Skip to content
மரத்தூள்க் குவியல் மீது, அளவாக தவிடு, கடலை மா, சுண்ணாம்புத் தூள் என, ஒன்று ஒன்றாகத் தூவி, இரும்பு விறாண்டியால் நன்றாகக் கலந்து விட்டான். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து, ஈர மணல் பதத்துக்குக் குழைத்து எடுத்துக்கொண்டிருந்தான்.
உள்ளே வந்த வேகத்துக்கு, பொலித்தீன் பைகள், வாய்க்குப் போட அகன்ற பிளாஸ்டிக் வளையம் மற்றும் பஞ்சுப் பெட்டி என்பவற்றை எடுத்து வைத்துவிட்டு, சம்மணமிட்டு அமர்ந்து கொண்டான், ஆரூரன்.
“ராசன் எங்க?”
“அறுவடைக் கொட்டிலில அண்ணா.” என்ற கணேசன், “தேத்தண்ணி போடச் சொல்லவோ அண்ணா?” கேட்டான்.
“முதல் கொஞ்ச வேலை முடியட்டும்.” என்றவன். பொலித்தீன் பையை எடுத்து இரு கைகளாலும் தேய்த்து விரித்து ஒரு ஊது, உருளை வடிவில் உப்பிவிட்ட பைக்குள், கணேசன் குழைத்த மண்ணை அள்ளிப் போட்டு நிரப்பினான்.
மறுபுறமாகத் தானும் அமர்ந்து, அதே வேலையைத் தொடர்ந்தான், கணேசன்.
பரபரவென்று நிறைந்தன பாக்குகள்; கிட்டத்தட்ட ஐம்பது நிறைந்த பிறகு, கட்டுவது போல் கூட்டிப் பிடித்து பிளாஸ்டிக் வலயம் போட்டு நன்றாக இறுக்கிவிட்டு, கூட்டிப் பிடித்திருந்ததை அப்படியே வெளிப்புறமாக மடித்து விட்டார்கள். நடுவில் வட்ட வடிவத் துவாரம்; அதனுள் பஞ்சு அடைத்து வேறாக வைத்தார்கள்.
அடுத்த ஒரு மணித்தியாலத்தில் அவ்விடமெல்லாம் பஞ்சடைத்த பைகள் வரிசை கட்டி நின்றன. வெளியில் ராசன் தலை தெரிந்தது. அறுவடை செய்த காளான் பெட்டிகளைக் கொண்டு வந்து, விறாந்தையில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, சற்றே தள்ளியிருந்த, மூன்று பெரிய தகரங்கள் வைக்கப்பட்டிருந்த அடுப்புகளை விறகிட்டு மூட்டிவிட்டு, அதனுள் இந்தப் பைகளை எடுத்து அடுக்கினான், அவன். இடையில், பொதுவாகக் கதைத்தும் கொண்டார்கள். என்றாலும், தம் அண்ணன் ஏதோ சரியில்லை என்று விளங்கி, இருவரும் அடக்கியே வாசித்தார்கள்.
அந்தப் பைகள் ஆவியில் அவியத் தொடங்கின. மூன்று மணித்தியாலம் சரி அவித்து, அப்படியே விட்டுவிட்டு, நீரின் சூடு அடங்க வெளியில் எடுத்து விடுவார்கள். இரவு முழுவதும் நன்றாக ஆறவிட்டு, மறுநாள், அந்தப் பைகளுள் காளான் விதைகள் இடுவார்கள்.
“தேத்தண்ணி போடுறன் அண்ணா.” பின்புறத் தகரக் கொட்டிலை நோக்கிச் சென்றான், கணேசன்.
தன்னைச் சுத்தப்படுத்திவிட்டு, கைகளுக்குப் பொலித்தீன் உறையை அணிந்துகொண்டு அமர்ந்த ராசன், அறுவடை செய்த காளான்களின் தண்டை வெட்டிவிட்டு, விரிந்த காளான் இதழ்களை சேகரிக்கத் தொடங்கினான். அவற்றை, சூப்பர் மார்க்கெட், தனியார் கடைகள் மற்றும் வீடுகளுக்கான விநியோகங்களுக்கு உரிய, இவர்கள் பெயர் போட்ட பைகளில் நிறுத்து அடைக்கும் வேலைக்கு வந்திருந்தான், ஆரூரன்.
