MPK – 08
ஆதித்யன் வீட்டுக்கும் தன் வீட்டுக்கும் இடையில் உள்ள, மூன்று நிமிட நடை தூரமுள்ள பாதையின் நீளத்தை ஆதித்யனின் பேச்சுக் கொடுத்த தாக்கத்தோடு கடந்து கொண்டிருந்தாள் அவள்.
ஒரு மருத்துவன் தன் குழந்தைகள் நல்ல குணத்துடன் இருப்பதையே முதன்மையான லட்சியமாகக் கொண்டிருக்கிறான். அதற்கு அடுத்துத்தான் அவர்களை மருத்துவராக்குவதைப் பற்றியோ பொறியியலாளராக்குவதைப் பற்றியோ சிந்திப்பானாக இருக்கும்.
இவனைப் போன்ற தந்தை அமைந்ததால் தான் மான்குட்டிகள் இரண்டும் அத்தனை அம்சமான குழந்தைகளாக இருக்கின்றனர் போல.
‘நித்திலனுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடுப்பனை இல்லாமல் போனது? வினோதன் ஏன் இத்தகைய குணவானாக இல்லாமல் போனான்?’ யோசித்த மறு நிமிடமே, அவள் மனது…
‘அவன் குணமே நரகல் தின்னும் பன்றியை விட நாறிய குணம். அவன் இருந்து உன் பிள்ளையை ஒழுக்கமாக வளர்க்கவோ? நல்ல ஜோக் தான்…’ என்று எள்ளி நகையாடியது.
விவாகரத்து தர மாட்டேன் என்று வீர வசனம் பேசியவன், விவாகரத்து மட்டும் போதும்… படிக்காசு வேண்டாம் என்று சொன்ன அடுத்த வழக்கில் விவாகரத்துக்கு ஒப்புக் கொண்டு, இவளோடு சேர்த்து தன் உதிரத்தில் உதித்தவன் என்ற பாசம் துளியும் இல்லாமல் நித்திலனையும் உதறி விட்டு, விவாகரத்துக் கிடைக்கும் முன்னே தொடுப்போடு நுவரெலியா டூர் சென்றவனை அவள் மனதால் வேறு எப்படித்தான் வாழ்த்த இயலும்?
அதன் தூற்றல் நியாயமே என்றாலும் அவள் சிந்தை தெளிந்தபாடில்லை…
‘என்னதான் அம்மா என்று நான் ஒருத்தி இருந்தாலும் அவன் வாழ்வில் தந்தையின் இடம் வெறுமையாகத் தானே இருக்கிறது? அது கொடுத்த அழுத்தம் தான் அவனை இப்படி ஆக்குகிறதோ?’ என்று பலவாறு யோசித்தவள்,
‘பேசாமல் நித்திலன் எனக்கும் அந்தத் தரங்கெட்டவனுக்கும் பிறக்காமல், ஆதித்யன் போன்ற தந்தைக்கு மகனாக அவன் மனைவி வயிற்றில் மயூ, மகியோடு கூடப் பிறந்திருக்கலாம். சீரிய குணத்தோடு வளர்ந்திருப்பான்.’ நினைவில் கனத்த மனதோடு வெறும் கூடாய் வீட்டை அடைந்தாள்.
பூட்டியிருந்த கதவைப் பெருமூச்சோடு கண்டவள், சாத்திவிட்டு சென்ற ஜன்னல் கதவைக் கொஞ்சமாகத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தாள்.
உள்ளே தனியாக அமர்ந்து வெறுமையான முகத்தோடு நகக் கண்களால் சுவற்றின் பெயிண்டை அழுந்தக் கீறிக் கொண்டிருந்தான் நித்திலன். பார்த்தவளின் மனம் வெகுவாய் துவண்டு போனது.
அவள் வேலையில் இருக்கும் நேரம் நித்திலன் வீட்டில் இருக்கும்படி நேர்ந்தால் வீட்டினுள் வைத்துப் பூட்டி விட்டே செல்வாள்.
வீட்டைப் பூட்ட வேண்டாம், வெளியே இருக்கிறேன் என்று அவன் கேட்டாலும் சம்மதிப்பதில்லை. தன்னையும் உடன் அழைத்து செல்லச் சொல்லிக் கேட்டாலும் மறுத்துவிடுவாள்.
இவனைக் கூட்டிச் சென்று இருக்கும் வேலைக்கு உலை வைத்து, அடுத்து ஒரு இடமாற்றத்துக்கு இப்போது தெம்பில்லை என்று வீட்டிற்குள் சிறை வைத்திடுவாள்.
இவனை நம்பி டியூஷனுக்கும் எங்கும் அனுப்ப முடியாது. அங்கு என்ன பிரச்சனையை இழுத்து வருவானோ என்ற பயம்.
என்னால் வேறு என்னதான் செய்யமுடியும்? எல்லாம் இவனாகத் தேடிக் கொண்டது தானே என்ற ஆயாசத்தோடே தன்னை மீட்டுக் கொண்டவள் கதவைத் திறந்தாள்.
