ரோசி கஜனின் மீரா 1 – 1

1

பளீரென்ற நீலவண்ணத்தில் பரந்து விரிந்து கிடந்தாள், வான்மகள்! அவள் அழகில் சொக்கி நின்ற வெண்பஞ்சுத் திட்டுக்களோ, தம் நகர்வை மறந்தவையாக ஆங்காங்கே தம்முள் உறவாடிக்கிடந்தன.

வான்மகளோடு போட்டியிடும் வகையில், சற்றே அடர் நீலத்தில் மின்னி மின்னி மிளிர்ந்தாள், கடலழகி! அதுமட்டுமா? மெல்லிய சலசலப்போடு எழுந்த அலைகளும், பொங்கிப்பூரித்த வெண்நுரையின் தழுவலுமாகப் பார்ப்போரைச் சுண்டியிழுத்து வசியமும் செய்தாள்.

‘இந்த வான்மகளுக்கோ, கடழலகிக்கோ நான் சற்றும் குறைந்தவளில்லை!’ என்றாள், நிலமங்கை! கோடையின் இறுகிய பிடிக்குள் அகப்பட்டிருந்தாலும் பசுமை அழகோடு மிளிரவும் செய்தாளவள்.

சற்றே தூர, மேடான பகுதி வழியாக வந்து கொண்டிருந்த காரினுள்ளிருந்து பார்க்கையில், அந்நெய்தல் நிலமும், அதற்குக் கம்பீரமும் அழகும் சேர்க்கும் வகையில் அமைந்திருந்த ‘டோவர் துறைமுகமும்’ அவ்வளவு இரம்மியமாகக் காட்சி தந்தன.

துறைமுகத்தை நோக்கி, நெளிந்து வளைந்து செல்லும் பாதையில் விசுக்விசுக்கென்று விரைந்த வாகனங்களோடு கலந்து விரைந்த வண்ணமிருந்தன, அவ்விரு கார்களும்.

முன்னே சென்ற காரை இலாவகமாக ஒட்டிக்கொண்டிருந்தார் கார்த்திகேயன். அவர் பார்வையோ, அடிக்கடி, ரிவ்யூ மிரரால் பின்னால் வந்துகொண்டிருந்த காரைத் தொட்டு வந்தது.

கணவர் பார்வையைப் படித்த மதுராவின் முகத்தில் முறுவல்!

அவ்வளவு இலேசில் மகள்களை யாரோடுமே விட்டுவிட விரும்பாத அவர் குணமறிந்து வந்த முறுவல் அது.

சிறுகுழந்தைகளாக இருந்தபோது ஏற்பட்ட பழக்கம் அது. இதோ, பெரியவர்களாகித் திருமணமாகவும் போகிறது. தந்தையும் சரி, மகள்களுமே ஒருவர் ஒருவரைப் பிரிய விரும்பமாட்டார்கள்.

அப்படியிருக்க, இன்று மீராவின் வற்புறுத்தலில், மூன்று பெண்பிள்ளைகளுமாக அந்தக் காரில் ஏறிக்கொண்டார்கள்.

“உங்கட மகள்கள் ஒண்டும் பபாக்கள் (பச்சைக் குழந்தைகள்) இல்ல கார்த்தி. அதோட, சதீசிட காரில தானே வருகீனம்! இப்பிடி இருக்கிறவர் எப்பிடி அவையள அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவீங்க?”

முறுவலோடு சீண்டிய மனைவியைப் பொய்யாக முறைத்த கார்த்திகேயன், “மகள்கள், அவ்வளவு தூரத்தில வாழப் போகீனமே எண்டு உமக்குக் கவலையே இல்ல பாரும்!” கேலியாகப் பதிலளித்தபடி பாதையில் கவனம் பதித்தார்.

“இப்பச் சரி விளங்குதாம்மா? என்ன எண்டாலும், அப்பாவுக்கு அக்காக்களில தான் அன்பு கூட எண்டு நான் சொல்லுறது, சரியா இல்லையா சொல்லுங்கோ பார்ப்பம்?”

கிடைத்த சந்தர்ப்பத்தில் ராகம் இழுத்தவன், கார்த்திகேயன் மதுராவின் செல்வப்புதல்வன் ஆதவன்.

