மாதொரு பாகம் கொண்டான் 35 – 3 ( இறுதி அத்தியாயம் )

“உண்மைக்கும் கொஞ்ச நேரத்துக்கு முதல் நிலனை வெளுக்கிற மாதிரி உங்களை வெளுத்தெடுத்தா என்னெண்டுதான் கிடந்த.” என்று முறைக்க, அவன் சத்தமாக சிரித்தான்.

“சிரிக்காதங்கோ! பல்லைப் புடுங்கிக் கையில தந்திடுவன்.”

“நோ வைலன்ஸ் சாதனா. உங்களை அப்பிடிப் பார்க்க நல்ல என்டர்டெயின்மென்டா இருந்த. அதான்.”

“இருந்திருக்கும்…” என்றவள் அவன் கையில் கிள்ளி வைத்தாள்.

“ஸ்ஸ் ஆ… நீங்கள் என்னில நல்ல ஆசையில இருக்கிறீங்கள் எண்டு தெரியுது. ஆனா இப்ப அதுக்கு நேரமில்லை. நான் பிறகு வாறன், அதையென்னெண்டு பார்க்க! இப்ப விடுங்கோ என்னை.” என்று கடைசி வரைக்கும் அவன் வாய் ஜாலத்தைக் கைவிடவே இல்லை அவன்.

“கடவுளே! பரமு அம்மா ஆர்ல முழிச்சுப் பெத்தாவோ இவரை! நான் படுற பாடு. டிப்டொப்பா வெளிக்கிட்டுப் போகேக்க ஆரும் பார்த்தா சொல்லுவினமோ, இவர் இப்பிடி எண்டு! நானா போய் சொன்னா கூட பரமு அம்மாவே நம்பமாட்டா.”

கோபமெல்லாம் இல்லை என்றாலும் வாய் புறுபுறுத்துக் கொண்டே வேலைகளைப் பார்த்தாள்.

அவனை இவ்வளவு சொல்லும் அவளுக்குத் தன்னிடம் உள்ள மாற்றம் தெரிகிறதா இல்லையா என்று தெரியவில்லை.

இப்படியெல்லாம் அச்சமின்றி, உரிமையோடு சரிக்கு சரியாக வாயாடி, கிண்டல் பேசி, செல்லக் கோபம் காட்டி என்று ஒரு இடத்தில் சகஜமாக இருந்தது எப்போது என்று சிந்தித்துப் பார்த்திருந்தால் நினைவுகள் அவளை அவளின் பள்ளிக் காலத்துக்கு அழைத்துச் சென்று விட்டிருக்கும்.

தன் இடப்பாகத்தை சக்திக்கு வழங்கி மாதொரு பாகனான சிவனைப் போல ஆதித்யன், சாதனாவின் வாழ்க்கையையும் பொறுப்புகளையும் தனதாக்கி, தன் வாழ்க்கையின் சரிபாதியை அவளுக்குப் பகிர்ந்தளித்ததில் அவளின் எதிர்காலம் பற்றிய அச்சங்களும் அழுத்தங்களும் அகன்று இப்போதுதான் அவள் அவளாக வாழ ஆரம்பித்திருக்கிறாள்.

ஆதித்யனும் அப்படியே! நிறுத்தம் எது என்று தெரியா பயணத்தில் தனியே ஒரு சுமையை சுமந்து வெறுமையாய் பயணித்தவன், தன் பாரத்தைப் பங்கு போடாவிட்டாலும் பக்கத்தில் பேச்சுத் துணைக்கேனும் ஒருவர் வழித்துணையாய் வந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்த நேரத்தில் சரிபங்கு பாரத்தைத் தோள் தாங்கியவளால் கிடைத்த ஆசுவாசம் அவனையும் இந்த ரீதியில் மாற்றியிருந்தது.

இங்கே இருவரும் இணைந்து இருவரையுமே மீட்டுக் கொண்டனர்.

