நிலமையுணர்ந்து அவர்களிடம் விரைந்த சாதனா,
“அவரை விடு அண்ணா. அவர் ஒருதரையும் வேவு பார்க்க வரயில்ல. என்னைக் கூட்டி வர டொக்டர் அனுப்பி விட்ட டக்ஸி ட்ரைவர் அவர்.” என்று பிரித்து விட்டாள்.
“ஏய்! முதல் நீ எப்ப வந்தனீ? விஷயம் கேள்விப்பட்டவுடன பாய்ஞ்சு ஓடி வந்தியோ, ஊரோட சேர்ந்து சிரிக்க?” என்று அவளிடம் எகிறினான்.
“உன்ர புத்தியெல்லாம் எனக்கில்லை. இஞ்ச வாற மட்டும் எனக்கு ஒரு மண்ணும் தெரியாது. நான் இஞ்ச வந்தது வேற விஷயத்துக்காக.”
“வேற என்ன விஷயம்? முதல் மனோ டொக்டர் உனக்கு டக்ஸி பிடிச்சுக் கூப்பிடுற அளவுக்கு நீ பெரிய ஆளோ?” என்றான் ஒரு மாதிரி இகழ்வாய் இதழ் சுழித்து…
ச்சீ என்று இருந்தது அவன் செய்கையும் நினைப்பும் அவளுக்கு. ஆனாலும் இது போன்ற அற்பப் பதர்களிடம் இருந்து வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? அதனால்,
“டக்ஸி புக் பண்ணினது மனோ டொக்டர் இல்லை. கிளிநொச்சி ஆதித்யன் டொக்டர். அவருக்கு நான் முக்கியமாத்தான் தெரியுறன்.” என்றாள் கர்வமாக.
“இதென்ன உன்ர கதை வேற எங்கயோ போகுது? அம்மா! உன்ர அடுத்த பிள்ளையையும் குடும்ப மானத்தை வாங்கப் போகுது போல. நீங்க நினைச்சது சரிதான். வேலைக்குப் போறன் எண்டு வேற இடம் போய் தரங்கெட்டு வந்திருக்குது உன்ர பொம்பிளைப் பிள்ளை.” என்று ஊரே கேட்க வீட்டை நோக்கி அவன் கத்த, சுதா தலை முடியை முடிந்து கொண்டு வெளியே வந்திருந்தார்.
“என்ன தம்பி சொல்லுறாய்? இவள் என்னவாம்? என்ர மிச்ச உயிரை வாங்க என்ன செய்துபோட்டு வந்தாள்?”
“உங்கட மோளின்ர மனுஷன் இவளை இஞ்சத்த டொக்டரோட தொடர்பாம் எண்டு சொல்லித் திரிஞ்சான் எல்லோ, இப்ப பார்த்தா அங்க வேலை செய்யிற டொக்டருக்கும் அவளுக்கும்தான் தொடர்பாம். அதுவும் கிளிநொச்சியில இருந்து சாவகச்சேரி டக்ஸில அனுப்புற அளவு தொடர்பாம்.” என்ற சுதா வெகுண்டெழுந்தார்.
“என்னடி சொல்லுறான் அண்ணா? உண்மையோடி இதெல்லாம்?” என்று பற்களை வெறுவினார்.
சாதனா அசரவில்லை. ஒப்புக் கொண்டாள்.
“ஓம்… உங்கட பிள்ளை சொல்லுறது சரிதான். அவருக்கும் எனக்கும் இனிப் பிரிக்க முடியாதளவு தொடர்பு இருக்கத்தான் போகுது. நான் அவரைக் கல்யாணம் செய்யப் போறன்.” என்ற,
“என்ன?” “என்ன?” தாய், மகன் இருவரும் ஒரே நேரத்தில் அதிர்ந்து நின்றுவிட்டார்கள்.
“என்னடி சொல்லுறாய்? கல்யாணமோ? உனக்கென்னண்டு கல்யாணம்? பிள்ளை இருக்கிறான் எல்லோ? அவனைப் பார்க்காம என்ன கல்யாணம் உனக்குக் கேட்குது? நீ கல்யாணம் செய்தா அவனை ஆர் பார்க்கிறது?”
