ரோசி கஜனின் மீரா 12 – 2

“அதெப்பிடி?” என்றபடி படியில் இருந்து வெளியேறுகையில் தடுமாறியவளை, இடையோடு அணைத்துப் பிடித்து நிறுத்தினான், அவன்.

சட்டென்று அவள் பார்வை அவன் முகத்தில் பதிய கணத்தில் விலகியவன், “வா…” முன்னேறினான்.

“தாத்தா பாட்டி உள்ள வந்திட்டினம் போல!” பேச்சை மாற்றவும் செய்தான்.

“ம்ம்…நான் தான் கூட்டிக்கொண்டு போனன்.” என்றுவிட்டு, “நீ எனக்குப் பதில் சொல்லேல்ல ஜோரிக்.” விடாது அதிலேயே நின்றாள், அவள்.

“பதிலா? இப்பிடியே கேட்டுக் கொண்டிருந்தா வந்த வழியில திரும்பிப் போயிருவன்.” பொய்யாக மிரட்டியவன் விழிகளில் நகைப்பு. அவன் கம்பீரத்துக்கு இன்னும் இன்னும் அழகு சேர்த்தன, நகைப்பில் சுருங்கிய அந்த விழிகள். அதுமட்டுமின்றி, ஒருவகை நெருக்கத்தை வேறு காட்டின.

மீராவின் பார்வை தன்னில் படிந்த விதத்தைப் படித்தவன் மனதில் துணுக்கிடல். அவன் என்ன நினைத்திருந்தான்? இப்போ அவனே அவளுக்கு இடம் தருகிறானே!

‘இந்தக் கலியாண வரவேற்புக்கு வந்தது பிழையோ!’ நிறையவே தடுமாறிவிட்டான், அவன்.

வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தாலும் மனம் மறுத்து இழுத்து வந்ததை என்ன சொல்வதாம்.

இப்படியே உள்ளே நுழைந்தவர்களை முதலில் கண்டது மதுராதான்.

மீராவுக்கு ஆண் நண்பர்களும் உண்டு; ஒன்றாகப் படிப்பவர்கள், இன்றும் வந்திருக்கிறார்கள் தான்; அப்பப்போ வீடுவரை வந்து கலகலத்துவிட்டும் போவார்கள், அவ்வளவே.

கூடவே, இவர்கள் ஐவர் என்பதால் வெளியாட்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் அதிகமாக உருவானதில்லை என்றே சொல்ல வேண்டும்.

மீராவும் ஜோரிக்கும் சுவாரஸ்சியமான பார்வையோடு கதைத்துக்கொண்டு வருவதைக் கண்டதும், சட்டென்று அவனை அடையாளம் தெரியாததால் மதுராவின் முகம் யோசனையில் சுருங்கியது.

அருகில் வர, அடையாளம் கண்டுகொண்டவர் வரவேற்பாக முறுவலித்தாலும், அவர் பார்வை மீரா முகத்தில் கணம் தங்கித்தான் விலகியது.

அவள் முகமோ, ஒளிவு மறைவின்றி மகிழ்வில் மலர்ந்திருந்ததே!

கடந்த சில நாட்களாகவே அவ்வளவு ஆர்ப்பாட்டம் இன்றி சோர்ந்திருந்தவளாச்சே! திருமணம் முடிந்ததும் மைத்துனிமாரைப் பிரியப்போவதை எண்ணி அப்படி இருக்கிறாள் போலும் என்றுதான் இவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அதனாலோ என்னவோ இக்கணத்தில் அவளின் மலர்வு அப்பட்டமாகவே தெரிந்து வைத்தது.

அதற்கிடையில் அவர்களை அணுகிய கார்த்திகேயன், அன்பாக அவன் கரம் பற்றி அழைத்துச் சென்றார்.

அவனோடு செல்ல முயன்ற மீராவைக் கரம் பற்றித் தடுத்தார், மதுரா.

“உன்ன எங்க எல்லாம் தேடுறதம்மா? ஆரணி, ஆரபி வரச் சொன்னவே, போய்ப் பார்!” என்றதும், தவிர்க்க முடியவில்லை. தன் மாமாவோடு செல்லும் ஜோரிக்கைப் பார்த்தவாறேதான் அகன்றாள், மீரா.

