ரோசிகஜனின் சுடரி 9

இளைய சமுதாயத்தின் அழிவென்பது, நாட்டின் வருங்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்றளவில் பெரும் தலையிடியாக, பேரதிர்வாகவிருந்த, போதைப்பொருள்ப் பழக்கமும் கடத்தல், விநியோகமும் நெருக்கடிக்குள்ளான இந்நேரம், பொலிஸ் போதைப்பொருள்த் தடுப்புப் பணியகம், கடற்படை மற்றும் அரச உளவுச் சேவை என்பன இணைந்து, போதைப்பொருள்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவு செய்தன.  

அதன்படி, சர்வதேசப் போதைப்பொருள்க் கடத்தல் வலையமைப்பின் நடவடிக்கைகள், இலங்கைக்குப் போதைப்பொருள்க் கடத்தப்படும்  பாதைகள் உள்ளிட்டவை தொடர்பில், செய்மதித் தகவல்கள் மற்றும் ஏனைய உளவுச்சேவைகளின் தகவல்களை, ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் ஊடாகப் பகிர்ந்து கொள்வதற்கான  ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

டினோசன் குடும்பத்தினர், எங்கெல்லாமோ அலைந்தார்கள்; யார் யாரையோ போய்ப் பார்த்தார்கள்; பணம், எவ்வளவு என்றாலும் செலவழிக்கவும் தயாராக இருந்தார்கள்; ஆனால், எதற்கும் பயன் இருக்கவில்லை; டினுசன் விடயத்தில், இவர்களால் ஒரு குண்டூசியையும் பிடுங்க முடியவில்லை. 

“இந்த விசயத்தில, நான் இங்க இருந்து செய்யிறதுக்கு ஒண்ணுமே இல்ல எண்டு வெட்ட வெளிச்சமாத் தெரியுது. அதால வெளிக்கிடுறம்.” என்ற, தமையன் முகம் பாராது அழுதபடியே இருந்தார், கலா. பத்து நாட்களுள் ஒருவர் இப்படியாக முடியுமா என்றளவில் பாதியாகியிருந்தார்.

ஆசையாகப் பெற்று வளர்த்த ஒற்றை ஆண் பிள்ளை; அவனுக்கு என்ன இல்லையாம்? இப்போ பார்த்தால் ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை என்றெல்லாம் சொல்கையில் பெற்றவர், உற்றவர் இதயங்களைக் கூர் வாள் கொண்டு அறுப்பது போலிருந்தது. இன்னமும் கூட, அவன், அப்படியெல்லாம் செய்திருப்பான் என்பதை நம்பவே முடியவில்லையே! அதுவும் கலா, தன் மகன், யார் பழியையோ சுமக்கிறான் என்று வலுவாக நம்பினார்.

எது எப்படியோ, இதுவரை, இறுமாப்போடு வாழ்ந்த குடும்பம் ஒன்று நொந்து, தொய்ந்து போயிற்று; அயலவர் பார்வையில் கூனிக் குறுகிப் போயிற்று. 

“வெளிநாட்டுக் காசு எண்டு சொல்லி சொல்லி, என்ன ஆட்டம் போட்டுதுகள்! இந்த வசதி வாய்ப்பு எல்லாம் எப்பிடி வந்தது எண்டு  இப்பத் தானே தெரியுது! மாமன்காரன் கனடாவில் இந்தத் தொழில் தானோ என்னவோ!” என்றெல்லாம், இவர்கள் பின்னால் கதைக்கவும் தொடங்கியிருந்தனர். இன்னமும் இரு இளம் பிள்ளைகள் வேறு இருக்கிறார்களே!

“படிப்பும் வேணாம் ஒண்ணும் வேணாம்.” என்று, அவர்கள் இருவரும் அறைக்குள் முடங்கிக் கிடந்தார்கள். 

மகனைக் கண்ணீரோடு வழியனுப்பி வைத்தார்கள், சுகுமார் பெற்றோர்.

“ஒண்டையும் யோசியாமல் படிக்கிற அலுவலப் பாருங்க. மாமா இருக்கிறன்.” என்று, மருமகள்களுக்கு உறுதி கொடுத்துவிட்டு, ஹோட்டல் அறை சென்ற சுகுமார், அங்கு, இன்னமும் மகளும் மனைவியும் தர்க்கத்தில் இருப்பதைப் பார்த்துவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டார்.

பாமினி போலவே, அவருக்கும் மகளை இங்கு விட்டுச் செல்லவதில் துளியும் விருப்பமில்லை. அவள் கேட்டால் தானே? 

“கடைசிவரை ஏலாது அம்மா. ஆர் என்ன சொன்னாலும் நான் படிச்சி முடிச்சிட்டுத் தான் வருவன். டினோ எதிலயாவது மாட்டுப்பட்டா? அதுக்கு என்ர கனவை விட வேணுமோ! நீங்க யோசியாமல் போய்ட்டு வாங்கோ! ப்ளீஸ் அம்மா!” என்ன சொன்னாலும் தாய் அசையாதிருக்க, தகப்பனிடம் திரும்பினாள், பைரவி.

“அப்பா, நீங்க சொல்லுங்கோவன். இப்பத்தான் இருக்கிறதுக்கும் நல்ல பாதுகாப்பான இடம் கிடைச்சிருக்கே. நான் அங்க இங்க எண்டு சுத்த(அலைய)மாட்டன். சத்தியமா!” வழக்கமில்லாது விழிகள் கலங்கித் தளும்ப, தந்தை அருகில் சென்றமர்ந்து கொண்டாள்.

அப்போது தான் மயூரனும் வந்து சேர்ந்தான். 

