவென்று பொரிந்தாள்.

“மூச்சு விட்டுக் கதையுங்கோ சாதனா. நான் இதொண்டையும் யோசிக்காமத்தான் இதில இறங்கியிருப்பன் எண்டு நினைக்கிறீங்களா? மயூக்குத் தேவையான பதிலை நான் சொல்லிட்டன். பிள்ளை அதை ஏற்றுக் கொண்டும் போயிற்று. அதை சொல்லுறதுக்குள்ள உங்களுக்கு என்ன அவசரம்?”

“ஓ… சொறி… சொறி… என்ன சொன்னனீங்கள் அவாட்ட?”

“அதேன் உங்களுக்கு? எப்பவும் போல நீங்களே ஏதேன் நினைச்சிட்டுப் போங்கவேன்.”

“ப்ச்… சொல்லுங்கோ…”

“கதைக்கிற எல்லாம் கதைச்சுப் போட்டு வெருட்டென்ன உருட்டென்ன?” என்று சொன்னாலும் அவளுக்குப் பதில் சொல்லத் தவறவில்லை அவன்.

“இப்ப உங்களுக்கு சாதனா அன்ட்ரி செஞ்சு விடுறதெல்லாம் வைஷ்ணவி அம்மாதான் செய்து விடோணும். ஆனா அவாவால கனகாலம் உங்களோட இருக்கேலாம கடவுளுக்கு சேவை செய்யிறதுதான் முக்கியம் எண்டு போயிற்றா. அங்க போய் தன்ர பிள்ளையளுக்குத் தன்னை விட நல்ல அம்மா வேணும் எண்டு பூசை செய்ததிலதான் சாதனாவை உங்களிட்ட அனுப்பினவர் கடவுள்.”

மயூவுக்கு அவன் சொன்ன பதிலை அட்சரம் பிசகாமல் சொல்ல, சாதனாவிடம் இரண்டொரு நிமிடம் பேச்சே இல்லை.

அவள் கண் காணும் தொலைவில் இருக்கும் குழந்தைகள் இருவரும் வேண்டுமானால் இந்தப் பதிலை சட்டென்று ஏற்றுக் கொண்டிருக்கும். ஆனால் தொலைவில் இருந்து தன் காதுக்குள் உணர்வுகளைக் கொட்டிக் கொண்டிருக்கும் பக்குவப்பட்ட மனிதன் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ள எவ்வளவு சிரமப்பட்டானோ? பிள்ளைக்கு சொல்வதற்குள் எத்தனை முறை வேதனையில் எச்சில் விழுங்கிக் கொண்டானோ? நினைக்கவே உள்ளம் அவன்பால் உருகிற்று.

“உங்களுக்குக் கஷ்டமில்லையோ?” அவள் குரலும் அவன்பால் உருகிற்று.

“கஷ்டம் இருந்தது சாதனா. அநியாயமா வாழ வேண்டிய வயசில என்னையும் பிள்ளையளையும் விட்டுட்டுப் போயிட்டாவே எண்டு கஷ்டமாத்தான் இருந்தது. ஒரு மாசம் கிட்ட வார்டுக்கே போகாம கவுன்சிலிங் போய்த்தான் மீண்டு வந்தனான். ஆனா சிலது எங்கட கட்டுப்பாட்டை மீறி நடக்கேக்க ஏற்றுக் கொள்ளோணும்தானே? அதுவும் போனவை விட்டுட்டுப் போன பொறுப்புகளை செஞ்சு முடிக்கிற இடத்தில இருக்கிறவை போனவேன்ர நினைப்பை ஒரு கரையில ஒதுக்கீட்டு ஓடியே ஆகோணும்.

வைஷ்ணவி இருந்த வரைக்கும் அவாக்கு நல்ல மனுஷனா இருந்திருக்கிறன். அவா இல்லாம போன பிறகு அவாக்கும் சேர்த்து என்ர பிள்ளையளை நல்லா வளர்த்திருக்கிறன். அதால அவாக்குத் துரோகம் செய்திட்ட மாதிரி எந்த எண்ணமும் என்ர மனசில இல்லை.

இப்ப என்ர நினைப்பெல்லாம் இனி என்ர பொறுப்பெண்டு வர்ற உங்களுக்கும் நிலனுக்கும் கூட நான் சரியானவனா இருக்கோணும் எண்டுறதிலயும் இதுவரைக்கும் அம்மா எண்டு ஒராளைக் கூப்பிட்டே அறியாத மயூ, மகி ரெண்டு பேருக்கும் சரியான ஒரு அம்மாவைக் குடுத்திடோணும் எண்டுறதிலயும்தான் இருக்கு.” என்று இடைவெளி விட்டவன்,

“குடுத்திட்டேன் எண்டுதான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?” என்று கேள்வியை அவளிடம் திருப்பினான்.

error: Alert: Content selection is disabled!!