மாதொரு பாகம் கொண்டான் 6.2

ஆனா இப்ப… வயசு போகப் போக உடம்பு சொல்லுக் கேட்குதில்ல. ஒண்டுக்கும் ஏலாமக் கிடக்கு. அவேன்ர துடிப்புக்கு ஓடித் திரிஞ்சு அவைய பார்க்கேலாமக் கிடக்கு. அதுக்கெண்டு ரெண்டு பேரும் கடும் குழப்படி எண்டு நினைக்காதயனை. ரெண்டு பேரும் நல்ல குணமான பிள்ளையள். அப்பம்மாக்கு ஏலாது, ஒரு இடத்துல இருந்து விளையாடுங்கோ எண்டு சொன்னா இருத்தி விட்ட இடத்தை விட்டு அரக்காயினம்.

ஆனா எத்தினை நாளைக்குத்தான் அவையளை அப்பிடிக் கட்டி வச்சிருக்கிற மாதிரி வளர்க்கேலும்? நல்லா ஓடி ஆடித் திரியிற வயசு… அவேக்கு ஆரோக்கியமும் அதுதானே? அதான் நானாவே ஆரேன் நல்ல டீசன்டான ஆக்களை வேலைக்குப் பார்க்கச் சொன்னான்.

அதுக்குப் பிறகுதான் தம்பியும் தெரிஞ்சவையிட்ட எல்லாம் சொல்லி உங்களைப் பற்றி விவரம் கிடைச்சது. மனோ டொக்டரும் ராணியும் உன்னைப் பற்றி நல்லவிதமா சொல்லவும் நான் தாமதிக்க விரும்பேல. ஒருமாதிரியா உன்னை இஞ்ச கொண்டு வந்து சேர்த்திட்டன்.
இப்பதான் எனக்குத் திருப்தி. உனக்கும் ஒரு சின்னப் பெடியன் இருக்கிறான். அவனை மாதிரி இவையையும் பார் என்னம்மா? சம்பளம் கூடக் குறைய வேணும் எண்டா கூட யோசிக்காம என்னட்ட கேள். எனக்கும் நான் பிறந்த ஊர்ல வயல் காணியள் குத்தகைக்கு விட்ட காசு வாறது. இவர்ட பென்ஷன் காசு வாறது. காசை நான் பார்த்துப் பார்க்காம தருவேன். என்ர தங்கங்களை வடிவா பார்த்து விட்டா, என்ன பிள்ளை?”

அவரின் பேச்சில் இருந்து பேத்திகளின் மேல் அவர் கொண்டுள்ள பாசத்தின் அளவைப் புரிந்து கொண்டாள், சாதனா.

ஆனால் பணத்தைப் பற்றி அவர் பேசியதுதான் அவள் மனதைக் குடைந்தது. தன்னை சோதிக்கிறாரோ என்ற சந்தேகமும் வந்தது. இப்போதே அதைத் தெளிவாகப் பேசிவிடுவது என்று நினைத்துக் கொண்டவள்,

“நான் உங்களை என்னெண்டு அம்மா கூப்பிடுறது?” என்று பேச்சை ஆரம்பித்தாள்.

“உன்ர விருப்பம் பிள்ளை. இப்ப கூப்பிட்ட மாதிரி அம்மா எண்டே கூப்பிடு.”

“அம்மா! நீங்க என்னைக் காசுக்காக என்னவும் செய்யக் கூடிய ஆளோ எண்டு சோதிக்கிறதுக்குதான் இப்பிடிக் கதைக்கிறீங்களோ தெரியாது. உங்களையும் பிழை சொல்லேலாது. ஆருக்கா இருந்தாலும் அந்தப் பயம் இருக்கும்தான்.

ஆனா என்னை அப்பிடி நினைச்சு நீங்க பயப்பிடத் தேவையில்ல. உங்களுக்கு ராணி அம்மா சொன்னவாவோ இல்லையோ தெரியாது, உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு என்ர பிள்ளையைப் பத்தை செடி முழுக்கத் தேடி அலைஞ்சனான். அந்தத் துடிப்பை இன்னொராக்களுக்குத் தரமாட்டன்.

அதால பயப்பிடாம நீங்க வேலைக்கெண்டு பேசின சம்பளத்தை மட்டும் தாங்கோ. அதுக்கு மேலால ஒர்ருவா தந்தாலும் எனக்கு இந்த வேலையே வேண்டாம்.”

அவள் திண்ணமாகக் கூற, எல்லா விதத்திலும் சரியான ஆளைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்ற நிம்மதியோடு அவளிடம் இருந்து விடை பெற்றிருந்தார் அவர்.

நடந்ததை மீட்டிப் பார்த்துக் கொண்டே, வீட்டை விட்டுத் தள்ளி அமைக்கப்பட்டிருந்த சிறு தகரக் குடிலின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த தன் வெகோ மோட்டார் சைக்கிளை உயிர்ப்பித்து மகனை ஏற்றிக் கொண்டு புறப்பட்டாள்.

