அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கூடம் இல்லையாதலால் சாதனா வழக்கம் போல் நித்திலனை வீட்டில் விட்டு விட்டு வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
அவனோ இன்றும் நாள் முழுவதும் அடைந்தே கிடக்க தன்னால் இயலாது என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான்.
“என்னால இண்டைக்கும் வீட்டுக்கயே கிடக்கேலா. ஒண்டு போறதெண்டா என்னையும் கூட்டிக் கொண்டு போங்கோ. இல்லாட்டி என்னை இஞ்சயே வெளியில விளையாட விட்டுட்டுப் போங்கோ.” என்ற, அவளும் அவனோடு சண்டை பிடிக்க இயலாது, “சரி..” என்று விட்டாள்.
அதை நம்பியவன் சத்தம் ஏதுமின்றி அவள் கொடுப்பதை உண்டு குடித்து எல்லாம் செய்தான்.
அவன் உண்டு முடிக்கவும் சாதனா கையில் பிரிட்டோன் சிரப்பை எடுத்தவள்,
“இந்தா இரவு நித்திரையில இருமிக் கொண்டே இருந்தனி. இனிப் பகல் முழுக்க வெயிலுக்கயும் நிக்கப் போற. இதைக் கொஞ்சமா குடி.” என்று கொடுக்க, இன்று ஜெயில் வாழ்க்கை இல்லை என்ற களிப்பில் எதையும் யோசிக்காமல் அதை வாங்கிக் குடித்தவனுக்கு கால் மணி நேரத்துக்குள்ளாகவே கண்கள் சொக்கி உறக்கம் வந்தது.
“அம்மா! ஏன் எனக்கு நித்திரை வருது? இப்ப கொஞ்சம் முதல் தானே எழும்பினனான்?”
“இரவு ஒழுங்கா கொள்ளேல போல நிலன். நித்திரை வந்தா கொஞ்ச நேரம் படுத்து எழும்பேன். இண்டைக்கு டொக்டர் அரை நேரத்தோட வந்து பிள்ளையளை எங்கேயோ கூட்டிக் கொண்டு போகவெண்டவர். நான் வேளைக்கெண்டு வந்துடுவன். அதுக்குப் பிறகு நீ வெளியில விளையாடலாம்.” என்றாள் தன்மையாக.
“நேற்றுத்தானே அவை பார்க்குக்கு போனவை எண்டு சொன்னனீங்கள்? இண்டைக்கும் எங்கயோ போகினமோ? நான்தான் ஒரிடமும் போறேல்ல!” குறைபட்ட மகனை எண்ணி அவளுக்குக் கண்கள் கரித்தது.
என்னதான் எல்லாம் இவனால் வந்தது என்று அவனை இடித்துக் கொண்டே இருந்தாலும் அவன் வயதுக்கு அவன் அனுபவிக்க வேண்டிய எதைத்தான் அவன் அனுபவித்திருக்கிறான் என்று அவ்வப்போது இவளையும் இவள் மனசாட்சி விட்டு வைப்பதில்லை.
இதை யோசித்து அழ இப்போது நேரமில்லை ஆதலால் பாயை விரித்து மகனைப் படுக்க வைத்து, ஃபானையும் போட்டவள் மகனைத் தட்டிக் கொடுத்தாள்.
அவன் உறங்கி விட்டான் என்று உறுதியானதும் டிவி வைப்பதற்காக கட்டியிருந்த தட்டு இருக்கும் சுவரில் பொருத்தப்பட்டிருந்த மெயின் சுவிட்சை ஒஃப் செய்தவள், வீட்டையும் பூட்டிக் கொண்டு வெளியேறினாள்.
குறைக்கண் நித்திரையில் இருந்த நித்திலனுக்கு தாய் மேலே உள்ள சுவிட்ச் தட்டுவதும் அதன் பிறகு ஃபான் நிற்பதும் நிழலாகத் தெரிய, அப்படியே ஆழ்ந்து உறங்கி விட்டிருந்தான்.
சாதனா எப்போதும் போல் திறந்திருந்த ஜன்னல் வழி அவனை எட்டிப் பார்த்தவள், எழுந்த வேதனைப் பெருமூச்சோடே டொக்டர் வீடு நோக்கி நகர்ந்தாள்.
அவளுக்கு தான் செய்துவிட்டு வந்த வேலையை எண்ணி உள்ளே உறுத்தினாலும், இன்று ஆதித்யன் பாதி நேரத்தில் வந்து பிள்ளைகளைக் கூட்டி செல்வானாம் என்று பரமேஸ்வரி அம்மா தொலைபேசியில் சொன்னதை வைத்து, அவன் எழுவதற்குள் தான் வந்து விடுவோம் என்று நம்பி சென்றாள்.
