ரோசி கஜனின் மீரா 11 – 2

 

“ஐயோ மாமி! உங்களுக்கு வேற வேலையில்ல. இங்க நல்ல மா கிடைக்குமே! இவளுக்காக அங்க இருந்து கொண்டுவர வேணுமா?”

வயதானவருக்கு ஏன் கஷ்டம் என்ற அக்கறையில் சொன்னார், கார்த்திகேயனின் தமக்கை.

“இதிலென்ன இருக்கம்மா? மதுராட தங்கச்சிமாருக்கு, தங்களுக்கு இங்க வர முடியேல்லையே என்ற கவலை. ரெண்டுபேருமாத் தான் எல்லாம் செய்து தந்தவே.” என்ற கமலா, “நீ தள்ளு பிள்ள!” மகளை ஒதுங்கி நிற்கச் சொல்லிவிட்டுச் சமையலில் ஈடுபட, “அம்மா, நானும் உதவி செய்து தாறன்.” மதுராவும் சேர்ந்து கொண்டார்.

“சரி சரி, தாயும் மகளுமாகச் சமைக்கட்டும்; நாம ஒருக்கா வீட்ட போயிட்டு வருவம், வாங்கக்கா.

பகல் கறிகள் நிறையவே மிச்சம் கிடக்கு. ஆட்டிறைச்சி, அண்ணாவும் இவரும் விரும்பிச் சாப்பிடுவீனம்.

மீராவும் பகல் ஃப்ரெண்ட்ஸோட வெளியில சாப்பிட்டன் எண்டு வேணாம் என்றிட்டாள்..” என்றவாறே, தமக்கையை அழைத்துக்கொண்டு வெளியேறினார், நித்தி.

இப்படி, கீழே பெரியவர்கள் அளவளாவி வேலைகளில் ஈடுபட்டிருக்க, வீட்டின் மூன்றாவது தளம் இளையவர்களின் அரட்டையில் அதிர்ந்தது.

அத்தளத்தை ஒரு பெரிய அறையோடு சேர்ந்த பரந்த பால்கனியாக அமைத்திருந்தார், கார்த்திகேயன்.

இரு வீடுகளிலும் நடக்கும் எந்த விழா என்றாலும் அங்கேதான் நடத்துவார்கள். அதற்கு வசதியாக அவ்வறையின் ஒரு மூலையில் சிறு சமையலறைப் பகுதியொன்றையும் பொருத்தியிருந்தார்கள்.

பால்கனியின் இரும்புக் கம்பிகளோடு சேர்ந்து அழகிய பூச்சாடிகள்; அந்தந்த காலநிலைக்கேற்ப அவை அழங்காரம் பண்ணிக் கொள்ளும்.

நித்தி, கார்த்திகேயன் குடும்பம் கோடை காலமென்றாலே நடுச்சாமம் வரை அங்குதான் பொழுதைக் கழிப்பார்கள்.

இப்போ, தமக்கையின் மகன்களும் வந்திருக்க, கலாட்டாவுக்குக் கேட்க வேண்டுமா?

இவர்களின் கலாட்டாவில், அங்கு நின்ற மரம், செடி, கொடிகள் எல்லாமே நகைப்பில் குலுங்கின!

ஆனால் என்ன? எப்போதுமே கலாட்டாக்களை ஆரம்பித்து வைத்துத் தொய்வில்லாது கொண்டு நடத்தும் மீராவின் அமைதியைத்தான் அவைகளால் சகிக்கவே முடியவில்லை.

‘உனக்கு என்னடி ஆச்சு?!’ மென்தென்றல் மூலம் தூதனுப்பியும் தோற்று நின்றன!

மற்றவர்களோ, மாறி மாறிக் கதைத்துக் கொண்டிருந்ததில் அவளில் தென்பட்ட வேறுபாட்டைக் கவனிக்கவில்லை.

அதுவும், வருங்காலக் கணவனான, உஷாவின் மகன் ராகுலன் அழைத்தான் என்று, ஆரபி விலகிச் சென்று நின்று உரையாட, மற்றவர்கள் ஆரணியையும் அவளின் வருங்காலக் கணவன் சந்துருவையும் கடித்துக்கொண்டு இருந்தனர்.

“மீரா! நீ என்ன சரியான அமைதியா இருக்கிற? இது நல்லதுக்கில்லயே! ஏதோ பெரிய திட்டம் போடுறாள் போல!”

சித்தியின் மகளை அருட்டியது சந்துரு தான்!

“ஐயோ சந்துருண்ணா, அவள் அமைதியாக இருக்கிறாளே எண்டு சந்தோசப்படுங்க! வாயைத் திறந்தாளோ நீங்க சரி!”

தமக்கையை வம்பிழுத்தான், நிரூஜ்.

“ஹ்க்கும்…” கணைத்தான்,ஆதவ்.

