ரோசிகஜனின் சுடரி 14- 2

சிறிது காலப் பழக்கம் தான்; உற்ற உறவாக உணர வைத்தவர்களும் அந்த இடமும் அப்படியே தலை கீழாகி, அந்நியமாக உணர்த்திற்று. விறுவிறுவென்று தன் பொருட்களை எடுத்துப் பைக்குள் அடைத்தவள், அடுத்த சில நிமிடங்களில் வெளியே வர, வாசலில் வைத்தே எதிர்கொண்டாள், நிலா.

“பைரவி என்ன இது?” என்று ஆரம்பித்தவளைத் தொடரவிடாது இடையிட்டாள், பைரவி. 

“நான் போயிட்டு வாறன்!” ஒதுங்கிக் கடந்து வெளியில் இறங்கியவளுள், சட்டென்று ஒரு எண்ணம்.

தன் கைப்பையைத் திறந்து, அதற்குள் இருந்த காசை எண்ணிப் பார்த்தாள்.

ஏழாயிரத்துச் சொச்சம் இருந்தது. சொச்சத்தை உள்ளே வைத்து விட்டு நிலாவைப் பார்த்தாள்.

 “இப்போதைக்கு இவ்வளவும் தான் காசா இருக்கு. என்னால… அங்க, காளான்களுக்கு ஏதாவது நட்டம் வந்திருந்தாலும்… இத உங்கட அண்ணாட்டக் குடுத்திருங்க. வாறன். எல்லாத்துக்கும் நன்றி! சொறி!” சிலையாக நின்றிருந்த நிலா கையில் திணித்துவிட்டு, விறுவிறுவென்று கேட் நோக்கி நடந்தவள் இதழ்கள் அழுகையில் துடித்தன. 

நிலாவுக்கோ, அவள் என்ன செய்கிறாள் என்றுணரவே சில கணங்களாயிற்று.

“இவாவிட சேட்டையப் பாருங்கவன்!” என்றபடி ஓடிப்போய், கேட்டைத் திறந்தவளை இழுத்து நிறுத்திய நிலா முறைத்தாள். 

“என்ன நினைச்சுக்கொண்டு இதைத் தந்தனீர்?” அவள் மறுக்க மறுக்க காசை அவள் கைகளில் திணித்தாள்.

“அண்ணா அப்பிடிக் கதைச்சது சரியெண்டு சொல்லேல்ல. அதுக்காக இப்படியா போவீர்? பேசாமல் வாரும் ஐசே! சூப் ஊத்தினதை எல்லாம் மறந்திட்டீர் என்ன?” உள்ளே இழுத்தாள்.

“பச் விடுங்க! அதையே சொல்லி சொல்லி நீங்க செருப்பால அடிச்சாலும் நான் வாங்கோணுமா? போதுமடா அப்பா, ஆளை விடுங்க! எங்கயாவது கண்டால் சந்தோசமாக் கதைக்கிறதையும் நிப்பாட்ட வச்சிராதேங்க!” என்றவள், நிலா பதில் சொல்ல முதல் வெளியேறியிருந்தாள்.

அவளைக் காக்க வைக்காது  ஓட்டோ ஒன்று வந்தது. நிறுத்திய வேகத்தில்,  மின்னலாக வந்து, கேட் தூணில் காசை வைத்துவிட்டு ஓட்டோவுக்குள் ஏறிக்கொண்டாள்,பைரவி.

“உங்கட அண்ணாட்டக் குடுங்கோ!”காற்றில் மிதந்து வந்தது வார்த்தைகள்.

“இந்த அண்ணாவ…” டொய்லட் நோக்கிச் சென்ற நிலாவுக்கு, உள்ளே, அவன் யாரோடோ கோபமாகக் கதைப்பது கேட்டது.

 

“கடவுளே!” ஓடி வந்து விட்டாள். 

மயூரனிடம், தானே சொல்லிவிடுவது தான் சரி என்ற எண்ணம், அவனுக்கு அழைக்கவும் வைத்திருந்தது.

