‘போர்’ என்பதும் மிகப் பெரும் போதையே ! உரிமைப்போரில் பலமாக அடிபட்டு, உயிர்கள் உடைமைகள் தொலைத்து, நைந்து, பீனிக்ஸ் பறவையாக, மெல்ல மெல்ல எழ முயலும் வடகிழக்கு மக்கள், வேறொரு வகையிலான போர்க் கொதிநிலைக்கு, முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்படையான உண்மை! வடகிழக்கில், அதிகாரத்தில் உள்ளவர்களாலேயே, திட்டமிடப்பட்ட போதைப்பொருள் பாவனை தூண்டப்படுவதாக, வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. சில பல வேளைகளில், நிரூபணம் தேவையற்ற உண்மைகள், பல்லிழித்தபடி!
மாலை மங்கிக் கொண்டிருந்த வேளை…
இனி, ஐந்தாறு வருடங்கள், யாழ்ப்பாண வாசம் என்று, குதூகலமாக வந்திருந்தாள், பைரவி. வழமையாகவே, இரு வருடங்களுக்கு ஒரு முறை சரி இலங்கை வந்திடுவார்கள். அவள் மட்டில் இதுவும் ஒரு வீடே! அப்பம்மா, தாத்தா மட்டுமில்லாமல், அத்தை கலாவும் அவள் மீது அன்பும் கரிசனையும் கொண்டவர்; மாமா, டினோசன், மைத்துனிகள் எல்லோரும் நட்பாகப் பழகுவார்கள்; பிறகென்ன!
மருத்துவராக வர வேண்டும் என்ற ஆசை, பெற்றோர் மெல்ல மெல்ல ஊட்டியது தான்; என்றாலும், அவள் கனவும் அதேதான்; கனடாவிலேயே கிடைத்து விட வேண்டுமென்று எவ்வளவு முயன்றும் கிடைக்கவில்லை; அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்று போவது பற்றியும் ஆலோசித்துவிட்டு, இலங்கையைத் தெரிவு செய்திருந்தார்கள்.
அப்படி, வலு புளுகோடு வந்திருந்தவளுக்கு, இன்று, வீட்டில் நடந்த குழப்பம் முற்று முழுதான புது விசயம். அதன் பின்னர், அந்த வீட்டின் இயல்பு நிலை தலைகீழாக மாறியிருந்தது.
இன்று காலை நடந்த அத்தனைக்கும் பின்னால் இருப்பவர்,பாமினியின் தமையன் என்று திட்டவட்டமாகச் சொன்னார், கலா.
“இன்னும் எத்தின காலத்துக்கு வன்மம் பாராட்டப் போகினம்? சரி, என்ர அண்ணா, அவேக்கு விருப்பமில்லாமல் தான் உங்களக் கலியாணம் செய்து வெளிநாடு கூட்டிக்கொண்டு போனவர். இண்டைக்கு, நீங்க என்ன அழிஞ்சு, நடுத்தெருவிலா நிக்கிறீங்க? சீரும் சிறப்புமா வாழுறீங்க எல்லா? பிறகும் எங்களோட வந்து நோண்டிக்கொண்டு நிக்கினம். அவேட உறவுக்கு எண்டு இங்க ஆருமே ஆசைப்பட்டு நிக்கேல்ல அண்ணி! சோலி சுரட்டே வேணாம் எண்டு தான் நாங்க இருக்கிறம். ஆனா, உங்கட அண்ணன் அப்பிடி இல்ல!” இதுதான் சாட்டென்று, தமையன் மனைவியை ஏசியபடியே திரிந்தார்.
பாமினியும் பொறுத்து பொறுத்துப் பார்த்தார். எத்தனைக்காம்?
“இதில எங்கட அண்ணா எங்க வந்தவர்? டினோசன், அந்தப் பிள்ளேட கையைப் பிடிச்சதால தானே, அந்தப் பெடியன் வந்து கத்திப் பிரச்சினை பண்ணினவர். நம்மட வீட்டுப் பிள்ளைகளுக்கு, ஆரும் அப்பிடிச் செய்திருந்தா சும்மா இருப்பமே?” கேட்டு விட்டார்.
