Skip to content
“ஓஓ கனடாக்காரியோ! அந்தத் திமிர்ல தான் எங்கட அண்ணாவில சூப் எத்தினனி என்ன? என்னடி முழுசிற? அண்டைக்கே உன்ன ஒரு கை பார்த்திருப்பன், அண்ணா தடுத்திட்டார். அந்தளவுக்கு நீ பெரிய ஆளா? வாடி இங்கால!” ஸ்கூட்டியில் இருந்து விலத்தி இழுத்து நிறுத்தினான், ஒருவன்.
மற்றவன், சரிந்த ஸ்கூட்டியை, வேண்டா வெறுப்பாகப் பிடித்து ஸ்டாண்ட் போட்டான். அந்நேரம், அவர்களைக் கடந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கூப்பிடு தூரம் சென்று மெதுவாகி பின்னர் நின்றது.
பக்கக் கண்ணாடியால், பின்புறத்தைப் பார்த்த ஆரூரனுக்குச் சட்டென்று சிரிப்புத்தான் வந்தது.
அன்று, கராத்தே தெரியும் என்று சொன்னவள் நினைவில் வந்து போனாள். விட்டால் அழுதுவிடுவாள் போல் தான் நின்றிருந்தாள், பைரவி. கையைப் பிடித்து இழுத்ததை இவனும் கண்டானே! வந்த வேகத்தில் சிரிப்பு மறைந்து முகத்தில் கடினம் பரவியது. ஹெல்மட்டை கழட்டினான்.
“தனுசன்!” தலையை மட்டும் திருப்பி அழைத்தான்.
“அண்ணா!” நாய்க்குட்டியா இவன் என்ற மாதிரி ஓடினான், அந்த தனுசன், இவள் வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவன். மற்றவர்களும், “ஆரூரன் அண்ணா டா!” என்று விட்டு, இவளை முறைத்தார்கள்.
பைரவிக்கு வந்த கோபத்தில் முகம் சிவந்திட்டு. அவனைச் சொல்லியல்லவா கையைப் பிடித்திழுத்தான்கள்.
‘அண்டைக்கு, அவரிட தங்கச்சி கையைப் பிடிச்சதும் என்ன துள்ளுத் துள்ளிக்கொண்டு ரவுடி போல வீடு பூந்தவர்! இண்டைக்கு, ஆரோ சுகுமாரிட மகள் எண்டோன்ன, தள்ளிப் போய் நிண்டு குசலம் விசாரிக்கிறானே! அடேய்… தடி எருமையனே! நீ எல்லாம் ஒரு மனுசனா?’ அவளுக்கு வந்த விசரில் சத்தமாகக் கத்த வேண்டும் போலிருந்தது.
தனுசனோடு கதைத்தவன் மீண்டும் திரும்பினான்.
“பாவமா இருக்கு விட்டிருங்க!” என்றுவிட்டு, அப்பட்டமாக எள்ளல் பார்வை பார்த்து வைத்தான். அதையும் கடந்து, வலு கூர்மையாக அவளில் தங்கிவிட்டு, கணத்தில் தனுசன் நாய்க்குட்டியிடம் திரும்பியது, அவன் பார்வை.
“பெர்சனல் எண்டு அண்டைக்கே சொன்னனான் எல்லா? மயூரனத் தெரியும் தானே?”
“ஓம் ஓம் மெடிக்கல் ஃபகல்ட்டி சீனியர் அண்ணா தானே? உங்களோட அடிக்கடி காணுறனான்.”
“அவரே தான். அவரிட சொந்த மச்சாள் இவா. எங்களுக்குள்ள சின்னப் பிரச்சினை. அவ்வளவும் தான். விட்டிருங்க. ஃபிரெண்சிட்டையும் சொல்லும்.” தன்மையாகச் சொன்னவன், “ரோட்டில வச்சு கையைப் பிடிக்கிறது? இதெல்லாம் என்ன தனுசன்? உம்மட்ட இதை நான் எதிர்பார்க்கேல்ல!” அவன் குரல், இரும்பென இருந்தது.