சாதனா பிள்ளைகளுக்குத் தேவையான எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள், கீழே சென்று பரமேஸ்வரியை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கிச்சனில் புகுந்து கொண்டவள், நேற்று ஊற வைத்த பாசிப் பயறை அவியப் போட்டு விட்டு தேங்காய் துருவி முடிக்க, மேலே இருந்து சத்தம் கேட்டது,

“அம்மா! நாங்கள் வெளிக்கிட்டம். தலை இழுக்க வாங்கோ.” என்று!

தேங்காய் துருவலை மூடி வைத்து விட்டு மேலே சென்று அவர்களை முழுவதும் தயாராக்கி தயாராகி நின்ற நிலனையும் அழைத்துக் கொண்டு கீழே வர, பரமேஸ்வரி அம்மா எழுந்திருந்தார்.

அவருக்கு என்ன உடல் சோர்வு இருந்தாலும் மகனும் பேரப் பிள்ளைகளும் வெளிக் கிளம்பும் போது, அவர்களை வழி அனுப்பி வைத்தே ஆகவேண்டும்.

அவரிடம் பிள்ளைகளை விட்டு விட்டு இவள் வந்து அவிந்திருந்த பயற்றோடு தேங்காய் துருவலைப் போட்டு தனியாகப் பெரியவர்களுக்கு எடுத்து வைத்து விட்டு சின்னவர்களுக்கு அதில் சிறிது பனங்கட்டி துருவிப் போட்டாள். இனிப்பு அதிகம் சேராமல் பார்த்துக் கொண்டாள். பின் மருத்துவனிடம் யார் முறைப்பை வாங்குவது?

எப்போதும் பிள்ளைகள் சாப்பிடும் போதே பரமேஸ்வரியையும் சாப்பிட வைத்து விடுவாள். நால்வருக்கும் உணவைக் கொடுத்து முடித்த பின்னும் ஆதித்யன் கீழே வரவில்லையென்றதும் இவள் மேலே வந்தாள்.

“என்ன செய்யுறீங்கள் இவ்வளவு நேரமும்? பிள்ளையளே வெளிக்கிட்டு சாப்பிடுகினம்! நீங்கள் இப்பதான்… ப்ச்…” அறை வாசலில் நின்று கேட்டாள்.

அப்போதுதான் ஷேர்டைப் போட்டுக் கொண்டிருந்தவன் முதல் பட்டினை கொழுவிக் கொண்டே திரும்பிப் பார்த்தவன்…

“பிள்ளையளும் நானும் ஒண்டோ? அவை நல்ல வடிவா இரவு நித்திரை கொண்டுட்டு வெளிக்கிடினம். நான் அப்பிடியோ? நித்திரை காணாம மந்தமா கிடக்கு. அதோட அவைய வேளைக்கெண்டு வெளிக்கிடுத்தி விட நீங்கள் இருக்கிறீங்கள். அப்பிடி எனக்கு ஏதேன் செய்யுறீங்களோ?”

“என்னிலதான் பிழை!”

“அதைத்தான் நானும் சொல்லுறன்.”

“நான் உங்களைத் தேடி வந்ததைச் சொல்லுறன்.”

“எப்ப தேடி வந்ததைச் சொல்லுறீங்கள் இப்பவோ? இல்லாட்டி…” என்று இழுத்தான்.

“உங்கட வாய்க்கு எப்பவும் வந்திருக்கக் கூடாது! நித்திரை வருதோ, நித்திரை வருதோ எண்டு கேட்டுக் கொண்டே இருக்க விட்டிருக்கோணும் காலத்துக்கும். போனது போகட்டும், இனி உங்களிட்ட வந்தா பாருங்கோ.” முறைத்துவிட்டு அவள் திரும்பி நடக்க,

“வராம இருக்கிற கெட்டித்தனத்தையும் பார்ப்பம். இனி நானும் வாயால எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கமாட்டன். கட்டித் தூக்கியந்திடுவன்.” என்று கொண்டே அவனும் அவளைப் பின் தொடர்ந்தான்.

