ஆனா கல்யாணம் செய்து வந்த அண்டைக்கு நிலன் என்னோட படுக்கவெண்டு உங்களிட்ட கேட்க நீங்க சொன்னீங்களாம், ‘அவர் வேலைக் களைப்புல தனியாத்தான் படுப்பர், கரைச்சல் குடுக்கக் கூடாதெண்டு!’ அதைக் கேட்டுட்டு என்னட்ட வந்து…
‘அப்பிடியோ? அப்பிடியெண்டா ஏன் அண்டைக்கு அப்பிடிச் சொன்னீங்கள்?’ எண்டு கேட்டார்.
நான் என்னத்த சொல்ல? அப்பிடியில்லை எண்டு சொல்லி உங்களையும் பொய்யாக்கக் கூடாது. ஓம் எண்டு சொல்லிப் போட்டு மயூவையும் மகியையும் என்னோட படுத்தினா அதுவும் பிள்ளைக்குக் காயமாப் போடும் எண்டு நீங்க சொன்னதை உண்மையாக்கி மயூவையும் மகியையும் உங்களோட படுக்கச் சொல்லி அனுப்பிட்டேன்.
உங்களுக்கு என்னோட ஒரே அறையில இருக்கக் கஷ்டம், நான் உங்களை விழுங்கி ஏப்பம் விட்டுடுவன் எண்டு பயமெண்டா உங்களையும் தனியா விடக் கூடாதெண்டு யோசிச்சுத்தான் செய்தனான். ஆனா நீங்க என்னை யோசிக்கவே இல்லை.
ஏதோ மேல் வீட்டில தனியா குடியிருக்க வந்த மாதிரி நான் மட்டும் இஞ்ச அசைஞ்சு திரிய எரிச்சலா கிடக்கும். அதான் வீட்ட நிக்காம ஓடுறனான். அப்பவும் பிள்ளையள் மூண்டும் ‘அப்பா எப்ப வருவீங்கள்?’ எண்டு கேட்டு இஞ்ச இழுத்திடுவினம்.
இனி இப்பிடி என்னை விடாதேங்கோ சாதனா. அவை மூண்டு பேரோட என்னையும் கொஞ்சம் பாருங்கோ. அடிச்சுப் பறிச்சு உங்களிட்ட இருந்து ஒண்டையும் புடுங்கப் போறேல நான். இயல்பா இருங்கோ… அதில உங்களுக்கு என்ன பிரச்சனை எண்டுதான் எனக்குத் தெரியேல. இல்லா நீங்க சரியா இருக்க நான்தான் உங்களிட்ட கனக்க எதிர்பார்க்கிறேனோ எண்டும் தெரியேல. இண்டைக்கும் பிள்ளையள் இல்லாம போரடிச்சுப் போய் இருப்பீங்கள், நேற்று நான் கதைக்கோணும் எண்டு சொன்னதை ஞாபகம் வச்சு என்னட்டக் கதைக்க வருவீங்கள் எண்டு நினைச்சுதான் லாப்புக்கு அடிச்சு வேளைக்கு ரிப்போர்ட் வேணும் எண்டு அவசரப்படுத்தி ரிசல்டை வாங்கி உங்களுக்கு சொன்னனான். ஆனா நீங்க எட்டிக் கூடப் பார்க்கேல. குடிக்கிறதுக்கு வேணுமோ, சாப்பிடுறதுக்கு வேணுமோ எண்டு ஹொட்டலுக்கு சாப்பிட வந்தவனிட்ட வெயிட்டர் கேட்கிற மாதிரி ஒரே கேள்வி எப்ப பார்த்தாலும்.” என்றவன் சலிக்க சாதனாவின் முகத்தில் அப்பட்டமான வருத்தம்.
“சத்தியமா நான் இவ்வளவெல்லாம் யோசிக்கவே இல்லை. நான் வேணுமெண்டு எதையும் செய்யவும் இல்லை. சொறி டொக்…” டொக்டர் என்று சொல்ல வந்து பாதியில் நிறுத்தினாள்.
“முதல் உந்த டொக்டரை நிப்பாட்டுங்கோ எல்லாம் சரியாப்போகும். எனக்குப் பேர் இருக்கு ஆதித்யன், ஆதி எண்டு!” என்றவன் நிதானமான குரலில்…
“உங்களைக் குறை சொல்ல எண்டு நான் இவ்வளவும் கதைக்கேல. குறையொண்டும் இல்லாம மிச்சமிருக்கிற வாழ்க்கையை வாழோணும் எண்ட ஆசையிலதான் உங்களிட்ட கேட்டு நிக்கிறேன். செய்வீங்களோ?” என்ற,
“கட்டாயமா செய்வேன். இனி நான் எல்லாத்திலயும் கவனமா இருப்பேன்.”
