மையல் 29
“சரி மாம்ஸ்..” எனப் பதில் அளித்த தங்கையின் கணவனது சொற்களில் சற்றே வருத்தம் எட்டிப் பார்த்தது சாகரனிற்கு.
“என்னடா? கால் பண்ணி அஞ்சு நிமிசமா ம்ம், ஆமா, சரி, இல்லனு.. ரெண்டு மூனு எழுத்துல பேசிக்கிட்டு இருக்க? வழக்கமா நீ இப்படியான ஆளு இல்லயே?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல.”
“ஒன்னும் இல்லாம தான் இப்படிப் பேசுறியா? ரெண்டு நாளா கால் வேற பண்ணல. நான் ஃபோன் போட்ட பின்னாடி தான் பேசணும்னு இருந்தியா, என்ன?”
“மாம்ஸ்?”
“சரி விஷயத்தைச் சொல்லு.”
“அதான் ஒன்னு…” என்றவனது பேச்சை, “டேய், ஒழுங்கா சொல்லீடு. எனக்கு தெரியாதா உன்னைப் பத்தி?” என உரைத்துப் பாதியில் நிறுத்தினான்.
“மேகவிக்கு என்னைப் பத்தித் தெரிஞ்சிடுச்சு மாம்ஸ்.”
“ஹோ.. எப்படி.?”
“நான்தான் சொன்னேன்!” என்று நடந்ததை உரைத்தான்.
“இப்ப, பாப்பா என்ன சொல்லுறா?”
“ஒன்னும் சொல்லல. என் மேல கோபமா இருக்கா. பேசி ரெண்டு நாளாச்சு. நான் பேசுறதுக்கும் சான்ஸ் தர மாட்டிறா.”
“ம்ம்.. அவளுக்குக் கோபம் வந்தா அப்படித்தான். மொத்தமா இக்னோர் பண்ணிடுவா. நான் பேசிப் பார்க்கவா சத்தி?”
“இல்ல மாம்ஸ். அப்புறம் அந்தக் கோபம் உங்க மேல திரும்பிடும். நான் பார்த்துக்கிறேன்.”
“பாப்பாவை சமாதானம் செய்யிறது கொஞ்சம் கஷடம் மாப்ள!”
“கஷ்டப்படாம, எதுவும் கிடைக்காது மாம்ஸ்.”
“நீ கால் பண்ணுறப்ப எல்லாம் அவ மாறீட்டு வர்றதை சொல்லும் போது, அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஆனா இப்ப.?”
“வருஷம் முழுசும் வசந்த காலமாகவே இருந்தா, போர் அடிச்சிடும். வெயிலும் மழையும் இல்லாம எப்படி மனுஷன் உயிர் வாழுறது? இப்ப வெயில் கொஞ்சம் வாட்டி வதைக்குது. சீக்கிரமே மழை வரும்னு நம்புவோம்.”
“அதுசரி. அந்த சீக்கிரம் இன்னுமே சீக்கிரமா நடந்தா நல்லா இருக்கும்.”
சத்தி சிரித்திட, “வீட்டுல தாலி பெருக்கிக் கோர்க்கிறதுக்குப் பேசிக்கிட்டு இருக்காங்கடா. இன்னும் ரெண்டு இல்ல மூனு நாள்ல டேட் ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க. நம்ம ரெண்டு பேரோட கல்யாணமும் ஒன்னா நடந்ததால, இதையும் சேர்த்தே செய்யலாம்னு பெரியவங்க நினைக்கிறாங்க.”
“இது வேறயா? அப்ப என்னோட பொண்டாட்டியைச் சீக்கிரம் சமாதானம் செஞ்சே ஆகணும்.”
“ம்ம்..”
“சரி மாம்ஸ், நான் பார்த்துக்கிறேன்!” என்றவன் பேச்சை முடிக்க, பெருமூச்சு ஒன்றை விட்டபடிக் கைப்பேசியை அணைத்தான் சாகரன்.
