MPK 33
“நிலன்! ரெண்டு பேரின்ர தோளிலையும் கையைப் போட்டுக்கொண்டு நில்லுங்கோ… ஆ… அப்பிடித்தான். இனி நீங்கள் ரெண்டு பேரும் அண்ணான்ர தோளில கையைப் போட்டுக்கொண்டு நில்லுங்கோ…” என்றவளின் சொல்லைத் தட்டாது ஃபோட்டோக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர் மூவரும்.
சாதனாவும் சலிக்காமல் தன் ஃபோனின் ஸ்டோரேஜை மூன்று பேரின் புகைப்படங்களால் நிறைத்துத் தள்ளினாள்.
இன்று பயணத்துக்காக மூவருமே ஒன்று போல் டார்க் ப்ளூ கலர் டெனிம் ஜீன்ஸ் மற்றும் வைட் கலர் டீஷர்ட் போட்டுத் தயாராகியிருந்தனர். மூவர் டீஷர்ட்டிலும் சிபிலிங்க்ஸ் என்ற சொல் டார்க் ப்ளூ கலரில் ஹைலைட்டாக எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. மூவரையும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவே இல்லை அவளுக்கு.
ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னை விட்டுத் தனியாக செல்லப் போகிறார்கள் என்ற நினைவுதான் அவளை வாட்டியது.
பூரிப்புக்கும் ஏக்கத்துக்கும் இடையில் நின்று கொண்டிருந்த மருமகளைப் பார்த்துப் பரமேஸ்வரிக்கு சிரிப்புத்தான் வந்தது.
“என்ன பிள்ளை நீ, நான் என்னவோ உன்ர பிள்ளையளைக் கடத்திக் கொண்டு போய் உன்ர கண்ணில காட்டாம வச்சிருக்கப் போற மாதிரி முகத்தை வச்சிருக்கிற? உதுக்குத்தான் சொன்னனான், நான் மட்டும் போய்ட்டு வாறன் எண்டு! உன்ர மனுஷன் கேட்டாத்தானே?”
“உன்ர மனுஷன்…” அவளிடம் ஆதித்யனை இப்படிக் குறிப்பிட வாய்ப்புக் கிட்டினால் பரமேஸ்வரி அதைத் தவற விடுவதே இல்லை. சொல்லி சொல்லியே அவளுக்குப் பதிய வைக்கும் முயற்சி போல.
எப்போதும் போல் ஒரு இனம்புரியாத தித்திப்போடு அவள் உள்ளே அது இறங்க ஒரு நொடி அமைதியாய் அதை அனுபவித்தாள்.
“வெளிக்கிடுற பிளான் இல்லையோ?” மேலிருந்து வந்த சத்தத்தில் ஐவரும் அண்ணார்ந்து பார்த்தனர்.
இவர்களைப் பார்த்தபடியே மேல் தளத்தை சுற்றிலும் அமைந்த பல்கனிக் கம்பியில் கையூன்றி நின்றிருந்தான் ஆதித்யன்.
“எங்க தம்பி வெளிக்கிட விடுகினம்? இவைய விடவே ஏலாது எண்டு இவாவும், உங்களை விட்டுட்டு வரமாட்டன் எண்டு இவரும், உங்கள் ரெண்டு பேரையும் கூட்டிக் கொண்டு போனா என்னெண்டு இவை ரெண்டு பேருமெண்டு நேற்றைல இருந்து மாறி மாறி உங்கட மனுஷியும் பிள்ளையளும் என்னைக் கொடுமை செய்யினம். அதுவும் உன்ர மனுஷி ஆகலும். என்னைப் பார்க்க பிள்ளை பெத்து வளர்க்காத ஆள் மாதிரிக் கிடக்கோ அவாக்கு? இவையைக் கூட்டிக் கொண்டு போய் ஒருநாள் வச்சிருந்து கூட்டியர என்னால ஏலாதோ? எனக்கு வாற கோபத்துக்கு தனியா வெளிக்கிட்டுப் போடுவன். அப்பிடியே இஞ்ச திரும்பி வராம என்ர மச்சாள் வீட்டையே இருந்தும் போடுவேன், சொல்லிப்போட்டன்.”
பரமேஸ்வரி பொய்யாகத்தான் கோபம் காட்டினார். அதற்கே சாதனா பதறிவிட்டாள்.
