இறுகிக் கிடந்த ஆதித்யனின் முகத்தையும் கவிழ்ந்திருந்த நித்திலனின் தலையையும் மாறி மாறிப் பார்த்த சாதனா,
“நான் பொலிசுக்குப் போகப் போறேன்.” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் படி.
என்னவெனத் திரும்பிப் பார்த்தவனிடம் “பிள்ளையளைத் திருத்திறதுக்கு பேசுறதும் அடிக்கிறதும் குற்றம் எண்ட மாதிரி ஆரோ சொன்னவை. அதான் பொலிஸ்…” நக்கலாக சொல்ல,
“உங்களுக்கு என்னைச் சொல்லுறதுக்கு சந்தர்ப்பம் அமைஞ்சா காணும் என்ன?” என்று அவளை முறைத்து விட்டுத் திரும்பியவன் மிரர் வழியாக நிலனைப் பார்த்தான்.
அவன் அமர்ந்திருந்த விதம் மனதை வருத்த நிதானத்தைக் கைவிட்ட தன்னை நிந்தித்துக் கொண்டவன்,
“நிலன்!” என்றான் கனிவு ததும்ப.
ம்ஹூம்… அவன் அசையவே இல்லை.
“நிலன்! அப்பா கூப்பிடுறேன் எல்லோ? ஓமெண்ட மாட்டீங்களோ?” என்ற, கொஞ்சமாய் அசைந்தவன் மகியின் காதுக்குள் ஏதோ சொல்லி விட்டு மீண்டும் குனிந்து கொண்டான்.
அது தனக்கான பதில் என்று புரிந்தவன்,
“அண்ணா என்னவாம் மகி?” என்று நேரே மகளிடமே கேட்டுக் கொண்டான்.
“அண்ணா உங்களில கோவமாம். கதைக்க மாட்டாராம். உங்களையும் கதைக்க வேண்டாமாம்.”
“அப்பிடியாமோ? அதெல்லாம் ஏலாதாம் எண்டு சொல்லுங்கோ அவரிட்ட. அவருக்குக் கோபமெண்டா அவரைக் கதைக்க வேண்டாமெண்டு சொல்லுங்கோ. எனக்கு என்ர பிள்ளைல ஒரு கோபமும் இல்லை. நான் கதைப்பேன் அவரோட.” என்றவன் அதன் பின் வாயோயாமல் “நிலன்! நிலன்!” என்று கூப்பிட்டுக் கூப்பிட்டு கதை கேட்டு அவனைச் செல்ல வம்பு இழுத்துக் கொண்டே வந்தான்.
நிலனுக்குக் கோபம் மாறாமல் இருந்ததோ, இல்லை தந்தையின் தன் மேலான ஈடுபாட்டை ரசித்தானோ தெரியவில்லை. வீடு வந்தும் அவன் இளகிக் கொடுக்கவே இல்லை.
ஆதித்யன் காரை நிறுத்தியதும் ஆளுக்கு முந்தி சீட் பெல்ட்டை கழற்றி விட்டு கீழே இறங்கியவன், ஆதித்யன் இறங்கிப் பிடிக்க வருவதற்குள் வீட்டிற்குள் ஓடியிருந்தான்.
“நிலன்!” என்ற அவன் அழைப்பு வீணே காற்றோடு கலந்தது.
இடுப்பில் கையை ஊன்றி உஃப் என்று ஊதியவனுக்கு உள்ளே சென்று அவனை சமாதானம் செய்யவெல்லாம் நேரமில்லை.
“அப்பா! பாய்…” என்று காலைக் கட்டிக் கொண்ட பெண்ணரிசிகள் இருவரையும் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தவன், நமட்டு சிரிப்போடு தேங்கி நின்ற சாதனாவை முறைத்தான்.
“என்ன சிரிப்பு? உங்களுக்கு நல்ல கொண்டாட்டமா இருக்குமென்ன?”