அதன் பின் அவனை அழைத்துக் கொண்டு போய் ஐஸ்கிரீம் வாங்கிக் குடுக்கலாம் என்றும் பிளான் பண்ணியிருந்தாள்.
ஆனால் எப்போதும் போல் அவள் கணிப்பிற்கு மாறாகத்தான் எல்லாம் நடந்தேறி இருந்தது.
நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த நித்திலன் வெயில் ஏறி வியர்த்துக் கொட்ட, பாதி தூக்கத்தில் எழுந்தமர்ந்தவனுக்கு உடனடியாக மின்விசிறியின் சுழற்சி தேவைப்பட்டது.
தாய் ஒஃப் செய்த சுவிட்சைப் போட்டால் ஃபான் வேலை செய்யும் என்றளவில் புரிந்து கொண்டவன், தன் உயரத்துக்கு அது எட்டாது போகவே, முழுதாகக் தெளியாத உறக்கத்தோடு தன் தலை உயரம் இருந்த தட்டில் ஏறியவன், பாலன்ஸ் தவறி கீழே விழுந்து விட்டிருந்தான்.
விழும் போது அனிச்சையாக வலது கையை தரையில் ஊன்றியிருந்ததில் மணிக்கட்டு எலும்புக்குள் முறிவு ஏற்பட்டிருந்தது. நல்லவேளையாக தலையில் அடிபடவில்லை.
விழுந்த அதிர்ச்சியில் அவன் அலறிய அம்மா என்ற சத்தமும் அவன் விழ முன் தட்டி வீழ்த்தியிருந்த மர ரீப்பையின் சத்தமும் தெய்வாதீனமாக இவர்கள் வீட்டை அடுத்துள்ள வீட்டு நிர்மலா அக்கா காதில் விழுந்திருந்தது.
அவரோடு பெரிதாகப் பழக்கம் இல்லை என்றாலும் மகனைத் தனியே விட்டு விட்டு செல்கிறோமே, அக்கம் பக்கம் இருப்போரின் ஆதரவு இருந்தால் நல்லது என்று சாதனா தானாகவே சென்று ஒருநாள் பேச்சுக் கொடுத்தவள், தன் தொலைபேசி எண்ணையும் கொடுத்து, மகனை விட்டு செல்லும் விபரம் கூறி, ஜன்னல் திறந்தே இருக்கும், எதுவும் வித்தியாசமாக உணர்ந்தால் தனக்கு அறிவிக்கும்படி கூறியிருந்தாள்.
அவரும் அதன்படியே சத்தம் கேட்டதும் எட்டிப் பார்த்தவர், நித்திலனின் நிலை புரியவர உடனே சாதனாவுக்கு அழைத்து விபரம் சொல்லியிருந்தார்.
அவளும் பரமேஸ்வரியிடம் விபரம் சொல்லி அடித்துப் பிடித்து ஓடி வந்தவள், அப்போதே கேட் வாசலில் நுழைந்த ஆதித்யன் காரைக் கவனியாது மோதப் பார்த்தாள்.
சுதாரித்து அவன் பிரேக் போட்டிருக்காவிட்டால் அவளையும் சேர்த்துதான் மருத்துவனையில் சேர்த்திருக்கவேண்டும்.
அவன் இவளைத் திட்ட வாயெடுத்தவனும் அவளின் அழுத முகத்தைப் பார்த்துத் தாயிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொண்டவன், தாயைப் பிள்ளைகளைப் பார்க்கச் சொல்லி விட்டு, மருத்துவனாகவும் மனிதாபிமானமுள்ள மனிதனாகவும் அவள் கேட்காமலே அவள் வீட்டை நோக்கி நடைபோட்டான்.
நடுங்கிய கரங்களை சமப்படுத்தி வீட்டைத் திறந்த சாதனா, “நிலன்!” என்று அவனை நோக்கி ஓட, அவள் பின்னே ஆதித்யனும் அந்தப் பக்கத்து வீட்டு நிர்மலா அக்காவும் நுழைந்திருந்தனர்.
நித்திலன் விழுந்த நிலையில் இருந்து எழுந்து அமர்ந்திருந்தவன், இடது கரத்தால் வலது கரத்தின் மணிக்கட்டைப் பற்றிப் பிடித்துக் கொண்டு வலியில் அரற்றிக் கொண்டிருந்தான்.
அழுகையை அடக்கியே பழக்கப்பட்டவன் கன்னங்கள் இன்றோ அதீத வலியில் அவன் சிந்திய சிலதுளி கண்ணீரில் நனைந்திருந்தது.