“நான் உங்களை அப்பிடி நினைச்சுச் சொல்லவே இல்லையம்மா. மூண்டு பேரையும் வைச்சுச் சமாளிக்க உங்களுக்குக் கஷ்டம் எண்டுதான் நினைச்சனானே ஒழிய உங்களோட பிள்ளையளை அனுப்பி வச்சா அவைய நீங்க பார்க்க மாட்டீங்கள் எண்டு சொல்லவே இல்லை.”
“எல்லாம் ஒண்டுதான். என்னில நம்பிக்கை இல்லை உனக்கு.”
“ஐயோ… அம்மா, அநியாயமா பழி போடாதேங்கோ. மூண்டு பேரையும் எத்தினை நாள் வேணுமெண்டாலும் நீங்க கூட்டிக் கொண்டு போய் வச்சிருந்திட்டு கொண்டு வாங்கோ. வெளிக்கிடுங்கோ…” என்றவும் அது என்ற பார்வையோடு அவர் இருவரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட, பிள்ளைகளும் சாதனாவுக்கு முத்தத்தையும் ஆதித்யனை நோக்கிப் பறக்கும் முத்தங்களை அனுப்பியும் அவனிடம் இருந்து அறிவுரைகளையும் அன்பு முத்தங்களையும் ரிட்டர்ன் வாங்கிக் கொண்டு கிளம்பினர்.
அவர்கள் சென்ற பின்னும் கேட்டைப் பிடித்துக் கொண்டு அவர்கள் சென்ற வழியையே பார்த்து நின்ற சாதனாவைப் பார்த்த ஆதித்யன்,
“என்ன அவை திரும்பி வர்ற வரைக்கும் உதிலயே நிக்கப் போறீங்களோ?” என்றான் கேலியாக.
அவனை அண்ணார்ந்து பார்த்தவள், “நான் செய்ததுகளைப் பார்த்து அம்மா உண்மையா கோவிச்சுட்டாவோ?” என்றாள் வருத்தமாக.
“அதெல்லாம் இல்லை. அவா அப்பிடிக் கதைக்காட்டி நீங்கள் இன்னும் நேரத்தைக் கடத்துவீங்கள் எண்டுதான் அப்பிடிக் கதைச்சவா. நீங்கள் ஃபீல் ஆகாதேங்கோ.”
“ம்ம்…”
“ம்ம்… எடுத்த ஃபோட்டோஸ் எல்லாம் எனக்கு அனுப்பி விடுங்கோ. பிறகு நான் கொஞ்சம் நித்திரை கொண்டு எழும்பப் போறேன். அவை ஒரு முக்கா மணித்தியாலத்தில அங்க ரீச் ஆகியிருப்பினம். நேரத்தைப் பார்த்து போயிட்டீங்களோ எண்டு ஒருக்கா (ஒரு தடவை) எடுத்துக் கேளுங்கோ. ஒருக்காத்தான் எடுத்துக் கேட்கிறது. அடிக்கடி எடுத்து நசல் குடுக்குறேல. எங்களைத் தாண்டியும் பிள்ளையள் நிறைய விஷயங்களைப் பார்க்கோணும், பழகோணும்.” என்று ஸ்ட்ரிக்டாக சொல்லி விட்டு அவன் உள்ளே சென்று மறைய, அவன் நின்ற இடத்தை முறைத்து விட்டுத் தானும் தன் வேலைகளில் கவனமானாள் சாதனா.
வேலைகளுக்கு இடையில் பிள்ளைகள் நினைப்போடு விடிகாலையில் எடுத்து சென்ற ஆதித்யனின் இரத்த மாதிரி எந்தத் தீய முடிவுகளையும் கொண்டு வரக் கூடாது என்ற நேர்த்தியையும் வைத்தபடி இருக்க, அவள் மொபைலில் மெசேஜ் வந்த ஒலி.
பிள்ளைகள் தானோ என்று அவசரமாக எடுத்துப் பார்க்க ஆதித்யன் என்று வந்திருந்தது.
திறந்து பார்த்தால் அவள் பிரார்த்தனை பலித்திருந்தது.
“ரிப்போர்ட் நோர்மல், சாதனா.”
“நல்ல காலம். இப்பதான் நிம்மதியா கிடக்கு. நீங்க முழிச்சிட்டீங்களோ? குடிக்க எதேன் வேணுமோ?”