அடுத்த கால் மணித்தியாலத்தில் தயாராகி வந்த ஆரூரன், கொஞ்ச முதல், சிடுசிடுத்துக் கோபப்பட்டவன் இவனா என்பது போல் வலு இலகுவாக இருந்தான்.

“அம்மா எங்க? தேத்தண்ணி போட்டாச்சா?” என்றபடி, பின்புறம் சென்று வேலைகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளிட்டவனிடம், “அம்மா சந்திக் கடைக்குப் போய்ட்டா. இடியப்பம் இருக்கு.” தமையன் முகம் பாராதே சொல்லிவிட்டு, தேநீரை நீட்டினாள், நிலா.

“சாப்பிட எல்லாம் நேரமில்ல. தேத்தண்ணி போதும். ஒரு ஆத்து ஆத்தித் தாறியா, அவசரமாப் போகோணும்.” என்றவனுக்குப் பதில் சொல்லாது திரும்பினாள், அவன் சகோதரி.

பெரிய சில்வர் கோப்பையை எடுத்து, சர் சர்ரென்று இழுத்து ஆத்தியதில் அவள் மனச் சுணக்கம் தெரிந்தது; அதை, அவன் கவனித்தால் அல்லவா? நுரை பொங்க பொங்க தேநீரை நீட்ட, வாங்கிக் கொண்டு நகர்ந்தான், ஆரூரன்.

தமையன் முதுகைத் தான் முறைக்க முடிந்தது, நிலாவால். பச்! திரும்பியவள், இடியப்பம், சம்பல் ஒரு பெட்டியிலும் சிறு போத்தல்களில் பருப்பும் சொதியுமாக எடுத்து, வயர் கூடை ஒன்றுக்குள் வைத்தாள். 

அதற்குள், வேக வேகமாக,  தேநீரைப் பருகி முடித்திருந்தான், ஆரூரன். “அப்ப வாறன்.” என்றபடி, கால்களைச் செருப்புகளுள் திணித்துக் கொண்டவன், தன் முன்னால் நீண்ட வயர்க்கூடையையும் அதை நீட்டிய சகோதரியையும் பார்த்தான். 

“இதெல்லாம் ஏன் நிலா?” கேட்டு முடிக்க முதல், “என்ன ஏன்? சாப்பிடத்தான்.” வெடுக்கென்று சொன்னவள், அவன் பார்வையில் கூர்மையைக் கொண்டு வந்திருந்தாள்.

“மத்தியானத்துக்கு ஏலுமெண்டா சாப்பிட வாங்க.” என்றவளுக்கு, “இண்டைக்கு அரைச்ச மீன் குழம்பா ஆன்ட்டி.” என்று கேட்ட, பைரவியின் நினைவில் முகம் சுருங்கிற்று. 

“ஆசையா மீன் குழம்பு கேட்டவா. தன்ர வீடு போல சந்தோசமா நிண்ட பிள்ளை…” தன்னையும் மீறிச் சொல்லிவிட்டு, விசுக்கென்று திரும்பி உள்ளே நகர்ந்தாள், நிலா.

அப்போதுதான் பைரவி நினைவில் வந்தாள். “எங்க உன்ர ஃபிரெண்ட காண இல்ல?” கேட்ட தமையனை, நேராகவே முறைத்தாள்.

“என்னத்துக்குக் கேக்கிறீங்க? இன்னும் ஏசவோ? ஏன் அண்ணா அப்பிடிச் செய்தீங்க? அம்மாட்டக் கேட்டுட்டுத் தான் அங்க போனவா. ‘என்னால  வீட்டில கூப்பிட்டு வச்சிருக்க முடியேல்ல. அவவிட அத்தை வீட்டுக்கும் போய்த் தங்கி நிக்கிறது பைரவிக்கு விருப்பம் இல்லை’ எண்ட மயூரன், இங்க வந்து நிக்கவும் அவ்வளவு சந்தோசப்பட்டவர். இப்ப என்ன  நினைப்பார்?” என்று கேட்கையில், அவள் விழிகள் நிறைந்திட்டு.