“இன்னுமா இந்தக் கதை முடிவுக்கு வரேல்ல?” என்றபடி, பாமினியருகில் சென்றமர்ந்தவன், “ஒண்டுக்கும் யோசியாமல் போயிட்டு வாங்கோ அத்த! உங்கட மகள் என்ர பொறுப்பு! ஒரு ஆறு மாதங்கள் அங்க இருக்கட்டும். பிறகு, எங்கட வீட்டுக்கு வந்திருவா அத்தை. என்னில நம்பிக்கை இல்லையா?” அவன் சொல்லி முடிக்க முதல் குறுக்கிட்டது, பைரவி குரல்.

“அது என்ன தேவைக்கு? அம்மா விருப்பம் இல்லாமல் கலியாணம் செய்த ஒண்டுக்காக, இத்தின காலம் கதைக்காமல் இருக்கிறார், உங்கட அப்பா. அம்மா எவ்வளவு சந்தோசமா, நல்லா இருக்கிறா எண்டு தெரிஞ்ச பிறகும் அந்தளவுக்கு…” மூக்கு விடைக்க ஆரம்பித்துவிட்டு, தகப்பன் கண்டிப்போடு பார்க்கவும், “பச்! பின்ன என்னப்பா?” என்றபடி நிறுத்தி விட்டாள். 

மயூரன் முகம் கன்றிவிட்டது. அவளுக்காக, அவன் அத்தைக்காக என, தகப்பனோடு சண்டை போட்டுமிருந்தான்; அதுவும் இவர்களுக்குத் தெரியும்; வருத்தத்தோடு மைத்துனியைப் பார்த்தான்.

அதை அவளும் உணர்ந்தாள், தான். “சரி அதைத்தான் விடுங்க. இப்ப என்ன சொன்னவர்? போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கண் வச்சிருக்கிற வீட்டுப் பிள்ளை. எனக்கு இன்னும் ஓய்வுக்கு ஆறு மாதங்கள் தான் இருக்கு. வீணா நானும் சிக்கலில இழுபறிப்பட விருப்பம் இல்லை எண்டவர் எல்லா? அது அப்பிடியே இருக்கட்டும் மயூரன். எனக்கு, என்னைப் பார்த்துக் கொள்ளத் தெரியும். தங்கிறதுக்கு இடம் எடுத்துத் தந்ததே பெரிய உதவி!” 

கோபமாகவே தான் சொல்லியிருந்தாள். இதுவரை, கலா அத்தை குடும்பம், நேரடியாகக் கதைத்துப் பேசாவிட்டாலும் மைத்துனன், மைத்துனிமார் பழக மறுப்புச் சொல்லாத மாமா குடும்பம் என்று, மனதுள் இருந்த அன்பான பிடிப்பு ஆட்டம் கண்டிருந்தது. இவர்கள் இல்லாமலும் இங்கு, என்னால் மகிழ்வோடு இருக்க முடியும் என்ற வகையில் முறுக்கிக் கொண்டது, அந்த இள உள்ளம்.

“அப்பிடியெல்லாம் உன்னத் தனிய இங்க விட்டுட்டு, அங்க நாங்க நிம்மதியில்லாமல் இருக்கேலாது, பைரவி. முடிவாச் சொல்லுறன் வெளிக்கிடு! இந்த வருசம் போனாலும் பரவாயில்லை, அடுத்த வருசம், வேற எங்கயாவது போய் உன்ர விருப்பப்படி மெடிசினையே படி!” கெஞ்சலாகச் சொன்னார், பாமினி.

“அதுதான் குஞ்சு!” என்றார், தகப்பன்.

அவள், அதற்கு மேலும் கதைக்கவில்லை; பிடிவாதத்தால் இறுகிவிட்ட உதடுகள் அழுந்த மூடியிருக்க, ‘மாட்டேன்’ என்பதாகத் தலை மட்டும் அசைத்தாள்.

“யோசியாதீங்க அத்தை. மாமா நீங்களும் தான். நான் இல்லையா? பைரவி என்ர பொறுப்பு!” பெரிய மனிதனாகக் கதைத்த மயூரன், ஒருவழியாக அவர்களை வழிக்குக் கொண்டு வந்திருந்தான்.

அப்பவும், “ஏலாது எண்டு எப்ப உனக்குப் பட்டாலும் உடனே வெளிக்கிட்டிர வேணும்.” என்றதற்கு, அவள் உறுதியாகச் சம்மதித்த பின்னரே அமைதியானார்கள்.

யாழ்ப்பாண மருத்துவ பீடத்திற்கு, நேர் முன் ஒழுங்கைக்குள் இருந்த, கலைப்பிரிவு விரிவுரையாளர் வீடொன்றில், பைரவிக்குத் தங்குமிடம் ஒழுங்கு செய்திருந்தான், மயூரன். அவர்களுக்கு இரண்டு மகன்கள்; பேராதனியா, மொரட்டுவ என்று படிக்கிறார்களாம். வீட்டுத் தலைவி பாடசாலை அதிபர். 

அவர்களோடு கதைத்த மட்டில், சுகுமார் தம்பதிக்கு நிம்மதி. “எங்கட பிள்ளை போல பார்த்துக் கொள்ளுவம். யோசியாமல் போயிட்டு வாங்கோ!” என்றிருந்தார்கள். சாப்பாடும் அவர்களோடு என்று விட்டார்கள்.

“பல்கலைக்கழகம், வீடு, படிப்பு எண்டு இருந்திரோணும்.” மகளுக்குச் சொல்லிவிட்டு, ஓரளவுக்கு என்றாலும் மனத் திருப்தியோடு தான் கொழும்புக்குப் புறப்பட்டிருந்தனர், சுகுமார் தம்பதி.

 

error: Alert: Content selection is disabled!!