‘அபி, தவறிழைத்தாள் என்பதற்காக நித்திலனை அடித்துத் திருத்துவது போல் அவளை இவளால் அடிக்கவா முடியும்?’ மனதில் இப்படி ஓட, அதையே முகமும் பிரதிபலித்தது.
அதைப் படித்தவன், “நீங்களா ஒண்டும் அபியிட்ட சொல்லேலாதுதான். ஆனா இனிமேல் இப்படிக் கதைச்சா என்னட்டயோ, அம்மாட்டயோ சொல்லுவன் எண்டு சொல்லி இருக்கலாமே!”
அவன் தொடர்ந்து பாடமெடுக்க, பதிலின்றி சங்கோஜமாக நின்றாள் அவள்.
அதற்கு மேல் அவளிடம் பேச எதுவுமின்றி அபியிடம் குனிந்தவன், “அபி! டோன்ட் க்ரை..” என்று அவள் கண்களைத் துடைத்து விட்டான்.
“அபிக்கு நல்ல பிள்ளையா இருக்க விருப்பமோ, இல்லாட்டி கூடாப்பிள்ளையா இருக்க விருப்பமோ?”
அவள் கைகளைப் பிடித்து அவளை ஊஞ்சல் போல் ஆட்டிக்கொண்டு தன்மையாகக் கேட்க, அவளும் அவன் விளையாட்டில் அழுகையை மறந்தவள்,
“நல்ல பிள்ளையா தான் இருக்கோணும். அப்ப தான் மிஸ் மகியையும் மயூவையும் மாதிரி கிளாஸ்ல முன்னுக்கு விட்டு கிளாப் பண்ண சொல்லுவா.” என்றாள், அப்போதும் அவர்கள் மேல் கொண்டிருக்கும் போட்டியுணர்வை வெளிக்காட்டியபடி.
ஆதித்யனுக்கு அது விளங்கினாலும் இது பெற்றோர்களைத் தாக்கும் கெம்பாரிஷன் என்ற கொடிய நோய் மூலம் இவளுக்குள் விதைக்கப்பட்டிருக்கலாம் என்று சரியாகக் கணித்தான்.
“நீங்க ஏன் அபி, மயூவையும், மகியையும் மாதிரி நல்ல பிள்ளையா இருக்கோணும்? நீங்க அபி தானே? அப்ப நீங்க அபி மாதிரி நல்ல பிள்ளையா தானே இருக்கோணும்?” என்று கேட்க, அவள் குழம்பிப் போய் அவனைப் பார்த்தாள்.
“திரும்பி மயூவையும் மகியையும் பாருங்கோ, அவை ரெண்டு பாரும் பார்க்க உங்களை மாதிரியோ இருக்கினம்?”
திரும்பிப் பார்த்தவள், உடனடியாக இல்லையென்று மறுத்துத் தலையசைத்தவள், “நான் அவைய விட வெள்ளை.” என்றாள் பெருமிதமாக…
அதைக் கேட்டு ஆதித்யன் எப்படி உணர்ந்தானோ, சாதனாவுக்கு ஐயோ ஆண்டவா என்றிருந்தது.
‘அவளின் ஒரு தவறைத் திருத்தி விட எண்ணி எலும்பு முறிவு டொக்டர் முயற்சியெடுக்க, அவள் என்னவென்றால், முள்ளந்தண்டு எலும்புகளின் கோர்வை போல் தவறுகளை அடுக்கி இழுத்துக் கொண்டே போகிறாளே!’ ஆதித்யன் மேல் பரிதாபம்தான் வந்தது.
ஆனால் அவன் தளரவில்லை. பொறுமைக்கும் நிதானத்துக்கும் அவன் இருக்கும் துறையை விட சிறந்த புகலிடம் இல்லையே!
பேசிப் பேசியே அவளின் தவறுகள் ஒவ்வொன்றையும் தவறென்றே ஒப்புக் கொள்ள வைத்தவன், அவளை சாதனாவிடம் மன்னிப்புக் கேட்கவே வைத்திருந்தான்.
“சொறி அன்ட்ரி. நான் உங்களை அப்பிடிக் கதைச்சது பிழை.” கேட்ட சின்னவளைப் பார்த்தவளுக்கு சொற்ப நிமிடங்களுக்குள் அவளை செதுக்கிய மருத்துவன் மேல் பிரமிப்பு எழாமல் இல்லை.
“சொறி எல்லாம் வேண்டாம் அபி. இனி ஆரிட்ட எண்டாலும் கவனமா கதையுங்கோ காணும்…” என்று புன்னகைக்க, அவளும் தலையசைத்துக் கொண்டாள்.