“அதோட…அதோட…” என்றவளுக்கு, முகம் இறுக நின்ற தமையனிடம் இதைச் சொல்வதா விடுவதா என்றிருந்தது.

“என்ன? சொல்ல வந்ததச் சொல்லு! இப்ப அவா எங்க?” வெடுசிடுவென்று கேட்டான், ஆரூரன்.

“எங்க எண்டா? ஏச்சுப் பேச்சுக் கேட்டுக்கொண்டு இங்க இருக்க, அவா என்ன ஒண்டுக்கும் வழியில்லாத அனாதையா? அவேயே இராயினம். போய்ட்டா. சும்மா போகேல்ல. இந்தாங்க!” கைக்குள் பொத்தி வைத்திருந்த காசை அவன் கரத்தில் திணித்தாள்.

தங்கையையும் காசையும் பார்த்தான், அவன். “என்ன இது?” விழிகள் கூர்மை ஏறக் கேட்டவனுக்குச் சுர்ரென்று தான் பதிலிறுத்தாள், அவன் தங்கை.

“காளான்ல கை வச்சதில ஏதாவது நட்டம் எண்டா இதை வச்சுக் கொள்ளட்டாம்.” அவன் முகம் கோபத்தில் கடினப்பட்டதைப் பார்த்தவள், வேறு சந்தர்ப்பம் என்றால் கதைத்தே இராள்.

“அண்டைக்கு  இங்க வரேக்க அவா அவ்வளவா நல்ல மனநிலையில  இருக்கேல்ல. முதல் முதல் வீட்டை விட்டு வந்து தங்கியிருக்கிறா. அதோட… அவேட அத்தை வீட்டில நடந்த பிரச்சினைகள். அது போதாதெண்டு, கம்பசில ஒரு பிரச்சினை. குழம்பிக்கொண்டு இருந்த பிள்ளைய, அதை இதைச் சொல்லிச் சமாதானம் செய்து வச்சிருந்தனான். மயூரனிட்டையும் சொல்ல வேண்டாம் எண்டு சொல்லிட்டா. பாவம், மதிட வயசு அண்ணா.” தமையனில் உள்ள வருத்தத்தை மறைக்க முடியவில்லை. குற்றம் சாட்டினாள்.

கேட்டவன் நெற்றி சுருங்கியது. “அங்க என்ன பிரச்சினை?” கூர்மையாகக் கேட்டான். 

“அது… அது ஒண்ணும் இல்லை. முதல் உங்களிட்டச் சொல்லி?” விசுக்கென்று திரும்பியவள், “நிலா!” என்ற அதட்டலில் நின்று விட்டாள்.

“அவவுக்கு என்ன பிரச்சனை எண்டு கேட்டனான்.” 

‘பெரிய அக்கறை’ மனதில் முணுமுணுத்தாலும் என்ன விசயமென்று சொல்லிவிட்டாள். அவளோ மதியோ, எதையுமே தமையனிடம் மறைப்பதில்லை. அதுவே, இதையும் சொல்ல வைத்திருந்தது. 

“அப்பவே நான் மயூரனிட்டச் சொன்னனான். அவனைப் பார்த்தாலே தெரியுது. நாடு விட்டு நாடு படிக்க வந்தவாவுக்கு அந்தளவுக்கு மனிசரப் படிக்கத் தெரியாதா? வாய் மட்டும் தான். உனக்கு ஒண்டு தெரியுமா? ரெண்டு பேரும் ஒண்டா, காலா காலமாப் பழகிற கணக்கில வந்திருந்து சூப் குடிச்சவே… அங்க நம்மட ஹோட்டலில். பிறகு, அவன் கேட்பான் தானே?” உறுமி விட்டு, விசுக்கென்று திரும்பி மோட்டார் சைக்கிளில் ஏறினான்.

“அண்ணா, மயூரனிட்ட சொல்ல வேணாம். பைரவி ஆரிட்டையும் சொல்ல வேணாம் எண்டவா.”

“ம்ம்ம்…” என்றவன் மோட்டார் சைக்கிள், வீதியில் சீறிச் சென்றது.

error: Alert: Content selection is disabled!!