“கவனமா இருந்து செய்யத் தேவையில்லை. தன்ரபாட்டில உங்களுக்கா செய்யத் தோண வேணும்.” என்று அவன் அப்போதும் பாடமெடுக்க முடியாது கதறி விட்டாள்.
“ஐயோ… நீங்க நிப்பாட்டுங்கோ காணும். நான் எனக்கு வாற மாதிரி செய்து போட்டுப் போறன். உங்கட சைக்கோலஜி, பிலாசொஃபி எல்லாம் யோசிச்சன் எண்டா நான் பைத்தியமாயிடுவேன்.” என்ற, அவன் உதடுகள் சிரிப்பில் விரிந்தன. உள்ளே இருந்ததைக் கொட்டியதில் மனதும் லேசாகி விட்டிருந்தது.
“இப்ப மட்டும் தெளிவா இருக்கிற நினைப்போ? இன்னும் நான் இருக்கச் சொன்னாதான் இருக்கோணும் எண்டு நிக்கிறீங்களே, அதில தெரியேலயோ நீங்க ஆர் எண்டு!” என்றிட, பதிலேதும் இன்றி நகர்ந்தவள், கட்டிலின் ஓரத்தில் அவன் கால் மாட்டில் பட்டும் படாமல் அமர்ந்து கொண்டாள்.
அவனிடம் ஒரு திருப்தியான புன்னகை. இருந்தாலும் அவளை இயல்பாக்கிப் பேச்சை வளர்க்கும் பொருட்டு,
“என்ன, எனக்கு கால் அமத்தி விடப் போறீங்களோ? அதெல்லாம் ஒண்டும் வேண்டாம்.” நல்லவன் போல் சொன்னவன்,
“விரலுக்கு நெட்டி மட்டும் எடுத்து விடுங்கோ.” என்று காலை அவளுக்குப் பக்கப்புறத்தில் போட்டுக் கொண்டான்.
நூல் இடைவெளியில் தன் மடியருகே வந்து விழுந்த காலைப் பார்த்த சாதனா, உண்மைக்கும்தான் சொல்கிறானோ என்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், அங்கே அவன் சிரிப்பையடக்கப் பாடுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைத்து வைத்தாள்.
அதைப் பார்த்து வாய்விட்டே சிரித்தவன், “ஏன் முறைக்கிறீங்கள்? இவ்வளவு இடம் கிடக்க, நீங்கள்தானே காலைப் பிடிச்சு விடப் போற மாதிரி அங்க போய் இருந்தனீங்கள்?”
“கால்மாட்டில இருந்தா காலைப் பிடிக்க வந்த எண்டு அர்த்தமா? அப்ப தலைமாட்டில வந்திருந்தா கழுத்தைத் திருக வந்த எண்டு அர்த்தமோ?”
“அம்மாடி… நீங்கள் அங்க காலடியிலேயே இருங்கோ. மாறிக் கீறி இந்தப் பக்கம் வந்து கழுத்தை டார்கெட் பண்ணிடாதீங்கோ. என்னை நம்பி வயசு போன அம்மா, மூண்டு பிள்ளையள், ஒரே ஒரு மனுஷி எண்டு மொத்தம் ஐஞ்சு பேர் இருக்கினம். அவைக்கெல்லாம் வழி செய்யும் மட்டும் என்ர உயிர் எனக்குப் பொக்கிஷம்.”
வேடிக்கையாக சொன்னான் என்றாலும் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் தன் பொறுப்பு இவர்கள் என்ற பட்டியலில் இயல்பாகத் தன்னையும் மகனையும் இணைத்ததில் சாதனா நெக்குருகிப் போனாள்.
‘இப்படிப்பட்டவனுக்கு உரிமையைக் கொடுக்கவா நான் இத்தனை தயங்குகிறேன்?’ தன்னையே திட்டிக் கொண்டவள், அதுவரை இருந்த தயக்கங்கள் போக, அவன் அருகாமையை இலகு தன்மையோடு ஏற்றுக் கொண்டு நன்றாக அமர்ந்து கொண்டாள்.
அந்த இலகு நிலை அன்று இரவு அவன் அருகில் அவன் முகம் பார்த்து உறங்கும் அளவு அவளை முன்னேற்றியிருந்தது.
மறுநாளே பிள்ளைகளோடு அவள் ஜாகை மேல் தளத்திற்குக் குடி பெயர்ந்துமிருந்தது.