அவரை நினைத்துக் கொண்டே வந்ததிலோ என்னவோ, ஒழுங்கையில் இருந்து இவள் வெகோ மெயின் ரோட்டிற்கு ஏற, மெயின் ரோட்டில் இருக்கும் அவரின் வீடு மற்றும் கிளினிக்கிற்குப் பொதுவாக அமைந்த கேட்டின் வெளியே நின்று, முன்னே செல்லும் காருக்கு கையசைத்துக் கொண்டு நின்றிருந்தார் பரமேஸ்வரி அம்மா.

அவரின் பேத்திகள் முன்பள்ளி செல்கிறார்கள் போல என்று தானாக நினைத்துக் கொண்டவள், காரின் மேல் பார்வையைப் பதித்தாள்.

கருப்புக் கண்ணாடிகள் தன் எஜமானுக்கு விசுவாசமாக உள்ளே இருக்கும் சிறு துரும்பைக் கூட அவள் கண்களுக்குக் காட்டவில்லை.

பின் கண்ணாடியின் மீது ஒட்டப்பட்டிருந்த கிரீன் கலர் க்ரோஸ் மட்டும் மருத்துவரின் வாகனம் இது என்று காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

சாதனா காரையே பார்த்திருந்ததில் பரமேஸ்வரி அம்மாவை மறந்து விட்டவள், “மகனுக்குப் பள்ளிக்கூடம் முதல் நாளோ?” என்ற அவர் குரலில் கலைந்து பைக்கை நிறுத்தி விட்டிருந்தாள்.

“சொறி அம்மா. ஏதோ யோசனையில கவனிக்கேல.”

“இதுக்கேன் பிள்ளை சொறி எல்லாம். பிள்ளை முதல் நாள் பள்ளிக்கூடம் போறானோ?” என்றார் மீண்டும்.

“ஓம் அம்மா. நேற்றே பள்ளிக்கூடம் தொடங்கிட்டு. நான் தான் முதல் முதல் போகேக்க வியாழக்கிழமை விடவேண்டாம் எண்டு இண்டைக்குக் கூட்டிக் கொண்டு போறன்.”

“நல்லது தான்.” என்றவர் பின்னால் இருந்த நித்திலனிடம்,

“நித்திலன் என்ன பிள்ளையின்ர பேர்?” என்ற, அவன் தாயின் முதுகோடு முகத்தை மறைத்துக் கொண்டான்.

“நிலன்! அம்மம்மா கதை கேட்கிறாவெல்லோ? பதில் சொல்லுங்கோ.”

“இதுக்கேன் பிள்ளை, பிள்ளையை வெருட்டுற? அவனுக்கு புதாக்கள் எண்டு வெக்கமா இருக்குப் போல.” என்றவர் கையில் இருந்த பேர்ஸில் இருந்து, இருபது ரூபாய் தாளை எடுத்து நித்திலன் கைக்குள் திணித்தார்.

“புதுப் பள்ளிக்கூடத்துல நல்லாப் படிச்சு நல்ல பேர் வாங்கோணும். இந்தக் காசை பிள்ளேன்ர உண்டியல்ல போடுங்கோ என்ன?” என்ற, கேட்டிருந்த சாதனாவுக்குக் கண்கள் கலங்கும் போல் இருந்தது.

முதல் முறை தன் மகனை ஒருவர் வாழ்த்துகிறார். அவர் கொடுத்த அந்த இருபது ரூபாயின் மதிப்பு அவளிடத்தில் லட்சம் கோடிகளாக உயர்ந்து நின்றது.

நித்திலனுக்குள்ளும் அது ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும் போல. முன்னர் போல் மறைந்து கொள்ளாமல் அவரை நேராகப் பார்த்துப் பதில் சொன்னான்.

“என்னட்ட உண்டியல் இல்ல அம்மம்மா! இதுக்கு நான் சூப்புத்தடி (லாலிபாப்) வாங்கட்டோ?” கேட்ட மகனை சாதனா அதிசயித்துப் போய்தான் பார்த்தாள்.

சொந்த அம்மம்மா சுதாவிடம் கூட இவன் இவ்வளவு தன்மையாகப் பேசி அவள் பார்த்ததே இல்லை. இவரிடம் அனுமதி எல்லாம் கேட்கிறானே! இது எப்படி சாத்தியம் என்று நினைத்தாள்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். அது உண்மையா இல்லையா தெரியாது. ஆனால் குழந்தையும் கண்ணாடியும் ஒன்று. நாம் அவர்களிடம் காட்டும் முகத்தைத் தான் அவர்கள் திரும்பக் காட்டுவார்கள்.

இது சுதாவுக்கு மட்டுமல்ல, சாதனாவுக்குமேதான் தெரியாது. தெரிந்திருந்தால் மகனை நெறிப்படுத்தத் தெரியாது இப்படி பரதேசம் வந்திருக்கமாட்டாளே!

ஒருவேளை நித்திலனுக்கான நெறியாளன் இங்கே தான் இருக்கிறான் என்றுதான் காலம் சாதனாவைக் குழந்தை வளர்ப்பை முறையாகக் கற்றுக் கொள்ளவிடவில்லையோ?

error: Alert: Content selection is disabled!!