இலங்கையின் கடல் எல்லைக்குள், தொகையாகக் கடத்தப்படுகிற போதைப்பொருள், அங்கிருந்து, வெவ்வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. போதைப்பொருள் விநியோக, இறுதி இலக்காக இலங்கை காணப்படாவிட்டாலும் அண்மைய ஆண்டுகளில், போதைப்பொருள் பாவனை இங்கும் அதிகரித்துப் போவது அச்சமூட்டுவதாக, மூழ்க முன் விழித்துக் கொள்ளென, எச்சரிக்கை செய்வதாகவுள்ளது. புள்ளி விபரங்களின் படி, இலங்கையில், போதைப் பொருட்களுக்கு அடிமையாக, 40 பேருக்கு ஒருவர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது!
கைப்பேசியைப் பார்த்தபடியே வந்த டினோசன் காதுகளில், விலையுயர்ந்த புத்தம் புது ஏர் பொட்!
“பை மா. நான் வர லேட்டாகும்.” என்றபடி, கடந்து செல்ல இருந்தவன் உள்ளுணர்வு அருட்டியதாக்கும்; பார்வையை நிமிர்த்தினான்; நொடி தாமதமின்றி முகம் இருண்டிட்டு; விசுக்கென்று பின்னால் நகர்ந்து மாடிப்படியில் ஏறப் பார்த்தான்.
யாரிடம்? ஒரே எட்டில் நெருங்கி, அவன் கழுத்துப் பக்கமாகக் கொத்தாகப் பற்றி நிறுத்தியிருந்தான், ஆரூரன்.
“உனக்கு என்ன தைரியம் இருந்தா?” இடக்கையால் அவன் வலக்கரத்தை நெரித்துப் பிடித்தான். “இந்தக் கையால தானே பிடிச்சு இழுத்தனி?” உக்கிரமான சீறல்!
“ப்ளீஸ் விடுங்கோ! ஆ…நோகுது! சொல்லுறன்… விடுங்கோ எண்டுறன்!” நவநாகரிக மோகம் கொண்டு, ‘டிஷான்’ என்று, தன்னை அடையாளப்படுத்தி, தலைவன் போல் நடப்பவனை, சிறு பொடிப்பயலைப் பயமுறுத்துவது போல் நடத்தினால்? மனதுள் சிலிர்த்த ‘டிஷானை’ அடக்கிவிட்டு, அடக்கமாகவே கதைத்தான், டினோசன்.
“நீ என்னடா சொல்லுறது? கதையளக்கப் போறியா என்ன? கேட்டுக் கொண்டு நிக்க, நான் என்ன, உன்னைப் போல ஓசிக் காசில திண்டிட்டு, கூத்தடிக்கிற ஆள் எண்டு நினைச்சியா?” அடித்து விடுவான் போன்ற உடல் மொழியோடு சீறினான், ஆரூரன்.
அதிர்வு விடுபட, தாமதியாது நெருங்கியிருந்தார், சுகுமார்; பைரவியின் தந்தை. ஆரூரனை அதட்டினார்.
ஆரூரன் பிடி இம்மியும் இளகவில்லை; பார்வை, சுகுமார் முகத்தில், வெகு கூர்மையாகத் தரித்து நின்றிட்டு.
சுகுமாருக்கும் படு கோபம். அவர் ஒரே தங்கை கலா; இது, அவள் குடும்பம்; வயதான தாய் தந்தையும் அவள் பராமரிப்பில் தான். அவர்களுக்குப் பார்த்துப் பாராது பணம் அனுப்பக் கூடிய நிலையில் அவர் வாழ்கிறார்; அனுப்புகிறார்; அவர்களும் வசதி வாய்ப்புகளோடு வாழ்கிறார்கள். இதில், மற்றவர்களுக்கு என்ன நேர்ந்ததாம்?
“கையை எடும் எண்டுறன், காதில விழேல்லையா? ஓசிக்காசு அது இது எண்டெல்லாம் கதையளக்க நீர் ஆர் ஐசே? எங்கட வீட்டுக்க வந்து நிண்டு கொண்டு, பெரியாக்கள் எண்டும் பாராமல் ஒருமையில கதைக்கிற நீர், மற்றவேக்குப் புத்தி புகட்ட வந்திட்டீர். விடும் அவன!” மருமகன் பின்கழுத்தில் பிடித்திருந்த ஆரூரன் கையைப் பிரித்தெடுக்கப் பார்த்தார்.
சேகருக்கு, ஆரூரன் பற்றி ஓரளவுக்குத் தெரியும். சும்மா நேரத்திலேயே தோற்றம், பார்வை, பேச்சு எதிலும் சிநேகமோ இலகுத்தன்மையோ இருப்பதில்லை. இப்போ, கோபம் வேற? அதுவே, அசைய விடாது பிடித்து வைத்திருந்தது. மகன், அப்படி யார் கையைப் பிடித்து விட்டான்? ‘இவனுக்குத் தங்கச்சிகள் இருக்கினமோ!’ என்றெல்லாம் குழம்பி நின்றவர், மைத்துனன் அதட்டலாகக் கதைக்க ஆரம்பித்ததுமே, குடுகுடுவென்று வந்து விட்டார்; தனியாள் இல்லையே!
