ரோசி கஜனின் மீரா 10 – 2

 

“உன்ர தங்கச்சி இப்பிடி நண்பிகளோட வந்தால் வேணாம் என்பமா என்ன? அதுபோலத்தான் அவேயும்.” பாட்டியின் உணர்வுபூர்வக் குறுக்கீடு!

என்னதான் என்றாலும் அவனும் அப்பப்போ முணுமுணுப்பைக் கைவிடுவதே இல்லை.

அந்த எரிச்சலின் உச்சத்தில் தானே, டோவரில், அவள் குடும்பத்தார் முன்னிலையில் அப்படியெல்லாம் சிடுசிடுத்திருந்தான்.

அப்படியிருக்க, அன்று விபத்தில் அவள் அகப்பட்டுவிட்டாள் என்றதும் எப்படித் துடித்தான்? தன்னையே மறந்தல்லவா காரை விட்டிறங்கி ஓடினான்.

தாத்தா பாட்டி வீட்டில் கொண்டு சேர்க்கும் வரையிலும் அவனுள் ஒரு பதற்றம் இருந்து கொண்டே தான் இருந்தது. இதை அவனால் மறுக்கவே முடியாது.

அதுவே, மறுநாள் அதிகாலையில் எழுந்து அவளை அவள் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமே என்று புறப்பட்ட போது, அவளுக்கான தன் ஆர்வத்தை அவனால் இரசிக்கத்தான் முடியவில்லை.

அவன் போக்குக்கும் வாழ்க்கை முறைக்கும், மீரா என்பவளுடன் சிறிதும் சம்பந்தம் கொள்ள முடியாது என்ற எண்ணமே அவனைத் தள்ளி நின்றுவிட ஆணையிட்டது.

முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டால் வலிக்க வலிக்க பிடிங்கி எறியத் தேவையில்லையே!

அதனால்தான், அன்று வீடு செல்லும் போதே அவள் கதைகளுக்கு (பேச்சுகளிற்கு) அவ்வளவாகச் செவிமடுக்கவில்லை.

‘வீட்டுக்குள் வா’ என்ற அழைப்புக்கு நிராகரிப்பும் கொடுத்தான்.

அவள் சீறும் போதெல்லாம் இலகுவாக எதிர்கொண்டவனால், தன்மையும் இனிமையுமாக, உரிமையோடு பேசியதை எதிர்கொள்ளவும் முடியவில்லை.

தம்மையும் அறியாத, தவிர்க்க முடியாத உணர்வொன்று இருவரையும் இறுகப் பிணைக்க முயல்வது போலுணர்ந்து ஆடிப்போனான், இவன்.

சிட்டுக்குருவிக்கு ஒப்பானவள் போன்று தெரிந்தவளைச் சிறிதும் வருத்த நினைக்கவில்லை, அவன்.

அவனுக்கு நன்றாகவே தெரியும், என்னதான் வெளிநாட்டு வாசமென்றாலும், அவன் அறிந்தவரை, இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஒரு கட்டுக்கோப்புக்குள் தானே வாழ நினைக்கிறார்கள்.

அதுவும், இவள் உறவுகளை அன்று டோவரில் கண்டானே!

என்ன ஒரு பிணைப்பு! அவனுக்கு வாழ்வில் கிடைக்காத ஒன்றல்லவா அது!

அக்குடும்பத்திலிருந்து அவளைத் தனியாக்கும் எந்த வேலையையும் செய்ய அவன் தயாராக இல்லை.

அவனைப் பொறுத்தமட்டில், ஒரு பெண் அவனோடு ஒன்றாக வாழவேண்டுமென்றால், அவன் மனதுக்கு இசைவாக இருப்பதும் அன்றாடப் பழக்க வழக்கங்களில் ஒத்திருப்பதுமே போதும்.

அங்கு மனைவி என்ற முத்திரை எதற்காம்?

திருமணம் எனும் சடங்கு? அதன் பொருளையே அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

‘விவாகரத்து’ என்ற ஒன்று, அருகிலேயே, திடகாத்திரமாக, பல அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டு தொங்கும் பொழுது, திருமணம் என்பது அர்த்தமற்றதாகவே அவனுக்குத் தெரிந்தது.