அதுவே மகனின் வலியின் அளவைத் தாய்க்கு அறிவிக்க துடித்துப் போனாள் அவள்.
“நிலன்! என்னடா செஞ்சு வச்சிருக்கிறாய்? கைக்க நோகுதே அப்பு?” என்று அவன் கையைப் பற்ற வர, அவனோ…
“விடுங்கோ என்னை… எல்லாம் உங்களால தான். நீங்க விட்டுட்டுப் போனதால தான் நான் விழுந்தனான். தள்ளிப் போங்கோ. கிட்ட வராதேங்கோ. எனக்கு நோகுது…” விசும்பிக் கொண்டே மூர்க்கமாகத் தள்ளினான்.
அவன் நோகுது என்றவும் தான் ஆதித்யன்,
“தள்ளுங்கோ கொஞ்சம்…” என்று சாதனாவை விலகச் செய்தவன் அவன் கையைப் பற்றி ஆராய்ந்தான்.
“ஆஆஆஆ…” பெரும் சப்தம் அவனிடம்.
‘நிலன்…’ சாதனாவின் மனக்குரலும் அழுகையோடு ஓலமிட்டது.
கையைப் பார்த்ததுமே ஆதியனுக்குப் புரிந்து போனது, முறிவு தான் என்று.
ஆனாலும் தான் கண்டுபிடித்ததை சொல்லாமல், “ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போனாத்தான் சரிவரும்.” என்றவனை அழுகையோடு ஆராய்ந்தன நித்திலனின் விழிகள்.
டிப்டொப்பாக ஒருவித நாசுக்கான உடல்மொழியோடு தன்னைப் பரிசோதித்தவனைக் கண்டவன்,
“நீங்க தான் அம்மா இப்ப வேலை செய்யுற ஆஸ்பத்திரி டொக்டரோ?” என்று அழுகை தேய்ந்த அதிகாரக் குரலில் கேட்டான்.
அந்த அதிகாரத் தொனி ஏன் என்று புரியாத பாவத்துடனே ஆம் என்பதாகத் தலையசைத்தான் ஆதித்யன்.
அவன் பதிலில் அவனை முறைத்துப் பார்த்தவன்,
“உங்களாலயும் தான் நான் விழுந்தனான். நீங்கள் ஒண்டும் எனக்கு மருந்து தர வேண்டாம். போங்கோ.” என்றான் வெடுக்கென.
“நிலன்ன்ன்…” சாதனாவின் குரல் அழுகையை மீறி அதட்டலாய் வந்தது.
பேசும் சிறுவனுக்குத் தெரியாது, தான் யாரைப் பேசுகிறோம் என்று! ஆனால் சாதனாவுக்குத் தெரியுமே, சிறுவனிடம் பேச்சுக் கேட்டுக் கொண்டிருப்பவன் சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆள் என்று!
தாம் செய்வது உயிர் காக்கும் உன்னத பணி என்பதை மறந்து, மருத்துவத் தொழிலை ஸ்டேட்டஸாகவும் பெரிய பொசிஷனாகவும் கருதிக் கொண்டு செருக்குடன் அலையும் பெரும்பான்மையான மருத்துவர்களுக்கு மத்தியில் இவனைப் போல சொற்பமானவர்களே தொழில் தர்மமும் மனு தர்மமும் மாறவாது சேவையாற்றுகின்றனர். அதை மதிக்காது மகன் அவனை அவமதிக்க, நல்ல தாயாக அவனைத் தடுத்தாள்.
ஆனால் சம்பந்தப்பட்டவனோ சிறுவனிடம் கோபம் கொள்ளாது,
“நான் என்னெண்டு இதுக்குக் காரணம் எண்டு சொல்லேலுமோ?” என்று ஒற்றைப் புருவத்தைத் தூக்கி மிடுக்காய் கேட்க, அதை ஒருவித குறுகுறுப்பாய் பார்த்த நித்திலன், தனிமையில் தானும் அவனைப் போல் புருவமுயர்த்திப் பயிற்சி எடுக்கவேண்டும் என்று தீவிரமாக முடிவெடுத்துக் கொண்டிருந்தான்.