“சொறி அண்ணா! கோவத்தில…”
“சொறிய அங்க கேளுங்க. இனிமேல், இப்பிடி ஆரோடையுமே நடக்காதீங்க!” போகலாம் என்ற மாதிரி தலையசைத்தவன் மோட்டார் உறுமியது. கைபேசியை எடுத்து என்னவோ தட்டிவிட்டுப் புறப்பட்டுச் சென்று விட்டான்.
முகம் கன்ற வந்தான், அந்த தனுசன். “சொறி சிஸ்டர்!” தர்மசங்கடத்தோடு அவன் சொல்ல, மற்றவர்கள் முகம் கோண நின்றார்கள்.
“திரும்பவும் சொறி! குறை நினைக்க வேணாம். ஃபிரெண்ட்ஸ்!” அவளை நோக்கிக் கையை நீட்டினான். அவளோ, அவர்களையும் அவன் கையையும் எரிக்கும் பார்வை பார்த்தாள். அவர்களில் உள்ள கோபத்தில் ஆயிரம் மடங்கு அந்த ஹோட்டால்காரனிடம் இருக்கே! பார்வையை விலக்கி விட்டாள். மீண்டும் சொறியை உதிர்த்தவர்கள், விட்டால் போதுமென்று புறப்பட்டுச் சென்று விட்டார்கள். மயூரன் அப்பா Superintendent of Police என்றது நன்றாகத் தெரியுமே!
ஆரூரன் சொல்லாமல் இவர்கள் கிளம்பிச் செல்லவில்லை என்று விளங்காமல் இல்லை. இருந்தாலும் அவன் மீது கோபத்தோடு வெறுப்பும் உருவாகிற்று. இந்த இருபது வருடங்களில், இப்படி, எவரும் அவளோடு நடந்ததில்லை; கதைத்தது கூட இல்லை. கலங்கிய கண்களை கோபமாகத் துடைத்துக்கொண்டே ஸ்கூட்டியில் ஏறி அமர, கைப்பேசி சிணுங்கியது.
மயூரன் தான். அழைப்பை ஏற்றாள்.
அவள் நிற்கும் இடம் சொல்லி, “அங்க நிண்டு என்ன செய்யிறீர்?” என்று கேட்டவனுக்கு, எப்படித் தெரியும் என்று யூகிக்க முடியாதா?
பதில் சொல்லவில்லை, இவள். அவனோ, விடாது படபடத்தான். தன்னை நம்பித்தான் விட்டுவிட்டுப் போனார்களாம்.
கடைசியில், பெரிய கடைக்குப் போக வெளிக்கிட்டனான் என்றதும், “பைரவி அதிலயே நில்லும், இந்தா ஐஞ்சு நிமிசமும் பிடிக்காது, அங்க நிப்பன்.” என்றவன், சில நிமிடங்களில் வந்து விட்டான்; தனியாக இல்லை, அவன் தங்கைகள் மற்றும் இன்னொரு இளம்பெண்ணோடும்.
“இவா நிலா.” மயூரனின் பெரிய தங்கை அந்தப் பிள்ளையை அறிமுகம் செய்தபடி வந்து, இவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“எங்க தனியா வெளிக்கிட்டாச்சு? சொல்லியிருக்க, நாங்களும் வந்திருப்பம் எல்லா?”அவள் அன்போடு கேட்க, திரண்ட கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு இலேசாகச் சிரித்தாள், பைரவி. பார்வை மட்டும் மயூரனை எரித்தது.
