மாதொரு பாகம் கொண்டான் 35 – 1

MPK 35 (final epi)

பிள்ளைகள் மூவரும் உறங்கியிருக்க, வெறுமனே கண்ணை மூடிப் படுத்திருந்தாள் சாதனா.

இன்னும் ஆதித்யன் கிளினிக்கை மூடிவிட்டு வரவில்லை. அது என்னவோ

இந்த அறைக்கு மாற்றலான பின் ஆதித்யன் வந்துவிட்டான் என்று அறிந்த பின்தான் அவள் கண்களுக்கு உறக்கம் பிடிக்கவே செய்கிறது.

ஆதித்யன் இரவு தாமதமானால் பக்கத்து ரூமில் குளித்து முடித்து இந்த அறையை எட்டிப் பார்த்துவிட்டே உண்ணச் செல்வான்.

தனியாக உணவுண்ணும் அவனுக்குக் கம்பனி கொடுக்க மனம் உந்தினாலும் பிள்ளைகள் தனியாக இருப்பார்கள் என்று அதைத் தவிர்த்துவிட்டு மீண்டும் அவன் மேலே வந்த பின்தான் உறங்குவாள்.

வாரத்தில் ஒன்றிரண்டு நாட்களில்தான் இப்படி. மற்றநேரங்களில் ஒன்றாகவே அவர்கள் உணவு நேரம் கழியும்.

மணி பத்தைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்க, சாதனா எப்போதும் போல் தனக்குள் புறுபுறுக்க ஆரம்பித்தாள்.

“நேரம் கெட்ட நேரத்தில கிளினிக்கைத் திறந்து வச்சுக் கொண்டு என்ன செய்யிறார் இவர்? அவசர கேஸ் எண்டாலும் பரவாயில்லை. ஆக்கள் கூட எண்டா பார்த்து அப்பொயின்மெண்ட்களைப் போடுறதுதானே?”

அவளின் ஏச்சுக்கள் அவன் காதில் விழுந்து விட்டது போல. இரவு நேரங்களில் துணைக்கு நிற்கும் ஆண் செவிலியரின் பைக் சத்தமும் அதைத் தொடர்ந்து கேட் சாத்தப்படும் ஓசையும் மெலிதாய் கேட்டது.

“ஹ்ம்ம்… முடிச்சிட்டார்.” என்றவள் சத்தம் காட்டாது படுத்துக் கொண்டாள்.

எப்போதும் போல் பத்து நிமிடக் குளியல் முடித்து அறைக்கதவைத் திறந்து எட்டிப் பார்த்துவிட்டுக் கீழே சென்றான்.

“வோர்டன் வேலையும் முடிஞ்சுது.” வாய்க்குள் ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவள் பொறுமையை நன்றாக சோதித்து விட்டு அரை மணித்தியாலம் கழித்து அறைக்குள் வந்தவன், அப்போதுதான் கட்டிலை நன்றாகப் பார்த்தான்.

தன்னிடத்தருகில் சாதனா படுத்திருப்பதைக் கண்டு முதலில் வியப்பாய் புருவம் தூக்கியவன், அப்படியே மற்றவர்கள் மீதும் கண்களை நகர்த்தி வந்தான்.

ஆராய்ச்சியின் முடிவில் நடந்திருக்கக் கூடியது என்னவென்ற ஊகம் வர, பாக்கென சிரித்து விட்டான்.

அந்த சத்தத்தில் சாதனா எழுந்து அமர்ந்துவிட்டாள்.

“உஷ்ஷ்… இப்ப என்னத்துக்கு அர்த்த சாமத்துல பேய் மாதிரி சிரிக்கிறீங்கள்? பிள்ளையள் எழும்பவெல்லோ போகினம்?”

“அப்ப நாய்… இப்ப பேயோ? சரியாத்தான் கூடுது மரியாதை..” என்றவன் முறைக்க,

“பின்ன இந்த நேரத்தில சிரிச்சா, என்னென்டு சொல்லுறது?”

“பின்ன சிரிக்காம என்ன செய்யச் சொல்லுறியள்? இவர் ஏன் இப்ப இடம் மாறிப் படித்திருக்கிறார், இன்னும் கோபம் போகேல எண்டு காட்டவோ?”