“இல்லையெண்டு பொய் சொல்ல மாட்டேன். கொஞ்சம் குளிர்ச்சியாத்தான் கிடக்கு.” என்று நன்றாகவே சிரித்தாள்.
“கடுமைக்கு (ரொம்ப) சிரிக்காதைங்கோ! என்ர கையுக்குள்ள எம்பிட்டாரெண்டா (அகப்பட்டார் என்றால்) ஒரு நிமிஷம் காணும், ‘என்ர அப்பா’ எண்டு அவரைக் கழுத்தைக் கட்ட வைக்க!” என்றான் கர்வமாக.
அவ்வளவு நேரம் கூடத் தேவையில்லை என்று அவளுக்கும் தெரியும்தான். என்றாலும் அவனிடம் ஒப்புக்கொள்ளாது வம்புக்கு நின்றாள்.
“நிலனுக்குக் கோபம் வந்தா போக்காட்டுறது பெரும் கஷ்டம்.”
“அதையும் பார்ப்போம்.”
“பார்ப்போம்… பார்ப்போம்…”
“என்ன பெட் கட்டுறீங்களோ?”
“ஓமெண்டுதான் வையுங்கோவன்.”
“ஓஹோ…” என்று ஒரு தினுசில் கேட்டுக்கொண்டே தோதாக காரில் சாய்ந்து கொண்டவன்,
“நான் வெண்டா என்ன தருவீங்கள்?” என்றான் புருவமியர்த்தி.
விளையாட்டாய் கேட்டாலும் அதில் சிறு எதிர்பார்ப்பும் கலந்தே இருந்தது.
அது அவளுக்கும் புரிந்ததோ என்னவோ, “உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேள்வியை அவனிடமே திருப்பி விட்டாள்.
“என்ன ஒண்டையும் யோசிக்காம இப்பிடிக் கேட்கிறீங்கள்? நான் வில்லங்கமா ஏதேன் கேட்டா என்ன செய்வீங்கள்?”
“நீங்கள் அப்பிடிக் கேட்கமாட்டீங்கள் எண்டு நம்பிக்கை இருக்கு. மீறிக் கேட்டாலும்…” அவள் இழுக்க,
“கேட்டாலும்ம்ம்ம்ம்ம்ம்?” என்று ஊக்கினான் ஆதித்யன்.
“மாட்டன் எண்டு சொல்லமாட்டன்.” என்றாள் பார்வையை அவனிடம் இருந்து பிரித்து எங்கோ பொருத்தி.
அவள் பதிலில் விழிவிரித்த ஆதித்யன் இதழ்களிலும் அழகான முறுவல் விரிந்தது.
“ஃபைனலா என்ர மனுஷி ஒரு முடிவுக்கு வந்துட்டா போல?” என்ற,
‘என்ர மனுஷி’ அவன் வாயால் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது. மனதோடு உடலும் மூசிப் பெய்யும் மாசிப் பனியில் நனைந்தது போல் ஜில்லிட்டது.
“வெளிக்கிடேலயோ நீங்கள்?” எண்ணங்களை மடை மாற்றும் பொருட்டு ஒரு கேள்வி.
“வேளைக்குப் போகோணும் எண்டுதான் நிலனைத் தேடிக் கூட உள்ளுக்குப் போகேல. நீங்கள்தான் பிடிச்சு வச்சிருக்கிறீங்கள்.”
“நிண்டு கதைக்குக் கதை கதைச்சுப் போட்டு நீங்கள் நல்லாச் சொல்லுவீங்கள்.”
“என்ன செய்யிறது? நீங்களே இப்பதான் பேச்சு வார்த்தைக்கு ஓமெண்டு வந்திருக்கிறீங்கள்! அதான் விட்டுட்டுப் போக மனசில்லாம நிக்கிறன்.”
“ஐயோ காணும் வெளிக்கிடுங்கோ. பிறகு இதுக்கும் என்னில பழியைப் போடாம!”