“வேற ஆர்? நீங்கதான் பார்க்கோணும்! உங்கட தலையில கட்டிட்டுத் தான் உல்லாசமா வாழப் பிளான் பண்ணிக் கொண்டுதான் ஆள் நைசா இஞ்ச வந்திருக்கு! நீங்க மட்டும் இதுக்கு சம்மதிச்சீங்கள் எண்டு வையுங்கோ, இண்டையோட நீங்கள் எனக்கு அம்மாவும் இல்லை. நான் உங்களுக்குப் பிள்ளையும் இல்லையெண்டு தலை முழுகிட்டுப் போய்க் கொண்டிருப்பன்.”
“நான் ஏன் தம்பி இதுக்கு சம்மதிக்க? எனக்கென்ன விசரே? ஏற்கனவே அவன் இப்பிடிப் போயிட்டான். இதில நீயும் கைவிட்டா எனக்குக் கொள்ளி வைக்க வேற ஆர் இருக்கினம்?” மகனிடம் கண்ணீர் மல்கப் பேசியவர் மகளிடம் கோபமாகக் திரும்பி…
“நீ வெளிக்கிடேக்கயே சொன்னான்தானே, திரும்பவும் எங்கயேன் எங்களைக் கேவலப் படுத்தாம எங்களோடயே இரு எண்டு! இப்ப பார் என்ன வேலை பார்த்துக் கொண்டு வந்திருக்கிறாய் எண்டு! நீ என்ன தனிக்கட்டையே, கடைசி காலத்தில பார்க்க ஆருமில்லையெண்டு கவலைப்பட்டு கல்யாணம் செய்ய? அதான் ஒரு பிள்ளை இருக்குத்தானே? அதை நினைச்சுக் கொண்டு ஒழுங்கா இரேன்.
நான் சொல்லுறதைக் கேள், இதெல்லாம் சரிப்பட்டு வராது எண்டு பெடியனைக் கூட்டிக் கொண்டு இஞ்ச வந்து பழைய மாதிரி மனோ டொக்டரிட்டயே வேலைக்குப் போ. உன்னால அவைக்குச் சொல்லேலாது எண்டா வா, உன்னோட நானும் வாறன். வேலைக்கு வந்தா வேலையை மட்டும் குடுக்காம மனுஷன விட்ட பிள்ளையின்ர மனசைக் கெடுப்பீங்களோ எண்டு நாக்குப் புடுங்கிற மாதிரி நாலு கேட்டுட்டு கையோட உங்களைக் கூட்டியாரேன்.”
அவர் பேசி முடிக்கும் வரை மூச்சுக் கூட விடவில்லை சாதனா. முழுதாகக் கேட்டு விட்டு தன் முழுப் பதிலையும் கொடுத்தாள்.
“நீங்க சொல்லுறது சரிதான் அம்மா. எனக்கு ஒரு பிள்ளை இருக்கிறான்தான். ஆனா அவனைப் பிள்ளை மாதிரி ஆக்கித் தந்ததே அவைதான். நீங்கள் இப்ப அவனைப் பார்த்தால் இது நிலன்தானோ எண்டு சந்தேகப்படுவீங்கள்! அப்பிடி அவனை மாத்தி வச்சிருக்கிறார் டொக்டர். அவன் அப்பிடியே கடைசி மட்டும் இருக்கோணும் எண்டா அவர்ர கையிலேயே அவனை விடோணும். அவனும் இப்ப நான் இல்லாம இருந்தாலும் அவர் இல்லாம இருக்கமாட்டேன் எண்டுதான் நிக்கிறான்…” என்றவள் பேசிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டவர்,
“ஆற்றையேன் பிள்ளைக்கு அறிவுரை சொல்லித் திருத்துறதும் அப்பனா இருக்கிறதும் ஒண்டில்லை. அவருக்குத் தேவையெண்டுறது கிடைச்சா எல்லாம் வெறுக்கும்.” என்றார் அவரே எல்லாம் அறிந்தவர் போல்.