ஆதித்யன் எழுந்து கொண்டவன், “மயூ, மகி ரெண்டு பேரும் ஓடிப் போய் குயிக்கா வெளிக்கிட்டு வாங்கோ. நாங்கள் பார்க்குக்கு போவோம்.” என்றவும் இருவரும் குஷியாகிவிட்டனர்.
“இப்ப போப்போறோமோ அப்பா?” இருவரும் அவனைக் கட்டிக் கொண்டு துள்ள,
“ஓம்.. ஏன் உங்களுக்கு விருப்பம் இல்லையோ? விருப்பம் இல்லாட்டி பிரச்சனை இல்லை. அப்பா வெளிக்கிட்டு ஹொஸ்பிட்டல் போறேன்…” என்று அவன் விளையாட,
“இல்ல… இல்ல… எங்களுக்கு அப்பாவோட வர சரியான விருப்பம். ஓமெல்லோ மகி?”
“ஓம்… ஓம்… நாங்க வேளைக்கெண்டு வெளிக்கிட்டு வாறம்.” என்றவள் பின் நினைவு வந்தவளாக,
“அப்ப அபி அப்பா?”
மகள்களின் சந்தோஷம் தன் முகத்தில் பிரதிபலிக்க நின்றிருந்தவன்,
“அவேன்ர அம்மாட்ட கேட்போம். அவா ஓம் எண்டா அபியும் எங்களோட வரட்டும்! இல்லையெண்டா அபிய அவேன்ர வீட்ட விட்டுட்டு போவோம். நீங்களும் போய் முகம் கழுவுங்கோ. போங்கோ.”
அதைக் கேட்ட மூவரும் சரியென்று நகர்ந்து சென்றனர். இந்த வயதிலேயே மகள்கள் இருவரையும் தாமாகக் குளித்து உடை மாற்றும் அளவு பழக்கியிருந்தான் அவன்.
எல்லாமே அவர்களே செய்கிறார்கள் என்றால் இங்கே சாதனாவின் வேலை தான் என்ன என்ற சந்தேகம் வருமே!
இங்கே அவளின் வேலை மதியம் பன்னிரண்டுக்கு முன்பள்ளி முடித்து வரும் பிள்ளைகள் இருவரையும் மாலை ஆறு மணி வரை பார்த்துக் கொள்வது, சனி ஞாயிறுகளில் முழுநேரமும் பார்த்துக் கொள்வது மட்டுமே.
விளையாட்டின் போதும் அவர்களுக்கான வேலையை அவர்கள் செய்யும் போதும் ஏதேனும் விபத்துகள் நேராமல் வெறும் பார்வையால் அவர்களைத் தொடர்வது தான் அவள் வேலை.
மற்றபடி அவர்களின் உடைகளைக் கூட பரமேஸ்வரி அல்லது ஆதித்யனே
வோஷிங் மிஷினில் போட்டு எடுத்து விடுவர்.
சமையல் கூட இன்னும் பரமேஸ்வரி கட்டுப்பாட்டில் தான்.
சமையலுக்கு ஆள் பிடிக்கவா என்று மகன் கேட்டபோது அதற்கும் சுத்தம் பத்தம் என்று யாரையும் வேண்டாம் என்றிருந்தார்.
அதனால் அவர் வசதிக்கு ஏற்றது போல் அமர்ந்திருந்து சமைப்பது போல், சமையலறையை மாற்றிக் கொடுத்து, தாயின் கால்களுக்கு அழுத்தத்தைக் குறைத்திருந்தான், ஆதித்யன்.
அவர்கள் வீட்டி அப்படியெல்லாம் பெரிய பொரியல் வறுவல் என்று பாரதூரமான சமையலும் செய்து வழக்கமில்லை.
காலையில் ஓட்ஸ் கஞ்சி, பழங்கள். மதியம் சோறு, தாளிக்காத பருப்பு வெள்ளைக்கறி, கீரை, காய்கறி சாலட், அதோடு மீன் அல்லது வேறு கடல் உணவு, ஞாயிறுகளில் மாத்திரம் ஊர்க்கோழிக் குழம்பு. இரவுகளில் கடலை, பாசிப்பயறு, கௌபி என்று ஏதேனும் ஒன்றை அவித்து அவற்றோடு பழத்தையும் இணைத்து உணவை முடித்துக் கொள்வர். மிகவும் அரிதான நாட்களில் ஆட்டா மா ரொட்டி, குரக்கன் மா தோசை, பிட்டு என்று வகைகள் மாறும். ஆனால் எல்லாம் ஆரோக்கியத்தை முன்னிறுத்திய உணவாகவே இருக்கும். அதனால் பெரிதான வேலைகள் இருக்காது பரமேஸ்வரிக்கு.
