“உனக்கு இப்பிடிக் கதைக்க வெக்கமாயில்லையோ? கல்யாணத்துக்குத் தானே சீதனம் தந்தவை. அந்தக் கல்யாணம் வேண்டாம், மனுஷன் வேண்டாம் எண்டுட்டு வீட்டை மட்டும் வேணுமெண்டு நிக்கிறாய். நாங்கள் என்ன உன்னை ஒண்டும் இல்லாம விடவே வீட்டை அம்மான்ர பேருக்கு எழுதெண்டு சொல்லி நிக்கிறம்? இதை அம்மான்ர பேரில எழுதினா உனக்கெண்டு நான் வேண்டி வச்சிருக்கிற ஒரு காணியைத் தருவன். மனுஷன் விட்டுட்டு இருக்கு, வீடில்லை எண்டு உனக்கு ஈசியா வீட்டுத்திட்டம் கிடைச்சிடும். அதோட நானும் கொஞ்சம் காசு உதவி செய்வன். இவ்வளவும் ஒண்டும் நான் எனக்காகக் கேட்கேல. இப்ப எனக்கு நானிருக்கிற துளசின்ர வீடு கிடக்கு. உனக்குப் புதுசாக் கட்டுற வீடு வந்தா அம்மா பிறகு தன்ர பேரில இருக்கிற இந்த வீட்டை நகுலனுக்குக் குடுப்பா தானே? மூண்டு பேருக்கும் நல்லது நினைச்சு நான் சொன்னா, நீ கேட்டால் தானே? அண்ணா எண்ட மதிப்பு மண்ணுக்கும் இல்லை. ச்சீ.. காசுப் பேய் பிடிச்சு ஆடுற.”
இவனைத் தெரியாதவர்கள் யார் கேட்டாலும் இவனின் பேச்சில் மயங்கி, ‘சகோதரங்களுக்கு நல்லது செய்யிறதுல இப்படி ஒரு அண்ணனா?’ என்று மூக்கின் மேல் விரல் வைப்பர்.
ஏன், அவனைப் பத்துமாதம் சுமந்து பெற்ற தாய் கூட ஒன்றரை வருடங்களுக்கு முன், அதாவது தந்தை இறந்து ஆறாவது மாசியம் குடுத்த அன்று இவன் முன்வைத்த இந்த திட்டத்தை அப்படியே நம்பி, ‘நீ அண்ணா சொல்லுற மாதிரி செய்யேன் பிள்ளை!’ என்றிருந்தாரே!
ஆனால் சாதனாவிடம் இந்த ஜாலங்கள் பலிக்காது. கணவனின்
துரோகத்தின் பின் எந்த மனிதரையும் ஆராயாது நம்புவதில்லை அவள்.
ஆராய்ந்து முடிவு நல்லவிதமாகவே வந்தாலும் அவர்கள் மேல் அவள் வைக்கும் நம்பிக்கையின் எல்லை, அவளுக்கு எந்தப் பாதகமும் வரவிடாத அளவு தான் இருக்கும்.
அதனால் தான் அண்ணனை அன்றே எதிர்த்திருந்தாள். இது என் வீடு. நீங்கள் தங்கத்தில் மாளிகை கட்டித் தருவதாக இருந்தாலும் இதை யார் பெயருக்கும் மாற்றிக் கொடுக்கமாட்டேன் என்று விட்டாள்.
கூடப் பிறந்த தமையன் பேச்சுக்கு மரியாதையில்லை. இனி உன் வீட்டு வாசல் படியை மிதிக்க மாட்டேன் என்று அன்று போனவன் தான். அதன் பின் இப்படி எதுவும் பிரச்சனை என்றால் மட்டும் வந்து வாசல்படியில் கால் படாமல் சண்டை இழுத்துவிட்டு செல்வான்.
“ஓம். எனக்கு வெக்கம் இல்லை. காசு, பணம், இந்த வீடு தான் முக்கியம். இதைத் தான் நான் அண்டைக்கே சொல்லிப்போட்டனே பிறகேன் அடிக்கடி வந்து கேக்கிறீங்கள்?”
“வாய்.. வாய்.. இந்த வாயால தான் உன்ர வாழ்க்கை இப்பிடி அந்தரத்தில நிக்குது. அப்பிடி இருந்தும் நீ அடங்கேல என்ன?”
“ஹூம்..” ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்த சாதனாவின் பார்வை தாயிடம் திரும்பியது.