அவன் பேச்சில் முகம் விகசித்தாலும் காட்டிக் கொள்ளாதவள், “டொக்டர் மாதிரிக் கதைக்கிறீங்களோ எங்கயும்?” என்ற, சட்டென அவள் கையைப் பிடித்து இழுத்தவன் கன்னத்தில் அவசர முத்தம் வைத்து விடுவித்தான்.

“இது காலமை மருந்து! மத்தியானம் மருந்தில்லை. இரவுக் குளுசை வந்து தாறன்.”

மருத்துவனாகக் கதைத்தான்.

சாதனாவுக்கு சிரிக்கவா முறைக்கவா என்று தெரியவில்லை. ஆனால் உள்ளூர அவனின் இந்த சீண்டல்களையும் சில்மிஷங்களையும் ரசிக்கவே செய்தாள்.

“நீங்கள் நல்லாக் குளுசை குடுப்பீங்கள் எண்டு தெரியும். இப்ப வந்து சாப்பிடுங்கோ. நேரம் போகுது.” என்று தலைவியாய் அதட்ட தலைவணங்கி அவள் அடி பற்றி நடந்தான்.

கீழே இவர்கள் வரும் போது நால்வரும் உணவையே முடித்திருந்தனர்.

சாதனா இவனுக்கு உணவு எடுத்து வைக்கப் போக, “சாதனா! கொஞ்சம் நில்லுங்கோ!” என்று மறித்தவன், பரமேஸ்வரியையும் “அம்மா! இப்பிடி வந்து நில்லுங்கோ.” என்று அழைத்தான்.

பரமேஸ்வரி என்னவென்று வந்து நிற்க, ஒன்றும் பேசாமல் அவர் காலில் விழுந்தான் அவன். அவனைப் புரிந்து கொண்டு சாதனாவும் விழ, பரமேஸ்வரிக்கும் எதுவோ புரிவது போலிருந்தது.

வாழ்வின் நன்மைக் காரியங்கள் எல்லாவற்றுக்கும் ஆதித்யன் தாயின் பாதம் பணிவது வழக்கம்.

இன்று இருவரும் விழவே அந்த அனுபவம் வாய்ந்த பெண்மணிக்கு புரியாது போகுமா?

“நல்ல ஆரோக்கியத்தோட நிறைய வருஷம் சந்தோஷமா இருக்கோணும்.” என்று மனம் நிறைந்து வாழ்த்தினார் அவர்.

தாயையும் தந்தையையும் பார்த்த பிள்ளைகளும் “நாங்களும் அப்பம்மான்ர காலில தொட்டுக் கும்பிடுறோம்.” என்று கும்பிட, அப்பழுக்கில்லாத அந்த மூதாட்டியும் தன் ஆயுள் முழுமைக்குமான நல்ல வினைப் பயன்களை அந்தக் குடும்பத்துக் கொடுத்து விடுமாறு ஆண்டவனை வணங்கி ஆசி வழங்கினார்.

அவரின் ஆசியோடும் இறைவனின் அருளோடும் இனி வரும் அவர்களின் நாட்கள் மொத்தமும் வாழ்க்கைப் மகிழ்ச்சியால் நிறையட்டும்..! நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.

நன்றி….

_____________________________________________________

Hi dears… கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்தேன். கதை உங்களுக்குப் பிடிச்சிருந்ததில உண்மையா அவ்வளவு சந்தோஷம். உங்களோட complements எல்லாத்துக்கும் கோடான கோடி நன்றிகள் தங்கம்ஸ்…🙏🏻🙏🏻… அப்புறம் ஷமீம் sis… sorry sis… bro சொன்னதுக்கு…🫂

அப்புறம் epilogue வேணுமா டியர்ஸ்?

error: Alert: Content selection is disabled!!