அவள் டைப் பண்ணி அனுப்பியதைப் பார்த்த பின்னும் சில நொடிகள் அசப்பின்றி இருந்த தொடுதிரை…
பின் சிறிது நேர இடைவெளியின் பின்னர், “ஒண்டும் வேண்டாம். படுக்கப் போறேன்.” என்று வந்ததோடு ஒஃப்லைன் போயிருந்தான்.
இவளும் சரி ஓய்வெடுக்கட்டும் என்று விட்டு விட்டு கடினப்பட்டு நேரத்தைப் போக்காட்டிக் கொண்டிருந்தாள்.
நாற்பது நிமிடங்கள் கழித்து பரமேஸ்வரியே அழைத்து தாங்கள் வந்து சேர்ந்துவிட்டதாக சொல்லி, தன் மச்சாளிடம் இரண்டு வார்த்தை பேசுகிறாயா என்று கேட்டுப் பேச வைத்தார்.
பின் பிள்ளைகளிடமும் சிறிது பேசி விட்டு கவனமாக இருக்கும்படி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அழைப்பைத் துண்டித்தவள், தங்கள் இருவருக்கான மதிய உணவுத் தயாரிப்பில் இறங்கினாள்.
அதுவும் சீக்கிரம் முடிந்து போக அவளுக்கு போர் அடிக்க ஆரம்பித்தது. அறைக்குள் வந்து அமர்ந்து தொலைபேசியைப் பார்த்தவாறு அமர்ந்து விட்டாள்.
“பிள்ளையள் இல்லாம ரெண்டு கையும் இல்லாத மாதிரிக் கிடக்கு. இதுக்குத்தான் நான் அனுப்ப மாட்டன் எண்டனான். இந்த நேரம் கலகல எண்டு எதையும் கதைச்சுக்கொண்டு என்ர கையுக்குள்ளேயே நிண்டு கொண்டிருப்பினம். அவையும் நானில்லாம அங்க என்ன செய்யினமோ தெரியேல. கோல் எடுத்துப் பார்க்கலாம் எண்டா, அடிக்கடி ஃபோனைப் போட்டு அவைய டிஸ்டர்ப் பண்ண வேண்டாமாம் இவர்! இவருக்கெங்க என்ர தவிப்புத் தெரியப் போகுது? கேட்டா வியாக்கியானம் கதைச்சு, நான் டொக்டர் எண்டுவர்.”
புருபுறுத்துக் கொண்டிருந்தவள் பின்னிருந்து கேட்ட கனைப்பு சத்தத்தில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
கதவு நிலையில் சாய்ந்து நின்றபடி இவளையே பார்த்திருந்தான் ஆதித்யன். அறையின் உள்ளே வரவும் இல்லை. அதே நேரம் அறைக்கு வெளியே நிற்கிறான் என்று சொல்லவும் முடியாது, போர்டரில் நின்று கொண்டிருந்தான். எல்லைகளை உடைக்கும் உத்தேசத்தில்!
அது தெரியாத அவளோ, ‘நித்திரை கொள்ளப் போவதாக அல்லவா சொன்னான், எப்போது இங்கே வந்தான்? எதுவரை நான் கதைத்ததைக் கேட்டிருப்பான்?’ என்று மனதுக்குள் கேள்விகளாகக் கேட்டுத் தள்ளியவள், வெளியே…
“என்னேன் வேணுமோ? சுடுதண்ணி என்னவும் வச்சுத் தரவோ?” என்று கன அக்கறையாகக் கேட்டாள்.
“அதொண்டும் வேண்டாம். நீங்கதான் தனியா என்னவோ கதைச்சுக் கொண்டு நீண்டீங்கள்! என்னவும் பிரச்சனையோ?”
‘லூசா நீ?’ என்ற அவன் மறைமுக கேள்வி புரிந்தவள், அவனை மனதுக்குள் மட்டும் முறைத்தபடி,
“பிள்ளையளத்தான் நினைச்சுக் கதைச்சனான். அவைக்கு ஒருக்கா எடுத்துப் பார்க்கட்டோ?” என்ற, அவன் நேராகவே அவளை முறைத்தான்.
“இஞ்ச நிண்டு இப்பிடி புலம்புறதுக்குப் பேசாம நீங்களும் அங்கயே போங்கோவன். டிரைவர் பிடிச்சுத் தரவோ?”