“தங்கச்சி கெட்டு நொந்து நிண்டா, ஒரு அண்ணன் எவ்வளவு வேதனைப்படுவான்? ஆனா இஞ்ச உங்கட பிள்ளையே என்னைப் பழிக்குது. இப்பிடிப்பட்ட சகோதரத்தை நம்பியோ என்னை வீட்டை எழுதிக் குடுக்க சொன்னிங்கள்?” என்றவள் தாய் எதுவோ பேச எடுக்கும் முன்,
“நீங்க ஆர் என்னை என்ன நினைச்சாலும் பரவாயில்லை. எனக்கெண்டு இருக்கிறது இந்த வீடொண்டு தான். நான் இப்ப உழைக்கிறது அண்டை அண்டை செலவுக்கே சரியாப் போகுது. நாளைக்கு எனக்கு ஏதேன் பெருசா நோயோ துன்பமோ ஒண்டு வந்தா அதுக்கு செலவழிக்கவோ, என்னை வச்சுப் பார்க்கவோ நீங்க ஒருத்தரும் முன்னுக்கு வர மாட்டிங்கள். வைத்தியம் பார்க்காம நான் செத்தா, என்ர பிள்ளை அநாதையா போயிடும்.
உங்கட பார்வையில அவன் கழிவுப் பிள்ளையாவே இருந்தாலும், அவன் என்னை நம்பிப் பிறந்திட்டான். அவன் தன்னைப் பார்க்கிற அளவு வளருற வரைக்கும் அவனை வளர்த்து விட வேண்டியது என்ர பொறுப்பு. அதுக்கு நான் இருக்கோணும். நாளைக்கு எனக்கு ஒண்டெண்டா வித்துப்போட்டோ ஈடு வச்சுப்போட்டோ செலவழிக்க, எனக்கு இந்த வீடு முக்கியம். ஆர் சாகப் போறேன் எண்டு நிண்டாலும் இதை நான் தரமாட்டேன்.” என்றாள் உறுதியும் இறுதியுமாக.
“என்னடி கதைக்கிறாய் நீ? அப்பிடி உன்னை விட்டுடுவமோ நாங்கள்? அப்பிடியே எண்டாலும் அவன் உனக்கு வேற காணி தாரன் எண்டு தானே சொல்லுறான்? கதை விளங்காம கண்டபாட்டுக்குக் கதைக்காத!”
“நீங்க தானம்மா கதை விளங்காமக் கதைக்கிறீங்கள். வீட்டை வேண்டிப் போட்டு காணி தாறாராம். சரியெண்டு நான் மாத்திக் குடுத்து வேண்டினாலும் எனக்கு வீட்டுத்திட்டம் வரும் எண்டு என்ன நிச்சயம்? ஏற்கனவே வந்தவையின்ர வீடே கூரை வேலைக்குக் காசு போடாம குறையில நிக்குது. அப்பிடி ஏதேன் நடந்தா நியாயம் தர்மம் எண்டு திரும்ப இந்த வீட்டை எனக்கு எழுதி விடுறாக்களோ இவை? இப்ப வீடு அம்மான்ர பேர்ல தானே கிடக்கு, மூண்டு பிள்ளைகளுக்கும் சமமா பிரிப்போம் எண்டு தான் நிப்பினம். நீங்களும் என்னைப் பற்றி யோசிக்காம, ஆம்பிளை பிள்ளையள் எண்டு அவேன்ர பக்கம் தான் நிப்பீங்கள்!” என்று தன்னை சுற்றி உள்ளவர்களைப்
பற்றி நன்கு அறிந்து சொன்னவள் தொடர்ந்து, “இண்டையோட இந்தக் கதையை விட்டுடுங்கோ. அப்பிடி ஒருவேளை நான் தான் அடாத்தா கதைக்கிறன் எண்டா, என்னில கேஸ போடச் சொல்லுங்கோ உங்கட பிள்ளையள் ரெண்டு பேரையும்! சீதனத்துக்குக் குடுத்த வீட்டைத் திருப்பிக் கேட்கிறது தெரிஞ்சா ஜட்ஜே காறித் துப்புவர்.” என்று கேவலமாகத் தமையனை ஒரு பார்வை பார்த்துவிட்டு விட்டு, உள்ளே சென்றாள், மகனை எழுப்பவென.
“என்ன கதை கதைக்கிறாள் எண்டு பாருங்கோவேன் அம்மா. இவளுக்கு… இருக்கட்டும் இந்தமுறை லீவுக்க நகுலன் வரட்டும். அவனோடயும் கதைச்சு, இவளுக்கு ஒரு முடிவெடுக்காட்டி நான் ஆரெண்டு பாருங்கோ.” என்று அவனும் விசைத்துக் கொண்டு வெளியேற, சுதா தலையில் கை வைக்காத குறையாக நின்றார்.