அவர் பேச்சின் உட்பொருள் புரிந்த சாதனாவின் இதழ்கள் கேலியில் வளைந்தன.
“அந்தக் கவலை எனக்கில்லவே இல்லை அம்மா. அவர் என்னை வேண்டாம் எண்டு சொன்னாலும் சொல்லுவாரே தவிர, நிலனை வேண்டாம் எண்டு சொல்லவே மாட்டார். நான் அவனைப் பிரிச்சுக் கூட்டி வர நிண்டாலும் கூட விடமாட்டார்.”
“அப்படியெல்லாம் ஆரையும் முழுசா நம்பேலாது. போகப் போகத்தான் ஒவ்வொரு மனுஷரின்ர ஒரிஜினல் குணமும் தெரிய வரும். ஏன் உன்ர முதல் மனுஷன் எப்பிடி இருந்தான் எண்டு மறந்து போச்சோ?”
“ச்சீ… வாயைக் கழுவுங்கோம்மா. ஆரை ஆரோட கதைக்கிறீங்கள்? அவனை மாதிரி ஒருத்தனைப் பார்த்த பிறகும் இன்னொரு ஆம்பிளையில எனக்கு நம்பிக்கை வந்திருக்குதெண்டேக்கயே விளங்கோணும் இவர் எப்பிடியெண்டு!
பிறகு அவர் அப்பிடி என்னையும் பிள்ளையையும் ஏமாத்தினாலும் கூட என்ன மாறப் போகுது பெருசா? இப்ப மட்டும் நானும் என்ர பிள்ளையும் என்னத்தப் பெருசா வாழ்ந்திட்டு இருக்கிறம்? எங்களுக்கெண்டு ஆர்தான் நிலையா இருக்கினம்?
இஞ்ச வா, இஞ்ச வா எண்டுறீங்களே, இஞ்ச வந்தா மட்டும் என்ன செய்திடப் போறீங்கள் எங்களுக்காக! இப்ப கொஞ்சம் முன்னம் ‘நீங்க அவனை வச்சுப் பார்த்தா நான் உங்களோட உறவை முறிப்பன்.’ எண்டு உங்கட பிள்ளை சொன்னவுடன, ‘நான் ஏன் அப்பிடிச் செய்யப் போறன்? எனக்கு கொள்ளி வைக்க நீ முக்கியம்.’ எண்டு கொஞ்சம் கூட நான் ஆர், என்ர பிள்ளை உங்களுக்கார் எண்டதை யோசிக்காம சொன்னீங்களே, அந்த மாதிரி ஒரு ஆதரவைத் தந்து எங்களைப் பார்த்துக் கொள்ளப் போறீங்களோ?
நிபந்தனை வைச்சு உங்களை நிர்ப்பந்தப் படுத்துற பிள்ளையை விட நானும் என்ர பிள்ளையும் எந்த வகையில உங்களுக்குக் குறைஞ்சு போயிட்டோம் அம்மா?” என்ற, சுதா பதிலின்றி நின்றார்.
‘நான் உனக்கு அம்மா எண்டுறது எவ்வளவு உண்மையோ, அதே மாதிரி அவன் என்ர பேரன் எண்டுறதும் உண்மை. அதால அவனைப் பார்த்தா நீ கதைக்க மாட்ட எண்டு சொல்லுறது எல்லாம் அடாத்து. இதையும் மீறி நீ கதைக்கமாட்டன் எண்டா போ. பிள்ளைதான் கொள்ளி வைக்கோணும் எண்டில்லை. பேரனும் வைக்கலாம்.’ எண்டு எங்களையும் யோசிச்சுக் கதைச்சிருந்தா உங்கட கதையைக் காது குடுத்தெண்டாலும் கேட்டிருப்பேன். ஆனா…”
“இதை உங்களுக்கு என்னெண்டு விளங்கப்படுத்திறது எண்டு தெரியேல்ல. நானும் என்ர பிள்ளையும் எண்டு தாங்கிப் பிடிக்க ஆருமில்லாம வாழ்ந்த வாழ்க்கை, இஞ்ச இருந்தமட்டும் ஒண்டும் பெருசா தெரியேல்ல. ஆனா அங்க போய் அவையோட ஒண்டு மண்டா இருந்து, அவரின்ர பிள்ளையளுக்கு நான் அம்மாவாகி என்ர பிள்ளைக்கு அவர் அப்பாவானாப் போல திரும்பவும் ரெண்டு பேர் மட்டும் எண்ட வாழ்க்கையை நினைக்கவே ஏதோ செய்யுது. எங்களைப் பெருசா நினைக்கிற சொந்தங்களை அங்க விட்டுட்டு இஞ்ச வனவாசம் இருக்க நானோ, நிலனோ ரெடியில்லை.