“இப்ப என்ன கேட்டனான் எண்டு இப்பிடிக் கடிக்கிறீங்கள்? போறதெண்டா அவை போகேக்கயே எனக்குப் போகத் தெரியாதோ? உங்களுக்கு ஏலாதெண்டுதானே இஞ்ச நிண்டனான்?”
“வாயாலதான் அப்பிடி சொல்லுறீங்களே தவிர, எனக்காக ஒண்டும் செய்யக் காணேலயே! நான் அங்க அறைக்க தனியாக் கிடக்க, நீங்க இஞ்ச வந்து தனியா கதைச்சுக் கொண்டு நிக்கிறீங்கள். தனியா இருக்க விசரடிக்குதெண்டு கூட என்னோட வந்திருக்கேலாட்டி பிறகு ஏன் நீங்கள் இஞ்ச நிண்டு கொண்டு? வெளிக்கிட்டுப் போங்கோ. நான் பார்த்துக் கொள்ளுவன் என்னை. எனக்கு அது பழக்கமும்தான்.” என்றுவிட்டு அவன் சென்றுவிட, இவளுக்கு ஒரு மாதிரியாகி விட்டது.
மாமியாரும் பிள்ளைகளும் கிளம்பி சென்று நான்கு மணி நேரங்களுக்கு மேல் ஆகி விட்டிருந்தது. அந்த நான்கு மணி நேரமும் இல்லாத அவர்களை எண்ணி எண்ணியே பொழுதை ஓட்டியவள், யாருக்காக இங்கே தேங்கினாளோ அவனை நினைக்க மறந்திருந்தாள்!
இப்போது அவன் வந்து இப்படிப் பேசிச் சென்ற பின்னும் அப்படியே விட மனமின்றி அவன் அறை நோக்கி நடந்தாள்.
மாடி விறாந்தையைத் தாண்டி அறையின் கதவு வரை தயங்கித் தயங்கி வந்துவிட்டவளுக்கு உள்ளே எப்படி செல்வது என்ற சங்கடம் தடுக்க, கதவைத் தட்ட செல்வதும் பின்வாங்கிக் கையை எடுப்பதுமாக செய்துகொண்டிருந்தாள்.
அந்நேரம் அவள் பின்னால் இருந்து நீண்ட ஒரு கை ஒரே தள்ளில் கதவைத் தள்ளி அகலத் திறந்து விட, பதறிப் போய்த் திரும்பினாள் சாதனா.
வேறு யார் ஆதித்யன்தான். கையில் சுடுதண்ணீர் போத்தலுடன் நின்று கொண்டிருந்தான்.
“வீட்டில இருக்கிற எல்லாக் கதவையும் போலத்தான் இந்தக் கதவும். இப்பிடித் தள்ளினாலே திறக்கும். இதுக்கெண்டு தனியா அலிபாபா மந்திரம் போட்டு ஒண்டும் செய்யேல நான்.” என்ற, என்ன சொல்கிறான் இவன் என்பது போல் புரியாமல் பார்த்தாள்.
“இல்லை இப்பிடி இப்பிடி ஏதோ மந்திரம் போடுற மாதிரி செய்தீங்கள் அதுதான் சொன்னன்.” சொல்லி அவளைப் போல் கையை அசைத்துக் காட்ட, அவள் முறைத்தாள்.
அதை ஊதித் தள்ளியவன், அவளைத் தாண்டி அறைக்குள் சென்றபடியே,
“உள்ளுக்கு வாங்கோ. உங்களை மாதிரி வாசலோட வச்சுக் கதைக்கிற பழக்கம் எனக்கு இல்லை.”
“உங்கட வீட்டில இருக்கிற அறைக்கு வர்றதுக்கு நானோ உங்களைக் கூப்பிடோணும்?” கேட்டபடியே வந்தவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“ஓஓ… என்ர வீடு? அப்ப நீங்க என்ன இஞ்ச வாடகைக்கு இருக்கிறீங்களோ? வந்து இவ்வளவு காலம் ஆச்சு! இன்னும் ஒருதரம் கூட வாடகைக் காசைக் கண்ணில காட்டவே இல்லை?” என்று ஏகத்துக்கும் நக்கல் பேசியவனை என்ன செய்யலாம் என்பதுபோல் பார்த்திருந்தாள் அவள்.