அவனிடம் பதில் இல்லையென்றவும் ஆதித்யன் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். அவனுக்கும் அப்போதே தன் கோபம் நினைவு வர, முகத்தை முறைப்பாய் வைத்து,
“நீங்க தானே நான் அங்க உங்கட வீட்ட வந்தா உங்கட பிள்ளையள் கூடாம போயிடுவினம் எண்டு, என்னை உங்கட வீட்டை கூட்டிக் கொண்டு வரவேண்டாம் எண்டு சொன்னனீங்கள்? அதுக்கு மீறி என்னைக் கூட்டிக்கொண்டு வந்தா பெரிய ஊசி போடுவேன் எண்டும் சொன்னனீங்களாம்? அதாலதான் அம்மா என்னை இஞ்ச வச்சுப் பூட்டிப் போட்டு வாறவா. அதாலதான் நான் விழுந்தனான்.” என்ற, ஆதித்யனுக்குப் புரிந்து போனது. சாதனா இவனை சமாளிக்க சொன்ன பொய்தான் இதெல்லாம் என்று…
அவன் திரும்பி அவளை அழுத்தமாகப் பார்க்க, அவள் கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.
அவள் என்ன கனவா கண்டாள், இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும் என்று!
“இல்ல… இவன் தானும் வருவன் எண்டு நிக்கிறவன்… அதான்…” அவன் பார்வைக்குப் பதில் சொன்னாள்.
அதைப் புறந் தள்ளியவன், “உந்தக் கதையளைப் பிறகு கதைச்சு முடிவெடுக்கலாம். இப்ப கெதியா ஆஸ்பத்திரிக்கு வெளிக்கிடலாம்.” என்றவன் அதட்டல் தொனியில் சொல்ல நித்திலனின் முறைப்புக் கூடியது.
“ஏன், வெளிக்கிடாட்டி ஊசி போடுவீங்களோ? எனக்கொண்டும் ஊசிக்குப் பயமில்லை. சாவச்சேரில நாய் கடிச்சமூட்டம் புண்ணுக்குள்ள எல்லாம் ஊசி போட்டவை. நான் அழவே இல்ல. பிறகு தகரம் வெட்டினதுக்கும் போட்டவை. அதுக்கும் நான் அழவே இல்லை.”
அவன் தன் பெருமைகளை அடுக்க, கேட்டிருந்த ஆதித்யனுக்கு இவனின் அகராதி என்னவென்று நன்றாகப் புரிந்தது. சாதனாவை எண்ணிக் கொஞ்சம் பரிதாபமாககக் கூட இருந்தது.
“நீங்க பெரிய வீரர் தான். நான் ஒத்துக் கொள்ளுறன். இப்ப வெளிக்கிடுங்கோ ஹொஸ்பிட்டலுக்கு. நேரம் ஆக ஆக இன்னும் நோகும்.” என்றவன் சொல்ல,
“நீ வெளிக்கிடு சாதனா. நான் என்ர தம்பிக்கு அடிக்கிறேன், ஆட்டோ கொண்டு வரச்சொல்லி.” என்று விட்டு வெளியேறினார் நிர்மலா.
“இவரின்ர ஆஸ்பத்திரிக்கெண்டா நான் வரவே மாட்டன். நாங்கள் சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்குப் போவம் அம்மா. அங்க மனோ டொக்டரிட்ட காட்டுவம்.” என்ற,
அவளுக்கும் பொறுமை போகவா என்று இருந்தது. ஆதித்யன் இருப்பதால் அடக்கிக் கொண்டு நின்றாள்.
“நிலன்! மரியாதையா கதைக்கோணும். அவர் எவ்வளவு பெரிய டொக்டர் தெரியுமோ? அவரிட்ட சொறி சொல்லு முதல்.” என்றாள் முடிந்தவரை பொறுமையாக.
“உங்களுக்கு விளங்கேலையோ? இவர் எனக்குப் பயங்காட்ட ஊசி போடுவனெண்டு சொன்ன மாதிரிதான், அங்க போனா கையையும் நோக்காட்டுவார். நான் வரமாட்டேன். ஏற்கனவே சரியா நோகுது கை.” என்று முகத்தை சுழித்தான்.
இதுவரை ஆங்காரத்தில் மறைந்திருந்த வலி, இப்போது காரியம் சாதிக்கவென்று வெளியே வந்தது.
“கவலைப்படாம போம் நிலன். நான் உமக்கு ட்ரீட்மண்ட் பார்க்கப் போறேல்ல. அங்க வேற நல்ல டொக்டர் நிக்கிறார் வார்ட்ல.”
ஆதித்யன் விளையாட்டாய் தான் சொன்னான். சாதனா தான் சங்கடமுற்றவளாக, “சொறி டொக்டர். அவன் கதைச்சதுக்கு.” என்ற, அதை எல்லாம் பெரிதாக எடுக்காதவன்,
“மகனைக் கதிரைல இருத்திப்போட்டு வெளில வாறீங்களோ?” என்று விட்டு அவள் பதிலை எதிர்பாராமல் வெளியே செல்ல, அவளும் அவன் சொன்னதுபோல் செய்துவிட்டு பதைக்கும் மனதுடன் அவன் முன் வந்து நின்றாள்.

