MPK 07
மயூரகி, “அன்ட்ரி! நீங்க பார்த்தனீங்க தானே? நான் தானே ஃபெர்ஸ்டா அந்தக் கல்லைப் போய்த் தொட்டனான்? அபி தான் தான் தொட்டதெண்டு சொல்லுறா.”
“ஓம் அன்ட்ரி. மயூ தான் வின். அதுக்குப் பிறகு அபி. அதுக்குப் பிறகு நான் தேர்ட். அபி பொய் சொல்றா அன்ட்ரி. பொய் சொல்லுறது கூடாத பழக்கமல்லோ அன்ட்ரி?” இது மயூரகியின் இரட்டை மகிழினி.
சாதனா வேலையில் சேர்ந்து ஒருவாரமாகி விட்டிருந்தது. வேலையில் சேர்ந்து என்று சொல்வதைக் காட்டிலும் தெரபியில் இணைந்து என்று சொன்னால் சரியாக இருக்கும். அப்படி மனதுக்கு இதம் சேர்த்தனர் அந்த இரு குழந்தைகளும்.
சமயத்தில் நித்திலன் பெண் குழந்தையாகப் பிறந்திருந்தால் இவர்களைப் போல் நல்ல பிள்ளையாக இருந்திருப்பானோ என்று சாதனாவை ஏங்கக் கூட வைத்திருந்தனர்.
அன்று பரமேஸ்வரி சொன்ன போது கூட, தன் பேத்திகள் என்பதால் குழந்தைகளை உயர்வாக சொல்கிறார், குழப்படி செய்யாத குழந்தைகள் என்று யாரும் இருக்கமாட்டார்கள் என்றுதான் நினைத்திருந்தாள்.
ஆனால் இந்த ஒருவாரத்தில் பரமேஸ்வரி சொன்னது மிகவும் குறைவு என்று அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டிருந்தாள்.
சாதாரணமாக அக்கா, தங்கை என்று வயது வித்தியாசத்துடன் இருக்கும் பிள்ளைகளுக்கு இடையில் கூட போட்டியும் இது என்னுடையது என்ற பிரிவினையும் இருக்கும்.
ஆனால் ஒத்த வயதில் இரட்டைகளாகப் பிறந்த இவர்கள் இருவரும் இதுவரை எனது உனது என்று எதையும் பிரித்துக் கொண்டதே இல்லை.
பிரித்து வாங்கிக் கொடுத்தும் பழக்கம் இல்லை போல. பொம்மைகள் கூட ஒன்று போல் இன்னொன்று இருந்து அவள் பார்க்கவே இல்லை. சின்ன சைக்கிள் கூட இருவருக்கும் ஒன்று தான் உள்ளது.
“நீ முதல்ல கொஞ்ச நேரம் ஓடிட்டு என்னட்ட தா மயூ. நான் இங்க இருந்து கவுன்ட் பண்ணுறேன்.” என்றுவிட்டு மகிழினி பத்துத் தடவை ஒன்றிலிருந்து பத்து வரை மண்ணில் கோடு போட்டு எண்ணிக் கொண்டிருப்பாள்.
நூறு முடிந்த பின்னும் ஓட ஆசை இருந்தாலும் தன் சகோதரிக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று இறங்கி, எண்ணும் பணியை மயூரகி தொடர்வாள்.
இப்படி இன்னும் எண்ணிலடங்கா நல்ல பழக்கங்கள் அவர்களிடம். வீட்டு உணவைத் தவிர வெளியே இருந்து அதை இதை வாங்கித் தரச் சொல்லிக் கேட்கமாட்டார்கள். ஒன்று சொன்னால் அடம்பிடிக்காமல் கேட்டுக் கொள்வர். மரியாதை கொடுப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே! அதேநேரம் ஒன்று தவறாகப் பட்டால் அதை எதிராளியிடம் எடுத்துக் கூறவும் தவறுவதில்லை.
