MPK – 06
“நிலன்! பள்ளிக்கூடம் போய் நல்லா படி எண்டெல்லாம் உன்னை நான் சொல்ல மாட்டன். எனக்கு நீ அங்க எந்தப் பிரச்சனையும் இல்லாமப் போய் வந்தாக் காணும். முதல் படிச்ச பள்ளிக்கூடத்தில செஞ்ச மாதிரி காவாலித்தனம் செஞ்சு என்னை இஞ்ச இருந்தும் எங்கேயேன் ஓடப் பண்ணாத. நான் சொல்லுறது விளங்குது தானே?”
வெள்ளை ஷேர்ட்டை காற்சட்டையினுள் இன் பண்ணிக்கொண்டே சாதனா மகனுக்கு ஏற்றது போல அறிவுரை வழங்க, அவன் யாருக்கோ சொல்வது போல் நின்றிருந்தான்.
“உன்னட்டத்தான் கதைக்கிறன் நிலன். ஓமோ இல்லையோ எண்டு பதில் சொல்லு.” எரிச்சலாகக் கத்தினாள்.
“ஓம்” நீ கேட்டாய், நான் சொல்லிவிட்டேன் தொனி.
“இஞ்ச ஓம் எண்டு போட்டு அங்க போய் என்னேன் திருகுதாளம் போட்டியோ அடிச்சு முறிச்சுப்போடுவன் சொல்லிப்போட்டன்.”
“நான் ஓம் எண்டு தானே சொன்னனான்? பிறகேன் கத்துறீங்கள்?”
“ஓம் எண்டு சொல்லிப்போட்டு ஒரு குழப்படியும் செய்யாம இருக்கிற ஆள் தானே நீ?” மகனை முறைத்தாள்.
“உங்களுக்கே தெரிஞ்சா பிறகேன் என்னைக் கேட்கிறீங்கள், சொல்லு சொல்லெண்டு.” என்ற சாதனாக்கு உச்சியில் ஏறி விட்டது.
“கூடக் கூடக் கதச்சியெண்டா அடிச்சுப் பல்லக் கொட்டிப்போடுவன். ஒருநாள் முழுக்க பத்தைக்க பாம்பு, பூச்சியளோட இருந்தும் இன்னும்தான் உனக்குப் புத்தி வரேல்ல என்ன? உன்னை வச்சு நான் என்ன செய்யப் போறன் எண்டு எனக்கெண்டா ஒண்டுமா தெரியேல.
அண்டைக்குப் பிறகு நல்லது கெட்டது ஒண்டும் உன்னோட கதைக்கக் கூடாது, பள்ளிக்கூடமே விடக் கூடாது, எப்பிடி எண்டாலும் வளர்ந்துட்டுப் போ, கண்ணுக்கு முன்ன பிள்ளையெண்டு இருந்தாக் காணுமெண்டு தான் நினைச்சனான். ஆனா எக்கேடோ கேட்டுப் போ எண்டும் விட மனம் வருகுதில்ல. இன்னும் உன்னை நல்லா வளர்த்து விட மாட்டமோ எண்டு தான் பெத்த மனசு ஏங்குது.” கோபமாய் ஆரம்பித்தவள் குரல் தழுதழுக்க முடித்தாள்.
ஆனால் அடுத்த நொடியே தன்னை சீர்ப்படுத்திக்கொண்டாள். அழுதால் மட்டும் எல்லாம் சரியாகி விடப் போகிறதா? குறைந்தபட்சம் தன் அழுகை மகன் மனதில் சிறு பாதிப்பைக் கூடக் கொடுக்கப் போவதில்லை.
பிறகு ஏன் வீணாக அழுது கொண்டு என்று மூக்கை இழுத்துக் கொண்டவள், அமைதியாக அவனுக்கு உணவு எடுத்துக் கொடுக்க, அவனுக்குப் பிடித்த வெள்ளை மா பிட்டும் கத்தரிக்காய் பொரியலும் இருக்க சத்தமின்றி சாப்பிட்டான்.