“நான் வெளிக்கிடுறேன், நீங்க பிள்ளையளைக் குளிக்கச் சொல்லுங்கோ. ஹொஸ்பிட்டலால வந்து அப்பிடியே அளைஞ்சிட்டன் அவைய. மற்றது நிலனை ஒண்டும் சொல்லாதேங்கோ. நீங்க ஏதேன் கதைச்சு அவர்ர கோபத்தைக் கூட்டி விடாம.”
“நான் அவரை என்ன சொல்லப் போறன்? சும்மா சும்மா என்னை வில்லி மாதிரிக் கதைக்காதேங்கோ!” என்றாள் அவனை முறைத்து.
“இண்டைக்கு எனக்கு நேரம் சரியில்ல போல. முதல், பிள்ளை இப்ப மனுஷி எண்டு கதைச்சே எல்லாரையும் கோபப் படுத்துறேன். இதில கொடுமை என்னெண்டா ஒருதரையும் சமாதானப் படுத்த நேரமும் இல்லை. நீங்களும் கோபமாயே உள்ளுக்குப் போங்கோ. பிறகு ஆறுதலா வந்து எல்லாரையும் ஒரேயடியா சமாதானப்படுத்துறன். இப்ப பாய்…” என்று காரில் ஏறிக் கொண்டவன்,
“சாதனா! இதென்ன உங்கடயோ?”
அவள் அமர்ந்து வந்த சீட்டைக் குனிந்து பார்த்துக் கேட்க,
“என்னது?”
“ப்ச்… அங்க நிண்டு கொண்டு கதை கேட்காம இப்பிடி வந்து எட்டிப் பாருங்கோ.” என்று லேசான எரிச்சலோடு சொல்ல,
அவளோ இவன் கோபப் படுமளவு அப்படி எதைத் தவற விட்டோம் என்ற பதைப்போடே எதையும் யோசிக்காது அவசரமாக அவன் சீட் கண்ணாடி வழியே தலையை விட்டுப் பார்க்க, அதை எதிர்பார்த்திருந்தவன் போல் அவள் பக்கம் திரும்பினான்.
“சாதனா! பின்னுக்கு வாட்ச்மன் அண்ணா நிக்கிறார். உள்ளுக்கு நடக்கிறதைக் கண்ணாடி மறைக்கும். நீங்க கன்னத்தில கை வச்சுக் காட்டிக் குடுக்காதேங்கோ.” என்றவன்,
இவன் என்ன சொல்கிறான் என்று அவள் குழம்பித் தெளிவதற்குள் அவள் கன்னத்தில் தன் அச்சாரத்தைப் பதித்திருந்தான்.
எதிர்பாராத அவன் செயலில் திகைத்த சாதனா, படாரென்று தலையை வெளியே எடுத்துக் கொண்டவள் கை தன் போல் கன்னத்தைப் பற்ற பாதி தூரம் உயர்ந்து விட்டது.
பின்தான் அவன் கொடுத்த முன்னுரை ஏனென்று பிடிபட உயர்த்திய கையை இறக்கி விட்டு அவனைப் பார்த்தாள்.
மாந்தகாசப் புன்னகையுடன் அமர்ந்திருந்தவன், “லேட் பிக்கப்!” என்றான் கிண்டலாக.
அவன் பதித்த சின்னம் பாதி சிரிப்பு மீதி என்று சாதனாவின் நிலை சொல்லும்படி இல்லை.
அவனிடம் இருந்தான முதல் முத்தம். விடலைப் பெண்ணுக்கு வருவது போல் அப்படியே கொட்டிக் கவிழ்த்துக் கொண்டு நாணம் வரவில்லை என்றாலும் அவளளவுக்கு உண்டான நாணத்தை வெளிக்காட்டவும் இயலாது, உதடு கடித்து அடக்கிக் கொள்ளவும் முடியாது நடு முற்றத்தில் நிற்க வைத்து முத்தம் கொடுத்து விட்டுக் காருக்குள் இருந்து எகத்தாளம் செய்பவனை என்ன செய்தால் தகும் என்று இருந்தது அவளுக்கு.