“நீங்க எல்லாரும் வேலை செய்யிற ஆட்கள். தேவையான நேரம் லீவு எடுக்கலாம். நாங்க என்ன அப்பிடியா? எங்களுக்கு லீவு இல்ல. அதுவும் மீராவுக்கோ இது கடைசி வருசம். படிப்பு, பயிற்சி வேலை எண்டு எவ்வளவு இருக்கு? அந்தநேரமாகப் பாத்துக் கலியாணம் வச்சா நாங்க அமைதியாகத்தானே இருக்க வேணும்? இல்லையா மீரா?” உதவிக்கு வந்தான், அவன்.

“பச்!” ஒருநாளுமின்றி சலித்துக் கொண்டாள், மீரா.

“ஒவ்வொருநாளும் போய் வாறது எண்டால் சும்மா இல்லை தான்.” ஆமோதித்தான், சந்துரு.

“அதுக்காக இப்படி உம்மாண்டியா இருக்காதேடி! சகிக்குது இல்ல!” ஒன்றுவிட்ட தங்கையைச் சீண்டினான்.

“அப்ப… கலியாணம் முடிஞ்சிட்டா நீ அங்க அறையில தங்கிருவியா மீரா?” இடையிட்டான், சந்துருவின் தம்பி.

“இல்லடா… நீங்க இங்க நிக்கிற ஒரு மாசமும் இங்க இருந்து தான் போய் வருவன். காரும் வாங்க வேணும் தானே?”

“கார் எதுக்கு? எங்கட கார் நிக்குது தானே? அதை நீயே வச்சிரு!” குறுகிட்டது, ஆரணியின் குரல்.

“ச்சே! ச்சே! அதையெல்லாம் அவா பாவிக்க மாட்டா ஆரணி. இப்ப ஏதோ ஒண்டும் செய்ய முடியாத நிலையில உங்கட காரில போய் வந்தாலும் இன்சூரன்ஸ் எல்லாம் சரிவர, மேடம் புதுக்காருக்குப் பிளான் போட்டுட்டா தெரியுமா? அவா எல்லாம் ஆர்?” குறுக்கிட்டுக் கேலி செய்தான், நிரூஜ்.

சகோதரனை முறைத்தாள், மீரா.

“மனிசன் இருக்கிற விசர் தெரியாம சும்மா அலட்டாதடா!” ஒருபோதுமின்றிச் சீறிவிட்டாள்.

“இதப் பார்ரா! மீராவுக்குக் கோபம் வருதாமே!” தொடர்ந்த நக்கல் நையாண்டியில், முதுகு விறைக்க ஒன்று வாங்கினான், நிரூஜ்.

“இப்படித்தான் இவள்…உண்மையச் சொன்னால் அடிப்பாள்.” மீண்டும் தமக்கை கையை ஓங்க, அகப்படாது விலகிவிட்டான் அவன்.. ஆரணியின் கரம் மீராவைத் தடுத்தும் விட்டது.

“சும்மா இரு மீரா! அவன் தான் பகிடி பண்ணுறான் எண்டா நீயும் சேர்ந்து எடுபடுற.”

மைத்துனியை அடக்கிவிட்டு, மைத்துனனைப் பார்த்தாள், ஆரணி.

“அவள் புதுக்காரே வாங்கினாலும் இப்ப உனக்கு என்னடா பிரச்சனை நிரூஜ்?

இங்க பார், நாங்களும் இருக்க மாட்டம். நீங்க மூண்டு பேரும் தானே? ஒற்றுமையா இருக்க வேணும். அதைவிட்டுட்டு, சும்மா சும்மா சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது இல்ல!”

பெரியவளாகக் கடிந்து கொள்வது போலச் சொன்னாலும் ஆரணியின் கண்கள் கலங்கிவிட்டன.

அத்தூரமாகப் பிரிந்து செல்லப் போகிறாளே! திருமணமாகிச் செல்லுமிடம் சொந்த அத்தை வீடு. தங்கையும் வருகிறாள். தங்கை திருமணம் செய்து போகும் இடமும் சிறுவயதிலிருந்து நட்போடு பழகிய குடும்பம். அப்படியே இருந்தும், பெற்றோர், சகோதரன், சின்ன அத்தை, மாமா, பிள்ளைகள் இவர்களையெல்லாம் பார்க்காதிருக்க வேண்டுமே!

‘பார்க்கிற ஆசை வந்தோன்ன வெளிக்கிட்டு வந்து போற தூரமா?’

மனதுள் எழுந்த பிரிவுத்துயர் அவள் விழிகளை உரசியதில், அவை மெல்ல மெல்லக் கலங்கின.

அதைத் தன்னருகில் அமர்ந்திருக்கும் வருங்காலக் கணவனுக்குக் காட்டச் சிறிதும் பிரியப்படவில்லை, அவள்.