அதால நீங்க என்ன சொன்னாலும் என்ர முடிவில மாற்றம் இல்லை. நீங்கள் உங்கட ஆம்பிளைப் பிள்ளையள மட்டுமே பெருசா நினைச்சு வாழ்ந்திட்டுப் போங்கோ. என்னைப் பெருசா நினைக்கிறவையோட நான் வாழப் போறன். கல்யாணம் நோர்மலா கோயில்ல வச்சுத்தான் செய்வம். டேட் வச்சா ஃபோன் பண்ணி சொல்லுறன், அதுக்கு முதல் உங்கட ஃபோன்ல இருந்து என்ர நம்பரை ப்ளொக் எடுக்க சொல்லுங்கோ உங்கட பிள்ளையை. கல்யாணத்துக்கு வர விருப்பம் இருந்தா சொல்லுங்கோ, நானே வாகனம் அரேஞ் பண்ணி விடுறேன். இப்ப நான் வெளிக்கிடுறன்.”
கடகடவென ஒப்பித்தவள், அதற்கு மேல் அவர்களின் ஒரு சொல் தன் காதை வந்தடையும் முன் அங்கிருந்து அகலவேண்டும் என்று நினைத்து, விறுவிறுவென்று உள்ளே ஓடிச் சென்றவள் தன் கைப்பையை மாத்திரம் எடுத்துக் கொண்டு வந்து காரினுள் ஏறி, ஸ்டார்ட் செய்யக் கூறியவள், குனிந்த நிலையில் காதுகளைப் பொத்திக் கண்களை மூடிக்கொண்டாள்.
பின்னால் அவள் தாய் மண்ணள்ளித் தூற்றிக் கொண்டிருக்கலாம்!
தமையன் காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருக்கலாம்!
தாயிடம் அவளின் திருமணத்துக்கு சென்றால் நம் உறவு முறிந்து விடும் என்று நிர்ப்பந்திக்கலாம்!
இப்படி எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். ஆனால் அது எதுவும் தன்னை வந்து சேர்ந்து, இனியொருமுறை இந்தத் திருமணம் சரிவருமா என்ற யோசனையைத் தனக்குள் விதைக்கக் கூடாது என்று மூடிய கண்களுக்குள் மூன்று குழந்தைகளின் முகத்தையும் நினைத்துக் கொண்டே வந்தவள் மெயின் ரோட்டில் ஏறும் அசைவை காரில் உணர்ந்து கண்களைத் திறந்தவள், சாரதியிடம் மனோ டொக்டரின் மருத்துவனைக்கு வழி சொன்னாள்.
இவ்வளவுதூரம் வந்துவிட்டு அவர்களைப் பார்க்காமல் செல்ல அவளுக்கு மனதில்லை. மறக்காமல் அதைக் குறுஞ்செய்தியாக ஆதித்யனுக்கு அனுப்பியும் விட்டாள்.
அடுத்து வந்த இருபதாம் நாளில் பிள்ளைகள் மற்றும் தாயின் முன்னிலையிலும் வீடியோ கோலில் ஆசி வழங்கிய மனோரஞ்சன் ராணியம்மா தம்பதிகளின் முன்னிலையிலும் கிளிநொச்சி முருகன் கோவில் சந்நிதானத்தில் ஆதித்யன் மற்றும் சாதனாவின் திருமணம் நடந்து முடிந்திருந்தது.

