10
“பீட்டருக்கும் ஒரு ஹை சொல்லீட்டுப் போறனே!”
அவன் வீட்டிலிருந்து வெளியேறி, மாடியால் இறங்கிக் கொண்டிருக்கையில் சொன்னாள், மீரா.
“தாத்தா இன்னும் வந்திருக்க மாட்டார் எண்டு நினைக்கிறன். எதுக்கும் ஒருதரம் போய்ப் பார்!” என்றவன், “இப்பிடி, பின்பக்கத்தாலயே போகலாம்.” ரெஸ்ட்டோரண்ட் பக்கமாக நடக்க, “அப்ப விடு, எனக்கு உன்ர கடையில சிலதுகள் வாங்கவும் வேணும்.” அவன் கடைப்பக்கமாகத் திரும்பினாள், இவள்.
“சரி, வா!” சேர்ந்து நடந்தவன், விறுவிறுவென்று சென்று முன் வாயிலருகில் இருந்த பிளாஸ்டிக் கூடையொன்றை எடுத்து வந்து இவள் கையில் கொடுத்து, “என்ன தேவையோ எடுத்துக் கொண்டு வா, நான் முன்னுக்கு நிற்கிறன்.” என்றுவிட்டுச் செல்ல, அசையாது தரித்து நின்றவளின் பார்வை அவனையே தொடர்ந்தது.
அவன் கண்ணிலிருந்து மறைந்த பிறகே தனக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினாள், அவள்.
தனக்கும் ஆரணி, ஆரபிக்குமாக, தாம் அன்றாடம் உபயோகிக்கும் ஃபேஸ், பொடி(body) கீரிம், ஷாம்பு என்று எடுத்தவள், அழகுசாதனப்பொருட்கள் இருந்த இடத்தில் சற்றே நிதானித்துச் சிலதுகளை எடுத்துக் கொண்டாள்.
அப்படியே, பார்வையில் பட்ட அழகான ஹெயர் பாண்டில் ஆரணி, ஆரபிக்கும் தனக்குமாக எடுத்துக்கொண்டு வந்தவளிடமிருந்து, “இவ்வளவும் தானா?” பாஸ்கட்டை வாங்க கை நீட்டியபடி வந்தான், ஜோரிக்.
“ம்ம்…இவ்வளவும் தான், எப்பவும் அல்மேராவில தான் வாங்குவம். இண்டைக்கு, முதல் முதல் உன்ர கடைக்கு வந்ததால வாங்கி இருக்கிறன்.” சிறுமுறுவலோடு சொன்னவள், “பரவாயில்ல ஜோரிக், நானே கொண்டு வாறன்.” என்று நடக்க, அவளது இடக்கரம் பற்றி நிறுத்தினான், அவன்.
“என்ர கடைக்கு முதல் முதல் வந்திருக்கிற, தா நானே பில் போட்டுத் தாறன்.”
“ம்ம்…சரி! ஆனால், நான் தான் காசு குடுப்பன். இல்லையோ எனக்கு ஒண்டும் வேணாம், நீயே வச்சுக் கொள்!” என்று அவள் சொல்ல, “ஒகே…ஒகே..” சிரித்தபடி சென்றவன், வரிசையில் நின்றவர்களை முந்திச் செல்ல முனைகையில், “பரவாயில்ல ஜோரிக், வரிசையில நிற்கிறன்.” என்றாள், மீரா.
“அதுவும் சரிதான்!” தானும் அருகில் நின்று கொண்டான், அவன்.
பில் போட்டுக்கொண்டிருந்த பெண்கள்தான் சற்றே நெளிந்தார்கள்.
‘நீங்க உங்கட வேலையைப் பாருங்க!’ சைகை காட்டியவன், பொதுவாக அவள் படிப்புப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கையில் அவர்கள் முறை வந்திருக்க, பொருட்கள் அடங்கிய கூடையை அங்கிருந்த மேடையில் வைத்துவிட்டு, அதனுள் இருந்தவற்றை எடுத்து வெளியில் வைக்க வைக்க, பில் போட்டாள், அப்பெண்.
இவள் தன் வங்கி அட்டையோடு ஆயத்தமாக நிற்க, அவனோ, தன் பேர்சில் இருந்து அட்டையை எடுத்தான்.