அவன் சாப்பிட்டு முடித்ததும் எண்ணெய் பிசுபிசுப்பு போக சவர்க்காரம் போட்டுக் கையைக் கழுவி, வாயைத் துடைத்து விட்டவள், புத்தகப்பையை எடுத்துக் கொடுத்து, வெளியே அழைத்து வந்து வீட்டைப் பூட்டினாள்.
சாவகச்சேரியில் இருந்து அவளுடைய பொருட்களை இங்கே கொண்டு வருவதற்காகப் பிடித்த சிறிய ரக ட்ரக் வாகனம் இவர்கள் இங்கே வந்து ஒன்றரை நாட்கள் கழித்த பின் நேற்று முன்தினம் தான் இங்கே வந்திருந்திருந்தது.
மிகவும் அத்தியாவசியமான உடைகள், எலக்ட்ரிக் ஹீட்டர், போன்ற பொருட்களை டிரவலிங் பேக்கில் போட்டுக்கொண்டு வந்திருந்ததால் உணவை மட்டும் இரண்டொரு நாட்கள் கடைகளில் பார்த்துக் கொண்டனர்.
நேற்று தான் முழுவதுமாக வீட்டில் எல்லாவற்றையும் ஒழுங்கு செய்திருந்தாள்.
சாவகச்சேரியில் அவளது வீடு சாமி அறை, சமையலறை அதை விட மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட ஃப்ளாட் போட்ட பெரிய வீடு. தரையிலும் மார்பிள் போடப்பட்டிருக்கும்.
இவளுக்கு சீதனம் கொடுப்பதற்கென்றே நினைத்துக் கட்டிய வீடு என்பதால் கௌரவத்தைக் கட்டிக் காப்பாற்ற என்றே தோட்டத்தின் வரும்படிகளைக் கொட்டிப் பார்த்துப் பார்த்து வீட்டை செதுக்கியிருந்தார் அவள் தந்தை. ஆனால் அவள் வாழ்க்கைக்குத் தேவையானதைக் கொடுக்கத் தவறி விட்டிருந்தார்.
அந்த வீட்டுடன் ஒப்பிடுகையில் இந்த வீடு ஒரு படுக்கையறையைக் கொண்டதாகவும் சமையலறை, சாமி அறை என்று தனியாக இல்லாமல் மர அலமாரிக்குள் சாமிப்படங்கள் என்று குருவிக் கூடுதான்.
ஆனால் இந்த சின்ன வீடு அவளுக்குக் கொடுத்த அமைதியையும் நிம்மதியையும் அவள் வீடு இதுவரை கொடுத்ததே இல்லை.
இங்கே அக்கம் பக்கத்தில் யாருக்கும் அவளைத் தெரியாது. முக்கியமாக அவள் மகன் எப்படி என்று தெரியாது. அதனால் அவனைக் கீழாகக் குத்திக் கதைத்து அவளை வேதனைப்படுத்த யாரும் இங்கில்லை.
அது கொடுத்த நிம்மதி இந்த ஊரையும் இந்த வீட்டையும் அவளுக்கு வெகு விரைவிலேயே பிடிக்க வைத்திருந்தது.
அவள் வேலைக்கு என்று வந்த வீட்டின் மூத்த பெண்மணியும் பழக அவ்வளவு இனிமையாக இருந்தார்.
பத்தாம் திகதியில் இருந்து வேலைக்கு சேர சொல்லித்தான் ஒப்பந்தம். அதனால் இன்னும் அவர்கள் வீட்டை எட்டிக் கூடப் பார்க்கவில்லை இவள். இவளுக்கும் வீடு ஒதுங்க வைக்க என்று வேலைகள் இருந்ததே!
இந்த வீடு கூட தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டை வாடகைக்குப் பேசித் தருகிறோம், அங்கு வந்து தங்க சொல்லி இவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததுதான்.