அப்படித்தான் இந்த அபியின் பிணக்கும். அபிஷா இருவரினதும் முன்பள்ளித் தோழி. இன்று சனிக்கிழமை ஆதலால் இவர்களுடன் விளையாட என்று வீட்டில் அடம்பிடித்து காலையே இங்கு வந்து விட்டிருந்தாள். இனி மாலைதான் அவளை அழைத்துச் செல்ல வருவார்கள்.
சாதனா அந்த மாலை நேரம் எப்போது வரும் என்றுதான் சலிப்போடு காத்திருக்கிறாள். காரணம் இந்த அபி இரண்டு நித்திலனுக்கு சமமானவளாக இருந்தாள். வந்ததில் இருந்து ஏதாவது வில்லங்கம் செய்து இரண்டு மான்குட்டிகளையும் குழப்பிக் கொண்டே இருக்கிறாள்.
இப்போதும் மயூரகி விளையாட்டில் வென்றதை ஏற்றுக்கொள்ள முடியாமல்,
“இல்லையில்லை… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் அலாப்பப் பார்க்கிறீங்க! நான் தான் வின்.” என்றாள் அடமாக.
“நீ இரு அபி. அன்ட்ரி சொல்லட்டும் ஆர் முதலெண்டு?” மகிழினி சாதனா முகம் பார்க்க, அவள் சுமுகமாகப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமே என்று கவனமாகப் பேசினாள்.
“மூண்டு பேரும் நல்லா வேகமா தான் ஓடினீங்கள். ஆனா மயூக்குட்டி இன்னும் வேகமா ஓடி முன்னுக்குப் போய்த் தொட்டவா. அதால இப்ப அவா தான் வின். நீங்க இன்னும் நல்லா ஓடிப் பழகினா அடுத்த முறை நீங்களும் முதலாவதா வரலாம்.”
மகிழினி உடனே ஏற்றுக் கொண்டாள்.
முரட்டுக் குழந்தையான அபிக்கு மட்டும் மனம் ஒப்பவே இல்லை.
“நீங்களும் பொய் தான் சொல்லுறீங்க. நான் தான் ஃபெர்ஸ்ட்.”
“அபி! அன்ட்ரி பெரியாள். அன்ட்ரி பொய் சொல்லமாட்டா.”
“பெரியாள் எண்டா ரீச்சரோ? இல்ல, டொக்டரோ இவா? உங்களிட்ட வேலை செய்யிறவா தானே?”
அவள் அவமரியாதைக் கேள்வியில் சாதனாவுக்கு சுருக்கென்றது. ஆனாலும் தன் இடம் உணர்ந்து பல்லைக் கடித்து அமைதி காத்தாள்.
“அபிக்கு ரீச்சரும் டொக்டரும் தான் பெரியாக்கள் எண்டா இந்த ரெண்டும் இல்லாத நீங்கள் ஏன் இப்பிடி பெரிய கதை எல்லாம் கதைக்கிறீங்கள்?”
திடீரென்று கேட்ட குரலில் முதலில் திடுக்கிட்டாலும் பின் மரியாதை நிமித்தமாக தான் அமர்ந்திருந்த கல்லாலான வாங்கில் (பெஞ்ச்) இருந்து எழுந்து கொண்டாள், சாதனா.
வீட்டின் பின்புற சுவரை விட்டுத் தள்ளி இருந்த வேப்பமரத்தோடு லேசாக முதுகை சாய்த்த வண்ணம் நின்றிருந்தான் அவன். இரண்டு மான் குட்டிகளினதும் தந்தையாகப்பட்டவன். வந்து எவ்வளவு நேரம் ஆகிறது என்று யாருக்கும் தெரியவில்லை.
“அப்பா! நீங்க எப்ப வந்தனீங்கள்? உங்களுக்கு டியூட்டி இல்லையோ?” உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டே மயூ தகப்பனை நோக்கி ஓட,
“மயூ! அப்பா குளிச்சுட்டாரோ எண்டு கேட்காம அப்பாக்கு கிட்ட போற!” எச்சரித்தாள் மகிழினி.