“என்னங்க பேசியாச்சா? அண்ணா என்ன சொன்னாரு.?” என்றபடியே வந்த பிரார்த்தனா தேநீரை நீட்ட, வாங்கிக் கொண்டான்.
“புதுசா என்ன சொல்லுவான். எப்பவும் போல தான். ஏன், நீ பேசலயா சத்திக்கிட்ட.”
“நாலு நாள் ஆச்சு. எப்பவும் அவருதான் கால் பண்ணுவாரு. என்னமோ கூப்பிடவே இல்ல.”
“நீ கூப்பிட்டுப் பேசி இருக்கலாம்ல.?”
“முக்கியமான வேலையோ என்னவோ? எதுக்கு ஃபோன் போட்டு டிஸ்டப் பண்ணணும்? ஃப்ரீ ஆனதும் அண்ணனே கால் பண்ணுவாருனு நினைச்சேன்.”
“ம்ம்..” என்றவன் தேநீரை அருந்தத் துவங்க, மாமியார் ஷீலாவின் அழைப்பில் கணவனிடம் தலை அசைத்து விட்டுச் சென்றாள் தனா.
பணி முடிந்து மனைவியின் வருகைக்காக அவளது அலுவலகத்தின் முன்பு காத்திருந்தான் சத்தி. இருபது நிமிடங்களுக்கு மேலும் கடந்துவிட்டது. மேகவி வருவதாய்த் தெரியவில்லை.
ஏற்கனவே இரண்டு முறை கைப்பேசியில் அழைத்து விட்டான், பதில் இல்லை. குறுஞ்செய்தியும் அனுப்பியாயிற்று, அதற்கும் மறுமொழி வரவில்லை. கடந்த ஒரு வாரமாய் இப்படித்தான் நடக்கிறது.
வீட்டில் இருந்து தாலி பெருக்கிக் கோர்ப்பதற்கு வேறு, நாள் பார்த்துச் சொல்லி இருக்கின்றனர். இன்னும் ஆறு தினங்களில் விழாவிற்காக கிளம்ப வேண்டும். சென்னைக்கு வந்த பின்னர் ஊரிற்கு இன்னும் செல்லவே இல்லை, திருமண தம்பதியினர்.
புஷ்பாவும் ஷீலாவும், “ஒரு நாலஞ்சு நாள் இங்க இருக்கிற மாதிரி, ரெண்டு பேரும் லீவ் போட்டுட்டு வாங்க.” என உரைத்து இருந்தனர். மனைவியின் சம்மதம் இல்லாது இவன் எதை உறுதி செய்வது.?
மேகவிக்குமே விஷயம் தெரியும் தான். ஆனால் அவள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.
“தனாக்கும் எனக்கும் ஒரே நாள்ல கல்யாணம் நடந்தா, இதையும் சேர்த்தே செய்யணுமா என்ன? ஏன் முன்ன பின்னனு தனித்தனியா விசேஷம் வச்சா ஆகாதா? எனக்கு லீவு கிடைக்குமானு தெரியல. வர முடியுமானு பார்க்கிறேன். இல்லேனா தனாக்கு மட்டும் கயிறை மாத்தி விடுங்க. எனக்கு அப்புறம் பார்த்துக்கலாம்!” எனச் சற்று அழுத்தமாகவே குடும்பத்தாரிடம் உரைத்து இருந்தாள்.
மங்கையின் குடும்பத்தாருக்கு அவளைப் பற்றித் தெரியும் என்பதால், “பெரியவங்க பேச்சைக் கேட்டு ஊருக்கு வந்து சேருற வழியைப் பாரு! இல்ல முடியாதுனா, பேசாம நாங்க எல்லாரும் அங்க கிளம்பி வர்றோம். விசேஷத்தைச் சென்னையில செய்யலாம்!” என்று கண்டிப்புடன் மொழிந்திருந்தார் கனகவள்ளி.
சத்தியின் தந்தை கதிரவன், “மருமகக்கிட்டப் பேசிப் பாருப்பா. அம்மாவோட உடம்பு இருக்கிற நிலைக்கு அலைய முடியாது!” எனப் பொறுப்பை மகனிடம் ஒப்படைத்து இருந்தார்.
