போதைப்பொருட்களுக்கான தேவையை அதிகரித்து, வழங்கலை மட்டுப்படுத்துகையில், அதன் விலை அதிகரிப்பது மட்டுமின்றி, பல விதமான விநியோக முறைகளைத் திறப்பதற்கான வழிகளைத் தேட வலிந்து தள்ளப்படுகிறார்கள்!
மறுநாள் விடியல், பைரவி குடும்பத்துக்கு, ஒரு நாளுமில்லாக் கனமானதாக இருந்தது. திடமாக நின்று, சுகுமாருக்குச் சமனாக முடிவுகளை எடுத்துச் செயற்படுபவர், பாமினி; அவரே நிலைகுலைந்து போனார்.
‘என் முழுத் திடமும் நீங்க தான்’ என்று, தாய் எப்போதாவது தகப்பனிடம் சொல்லக் கேட்டிருக்கிறாள், பைரவி; அது, எவ்வளவு உண்மை என்று இப்போது தான் உணர்ந்தாள்; அந்தளவுக்கு, அவள் தேற்றும் நிலையிலிருந்தார், பாமினி.
யாழ்ப்பாணத்திலுள்ள, பிரபல தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார், சுகுமார்; மாரடைப்பாம். மைல்ட் அட்டாக். யோசியாதீங்க என்று விட்டால் சரியா? வாலிப வயதில், என்று, பாமினியைக் காதலிக்க ஆரம்பித்தாரோ, அன்றிலிருந்து, நிமிடமும் வீணாக்காது முன்னேறி, வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்த மனிதன்; இன்றோ, விழிகளோரம் நீர் கசிய வைத்தியசாலையில்!
உள்ளமும் உடலும் நடுங்கிச் சோர, செய்வதறியாது நின்றார், பாமினி. யாரிடம் சென்று ஆறுதல் தேடவியலும்? தலைமுழுகி விட்டோம் என்ற தன் பக்க உற்றவர்களை அணுகவே முடியாது; பிரயோசனம் இல்லை. கனடா சென்ற பின், சில வருட இடைவெளி விட்டு, இந்த இருபத்தியிரண்டு வருடங்களாக, இலங்கைக்கு வந்து போய்க்கொண்டு தானே இருக்கிறார். அப்போதெல்லாம் மதித்து வரவேற்கவில்லையே! இப்போது, கணவர் இப்படி இயலாமல் இருக்கையில், அவர்களை நாட மனமும் இடம் கொடுக்கவில்லை.
சொந்தத் தங்கை, அம்மா, அப்பாவே தன் உலகம் என்று சொல்லும் சுகுமார் வீட்டினரோ, வைத்தியசாலைப் பக்கமே வரவில்லை.
குடும்பத்தை அழித்து, மண்ணோடு மண்ணாக்க வந்தவள் நீ என்று, குற்றம் சாட்டிவிட்ட கலா வீட்டில் கணம் கூட இருக்க முடியவில்லை. மகளை அங்கு விடவும் விருப்பம் இல்லை. அந்நிலையிலும், கணவர் உடல்நிலை தேறி, பிரயாணம் செய்யலாம் என்ற மறுநொடி, கனடா செல்வது; மகளையும் அழைத்துப் போய் விட வேண்டும் என்ற, உறுதியான முடிவுக்கு வந்து விட்டிருந்தார், பாமினி.
அந்த வைத்தியசாலை வெளி வராண்டாவில் இருந்த வாங்கிலில் தான், அன்றைய இரவு கழிந்திருந்தது. விடிந்ததும் வந்து பார்த்த மருத்துவர், நம்பிக்கையைப் பலப்படுத்தினார். இனிக் கவனமாக இருக்க வேண்டும் என்றவர், ஒரு நாள் கவனிப்பில் இருக்கட்டும், நாளைக்குப் போகலாம் என்று, அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.