“ஜோரிக்! என்ன நீ! வேணாம். இந்தா நான்…” என்றவளை இடக்கையால் தடுத்துவிட்டுத் தானே பணத்தைச் செலுத்தி, “பாக்கில் போட்டுத் தா!” என்று பொருட்களை வாங்கிக்கொண்டு, “வா…” முன்வாயிலை நோக்கி நடக்க, ஒருகணம் நின்றவள், “பச்!” சலித்தப்படி பின்னால் சென்றாள்.
‘ஏனடா இங்க இதுகளை வாங்கினம்!’ என்ற அவஸ்தையும் சேர்ந்து கொண்டது.
வெளியில் சென்று நின்றவன் பார்வை அவள் முகத்தை ஆராய்ந்தது. உள்ளத்தை அளவிட முனைந்தது போல!
“இப்பக் கொஞ்சம் முதல் வரை ஃப்ரெண்ட் ஃப்ரெண்ட் எண்டு எத்தின தரம் சொன்னனீ. முதல் முதல் ஃப்ரெண்ட்டின்ட கடைக்கு வந்தா காசு குடுத்துத்தான் வாங்குவியா? நான் சந்தோசமா வாங்கித் தாறதா நினைச்சுக் கொள்ளன்! அதோட, கடைக்கணக்கில எல்லாம் வாங்கேல்ல மீரா. என்ர காசில வாங்கினன்.” என்றவன், “என்ன எண்டாலும்…” மறுப்பாகத் தொடங்கியவளைக் கையமர்த்தினான்.
“இல்ல, நீ என்ன எனக்கு வாங்கித் தாறது எண்டு நினைச்சா, அடுத்த முறை சந்திக்கேக்க இதுகளுக்கான காசைத் தாவன்! அதும் இல்லையெண்டா…இந்தா பில், இப்பவே தா!” ஒருவிதமான பிடிவாதமான குரலில் சொன்னான் .
சட்டென்று அவனைப் பார்த்தவள், “இதிலொண்டுக்கும் குறைச்சல் இல்ல.” முணுமுணுத்தாள், தமிழில்.
என்ன என்பதாகப் பார்த்தவனிடம், “ஆரணி, ஆரபி கலியாணத்துக்கு மட்டும் வராமல் இருந்து பார்…அப்ப இருக்கு!” ஆட்காட்டி விரலால் கவனம் காட்ட, ‘அப்படியா?’ என்பதாக ஒற்றைப் புருவம் ஏறியிறங்க இலேசாகத்தான் முறுவலித்தான்.
அதுவே அவனுக்கு அவ்வளவு கம்பீரமும் அழகும் தருவதாக எண்ணிக் கொண்டது,இவள் உள்ளம்.
“அப்ப… வர மாட்டியா என்ன?” எவ்வளவுதான் அவன் சொன்னாலும் ஏனோ நம்பிக்கை வரவில்லை.
“அதுதான் வாறன் எண்டனே! பிறகும் உனக்கேன் இவ்வளவு சந்தேகம்? வருவனென்று சொன்னால் கட்டாயம் வருவன் மீரா.” என்றவன், “உன்ர கார் எங்க நிற்குது?” என்றபடி, அங்கு நின்ற கார்களை ஆராய்ந்தான்.
“ஆரபி…என்ர மாமாட ரெண்டாவது மகள், இரட்டையர்களில சில நிமிடங்கள் பிந்திப் பிறந்து ரெண்டாம் இடம் பிடிச்சவள், அவளிட காரைத்தான் இப்ப வச்சிருக்கிறன். அந்தா நிக்குது.” பாதையின் மறுபுறம் காட்டியவளோடு சேர்ந்து நடந்தான்.
அவள் காரைத் திறந்ததும் பின் புறக்கதவைத் திறந்து கையிலிருந்த பொருட்களடங்கிய பாக்கை வைத்துவிட்டு, “கவனமாப் போய்ட்டு வா!” என்றவனின் கரம் பற்றிக் குலுக்கி விடைபெற்றவள், காரை இயக்கிவிட்டு தன்னையே பார்த்து நின்றவனை, “ஜோரிக்!” அழைத்து, ‘இங்க வாவன்.’ தலையசைப்பால் அழைத்தாள்.
“என்ன?” கரமிரண்டையும் அவள் புறக்கண்ணாடியில் பதித்து நின்றபடி குனிந்தவனிடம், “கட்டாயமா கலியாணத்துக்கு வருவ தானே?” மிகுந்த எதிர்பார்ப்பு அவள் முகத்தில்.
‘வராமல் விட்டிருவானோ!’ என, நம்பிக்கை வராது கேட்டவள் தலையில் மெல்லத் தட்டினான், அவன்.