அவர்கள் வீடு இரு தளங்களைக் கொண்ட பெரிய வீடு. மெயின் ரோட்டில் இருக்கிறது. காணி ஒன்றரை ஏக்கருக்கும் மேல் இருக்கும். வீட்டின் கீழ்த் தளத்தில் ஒரு பகுதியைக் கிளினிக்காக வைத்துக் கொண்டு மேல் தளத்தில் குடியிருக்கின்றனர் என்று ராணி அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறாள்.
அத்தோடு இங்கு வந்ததில் இருந்து போகும் போதும் வரும் போதும் காலை ஆறு ஏழு மணி வரையிலும் மாலை நான்குக்குப் பிறகு இரவு பத்து வரையிலும் கீழ்தளத்தில் நோயாளர் கூட்டம் அலைமோதுவதைப் பார்த்தும் இருக்கிறாள்.
இரு வீட்டுக்கும் இடையில் ஒரு சிறு ஒழுங்கை ஒன்று செல்கிறது. அந்த ஒழுங்கையில் நேராக சென்று இடது புறம் திரும்பினால் முதல் வீடு சாதனா குடியிருக்கும் வீடு.
முடிந்தவரை தங்கள் கண்காணிப்பில் இவளை வைத்திருக்கும் முயற்சி என்று புரிந்ததுதான். ஆனாலும் அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை.
‘இந்த வாழ்க்கை எனக்கு என்றால் எனக்கு. இல்லையென்றால் இறைவனுக்கு’ என்று பாரத்தைக் கடவுள் மேல் போட்டுவிடுத்தான் ஒவ்வொரு அடியையும் துணிந்து எடுத்து வைக்கிறாள்.
கடவுளுக்கு நிகராக மனோரஞ்சன் டொக்டரையும் அவரது மனைவி ராணியம்மாவையும் நம்பியிருக்கிறாள்.
அவள் அவர்கள் மேல் கொண்ட நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதற்கு சாட்சியாக அவள் இங்கு வந்த அடுத்த நாளே நித்திலன் மாலையாக உறங்கியிருந்த நேரம் அவளைத் தானே தேடி வந்து பேசியிருந்தார் பரமேஸ்வரி அம்மா.
வீடு பார்க்கும் போதே காணொளி அழைப்பில் பேசியதில் அவர் முகம் பரிச்சயம் என்பதால், வந்தவரை வரவேற்று உபசரிக்க, அவரும் முதலில் அவளின் நலன்களை, பிரயாணங்களைப் பற்றி விசாரித்து விட்டுப் பொதுவாகப் பேச்சை ஆரம்பித்தவர், இவர்களைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை மீண்டும் ஒருமுறை விசாரித்துக் கொண்டார்.
அதன் பின் தான் வந்த விஷயத்தைப் பற்றிப் பேச்சைத் துவக்கியிருந்தார்.
“எனக்கு அறுபத்தியெட்டு வயசம்மா. இவ்வளவு நாளும் நான்தான் என்ர ரெண்டு குஞ்சுகளையும் கவனிச்சனான். ஆள் போடவோ எண்டு தம்பி கேட்டும் சம்மதிக்கேல. வாறவை என்ன மாதிரியோ, துப்பரவான ஆக்களா இருப்பினமோ எண்டு பயம். ஏனெண்டா இஞ்சின இப்பிடி வேலைக்கு வாறாக்கள் வாய் ஃபுல்லா வெத்திலை போடுறவையாயும் சுத்தம் எண்டா கிலோ என்ன விலை எண்டும் கேட்கிற மாதிரித்தான் இருக்கினம். எனக்கு அதுகள் எல்லாம் சரிப்பட்டு வராது பிள்ளை. அதான் நானே பிள்ளையளை பார்க்கிறன் எண்டுட்டன் தம்பிட்ட. சமையலுக்கும் ஆக்களைப் பிடிக்கேல. என்னால ஏலுமானளவுக்கு நானே செய்யிறது.