ஏழு நாட்கள் வரை வைத்துப் பாவிக்கக் கூடிய இந்தக் காளான் பக்கற்றுகளுக்கு, இப்போது, மக்களிடையே நல்ல வரவேற்பிருந்தது.
பெரிய பெட்டிகளில் அடுக்கப்பட்டவை அவன் வீட்டுக்குப் போகும்; அதிலிருந்து தான் சூப் ஸ்டோலுக்கான கட்லெட் கறி தயாரிப்பார்கள்; ஒவ்வொரு ஸ்டோலுக்குமானபஜ்ஜிக்கான காளான்கள் பெட்டிகளில் அடைபடும்; சூப்புக்கும் மற்றய பொருட்களுடன் சேர்த்து அடைப்பார்கள். இது, அவன் வீட்டில் வைத்து நடக்கும் வேலை.
ஆரூரன் கரங்கள் பரபரவென்று வேலை செய்தன; விழிகள், முன்னால் ஆவி போக எரியும் ட்ரம்களில் பட்டுத் திரும்பின. அந்தச் சூடு, காலையில் தன்னைநோக்கி எத்துப்பட்ட, ‘சூப்’பை நினைவுறுத்தி வேடிக்கை பார்த்தால்?
அவன் சின்னத் தங்கை வயதிருக்கும்; எப்படியும் இவனைவிட எட்டு ஒன்பது வயதுகள் வித்தியாசம் இருக்கும். பற்களை நறும்பினான், ஆரூரன். அவள் செய்கை மீது பலமான கோபம் வந்தது தான். அதையும் கடந்து, ஏதோவொருவிதத் தடங்கல் அவனைப் போட்டுப் படுத்தியது. அதை, உதறித் தள்ள முயன்றவன் கரங்கள் படுவேகமாக வேலை செய்தன. இருந்த போதும், மயூரன் சொன்னவை, டினோ பற்றி என, அவன் புத்தி எங்கெங்கோ சென்று கொண்டிருந்தது. இந்த விடயத்தில், தன் பெரிய தங்கை நிலா, உள்ளே வந்திருக்கவே வேண்டாம் என்றதும் தான். எதற்கும் இனி, அவளைத் தனியாக எங்கும் விடக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டான்.
“அண்ணா தேத்தண்ணி, ராசன் வாரும்!” கணேசன் மீண்டும் அமரவும் அந்தத் தோட்ட முன் வாயில் கதவில், யாரோ தட்டி இடிக்கவும் சரியாக இருந்தது.
“ஆர் எண்டு நான் பாக்கிறன் அண்ணா!” ராசன் ஓடினான்.
அதே வேகத்தில் திரும்பி வந்தவன், “ உங்களப் பாக்கத்தான் அண்ணா. ரெண்டு பேர் வந்திருக்கினம். உள்ளுக்கு வரச் சொல்ல, உங்கள வரட்டாம்.” என்றவன், “ஆக்களப் பாத்தா ரவுடிகள் போல இருக்கண்ணா!” என்றான், பயத்தோடு.
சட்டென்று எழுந்து விட்டான், ஆரூரன். “நீங்க வேலைகளைச் செய்யுங்க, வாறன்.” விறுவிறுவென்று நடந்தான்.
அடுத்த ஒரு நிமிடம் முடியவில்லை, “அண்ணா, சொல்லுங்கண்ணா!” என்றபடி, தம் முன் வந்து நின்றவனை, அற்பப் புழுவைப் பார்ப்பது போல் பார்த்தான், வந்திருந்த ஒருவன்; மற்றவன் பார்வையில், எச்சரிக்கையும் ஆராய்ச்சியும் கலந்துகட்டிக் கிடந்தன.
“பொடிப்பயல்!” முணுமுணுத்தான், ஒருத்தன்.
“அதான்… இவனைப் போய்!” ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவன் செருமலோடு மீசையை முறுக்கி விட்டான்.
“டேய் என்ன பம்முற? நீ என்ன பெரிய ஹீரோவா? டினோவ பொலிசில பிடிச்சுக் குடுத்தது நீதானே? வீடு பூந்து அடிச்சும் இருக்கிற. என்ன துணிவு இருந்தா இதெல்லாம் செய்திருப்ப?” ஒருவன் அடிக்குரலில் சீற, மற்றவன் இடையிட்டான்.