எப்போதும் தன்னை ஒட்டி… தன் மேல் ஏறித் தூங்கும் நித்திலன் கட்டிலின் ஓரத்தில் படுத்திருப்பதைக் காட்டிக் கேட்டான்.

சாதனாவுக்கும் அவன் செய்த கூத்துகள் நினைவில் வர,

“அதையேன் கேட்கிறீங்கள்? வழமையா படுக்கிற இடத்தில படு எண்டு நானும் சொல்லித்தானே பார்த்தன். ‘இல்லை. நான் அப்பாவோட கோபம்… அவரோட கதைக்க மாட்டன். அவருக்குப் பக்கத்தில படுக்க மாட்டான்.’ எண்டு பிடிவாதம் பிடிச்சு அங்க படுத்திட்டார்.

எனக்கு இடம் விட்டுட்டு உள்ளுக்காப் படும் எண்டு சொல்லவும் மாட்டேன் எண்டிட்டார். நான் தனக்குப் பக்கத்தில கரையா படுத்தா, நீங்கள் என்னை எழுப்பி இஞ்சால விட்டுட்டு தனக்குப் பக்கத்தில படுத்திடுவீங்களாம். என்ன சொல்ல?” என்று சலிக்க, ஆதித்யன் சிரிப்பு இன்னும் கூடியது.

“அவ்வளவு கோபமோ? நான் எதிர்பார்க்கவே இல்லை. பின்னேரம் வேளைக்கு வந்து பிள்ளையைப் பார்ப்பம் எண்டா சரியே வரேல. கிளினிக்கிலயும் இண்டைக்கெண்டு ஆக்கள் கூட.” என்று கொண்டே நிலனின் தலையைக் கோத,

“ப்ச்… விடுங்கோ அவனை! எழும்பப் போறான்.”

“எழும்பப் போறார்.” திருத்தினான்.

“மாறி வந்திட்டு விடுங்கோ.”

“நீங்க அவரை இப்பிடித்தான் கூப்பிடோணும் எண்டு நான் கட்டாயப் படுத்தேல. வா போ எண்டு கூப்பிட விருப்பமெண்டா கூப்பிடுங்கோ. ஆனா மயூ மகியையும் அப்பிடியே கூப்பிடுங்கோ. எந்த விஷயத்திலயும் மூண்டு பேருக்கும் எந்த வித்தியாசமும் இருக்கக் கூடாது. விளங்குதோ?”

“ம்ம்…”

“ஹ்ம்ம்… மூண்டு பேர் நாலு பேரானாலும் நாலு பேருக்கும் இதேதான். அதில கவனமா இருந்தாச் சரி.” என்ற சாதனாவும் சரியென்று தலையாட்டியவள், பின்தான் அவன் கூற்று உறைக்க, ஆஹ்… என்று அவனைப் பார்த்தாள்.

அடக்கப்பட்ட சிரிப்போடு அவளைப் பார்த்தவன், “என்ன?” என்றான் புருவங்களை ஏற்றி இறக்கி.

வெட்கப்பட்டு இந்த டொப்பிக்கைப் பேசாமல் இருக்கும் அளவெல்லாம் பதின்ம வயது இல்லையே அவளுக்கு!

அவனோடு சேர்த்து மூன்று பிள்ளைகளுக்குமாக யோசிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவள் ஆயிற்றே!

“மூண்டு பேர் இருக்கினம், காணாதோ?”

“இதில காணும் காணாது எண்ட ஒண்டுமில்லை. உங்களுக்கு மனசும் உடம்பில தெம்பும் இருந்து கடவுளுக்கும் விருப்பம் இருந்தா எனக்கு வேணும். பிள்ளையளைப் பற்றி யோசிக்காதேங்கோ. அவைக்கு நான் சொல்லி விளங்கப் படுத்துவேன். அதோட அவை மூண்டு பேரும் சேர்ந்து பொறுப்பெடுக்க ஒராள் இருக்கிறதும் நல்லம்தானே?”

இவ்வளவு தெளிவாக பேசுபவனை எதிர்த்து இல்லை என்று சொல்ல அவளுக்கு முடியவில்லை. சொல்லத் தோன்றவில்லை என்பதே உண்மை.

“என்ன சத்தத்தைக் காணேல்ல? மௌனம் சம்மதமோ? இல்லா மனசில்லயோ?”