‘உனக்கும் எனக்கும் இடையில தீராத காதல், அதன் சின்னம் குழந்தை!’ சுத்த மடத்தனம் இல்லையா?

இதுவே, நாளை உன் மனமும் என் மனமும் மாறினால்?

வேறு வேறு திசைகளில் விருப்புக் கொண்டால்?

இலகுவாக விலகிக் கொள்வதெப்படி?

இடையில் அந்தக் குழந்தை என்னவாகும்?

இத்தனை கேள்விக்கும் விடை, ‘இன்னொரு ஜோரிக், நிக்கி!’

பாசத்துக்கு ஏங்கி, வெதும்பி, வன்மத்தை மனதுள் அடக்கி வெடித்து, அதிஸ்டவசமாக நல்ல வழிகாட்டல் கிடைத்தால் மட்டுமே மீட்சி!

வேண்டாம்; வேண்டவே வேண்டாம். அனுபவம் கற்றுத் தந்த பாடத்தை வலிக்க வலிக்கப் படித்தவன் அதை மறக்கத் தயாராக இல்லை.

இவன் கருத்தை ஒத்த கருத்தோடு இணைந்து இருந்தாள், லின். வருடங்கள் உருள உருள, அவள் ஆசைகளும் வண்ணமயமாகத் தொடங்கிவிட்டன.

காதல், கல்யாணம், குழந்தை என்று சொன்னவள், இவன் பிடித்த பிடியில் நிற்கவே ஒதுங்கி விட்டாள்.

இதனால்தான், மீரா என்பவள் மீது தன் மனம் நாட்டம் கொள்ள விளைகின்றது என உணர்ந்ததுமே சுதாகரித்துக் கொண்டான், ஜோரிக்.

முதல் தரம் அவளிடமிருந்து அழைப்பு வந்த போது, அவள்தான் அழைக்கிறாள் என்று தெரியாததில் எடுத்து விட்டவன், பின்னரோ, மனத்தைக் கல்லென அடக்கிக்கொண்டான். அவளிடமிருந்து வந்த அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் பார்வையாளனாகிப் போனான்.

அப்போதும் இங்கு நேரில் வருவாள் என்றும் எண்ணவில்லை.

வந்தாள். உள்ளே விடவில்லை என்றதும் இவனை ஒரு பார்வை பார்த்தாளே! விழிகள் கூடக் கலங்கிக் கிடந்தன போலும்.

அதைத் தாங்க முடியாமல் போனதால் தானே, ‘என் நண்பி’ என்று அறிமுகம் செய்து வைத்தான்.

‘என் நண்பி!’

அக்கணம், நம்பிக்கையோடு தன்னைத் தேடிவந்தவளுக்குத் தான் மரியாதை செய்ததாக உணர்ந்தான், அவன்.

அதுமட்டுமா? அவனையும் அறியாதுதான் அவளை வீடுவரை அழைத்துச் சென்றதும், சேர்ந்து உணவுண்டதும்.

‘வந்த காரணத்தைக் கீழ அலுவலக அறையில வச்சே கதைச்சு அனுப்பிறத்துக்கு என்னவாம்?’

இப்போ கேட்டுக் கொண்டவன் உதடுகளில் முறுவலே!

மீரா என்பவள் மாசு மருவற்ற பளிங்குக் கண்ணாடி போல!

மனத்தில் நினைப்பதை வெளிப்படையாகப் பேசினாள்; எப்போதும் போல, அப்படி இப்படித் தங்கு தடையின்றி நேருக்கு நேராக!

தன் அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் புறக்கணித்தான் என்பதில் அவனில் உள்ள கோபத்தில் வார்த்தைகளால் அடித்தாள்.

“உன்னை, உன்ர வரவை மிகவும் எதிர்பார்க்கிறன், வருவியா?” தயங்காது கேட்டாள்.

“ ‘என்ர நண்பி’ என்று எந்த விதத்தில சொன்னனி? வார்த்தைக்காகவா? உள்ளத்தில இருந்தா?

உள்ளத்தில இருந்து எண்டால் கலியாணத்துக்கு வா! என்ர குடும்பத்தோட நீ பழகிறதை நான் விரும்புறன்.” பளிச்சென்று சொன்னாள்.

சட்டென்று கூர்மையாகிப் போனது, இவன் பார்வை.