“அது… பொலிஸ்காரனிட மகன் நண்பன் எல்லா! அந்தத் தைரியம் ஆக்கும்! இதில வச்சு என்ன கத வேண்டிக் கிடக்கு? எங்க கை வச்சனி எண்டு தெரிய வேணாமா தம்பி? வா, உன்னோட கதைக்கோணும்.” காவியேறிப்போன பற்கள் தெரிய, நக்கல் சிரிப்போடு எகத்தாளமாகச் சொன்னான்.
இப்போ, ஆரூரன் முகத்தில் இலேசான பதற்றம் தெரிந்தது!
“என்ன அண்ணா ஏதேதோ சொல்லுறீங்க? இப்பக் கொஞ்சம் முதல் தான், டினோட சொந்தக்காரர் சொல்லித்தான், அவர பொலிஸ் பிடிச்சதே எனக்குத் தெரியும்.” என்றவன், அதே மூச்சில் தொடர்ந்தான்.
“இப்ப உங்களுக்கும் அக்கா தங்கச்சி இருப்பினம் எல்லா அண்ணா? அவையள ஆராவது சேட்டை விட்டு, கையைப் பிடிச்சு இழுத்தா, என்ன அண்ணா செய்வீங்க? அடிச்சுத் துவைச்சு ஒரு வழி பண்ணி இருப்பீங்க எல்லா? நான் உங்களப் போல பலசாலி இல்ல அண்ணா. ஆனாலும் சரியான கோவம் வந்தது. அதான், நேர வீட்ட போய், தாய் தகப்பனிட்டக் கதைச்சனான். டினோ பொய் சொன்னான்…சொன்னார். அவர் கதைச்ச விதத்தில…சத்தியமா அண்ணா, நீங்க நம்போணும். என்னையும் அறியாமல் தான் கை ஓங்கிட்டன். அவே என்னப் பொலிசில பிடிச்சுக் குடுக்கப்போகினம் எண்டு நானே பயந்து கொண்டு இருந்தன்.” நிறுத்தி, மூச்சை ஆழ இழுத்து விட்டான், ஆரூரன்.
“அப்பா இல்லாம தங்கச்சிமார், அம்மா எண்டு பாருங்க அண்ணா.” தன்னைக் காட்டியவன், “உழைச்சுப் பாடுபட்டு நல்லா வந்திர வேணும் எண்ட ஒண்ட மட்டும் நினைச்சுக்கொண்டு இருக்கிறவன் நான் அண்ணா.
நான் ஒண்ணுமே செய்யேல்ல. அண்ணா நீங்க நம்போணும்.” அவன் சொன்ன விதத்தில், பெரிதாக எதை எதையோ எல்லாம் நினைத்து வந்தவர்களுக்குச் சப்பென்று ஆகிட்டு.
அவன் பற்றி நன்றாகத் தூண்டித் துருவி விசாரித்து விட்டுத்தான் வந்தார்கள். காளானைக் கட்டிப்பிடித்துக்கொண்டு திரிபவன் என்றுதான் விடை கிடைத்திருந்தது. ‘இருந்தாலும்…’ என்ற ஒற்றைச் சொல், இங்கு வரை இழுத்து வந்திருந்தது.
“சரி சரி, உன்ர குடும்பக் கதை கேக்க எங்களுக்கு நேரமில்ல, நிப்பாட்டு! இனி, இப்பிடித் தேவையில்லாத வேலைகளில தலைகுடுத்து இன்னொரு முறை எங்கட பார்வைக்கு வந்தியோ… பிறகு தயை தாட்சண்யம் பார்க்க மாட்டம் சரியோ!”ஒருவன் சொல்ல, “உன்ர டவுன் சூப் கடையில ரெகுலரா சாப்பிடுற ஆக்கள் நாங்க. அந்த ஒண்டுக்காக.” அவன் தோளில் ஒரு தட்டு? படீரென்று ஒரு அடி போட்டுவிட்டுத் திரும்பி நடந்தவர்கள், “என்னதான் சொல்லு, இவனைக் கவனிக்க ஆள் போடு!” கதைத்தபடியே காரில் ஏறிப் பறந்தார்கள்.
அது, ஆரூரன் எலிக் காதுகளில் விழுந்தது!
error: Alert: Content selection is disabled!!