“உங்களுக்கு வடிவாத் தெரியும் நான் என்ன சொல்லுவன் எண்டு! பிறகும் ஏன் இந்த நேரத்தில பட்டிமன்றத்துக்குத் தலைப்பெடுகிறீங்கள்? பேசாம படுத்து நித்திரையக் கொள்ளுங்கோவன். விடிய வேலைக்குப் போகோணுமெல்லோ?”

“படுக்கிறதெண்டா எங்க படுக்க? உங்களுக்குப் பக்கத்திலதான் இடம் கிடக்கு! வந்தா விடுவீங்களோ?” என்று கேட்டான் நல்லவனாக.

“இல்லை வேண்டாம் எண்டா என்னை விட்டுடுவீங்களோ? இரவு முழுக்க வச்சு கவுன்சிலிங்கெல்லோ குடுப்பீங்கள்?” என்ற கமுக்கமாய் சிரித்தான் அவன்.

“உஷாராயிட்டீங்கள் என்ன?”

“பிறகு ஓயாம உங்களிட்ட கதை கேட்கேலுமோ?” என்றுவிட்டுப் போர்வையை இழுத்துப் படுத்துக் கொண்டாள் அவள்.

“மனுஷிக்கு நல்லா வாய் கூடிட்டு.” அவளைப் போலியாக வைது கொண்டே எழுந்தவன் பிள்ளைகள் மூவரையும் கன்னம் கிள்ளிக் கொஞ்சிவிட்டு அவர்கள் பக்கம் போர்வையை சரியாக இழுத்து விட்டான்.

பின் ஒற்றை விடிவிளக்கை மட்டும் எரிய விட்டு விட்டு மற்ற எல்லா விடி விளக்கையும் அணைத்தவன் சாதனா அருகில் சரிந்து கொண்டான்.

இதற்கு முன் பிள்ளைகள் வவுனியா சென்ற அன்று முன்பிருந்த சின்னக் கட்டிலில் இருவரும் அருகருகே உறங்கியிருந்தார்கள்.

அப்போது இருவர் மட்டும்தான் என்பதால் போதிய இடைவெளியை விட்டிருந்தனர். அன்று அது அவர்களுக்குத் தேவையாகவும் இருந்தது.

பிள்ளைகளும் இங்கேயே உறங்க என்றான பின் ஐந்து பேருக்கு ஏற்றது போல் ஆதித்யன் இன்னொரு கட்டிலை வாங்கி இணைத்திருந்திருந்தான் என்றாலும் தந்தையின் மேலான நிலனின் தீண்டாமை வாதம் இன்று ஆதித்யன் மற்றும் சாதனாவுக்கு போதிய இடைவெளியைக் கொடுக்கவில்லை. அவர்களுக்கும் அது தேவைப்படவில்லைப் போல.

“இனி நிலனை இரவில கோபப் படுத்தி விடியத்தேல சமாதானப் படுத்தலாமெண்டு இருக்கிறன்.”

தலைக்கு அடியில் கையைக் கொடுத்து மல்லாந்து படுத்திருந்தவன், தலையை மட்டும் திருப்பி தனக்கு முதுகு காட்டிப் படுத்திருப்பவளை நோக்கி சொன்னான்.

எதற்கு சொல்கிறான் என்று அவளுக்கும் சரியாகவே புரிந்து விட,

“ஒண்டு வேணுமெண்டா நேர்மையா கேட்டு வாங்கோணும். இப்பிடி குறுக்கு வழியால அடையக் கூடாது. டொக்டருக்கு டிசிப்பிளின் சரியில்லை.” என்றாள் அவளும் கேலியாக.

“அப்ப கேட்டா கிடைக்கும்?” அவள் புறம் நன்றாகத் திரும்பிப் படுத்துக் கொண்டே கேட்டான்.

“கிடைக்கலாம்.”

“அப்ப திரும்பிப் படுங்கோ!” என்ற, அவளும் அநாவசிய அலட்டல் ஏதுமின்றி அவனைப் பார்த்தவாறு படுத்துக் கொண்டாள்.

“நித்திரை வருதோ சாதனா?” கேள்வியே இல்லை என்ற பதிலை எதிர்பார்த்தது.

அவளும் அதற்கு ஏற்றதுபோல் இல்லையென்று தலையசைத்தாள்.

“ம்ம்…” என்றவன் “உங்களுக்கு என்னட்ட ஏதேன் கேட்கோணும், சொல்லோணுமோ?”