“டோய்! இதுதானே வேணாம் எண்டு சொல்லுறது!” பின்புறம் திரும்பி மகனை முறைத்தார், கார்த்திகேயன்.

“எனக்கு நீங்க ஐஞ்சு பேருமே ஒண்டுதான்!” தொடர்ந்து சொன்னவர், எப்போதுமே, நினைவுகளால் கூட தங்கை நித்தியின் மகள், மகனை வேறுபடுத்திப் பார்த்ததில்லை.

“அதோட, பிள்ளைகள் மட்டும் விரும்பியிராட்டி என்ன பாடுபட்டும் இங்கயே இருக்கிறது மாதிரி மாப்பிள்ள பார்த்திருப்பன். ம்ம்…இதை இப்பக் கதைச்சு என்ன பயன்?” என்றவர் குரலில், சில மாதங்களில் திருமணமாகிச் செல்லப்போகும் மகள்களின் பிரிவுத்துயர், ஏகத்துக்கும்!

“நான் இப்பப் பார்த்தது…” என்றபடி, மீண்டும் ரிவ்யூ மிரரில் பார்த்துவிட்டு, “உங்கட அக்காக்களும் அந்தக் குட்டிச்சாத்தானுமாக என்ன செய்யீனம் எண்டு கொஞ்சம் பின்னால் திரும்பிப் பாருங்ககோவன்!” என்றார்.

சொன்னவிதம் கடிந்து கொள்வது போல் இருந்தாலும், மகள்கள் ஆரணி, ஆரபி மற்றும் தங்கை மகள் மீரா மீதான அன்பே மிகையாகக் கலந்திருந்தது.

அவர் சொன்னதும், ஆதவனும் நித்தியின் மகன் நிரூஜனும் திரும்பிப் பார்த்தார்கள்.

பக்கவாட்டால் சரிந்து, தானும் திரும்பிப் பார்த்தார், மதுரா.

“இங்க நம்மளோட வந்தா இந்தக் ஆட்டங்களுக்கு விடமாட்டம் எண்டுதானே அங்க போனவே. காலமேல இருந்து சுத்தி சுத்தி எவ்வளவு ஃபோட்டோ எடுத்தும் அவையளுக்குப் போதாதாம். அதுவும் மீரா…ஹா…ஹா…கேட்கவே தேவையில்ல!” என, முறுவலித்தபடி இலகுவாகச் சொன்ன மதுராவின் முகம் கணத்தில் சுணங்கீற்று.

“மீராவைப் பாருங்கப்பா, தலைய வெளியில விட்டு செல்ஃபி எடுக்கிறாள்!”

அவர் குரலிலிருந்த அதிருப்திக்கு நேர் மாறாக, ஆதித்தனும் நிரூஜனும் தம் தமக்கைமாரின் காலாட்டாவை முறுவலோடு இரசித்துப் பார்க்க, தன்னையும் மீறி முறுவலில் விரிந்தன, கார்த்திகேயன் உதடுகள்.

கணவரின் சிரிப்பில், மதுரா முகத்தில் எரிச்சல்!

“அவே என்ன செய்தாலும் உங்களுக்குச் சிரிப்பும் பெருமையும் தானே? இந்தச் செல்லம் தான் எல்லாத்துக்கும் காரணம்.” கணவரிடம் முணுமுணுத்துவிட்டு மீண்டும் திரும்பியவர்,

“அங்க பாருங்க, பக்கத்தில போற கார்க்காரன் முறைச்சுக்கொண்டு போறான்பா!” என்றபடி, கைபேசியில், பின் காரில் வரும் மைத்துனி நித்தியை அழைக்க முயன்றார்.

“பச்! சும்மா இரும் ராது; இந்தா வந்து சேர்ந்திட்டம்.”

மனைவியின் கரத்திலிருந்த கைபேசியைப் பறித்து, அழைப்பைத் துண்டித்துவிட்டு முன்னால் வைத்த கார்த்திகேயன், மனைவியின் முறைப்பைச் சிறு கண்ணடிப்போடு வாங்கிக் கொண்டார்.

“என்ர மகள்கள் எது செய்தாலும் வெளிப்படையாச் செய்வீனம் ராதும்மா! உங்கட மகன்கள் போல அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக இருந்திட்டுப் பின்னால வேற மாதிரி…” அவர் சொல்லி முடிக்க முதலே, “அப்ப்ப்பா!” தகப்பன் அமர்ந்திருந்த இருக்கையில் இடித்தான், ஆதவன்.