சத்தம் கேட்டுத் திரும்பியவன், உள்ளே வந்து கொண்டிருந்த தாயைக் கோபமாய் வெறித்தான்.
அவள் அதைக் கண்டு கொள்ளாமல்,
“குழப்படி செய்யாம இருந்தனியோ? இல்லா, எதையும் எடுத்துப் போட்டு உடைச்சனியோ?” என்ற, அவனிடம் பதிலில்லை.
அதையும் அவள் கண்டுகொள்ளவில்லை.
“பேணிக்க பிஸ்கட் வச்சுட்டு போனான். எடுத்து சாப்பிட்டனியோ?”
“இல்லை…” என்றான் கோபமாக.
“ஏன்? விடிய சமபோஷாவும் ஒழுங்கா சாப்பிடேலயெல்லோ நீ?”
“ஓம்… சாப்பிடேல்ல. இனி ஒருநாளும் சாப்பிடவும் மாட்டன்.”
“ஏன், நல்ல புத்தி வரோணும் எண்டு விரதம் ஏதேனோ?”
“ஒரு மண்ணும் இல்லை. இனி வீட்டுக்க விட்டுப் பூட்டினா நான் சாப்பிடமாட்டன்.” என்றான் கத்தி.
“வெளுத்தன் எண்டா தெரியும் தம்பிக்கு. ஏன் டா இப்ப கத்துறாய்?” என்று கையை ஓங்கியவள் பின் இழுத்துக் கொண்டாள்.
“வீட்டுக்க விட்டுப் பூட்டுறன், வீட்டுக்க விட்டுப் பூட்டுறேன் எண்டா, உன்னை வச்சு வேற என்னதான் செய்யச் சொல்லுறாய் என்னை? அக்கம் பக்கத்துல விட்டுட்டுப் போகவோ, இல்ல போகேக்கயே கூட்டிக் கொண்டு போகவோ நீ திறமான பிள்ளையோ எண்டு யோசி!
பேசினாலும் கொண்டாலும் அங்க உன்னை விட்டுட்டுப் போனா எட்டிப் பார்க்க எங்கட அம்மா இருந்தவா. நானும் கவலை இல்லாம என்ர வேலையைப் பார்த்தன். நீயும் சுதந்திரமா இருந்தனீ! இப்ப அதையெல்லாம் கெடுத்து இப்பிடி சனம் சந்தடி தெரியாத ஒரு இடத்துல வந்து இருக்கக் காரணமே நீதானே?
தன்ர சொல்லைக் கேக்காம வெளிக்கிட்டு வந்திட்டம் எண்டு அம்மா கதைக்கிறதையே நிப்பாட்டிட்டா. நான் எடுத்தாலும் ஃபோனை எடுக்கிறா இல்லை. இப்பிடி எல்லாரையும் எல்லாத்தையும் விட்டுட்டு வந்து உன்னோட மாரடிக்கிறன் எண்டாவது என்னில கொஞ்சம் இரக்கம் காட்டேன் நிலன்.” என்று சற்று முன் இருந்த மனக் குழப்பங்கள் எல்லாம் சேர மகனிடம் எரிந்து விழுந்தவள், பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டு,
“நிலன்! பிளீஸ்… என்னைக் கனக்கக் கதைக்க வைக்காத அப்பு! ஏற்கனவே தலை வெடிக்கிற அளவு யோசினைல இருக்கிறன். அதான் இப்ப கதவு திறந்து கிடக்கே, பேசாம போய் விளையாடு.” என்றாள் சமாதானமாக.
நித்திலனுக்குத் தாய் திட்டியதால் வந்த கோபம் ஒருபுறம் அவர் பேச்சில் இருந்த உண்மை ஒருபுறமாக சாவகச்சேரியில் தான் எவ்வளவு சுதந்திரமாக விளையாடித் திரிந்தோம் என்ற நினைவைக் கிளறி விட்டது.
அது இங்கு வந்த பின் அனுபவிக்கும் பகுதி நேர சிறை வாழ்க்கையை வெறுக்க வைத்தது.
“அப்ப நாங்க திரும்ப சாவச்சரிக்கே போவம் வாங்கோ. இஞ்ச இருக்க வேண்டாம்.” அவன் சிம்பிளாகச் சொல்ல, சாதனாக்கு வந்ததே கோபம்.
“என்னை நீ உயிரோட கொல்லுறதெண்டே முடிவெடுத்திட்டியோ? என்ன தைரியத்தில அங்க திரும்பப் போவம் எண்டு கேக்கிறாய் நீ? பெரிய இளந்தாரிப் பெடியன் மாதிரி உன்னைத் துரத்தித் துரத்தி அடிக்க அங்க ஒருத்தனை பகைச்சு வச்சுக் கொண்டு அங்க போவம் வா எண்டுறியோ? ஏன் திரும்பவும் எங்கேயேன் பத்தைக்குள்ள ஒளிஞ்சு என்ர உயிரை எடுகவோ?”