சின்னவர்கள் மூவரும் இடத்தை விட்டு அகன்றதும் ஆதித்யன்,
“உங்களுக்கு வேலைல என்னவும் பிரச்சனை இருக்கோ? பிள்ளையள் ஏதேன் கஷ்டம் குடுக்கினமோ?”
“அப்பிடி ஒண்டுமில்ல டொக்டர். ரெண்டு பேரும் ஒரு கரைச்சலும் குடுக்கிறேல.”
“ம்ம்.. அதான் மான்குட்டியள் எண்டு கூப்பிடுறனீங்கள் போல! பிள்ளையள் சொன்னவ.” என்றவனிடம் மையமாக சிரித்து வைத்தாள்.
“நீங்க சொல்லுற மாதிரி அப்பிடியே இருந்தா நல்லது தான். இல்லை கொஞ்சம் குழப்படி விடுகினம் எண்டாலும் நீங்க அதை எங்களிட்ட சொல்ல யோசிக்காதேங்கோ. இப்ப அபி கதைக்கேக்க பேசாம இருந்த மாதிரி மயூ, மகிட்டயும் இருக்காதங்கோ. கட்டாயம் அம்மாட்ட சொல்லுங்கோ. நான் என்னண்டு பார்ப்பேன்.” என்ற,
“ம்ம்…” என்ற ஒற்றைத் தலையசைப்போடே முடித்துக் கொண்டாள் அவள்.
தொடர்ந்த அவன் அழுத்தமான அறிவுறுத்தல்கள் தன்னைக் குற்றம் சொல்லுவது போல் இருக்க, அதை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாமல்தான் தலையாட்டி வைத்தாள்.
அது அவனுக்கும் புரிந்திருக்க வேண்டும்.
“இவன் ஏன் இதையே திரும்பத் திரும்ப சொல்லுறான் எண்டு உங்களுக்கு எரிச்சலாதான் கிடக்கும்.” என்ற, அவள் சங்கடமாகப் பார்த்தாள்.
அவன் அதைப் பொருட்படுத்தாது,
“அவை சின்னப் பிள்ளையள். எல்லா நேரத்திலயும் எல்லா இடத்திலயும் சரியா இருப்பினம் எண்டு சொல்லேலாது. என்னோட இருக்கேக்க பிழை விட்டினமெண்டா இனி இப்பிடி செய்யக் கூடாது எண்டு சொல்லித் திருத்த என்னால ஏலும். அம்மாவும் அப்பிடி ஏதேனும் எண்டா என்னட்ட சொல்லுவா.
எங்கள் ரெண்டு பேருக்கும் அடுத்ததா இனி உங்களோடதான் அவை கூட நேரம் இருக்கப் போகினம். கிட்டத்தட்ட ஸ்கூல்ல இருக்கிறளவு நேரம் உங்கட கண்காணிப்புல இருக்கப் போகினம். அந்த நேரம் அவை விடுற பிழையள் நீங்க சொல்லாம எங்களுக்குத் தெரிய வராது. அதுதான் இவ்வளவு கவனம் எடுக்கிறன்.
எனக்கு என்ர பிள்ளையளை சக மனுசரைக் கஷ்டப்படுத்தத் தெரியாத, சக மனுஷருக்கு மரியாதை குடுக்கத் தெரிஞ்ச, சக மனுஷர்ட கஷ்டத்தை உணரக் கூடிய ஆக்களா வளர்த்து விடோணும். அதான் இப்பிடி…” என்றவனுக்கு இம்முறை தலையசைப்பைக் கூடக் கொடுக்கவில்லை சாதனா.
பதில் சொல்லவியலா பிரம்மிப்புக்குள் மூழ்கியிருந்தவளின் மனசாட்சியின் வாயின் ஆஆ… என்ற திறந்த நிலையை இன்னும் கூட்டுவது போல்,
“நான் என்ர எண்ணத்தை சொல்லுறன் எண்டு உங்களைக் கஷ்டப்படுத்துற மாதிரிக் கதைச்சிருந்தா சொறி…” என்ற அவனின் மன்னிப்பை ஏந்தி வந்த வார்த்தைகள் அமைந்து போயின.
“ஐயோ! நீங்க பிழையா ஒண்டும் கதைக்கேல டொக்டர். நான்தான் நீங்க சொல்ல வாறது விளங்காம… சொறி டொக்டர்.” என்றாள் வருந்தி.
“ம்ம்.. பரவாயில்ல. இண்டைக்கு இதுக்கு மேல உங்களுக்கு வேலை இல்லை. நீங்க வீட்ட போறதெண்டா போகலாம்.” என்றவன் அவ்விடம் நீங்கி மகள்களைக் காணச் சென்றான்.
தொடரும்…