“என்ன அப்பிடிப் பாக்கிற ஜோரிக்? ஏனென்றா…நானும் உன்ன என்ர நண்பனா ஏற்றுக்கொண்டுட்டன். எனக்காக எவ்வளவு உதவிகள் செய்தனி? அதுதான்…போனால் போகட்டும் இருந்திட்டுப் போ!”

கண்ணடித்துச் சிரித்தபடிதான் வீட்டிலிருந்து புறப்பட்டாள்.

‘நண்பனாகப் பார்க்கிறன் என்றால், அந்த நட்புக்குரிய அழகான எல்லைக்கோட்டில் இருவராலும் தரித்து நிற்கத்தான் முடியுமா?

நட்புக்குரிய மரியாதையை உங்கள் உறவில் பாதுகாப்பதெளிதா?’

தன் மனசாட்சியின் வெளிப்படையான கேள்விக்கு, அவனும் வெளிப்படையாகவே பதில் சொல்ல முனைந்தான். அது சட்டென்று முடிந்தது.

“என் மட்டில, அவள் மீதான என்ர மன உணர்வுகள் நட்பு எண்ட எல்லையைக் கடந்திட்டிது.” உதடுகள் முணுமுணுக்க, மேசையில் முழங்கையை ஊன்றி, அந்த வார்த்தைகளை உச்சரித்த உதடுகளை கரமிண்டாலும் இறுகப் பொத்தியபடி, விழிகளையும் மூடிக்கொண்டான் ஜோரிக்.

அங்கு, அவன் இமைகளுள் சிறைபட்டுக் கிடந்த மீராவை, சற்றும் எதிர்பார்கவில்லை என்று பொய் சொல்ல விரும்பாது, அவள் விழிகளையே பார்த்திருந்தான்.

‘என்ர மனசிலும் உனக்கான இடம் தனி. மிக மிக விசேசமானதும் கூட!’ குறும்பு கொப்பளிக்க, அவள் விழிகள் சொன்ன கதையில் நிறையவே குழம்பிப் போனான், அவன்.

‘வேணாம் மீரா. நீ ஒரு அழகிய மலர்! அதில் இருந்து கசிந்து வரும் வாசத்தைத் தூர இருந்து நுகர்ந்திட்டுப் போறனே!

உன்ர மென்மையை ஸ்பரிசிக்காது கண் குளிர இரசித்துவிட்டுப் போறனே!

நீ எனக்கும் நான் உனக்குமானவர்கள் இல்லவே இல்லை!’

எப்போதும், பட்டுபட்டென்று முடிவெடுப்பவன், இப்போதும் அதையே செய்தான். அதன் பின்னரே, அவனால் ஒழுங்காகவே மூச்சு விட முடிந்தது.

‘அப்ப… கலியாணம்? போகமாட்டியா என்ன?’

‘ம்ம்…அவ்வளவு எதிர்பார்ப்போட வருவியா எண்டு கேட்டவள ஏமாத்திறதா? தாத்தா பாட்டியோட போய்த் தலையைக் காட்டிட்டு வர வேணும். அதற்கு மேல் இனி அவளோட தேவையற்ற ஒரு தொடர்பும் வேணாம்.’

உறுதியாக எண்ணியவன், ‘நான் வீட்ட வந்து சேர்ந்திட்டன் ஜோரிக்’ என்று வந்த குறுஞ்செய்திக்குப் பதில் அனுப்பவில்லை.

சற்றுப் பொறுத்து, ஆக்ரோசம் காட்டி வந்து விழுந்தது ஸ்மைலி ஒன்று!

அடுத்தடுத்துப் பல வடிவங்களில் மனதின் எரிச்சலைக் கொட்டினாள், மீரா.

பதிலின்றிப் போனதில் அமைதியானவள், மீண்டும், இரவு பல தடவைகள் அழைத்தாள். இவன் அசைந்து கொடுக்கவே இல்லை.

அதன்பிறகு அவளும் எடுக்கவில்லை.

இவன் எடுத்திருந்த முடிவின்படி ‘அப்பாடா!’ என்ற நிம்மதியல்லவா வந்திருக்கவேணும்?

பதிலாக, மனமெல்லாம் அறிமுகமற்ற கருமையின் படர்ச்சி!

 

error: Alert: Content selection is disabled!!