“அந்த ரவுடியோட எப்பிடி உமக்கு ஃபிரெண்ஷிப் வந்தது? லூசன், எளியவன்… அவனிட தங்கச்சிட கையப் பிடிச்சா வீடு பூந்து அடிப்பான். என்ர கையப் பிடிச்சு ஒருத்தன் இழுக்கிறான். அதுவும் அவன்ர பெயரைச் சொல்லி. தள்ளிப்போய் நிண்டு நக்கலாப் பாக்கிறான், நாய்! இனி அவனோட கதைக்கிறது எண்டா என்னோட கதைக்க வேணாம் மயூரன்!” என்றவளையும் நிலாவையும் தவிப்போடு பார்த்தார்கள், மயூரனும் சகோதரிகளும்.
“நீர் கனடாவில இருந்து கொண்டு எப்பிடி இப்பிடியெல்லாம் தமிழ் கதைக்கப் பழகினீர்?” சமாளித்து வேறு பக்கம் இழுக்க முயன்றாள்,பெரிய மைத்துனி.
“அதான்… கிழவிகள் போல!” சின்னவள் சீண்டினாள். நிலா கூட முறுவலோடு பார்த்தாள். பைரவிக்குச் சற்றே வெட்கமாகப் போயிற்று.
“சொறி!” நிலாவைப் பார்த்துச் சொன்னவள், “அவ்வளவு கோவம் வருது எனக்கு!”பற்களை நறும்பினாள்.
“எண்டைக்காவது அம்பிடாமலா போகப் போறான்? அப்ப இருக்குத் தம்பிக்கு!” என்றவளிடம், “போதும் பைரவி விடும். தேவையே இல்லாமல் அவரில கோவப்படுறீர். அவர்…” இவள் தங்குவதற்கு பாதுகாப்பான ஒரு இடம் எடுத்துக் கொடுத்தது யாராம்? சொல்ல முனைந்த மயூரன், விட்டுவிட்டான். ஆரூரனுக்கு இவள் குணம் நன்றாகவே தெரிந்திருக்கு. அதுதானே, தன்னை உள்ளே இழுக்காதே என்று சொல்லியிருந்தான்.
“இப்ப இதில நீர் நிக்கிறதயே ஆரூரன் அண்ணா தான் சொன்னவர், அவர் வந்து கதைச்சு இருந்தா, நீர் கோபப்பட்டுக் கத்திப் பெரிசா ஆக்கி இருப்பீர் எல்லா? அதான் பேசாமல் போனவர்.” சமாதானம் செய்வித்தான், மயூரன்.
“இப்பிடி அந்தாளுக்கு வக்காலத்து வாங்கிறது எண்டால் என்னோட இனிக் கதைக்க வேணாம்.” முறுக்கியவளை, மைத்துனிகளும் மைத்துனனுமாகச் சேர்ந்து சமாதானப்படுத்துவதை, சின்னச் சிரிப்போடு பார்த்து நின்றாள், நிலா. ஆரூரன் தன் தமையன் என்று தெரிய வந்தால், தன்னோடு முகமே கொடாள் என்று விளங்கியது. என்னவோ, அவளை மிகவும் பிடித்தும் போனது.
“வீட்டுக்க இருக்க விசரா இருக்கு எண்டு வெளிக்கிட்டனான்.” என்றவளை, “வாங்க டவுனுக்குப் போயிட்டு வருவம்.” தமையன் மோட்டாரில் தொத்திக்கொண்டே சொன்னாள், சின்ன மைத்துனி.
“இல்ல, முதல் போய் அந்த விசரிட ஹோட்டலுக்கு கல்லு எறிஞ்சிட்டு வாறன்.” மல்லுக்கு நின்றவளை இழுத்துக் கொண்டு சென்றார்கள்.
“கம்பஸ் தொடங்கிற வரை ஒரே ஊர் சுத்தல் தான் ஓகே?” நிலாவின் பின்னாலிருந்த பெரிய மைத்துனி சொல்ல, “ஆனா, நீர் எங்கயும் தனிய வெளிக்கிடுறது இல்ல.” கண்டிப்போடு சொன்னான், மயூரன்.
error: Alert: Content selection is disabled!!