“இங்காரும் ஆரூரன், இவ்வளவும் தான் உமக்கு மரியாதை. முதல், வெளில போம்!” அதட்டல் போட்டார்.
“எல்லாம் உங்கட அண்ணாட வேலையாத் தான் இருக்கும் அண்ணி. அவேயோட நாங்க சோலி சுரட்டுக்குப் போறமா என்ன? கேடுகெட்ட எளிய மனிசரா இருக்கினம்! தடிப்புப் பிடிச்ச நல்ல சாதிச் சனத்திட குணம் இதானோ!” சந்தர்ப்பம் கிடைத்தது என்று வெறுப்பை உமிழ்ந்தார், கலா.
பாமினி முகம் கன்றிச் சிறுத்திட்டு. கண்கள் கலங்க கணவரைப் பார்த்தார். கொதி நிலையில் நின்ற சுகுமார் காதில், தங்கை குரல் விழுந்தால் தானே!
“ஆரோ எவனோ வந்து உங்கட மகன் கழுத்தைப் பிடிச்சா, என்ர அம்மா என்ன செய்தவா அத்த? மாமா ஆக்களப் பத்தித் தேவேல்லாமல் கதைக்காதீங்கோ சரியோ! எங்களுக்கு அவேயும் உங்களைப் போலத் தான்!” அதட்டினாள், பைரவி.
கதை, வேறு திசைமாறிப் போகிறதே; பற்களை நறும்பியபடி பார்த்தான், ஆரூரன்.
“ஹலோ ஹலோ நிப்பாட்டுங்க!” சொல்லிக்கொண்டே ஒரே தள்ளு; விழப் பார்த்து அருகில் இருந்த மென்னிருக்கையைப் பிடித்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார், சுகுமார். ரவியோ, எதிர்பாரா தள்ளலில் சென்று சுவரில் மோதி நின்றார்.
மறுநொடியே பளார்! அறை வாங்கிய வேகத்தில் அந்த இடமே சுழல, “விசயம் தெரியாம வந்து அடிக்காதேயும் சரியோ!” உக்கிரமாகக் கத்தி விட்டான், டிஷான். எவ்வளவு துணிவு இருந்தால் அவன் மீது கை வைப்பான்? அதுவும் நட்ட நடு வீட்டில் வைத்து!
“ஐயோ… இதென்ன கொடுமையாக் கிடக்கு! என்ர பிள்ளையில நாங்களே கை வச்சு அறியோம். கண்டவனும் வந்து…” கலா குழறிக் கொண்டு வர, “ஒருத்தர் கிட்ட வந்தாலும் இவன் உயிரோட இரான்!” வலு அமைதியாகச் சொன்ன ஆரூரன் நின்ற நிலை, நடத்தி விடுவான் போலவே இருந்தது.
பைரவி தாயோடு ஒன்றினாள்; ஆனானப்பட்ட அவளுக்கே பயம் காட்டுறானே!
“இங்க பாருங்க, நான் நிலாவ விரும்பிறன். அதும் ரெண்டு வருசமா. விசயம் தெரியாமல் இப்பிடி வந்து மிருகம் போல நடாவாதீங்க! பிறகு…” எச்சரிக்கை கலந்து அதட்டிய டினுசனுக்கு, இப்போ என்ன சொல்வாய் என்றிருந்தது. தங்கள் வசதி நிலைக்கு ஏணி வைத்தாலும் எட்டாத மனுசருக்கு இது கசக்குமா என்ன? ‘எல்லாம் அவளால. ஒருத்தன் பின்னால வந்தோன்ன திமிரடி உனக்கு!’ மனதுள் நிலாவைப் பந்தாடியபடி நிமிர்ந்து விடுபட முனைந்தான்.
“ஆரை விரும்பிற டினோ? என்ர தம்பி! இதென்ன புதுக்கூத்து!” பதறிப்போனார், கலா. அவர் ஆசையில் மண்ணையள்ளிப் போட்டிருவான் போலவே! பைரவி தான் அவர் மருமகள். பழம் நழுவிப் பாலில் விழுந்த கணக்கில், அடுத்த ஐந்து ஆறு வருடங்கள் இங்கே தான் இருக்கப் போகிறாள். கனடாவில் மருத்துவம் கிடைக்கவில்லை என்றால் என்ன? வெளிநாட்டினருக்கு என்று, யாழ் பல்கலைக்கழகம் ஒதுக்கிய இருக்கைகளில் ஒன்று அவள் வசமாகியிருந்தது.