“நீ எப்ப இங்க வருவ எண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறன் ஆரணி.” என, கடந்த ஐந்து வருடங்களாகச் சொல்பவனிடம் போய் இதைச்சொல்லி அவன் முகத்தைச் சிணுங்க வைக்க விரும்பவில்லை அவள்.

அவளுள்ளேயும் அதே உணர்வு உண்டுதானே? ஆனாலும், மனம், தான் நேசித்தவன் அருகாமையையும் பிறந்து வளர்ந்த குடும்பத்தின் நிழலையும் ஒருசேர அனுபவிக்க ஆசை கொள்கின்றதே!

ஆசைகள் அனைத்தும் நடந்துவிடுமா என்ன?

அதில் அமர்ந்திருந்தால் தன் கலக்கத்தை எல்லோரும் பார்த்துவிடுவார்கள் என்றதும் எழுந்து, “தண்ணி குடிச்சிட்டு வாறன்.” அறை மூலையில் இருந்த சமையலறை நோக்கிச் செல்ல, பின்னால் வந்த மீரா அங்கிருந்த மெத்தென்ற இருக்கையில் தொப்பென்று அமர்ந்துகொண்டாள்.

அப்போதும் அவள் பார்வை கையில் இருந்த கைப்பேசியில்.

“இதுதான் கடைசித்தடவை, இனி எடுக்கவே மாட்டன்!”

இதழ்கள் முணுமுணுக்க, போட்டிபோட்டுக்கொண்ட விரல்கள் ஜோரிக்கின் இலக்கத்தை அழுத்தியிருந்தன.

ஆனாலும் பயனேது! அழைப்பு எடுக்கப்பட்டால் தானே?

நறநறவென்று பற்கள் நெரிந்தன.

‘இந்தாளுக்கு என்ன நடந்திட்டு?’ எப்படித்தான் யோசித்தாலும் அவளால் அனுமானிக்க முடியவில்லை.

‘எவ்வளவு இயல்பாகக் கதைச்சான். பிறகேன் இப்பிடி நடந்து கொள்றான்?’

ஏமாற்றம் சுழலாகத் தாக்க அழைப்பைத் துண்டித்த வேகத்தில், “பச்…!” அந்த நீண்ட இருக்கையின் மறுமூலையில் சென்றமர்ந்தது, கைப்பேசி.

மறுநொடி, கால்களை குறுக்கிக்கொண்டு குறண்டிப் படுத்துவிட்டாள், அவள்.

அவளையே பார்த்தபடி நீரை அருந்திய ஆரணியின் முகம் யோசனையில் சுருங்கியது. நிதானமாக மைத்துனியை நெருங்கியவள், அவள் காலோடு ஒட்டிக்கொண்டு அமர்ந்ததும் சட்டென்று விழித்துப் பார்த்துவிட்டு கண் மூடினாள், மீரா.

“மீரா என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கிற?”

மைத்துனியின் குரலில் இருந்த வருடல் இவள் மனத்தைப் பிசையச் செய்தது.

தவறு, வேணாம், செய்யாதே என்பதைக் கூட பக்குவமாக எடுத்துச் சொல்வார்கள், ஆரணி ஆரபி இருவருமே.

இவளுமே ஒளிவு மறைவின்றி, சின்ன விசயத்தையும் இவர்களிடம் சொல்லிவிடுவாள். அப்படியிருக்க, இன்று என்ன காரியம் செய்திருக்கிறாள்?

ஒரு முறை, மீன் கறி உண்ணும் பொழுது மிகச் சிறிய முள்ளொன்று தொண்டையில் சிக்கிவிட்டது. அப்போது இவள் பட்ட பாடு இருக்கே! வீட்டையே இரண்டு படுத்திவிட்டாள்.

சோற்றை உருண்டையாக்கி, “இப்பிடியே விழுங்கு மீரா; உள்ள போயிரும்.”

கெஞ்சிக் கூத்தாடி அவளை விழுங்க வைத்து அந்த உபாதையிலிருந்து காத்திருந்தார், இவளின் அன்பு அத்தை மதுரா.

இன்றும் அவளுள் அதே உணர்வு! சற்றே பெரிய முள்ளொன்று தொண்டையைக் கீறி வலி ஏற்படுதியது போலவே துடித்தாள்.

இவள் நெஞ்சமோ, அந்த வலியிலிருந்து ‘எப்ப விடுபடுவன்?’ என்று கிடந்தது அடித்துக்கொண்டது.

‘இண்டைக்கு நான் ஜோரிக் வீடுவரைக்கும் போயிருந்தன். அவனோட ஒண்டா இருந்து சாப்பிட்டுட்டு வந்து அம்மாட்டப் பொய் சொன்னனான். நான் வாங்கிக்கொண்டு வந்த சாமான்கள் எல்லாம் அவன்ட கடையில அவன் வாங்கித் தந்தவை!’

error: Alert: Content selection is disabled!!