“எத்தினை தடவைகள் சொல்லியாச்சு? வருவன் எண்டு சொன்னால் கட்டாயம் வருவன் மீரா. பை. கவனமாப் போய்ட்டு வா!” சொல்லிவிட்டுத் தள்ளி நின்று, அவள் கார் சென்று மறையும் வரை பார்த்திருந்துவிட்டு பாதையைக் கடந்து தன் கடைக்குள் செல்ல முயன்றவனை, “ஜோரிக்!” அழைத்து நிறுத்தினார், பீட்டர்.
“அட! வந்திட்டிங்களா தாத்தா? மீரா உங்களிட்ட வர வேணும் எண்டாள். வந்திருக்க மாட்டீங்க எண்டு நான் தான் சொன்னன். அதுதான் அப்பிடியே போயிட்டாள்.” என்றபடி வந்த பேரனை ஆராய்ந்தபடி பொதுவாக அளவளாவிய பீட்டர், “என்னவாம் மீரா?” கடைசியில் கேட்டும் விட்டார்.
“அவளிட மச்சாள்மாரின்ட கலியாணத்திற்குக் கட்டாயம் வர வேணுமாம், அழைப்பிதழ் தர வந்தாள்.” என்றவன் பார்வை, அவரில் பட்டுத் தவிப்போடு விலகியது.
“ம்ம்…ஹெலனிடமும் நீ கல்யாணத்திற்கு வருவியா எண்டு கேட்டாள் போல! நீதான் வரமாட்டன் எண்டு எங்களைப் போகச் சொன்னியே! அத ஹெலன் சொல்ல, உன்ர ஃபோன் நம்பர் கேட்டவளாம்.” என்றவர், அதன் பிறகு அவளைப் பற்றிக் கதைக்கவில்லை.
சிறிது நேரம் நின்று ரெஸ்ட்டோரண்ட் பற்றிக் கதைத்துவிட்டு பீட்டர் சென்றதும், விறுவிறுவென்று தன் அலுவலக அறையில் சென்றமர்ந்தவன் மனமோ, நீண்ட நாட்களுக்குப் பின் நிலையற்றுத் தவித்துக் கிடந்தது.
இத்தவிப்பு ஒன்றும் இன்று நேற்று உருவானதும் இல்லைத்தான்.
என்று மீரா என்பவளைக் கண்டானோ, மீண்டும் மீண்டும் அவளைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் உண்டானதோ, அன்றிலிருந்து உள்ளது எனலாம்.
அவளின் சிறுபிள்ளைத்தனமாக செய்கைகளில், நிறையவே முகம் சுளித்தான்; எரிச்சலும் கொண்டான் தான்.
“ரெஸ்ட்டோரன்டின்ட அமைதி குலையுது. வேலை செய்யிற ஆட்களிட கவனம் சிதறுது.” அப்படி இப்படி தாத்தா பாட்டியிடம் எச்சரிக்கையும் செய்திருக்கிறான்.
முக்கியமாக, இந்த வயதினர், கல்லூரி, பல்கலையில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அளவுக்கு அதிகமாக இடம் கொடுப்பதை அவன் விரும்பவும் இல்லை.
“தேவையற்ற பிரச்சனைகளை இழுத்து வச்சால்?” என்றும் கூறியிருக்கிறான்.
அவர்களோ, மீராவில் கொண்ட பாசத்தில் இவனைத்தான் சமாதானம் செய்வார்கள்.
“அந்தப் பிள்ளேண்ட முகத்தைப் பார்! குழந்தை அவள். நீ நினைப்பது போல எல்லாம் அவளால் நினைச்சும் பார்க்க முடியாது.” என்பார், இவன் பாட்டி ஹெலன்.
“மூண்டு பிள்ளைகளுமே அருமையானவே ஜோரிக். என்ர ஃப்ரெண்டின்ட பேத்தியை எனக்குக் குழந்தையிலிருந்தே தெரியும். அந்த உரிமையில தானே இங்க நம்மட்ட வரவே தொடங்கினவே. சந்தோசமாச் சிரிச்சுப் பேசி, நமக்குத் தார காசுக்கு, தமக்குப் பிடிச்சதைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுட்டு, கொஞ்ச நேரம் இங்க நின்றுட்டுப் போறதில நமக்கு என்ன தான் நட்டம் சொல்லு பார்ப்பம்?” இவன் தாத்தா, பெரிய உரையே நிகழ்த்தி விடுவார்.