எப்படியேனும் அவளைச் சமாதானம் செய்து விடலாம் என ஆடவன் ஒவ்வொரு முயற்சியாய் மேற்கொள்ள, அதற்கு வாய்ப்பே கொடாது கணவனை முற்றிலுமாய் தவிர்த்து வந்தாள்.
மங்கையின் இந்த தவிர்ப்பு அச்சத்தைத் தந்த போதும், நிச்சயம் மனம் மாறி விடுவாள் என்ற நம்பிக்கையும் துளிர்விட்டு இருந்தது. அதற்குக் காரணமும் இருக்கவே செய்தது.
முகம் பாராது, இதழ்களில் இருந்து சொல் உதிர்க்காது, படுக்கை அறைக்குள் அனுமதியாது, சமையலை ஏற்காது.. என எவ்வகையிலும் நெருங்கவே விடாது தள்ளி நிறுத்தியவள், ஒன்றை மட்டும் அவனிற்காக விட்டுக் கொடுத்திருந்தாள்.
சத்தியிடம் இரு சக்கர வாகனம் இல்லாத காரணத்தால் அவளுடையதில் தான் இருவரும் இணைந்து பணிக்குச் சென்று வந்தனர். தற்போது அவள் தனித்து அதனைப் பயன்படுத்தத் துவங்கி விட்டால், அவனின் நிலை? அதற்காகவே வாடகை வாகனத்தைப் பதிவு செய்து, அலுவலகம் சென்று வருகிறாள். அந்த வண்டியை, தற்போதும் உபயோகிப்பது அவனே!
இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்ட மறுநாள், மேகவி மட்டும் வழக்கமான நேரத்திற்கு முன்னரே கிளம்பிச் சென்றுவிட, இவனோ என்ன செய்வது என்று புரியாமல் தவித்துப் போனான்.
‘அவளின் வாகனத்தை ஓட்டிச் சென்றால் அதற்காக ஏதேனும் சண்டையிடுவாள், அப்படியே மௌனத்தைக் கலைத்துப் பேச்சைத் துவக்கிக் கொள்ளலாம்!’ என எண்ணினான். ஆனால் நடந்ததோ வேறு!
ஆடவனின் நடவடிக்கையை கவனித்தவள், அதன் பொருட்டு இன்னும் ஒரு வினாக்கூட எழுப்பவில்லை. அந்த அமைதியை தனக்குச் சாதகமாய் எடுத்துக் கொண்டு, விரிசல் விடத் துவங்கிய உறவைச் சரிசெய்ய முயன்றான் சத்தி.
தனது அலுவலகத்தின் மூன்றாம் தளத்தில் இருந்து கண்ணாடித் தடுப்பின் வழியே வெளிப்பக்கத்தைப் பார்த்திருந்தாள் மேகவி. கரத்தினில் ஆவி பறக்கும் காஃபி.
ஒரு மிடறு அருந்தினாள், லேசாய் கசந்தது.
“கீர்த்தி போட்டுத் தர காஃபி மாதிரி இல்ல!” என ருசி கண்ட நா, குறை சொன்னது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அவனது கைப்பக்குவத்தை சுவைத்த பழக்கம். தற்போது எதை உண்டாலும் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.
திருமணத்திற்குப் பின்னர் வெளியில் உணவு உண்ணும் பொழுதெல்லாம் இந்த ஒப்பீடு வரும் தான். எனினும் அத்தருணங்களில் ஆடவன் உடன் இருப்பான். அதனால் அதன் தாக்கம் பேச்சோடு நின்று போகும். சிந்தனையில் நிலைக்காது. ஆனால் தற்போது எல்லாம் இந்த ஒப்பீடுகள், சிந்தை வரை சென்று உணர்வுகளைச் சிதைத்தது.
மெலிதான பெருமூச்சை வெளியிட்டு, பார்வையைக் கீழ் பக்கம் திருப்பினாள்.
சத்தி நின்றிருந்தான்.