“மாமா! இது சரியில்ல சொல்லிப்போட்டன்.” செல்ல மிரட்டல் விட்டான், நிரூஜன்.

“இப்பக் கொஞ்ச முதல், ‘ஐஞ்சு பேருமே ஒரே மாதிரி’ எண்டவர் கதைக்கிற கதையைப் பாத்தீங்களா?” தன் பங்குக்கு, முறைத்தார், மதுரா.

“அது இல்ல ராதும்மா… சும்மா…வாய்தவறி வந்திட்டு. இனிமேல் பட்டு இப்பிடிச் சொன்னால் ஏன் எண்டு கேளும்.”

மனைவியிடம் கெஞ்சிய கார்த்திகேயனை, பின்புறமிருந்த ஆதவனும் நிரூஜனும் முறுவலோடு பார்த்தார்கள்.

“மாமா போதும்…போதும். உங்கட ரொமான்ச தனியா இருக்கேக்க வச்சிக்கொள்ளுங்க; இங்க சின்னப்பிள்ளைகள் இருக்கிறம்.” கேலி செய்தான், நிரூஜன்.

“இதிலென்னடா மருமகனே ரொமான்ஸ் கிடக்கு? கண்ணைத் திறந்து நல்லாப் பார் ராசா, உன்ர மாமி கண்ணாலயே என்னைச் சுட்டுப் போட்டிருவா! இந்த வடிவில நீங்க வேற!” என்று சோகராகம் பாடியபடி, கடவுச்சீட்டுப் பரிசீலிக்கும் இடத்தில் வந்து காரை நிறுத்தினார், கார்த்திகேயன்.

பின்னால் வரும் காரிலுள்ளவர்களின் கடவுச்சீட்டுகளும் இவரிடமே இருந்ததில், அதனைச் சொல்லி அனைத்துக் கடவுச்சீட்டுகளையும் கொடுத்துச் சரிபார்த்துவிட்டு நகர, பின்னால் வந்த சதீஷும், தனக்கான ஃபெர்ரி டோக்கனை வாங்கிக்கொண்டு நகர்ந்து, கார்த்திகேயனுக்குப் பின்னால் வந்து நிறுத்தினார்.

கார் நின்றதும், “ஃபெர்ரிக்கு இன்னும் எவ்வளவு நேரமிருக்கு மாமா?” கேட்டபடி, தன்புறக் கதவைத் திறந்து இறங்கினாள், ஆரணி.

“இன்னும் ஒரு மணித்தியாலத்துக்கு மேலயே இருக்கு என்னப்பா?” என்றபடி இறங்கிய மீரா, அவளைத் தொடர்ந்து இறங்கிய ஆரபியையும், காரின் பின்புறத்தால் வந்த ஆரணியையும் வளைத்துப் பிடித்தபடி செல்ஃபி சிலதுகளைக் கிளிக்கினாள்.

“கொஞ்சம் தள்ளி இப்பிடி நிண்டா…” என்றபடி, அவர்கள் காருக்கருகில் நிறுத்தியிருந்த காரின் ஓட்டுனர் பக்கக்கதவோடு சாய்ந்து நின்று மற்ற இருவருக்கும் இடம் கொடுத்தாள்.

“அங்க பாருங்க, நாம இப்பப் போயிட்டு வந்த கஸ்டல் தெரிய எடுக்கலாம்.” என்றபடி, துறைமுகத்தின் பின்னால் கம்பீரமாக நின்ற ‘கீ டு இங்கிலண்ட்’(key to England) என வரலாற்றில் அழைக்கப்படும் ‘டோவர் கஸ்டல்’ ஐயும் (Dover Castel) சேர்த்துப் புகைப்படங்களை எடுத்தாள்.

“ஆதவன், நிரூஜன் நீங்களும் ஓடி வாங்கோடா!”

இளையவர்களையும் அழைத்து, மாறி மாறி நின்று புகைப்படங்களை எடுத்தவர்களைக் கடந்து சென்ற சதீஷின் முணுமுணுப்பு, கடற்கரைக்காற்றில் சலிப்போடுகலந்ததுதான் மிச்சம்.

error: Alert: Content selection is disabled!!