மருத்துவமனையில் பலதரப்பட்ட நோயாளிகளைப் பார்த்துவிட்டு வீடு வருபவன், அங்கே சேகரித்த கிருமிகளைக் குழந்தைகளிடம் கொட்டக் கூடாது என்று,
“ஹொஸ்பிட்டலால வந்து அப்பா குளிச்சாப் போல தான் ரெண்டு பேரும் அப்பாக்குக் கிட்ட வரோணும்.” என்று சொல்லிப் பழக்கியிருந்தான்.
அதையே மகிழ் இப்போது சொல்ல, இயல்பிலேயே சற்று அவதாப்னிப்புத் திறன் அதிகமுள்ள மயூவோ,
“மகி! அப்பா விடிய வேற ஷேர்ட்டெல்லோ போட்டுக் கொண்டு போனவர்? இப்ப வேற ஷேர்ட் போட்டிருக்கிறார் பார். அப்ப அப்பா குளிச்சிட்டுத் தானே வந்திருப்பார், என்னப்பா?” சகோதரியிடம் ஆரம்பித்து தந்தையிடம் முடிக்க, தன்னிரு பெண்ணரசிகளும் பேசிக் கொள்வதை விரிந்த புன்னகையுடன் பார்த்து நின்றிருந்தான் அவன்.
அவன் ஆதித்யன். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஓர்தோபெடிக் சேர்ஜனாக இருக்கிறான்.
மயூரகியின் கூற்றை ஆமோதிப்பது போல் அவளைக் கையில் ஏந்திக் கொண்டவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டு,
“மயூ செல்லம் நல்லா ஒப்சேர்வ் பண்ணுறீங்க. நீங்க சொல்லுறது சரிதான். அப்பா குளிச்சிட்டுத்தான் பிள்ளையளைப் பார்க்க வந்தனான். அதேமாதிரி மகி குட்டி சொல்லுறதும் பிழை எண்டில்லயே. சிலநேரம் ஹொஸ்பிட்டல்ல அப்பான்ர ஷேர்ட் டெர்ட்டியானா, அப்பா குளிக்காமலும் வேற ஷேர்ட் மாத்தலாமல்லோ? அப்பிடியெண்டா கேட்டுட்டு தானே கிட்ட வரோணும்?”
“ஓம் என்னப்பா?” என்று மயூ உடனே தந்தையை ஆமோதிக்க, அவள் கன்னத்தில் தட்டிப் புன்னகைத்தவன், அவளைத் தூக்கிக் கொண்டே மற்றவர்கள் அருகில் செல்ல, மகிழினி வந்து அவன் காலைக் கட்டிக் கொண்டாள்.
சிரமம் பார்க்காமல் அவளையும் மறு கையில் தூக்கி முத்தமிட்டு இருவரையும் இறக்கி விட்டவன், தன் முன்னே முழித்துக் கொண்டு நின்றிருந்த அபியையும் மரியாதையான உடல்மொழியைக் காட்டி நின்ற சாதனாவையும் ஒரே பார்வையில் அளந்தான்.
“அபி! இந்த அன்ட்ரிட்ட என்ன சொல்லிக்கொண்டு இருந்தனீங்கள்?” தன்மையாய் தான் கேட்டான். ஆனாலும் அவளுக்குக் கண்கள் முட்டிவிட்டது.
அதைப் பார்த்த சாதனாக்குப் பாவமாகப் போனது.
“சின்னப் பிள்ளை, தெரியாம கதைச்சிட்டா டொக்டர். பாவம் அழுகுறா…” என்று சங்கடமாக இழுத்தாள்.
“சின்னப் பிள்ளையிலதான் அவை விடுற பிழையை பிழை எண்டு சொல்லோணும். வளர்ந்தாப் பிறகு சொன்னா, அதைக் கேட்கிற நிலைமையில அவை இருக்க மாட்டினம். இப்ப சொல்லுங்கோ, அபி கதைச்சது பிழையோ? சரியோ?” ஆளுமையாக வந்த கேள்வி சாதனாவை சரியான பதிலைச் சொல்ல வைத்தது.
“பிழைதான் டொக்டர்.”
“அபி கதைச்சது பிழையெண்டா, அதுக்கு நீங்க அமைதியா இருந்தது சரியோ?” என்ற, சாதனாவுக்கு இதேதடா சோதனை என்றிருந்தது.