“அப்ப நீங்க ஒவ்வொருநாளும் என்னைத் தனியா விட்டுப் பூட்டிட்டுப் போக இஞ்ச கிடந்து எனக்கு விசர் பிடிச்சாப் பரவாயில்லையோ? போகேக்க என்ன செய்து போட்டுப் போறனீங்கள் எண்டு தெரியா, ஃபான் போட்டாலும் வேலை செய்யுதில்லை. டீவி போட்டாலும் வேலை செய்யுதில்லை.” என்று அவனும் அவளுக்கு சமமாகக் கத்த, சாதனா அமைதியாகிவிட்டாள்.
தனியாக இருக்கும் அவன் கரண்டோடு எதையும் விளையாடி விடக் கூடாது என்று இவள் தான் செல்லும் முன் அவனுக்குத் தெரியாமல் மெயினை ஒஃப் பண்ணி செல்வாள்.
அதேபோல் வந்ததும் அவனைத் திசை திருப்பிவிட்டு ஒன் செய்தும் விடுவாள்.
அப்படியிருக்க அவனுக்கு எப்படிப் பொழுது போகும்? பொழுது போகவில்லை என்று படிக்கும் அளவு நித்திலன் ஒன்றும் சிறந்த மாணவனும் இல்லை.
அதனால் இவனிடம் கத்துவதற்குப் பதில், இதற்கு மாற்றீடாக என்ன செய்யலாம் என்று அமைதியாக சிந்தித்தாள்.
மயூ, மகி இருவருக்கும் பன்னிரண்டுக்கு முன்பள்ளி முடிந்ததும் உடைமாற்றி இவள் பொறுப்புக்கு வந்தாலும் மதியம் இரண்டு இரண்டரை வரை பரமேஸ்வரி, கீழ்தளத்தில் அவர் அறைக்குப் பக்கத்தில் உள்ள அறையில் இவர்களுடனே இருப்பார்.
இடையில் ஒன்றரைக்கு நித்திலனுக்குப் பள்ளி முடிந்தால் அவனைக் கூட்டி வந்து அவசர அவசரமாக வீட்டில் விட்டு அவனுக்கு உண்ணக் கொடுத்து அவசர அவசரமாகக் தானும் உண்டு விட்டு அவள் வருவதற்கு கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்களாவது அவகாசம் வேண்டும். அந்த நிமிடங்கள் பரமேஸ்வரியின் புண்ணியத்தில் இவளுக்குக் கிடைக்கும்.
அதன் பின் அவர் மதிய உறக்கத்துக்கு சென்றால் மாலை ஐந்தரைக்கு மேல் தான் எழுந்து கொள்வார்.
அதுவரை இவள் மட்டுமே தான் பிள்ளைகள் இருவருக்கும் பொறுப்பு. நான்கு மணிக்கு கீழ் தளத்தில் கிளினிக்கைத் திறந்து விடுவர். அந்த நேரம் பிள்ளைகள் விளையாட என்று வீட்டின் பின்னால் அமைத்திருக்கும் இடத்துக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் அவள்.
கிளினிக்கிற்கு வரும் ஆட்கள் கீழ்தளத்தில் தாய் மற்றும் பிள்ளைகளின் புழக்கத்திற்கு என்று இருக்கும் இடத்தையோ அவர்கள் விளையாட என்று அமைந்த இடத்தையோ எட்டிக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு ஆதித்யன் ஆவன செய்திருந்தான்.
ஒரு வோட்ச்மேனும் கேட்டருகில் பணியில் இருப்பார் என்றாலும் தன் வேலையில் எந்த அசட்டைத்தனமும் செய்ய முயன்றதில்லை அவள்.
சிலநேரங்களில் ‘இரண்டு நிமிட நடை தானே, சென்று மகனைப் பார்த்து வா!’ என்று மனம் சண்டித்தனம் செய்யும்தான். ஆனாலும் திடமாக இருந்து கொள்வாள்.
நான் அவனுக்கும் அவன் எனக்கும் கொடுக்க முடிந்த வாழ்க்கை முறை இதுதான். இதற்கு இருவரும் பழகிக் கொள்ளத்தான் வேண்டும் என்று மனதை இறுக்கிக் கொள்வாள்.
அத்தோடு அவனைத் தனியே விட்டு வரும் முன், அவனுக்குத் தீங்கு என்று நினைக்கும் எல்லாவற்றையும் ஒழித்து விட்டும் ஒளித்து விட்டும் வருவாளாதலால் பெரிதாக அவனை எண்ணிக் கலங்க வேண்டி இருக்காது அவளுக்கு.
ஆனாலும் விலகிப் போகும் வில்லங்கத்தை வீம்புக்கு அழைத்து வாடகைக்கு குடி வைக்கும் மகனை வைத்துக் கொண்டு சாதனா இந்தளவு நம்பிக்கையோடு இருந்திருக்க வேண்டாம்.
அதற்கான ஊழியத்தை மறுநாளே அவள் ஸ்வீகரிக்க வேண்டி இருந்தது.
தொடரும்…