“அதுக்கு எண்டு? வீடு பூந்து அடிப்பானா அந்தக் கொசப்பன். அது ஆர் குடுத்த துணிவு? பொலீசுக்கு ஃபோன போடு எண்டு எவ்வளவு எகத்தாளமாச் சொன்னவன். அங்க, தங்களுக்கு வேண்டிய உங்கட அண்ணா, பெரியாளா இருக்கிறார் எண்ட துணிவு தானே அண்ணி? அவன்ட குடும்பமும் உங்கட வீட்டாக்களும் ஒண்டுக்கு மண்டா பிளங்கிறவே எண்டு உங்களுக்குத் தெரியாதா? உன்ர உறவே வேணாம் எண்ட மனுசரோட, எங்கட அண்ணாவ மதிக்காத சனத்தோட, நீங்க ரகசியமாப் பேச்சுவார்த்த வைச்சிருக்கிறது எல்லாம், இங்க, எங்களுக்குத் தெரியாது எண்டு மட்டும் நினையாதீங்க சரியோ!” மூச்சு வாங்க, தொண்டை விடைக்கக் கத்தினார், கலா.
பாமினி, கண் கலங்கினார். ஆரூரன் குடும்பம், தமையன் வீட்டோடு நல்ல வாரப்பாடு தான், ஒரே அயலும் கூட. கிட்டத்தட்ட இரண்டு வயது வரை, அவரோடு ஒட்டிக்கொண்டிருந்த குழந்தை ஆரூரனா, இன்று வந்து நின்று அந்தக் கொதி கொதித்தான்?அவருக்கே அதிர்வு தான். இலங்கை வந்து போகையில் அவன் வீடு செல்லும் ஆசையிருந்தாலும் பக்கத்தில் தமையன் வீடே! அதுவே செல்ல விடுவதில்லை. நல்ல நாள் பெருநாள் என்றால், அவன் தாயோடு தொலைபேசியில் உரையாடுவதோடு சரி.
தன் திருமணத்தால் பிரிந்த குடும்பத்தோடு போக்குவரத்து இல்லை என்றாலும் அண்மைய ஆண்டுகளில் அண்ணி, பிள்ளைகள் என்று பாமினி தொடர்பு வைத்திருப்பதை, எப்படி, அவர் தமையன் தடுக்கவில்லையோ, அதுபோலவே, சுகுமாரும் தடை போடவில்லை. உண்மையில், கண்டும் காணாதவாறே இருந்து விடுவார்கள்.
இலங்கை வரும் போதெல்லாம், பொது இடங்களில் சந்தித்துக் கொள்வார்கள்; தொலைபேசியிலும் கதைத்துக் கொள்வார்கள். அதை, ஏதோ களவாகக் கதைப்பது போல் கலா சொல்ல, சுறுசுறுவென்று கோபம் வந்தாலும், “பேசாமல் இரும் பாமினி. மகனுக்கு இப்படி எண்ட கவலையில கதைக்கிறா கலா.” என்ற கணவனுக்காக அமைதி காத்தார், பாமினி. அவர் முகம் கன்ற வாய் திறவாது நிற்பது பார்த்த பைரவியால் அமைதியாக இருக்க முடியவில்லை; கலாவோடு மல்லுக்கு நின்றாள்.
நடப்பவற்றைப் பார்த்த பாமினி மனத்தில் புதுக் கவலை; மகளை, இங்கு விட்டுவிட்டுப் போவது பற்றிய அச்சம் முளைவிடத் தொடங்கியிருந்தது. சுகுமாருக்கும் அதே யோசனை தான். எதுவோ ஒன்று மனதுள் முரண்டியது.
“எல்லாம் இந்த எளிய அயலட்டையிண்ட கண்ணூறு! நடந்தது நடந்திட்டு இனி விடுங்க. பொலீசில சொல்லுறது எண்டா சொல்லி நடவடிக்கை எடுக்கலாம். ஆம்பளைகள் யோசிச்சுச் செய்வினம், நீ கொஞ்ச நேரம் சும்மா இரு பிள்ள!” கலாவை அதட்டினார், அவர் அம்மா.
“இண்டு முழுநாளும் அறைக்க அடைஞ்சு கிடக்கிறான், உன்ர மகன். முதல், அவனப் போய்ப் பார் கலா. சாப்பிடக் குடு!” அதட்டினார் தகப்பன்.