மனைவி, மகளைப் பார்த்த சுகுமார் கலங்கிப் போனார். அவர்கள் சொன்ன ஆறுதல் தேறுதல்களை செவிமடுத்தார் போலவும் தெரியவில்லை. அவர் பார்வை மகளில் தான். இப்படியொரு எண்ணம், கலாவுக்கு இருப்பது அவர்களுக்குத் தெரியும். பிள்ளைகள் விரும்ப வேண்டுமே! அதுவும், நெருங்கிய உறவுக்குள் திருமணம் என்று சொன்னாலே, உருண்டு பிரண்டு சிரிப்பார்கள்! சித்தி, பெரியம்மா முறையில் வருபவர்கள் சகோதரங்கள்; மாமா, அத்தை வழியில் என்றால் மச்சான் மச்சாள். அவர்களைக் கட்டலாம் என்று, டிசைன் டிசைனாக சொன்னாலும் விளக்கம் தந்து, அது பிழை என்று சொல்வதிலேயே நிற்பார்களே!
“பைரவி கேட்டால் சிரிக்கிறாள்.” என்று, கலாவிடம் சொல்லியிருக்கிறார்; மகள் விருப்பமே தமக்கு முக்கியம் என்றும் தான். சரி, சும்மா என்றாலும் பரவாயில்லை; இப்போ, மருமகன் குணம் தெரிந்த பின்னும் அந்தக் கதையெடுத்தால்?
முதன் முதலாக, தங்கையில் கோபத்தோடு வெறுப்பும் வந்திட்டு. அதுவும் தூண்டித் துருவி, அவர்கள், தன்னைப் பார்க்க வரவில்லை என்றதும் முற்றாக மனமுடைந்து போனார், சுகுமார்.
அப்படி வெட்டிவிடக் கூடிய உறவா அவர்? அவர்களுக்காவே வாழ்ந்தாரே! நடந்துவிட்ட விடயங்களுக்கும் அவருக்கும் என்னதான் தொடர்பாம்? இப்படியெல்லாம் எண்ணினாலும் டினோசன் பற்றி அறியத் துடித்தார்; மனைவி, மகளே அதைப்பற்றிக் கதைக்கவில்லை; தானாகக் கேட்கவும் தயக்கமாக இருந்தது.
கலங்கிய விழிகளோடு மகள் தலை வருடினார், சுகுமார்.
“ஒண்டையும் யோசிக்காதீங்க குமார். என்ன எண்டாலும் கனடா போய்ப் பாப்பம்.” பாமினி சொல்ல, அதையே தான் மகளும் சொன்னாள்.
“இந்த வருசம் போனாலும் பரவாயில்லை, வேற எந்த நாட்டிலாவது போய்ப் படிக்கலாம். இங்க வேணாம் பைரவி!”
தாய், திடுமென்று இப்படிச் சொன்னதைத் தான் பைரவி சற்றுமே எதிர்பார்க்கவில்லை. தகப்பனின் மௌனம், அவர் கருத்தும் அதுவே என்றது. அவள், அதில் நின்று வாதாடவில்லை; எதுவுமே சொல்லவில்லை.
தாதி, இரு தடவைகள் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போனார்.
“ரெஸ்ட் எடுங்க குமார். நாங்களும் போய்க் குளிச்சு ஃபிரெஷ் ஆகிற்று ஒன்று ரெண்டு மணித்தியாலத்தில வந்திருவம்.” என்று பாமினி நகர, “பாமினி, டினோக்கு என்ன ஆயிற்று? விட்டிட்டினமா? பெரிசா ஏதாவது?” கேட்டுவிட்டார். மனைவி முகம் கன்றிக் கறுப்பதைப் பார்த்தவர் வயிறு கலங்கியது.
“விட்டிட்டினம் அப்பா. வோர்ன் பண்ணிப்போட்டு. நீங்க யோசியாமல் இருங்க.” என்றுவிட்டு, தாயைக் கைப்பிடியில் வெளியில் அழைத்து வந்து விட்டாள், பைரவி.
“இப்ப அப்பாவுக்கு ஒண்ணும் தெரிய வேணாம் அம்மா. அவர் செய்த வேலைக்குப் பிடிச்சிட்டு சும்மா விடுறாங்களா? முதல், அவே என்ன ஏதெண்டு நமக்கும் சொல்லேல்ல எல்லா? என்ன எண்டு சொல்லுறது?” என்ற பைரவி, “ஆருக்காக என்ர படிப்ப விட வேணும்? வந்தனான் இங்க தான் படிப்பன்.” என்று ஆரம்பித்தாள்.
தொடர்ந்து, தாயோடு மல்லுக் கட்டியது தான் மிச்சம்; சொன்னால் சொன்னதுதான் என்று தன் பிடியிலேயே நின்றார், பாமினி.