“எதைப் பற்றி?”

“என்ர முதல் வாழ்க்கையைப் பற்றி! வைஷ்ணவியைப் பற்றி! இன்னும் தெளிவா சொல்லோணும் எண்டா…” என்றவனை இடை வெட்டினாள்.

“ஒரு தெளிவும் தேவையில்லை. நானே நல்ல தெளிவாத்தான் இருக்கிறன்.” என்றவள்…

“என்ர முதல் வாழ்க்கை துரோகத்தால போனது. அதால அதை, அவனை நான் ஈசியா தூக்கிப் போட்டுட்டேன். ஆனா உங்களுக்கு துரதிஷ்டத்தால போனது. அம்மா சொல்லியிருக்கிறா, அவா நல்ல மனுஷி எண்டு! அப்ப கட்டாயம் அவாவின்ர தாக்கம் எப்பயாவது வரும். வரோணும்… வராட்டி நீங்க நல்ல மனுஷன் இல்லை எண்டுதான் சொல்லுவன்.

ஆனா அப்பிடி வாற யோசனை எப்பவும் என்னையும் அவாவையும் ஒப்பிட்டு வராது எண்டு எனக்குத் தெரியும். ஏனெண்டா எனக்கு உங்களைத் தெரியும்.” என்று புன்னகைத்தவளை மையலாய் வருடியது அவன் பார்வை.

“தாங்க்ஸ் சாதனா! உங்களோட நிறைய கதைச்சிருக்கிறன். ஆனா இதைப் பற்றிக் கதைச்சதே இல்லையெண்டு இருந்த. இப்பதான் மனசு நிறைஞ்ச மாதிரிக் கிடக்கு. என்ன, உங்கட இவ்வளவு நம்பிக்கையையும் சுமக்கிறதுதான் பயமாக் கிடக்கு. எங்கயேன் தவற விட்டுடுவேனோ எண்டு!”

“எனக்கு அந்தப் பயமில்லை. போகப் போக இந்த நம்பிக்கைக் கனம் கூடுமே ஒழிய குறையாது!”

அவள் பேச்சில் அவன் உணர்வுகள் பெருக்கெடுக்க அவள் கன்னம் பற்றி நெற்றியில் அழுந்த முத்தம் வைத்தான்.

கண்கள் மூடி அந்த அன்பின் அச்சாரத்தைப் பெற்றுக் கொண்டாள் சாதனா.

உதடுகள் அவள் நுதலிலிருந்து பிரிந்த பின்னும் விரல்கள் அவள் கன்னத்தை விட்டு விலக மனமின்றி தேங்கிவிட, பெருவிரலால் மென்மையாய் அவள் கன்னம் வருடிக் கொடுத்தபடி இருந்தான்.

அவள் கண்கள் மூடியே கிடந்தன.

“சாதனா!”

“ம்ம்…”

“நித்திரை வருதோ?” என்று மீண்டும் ஆரம்பிக்க, அவன் கைகளைத் தட்டிவிட்டு எழுந்து அமர்ந்தாள் அவள்.

“என்ன சாதனா?”

“நீங்க எழும்பிப் போய் பக்கத்து அறையில படுங்கோ.” என்றாள்.

“என்ன சாதனா கலைக்கிறீங்கள்?”

“பின்ன என்ன செய்ய உங்களை? நித்திரை வருதோ வருதோ எண்டு கேட்டுக் கேட்டுப் பிள்ளையளின்ர நித்திரையைத்தான் குழப்பி விடப் பார்க்கிறீங்கள்.” என்று முறைக்க…

“நல்லது! எல்லாரும் நிம்மதியா நித்திரை கொள்ளுங்கோ, என்ர தொல்லை இல்லாம.” என்று அவனும் முறைத்துக் கொண்டே எழுந்து சென்று விட்டான்.

கோபம் எல்லாம் இல்லை. இன்று என்னவோ அவன் சரியில்லை. இங்கே இருந்தால் சாதனா சொன்னது போல் எல்லோருக்கும் தொல்லை என்றுதான் மாறி வந்தான்.

சாதனா செல்பவனைப் பார்த்து உதட்டுக்குள் சிரித்துக் கொண்டவள், பிள்ளைகள் மூவரையும் பார்த்தாள்.

error: Alert: Content selection is disabled!!