இரண்டில் ஒரு முடிவுக்கு உடன்படாது திணறிக் கொண்டிருந்த அவள் நாணம் பொய்க் கோபமாய் மாறி அவனைப் பார்வையால் மிரட்ட, இப்போது அவனுக்கு கொண்டாட்டமானது அவள் நிலை கண்டு!
“வாழ்க்கை ஒரு வட்டம் சாதனா. இப்ப எனக்குக் கொண்டாட்டமா இருக்குது.” என்றான் கண்ணை சிமிட்டி.
“கண்ணை நோண்டி வெளியில எடுத்துப் போடுவன். எங்க நிண்டு என்ன வேலை செய்யுறிங்கள்?” என்றவளின் முறைப்பின் காரம் கூடியது.
“நான் ஒப்பிரேஷன் ஸ்டார்ட் பண்ண முதலே இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்திட்டுத்தான் புரசீஜர் ஸ்டார்ட் பண்ணினான். உங்களுக்குத்தான் விளங்கேல.” என்று தோள் குலுக்கியவனைப் பார்த்தவள்,
“கடவுளே! உங்கட கதையும் நீங்களும்! இந்த வாயில்லாட்டி நாய்தான் உங்களைத் தூக்கீட்டுப் போகும்.” என்றாள் தலையில் அடிக்காத குறையாக.
“இப்ப என்னத்துக்கு நாய், பேய் எண்டு என்னைப் பேசுறீங்கள்? உங்களுக்கு வேண்டாட்டி நான் தந்ததை நிலனிட்ட குடுங்கோ, அப்பா தந்தவரெண்டு சொல்லி! அவர் வேளைக்கு சமாதானமானா எனக்குத்தானே நல்லம்.” என்று அப்போதும் விடாது வம்பு பேசிக் கொண்டிருந்தவனைக் கடமையைக் காட்டி ஒருவழியாக அனுப்பி வைத்தாள் சாதனா.
அவனிடம் அவன் செயலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தாலும் அன்று முழுதுக்கும் அதை எத்தனை முறை மீட்டிப் பார்த்து ரசித்துக் கொண்டாள் என்று அவளுக்கே கணக்கில்லை.
____________________________________
ஹாய் டியர்ஸ்!♥️ ஸ்டோரி இன்னும் வன் ஓர் டூ எபிசோட்ல முடிஞ்சிடும். கதையைப் படிக்கிற தங்கங்கள் உங்கட குறை நிறைகளை சொல்லிட்டுப் போங்கோ. அப்பிடியே நான் ஆரெண்டு ஆருக்கும் கெஸ் இருந்தா அதையும் சொல்லிட்டுப் போங்கோ. என்னைப் பெருசா ஒருதருக்கும் தெரியாதுதான். போட்டிக்குத் தொடங்கின கதையை போட்டி ரிசல்ட் வந்தாப் போலவும் வச்சு எழுதுறேன் எண்டேக்கயே நான் எவ்வளவு பெரிய டக்கு ரைட்டர் எண்டு தெரிஞ்சிருக்கும்.😂 இருந்தாலும் ஒரு ஆர்வத்தில கேட்டு வைக்கிறன்!😁
இவ்வளவுநாள் ஒழுங்கா யூடி கூடத் தராத என்ர கதையைப் படிச்சு கதையை எப்பிடியெண்டாலும் எழுதி முடிக்கோணும் எண்டு என்னைத் தூண்டின அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் இதயப் பூர்வமான நன்றிகள்.🙏🏻🙏🏻 அதுலயும் ஸ்பெஷலா கமெண்ட் பண்ணி சப்போர்ட் பண்ண ஷமீம் bro, chanmaa sis, Aandal sis, Priya Saravanan sis எல்லாருக்கும் பிக் தாங்க்ஸ்.🙏🏻🙏🏻