அதன் பின்னர் அவனை நெருங்கிக் கதைக்கும் சந்தர்ப்பம் வரவில்லை.

மணமக்களை அழைத்து வரும் பொழுது நடனம் சிலதுகளை ஒழுங்கு பண்ணியிருந்தார்கள். அதில் மீராவும் ஆடினாள். குழுவாகவும் தனியாகவும்.

அதிலும்,

கண்ணன் வரும் வேளை

அந்திமாலை நான் காத்திருந்தேன்

சின்னச் சின்னத் தயக்கம்

செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன் ... என்று ஆரம்பித்து, தாளநயமும் நளினமாக அவள் ஆடியதில் அங்கிருந்தவர்கள் அனைவர் பார்வையும் அவளில் தான்.

என்னதான் தாத்தா பாட்டியோடு வந்திருந்தாலும் அங்கிருந்தவர்கள் யாரையுமே இவனுக்குத் தெரியாது. பீட்டரும் ஹெலனும் தாழ்ந்த குரலில் தமக்குள் கதைத்துக் கொண்டிருந்தனர். இதுவரை, ஸ்ரீலங்கன் கொண்டாட்டம் எதற்கும் சென்ற அனுபவம் இல்லையென்பதால் எல்லாவற்றையும் சுவாரஸ்சியத்தோடு கவனித்துக் கதைத்தார்கள் இருவரும்.

இவன் விழிகளோ, மீராவின் உருவைப் பின் தொடர்வதை மட்டுமே செய்த வண்ணமிருந்தன. அப்படியிருக்கையில், நடனம் ஆரம்பிக்க, திருமண சோடிகளோடு வந்த மீரா, தனியாக மேலேயுள்ள பாட்டுக்கு ஆடத் தொடங்க, அவனையும் அறியாது விழிகள் விரிந்தன. நிமிர்ந்தமர்ந்தான், ஜோரிக்.

பாடல் வரிகள் புரியவில்லையென்றாலும் அந்த இசை, அதற்கு அவள் கொடுத்த பாவம், உடல் அசைவுகள், விழிகள் துள்ளோடு சொன்ன செய்திகள், பாட்டு வரிகளை உச்சரித்த அவளிதழ்கள் நெளிந்த அழகு என்று, மகிழ்வின் விளிப்பில் அவனையும் சேர்த்துக் கொண்டது.

சுழன்று சுழன்று இரு ஜோடிகளையும் சேர்த்து ஆடியவள்,

கூறவா இங்கு எனது ஆசையை

தோழனே வந்து உளறு மீதியை

கோடிக் கோடி ஆசை தீரும் மாலை... என்ற வரிகளில் தன்னையுமறியாது ஜோரிக்கை நோக்கினாள், மின்னலாய்!

இமைக்காது அவளையே பார்த்திருந்தவன் இதயத்தில் உறைந்தது, அந்தப் பார்வை.

அப்பார்வை சொன்ன செய்தி அவனையே ஆட்டிப் பார்த்தது. தன்னையும் மறந்தான் அவன்.

பூவாசம் தென்றலோடு சேர வேண்டுமே

ஆண்வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே

தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே

வாழ்நாளின் மிச்சபாரம் காதல் எழுதுமே

நீண்டநாள் கண்ட கனவு தீரவே

தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே

நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே… என்ற ஒவ்வொரு வரிக்கும், இதழ்களின் அசைவோடு அவனைத் தொட்டுத் தொட்டு விலகின, அவள் விழிகள்.

அங்கிருந்த அனைவருமே அவளின் இலாவகமான அசைவுகளால் தம்மை மறந்திருக்க, அவனோ, அவள் தெரிவித்த செய்தியை உணர்ந்து அசையாதிருந்தான்.

“மீரா என்ன அழகா ஆடுறாள் இல்லையா?” தமக்குள் கதைத்துக் கொண்ட பீட்டர் தம்பதியின் பார்வை ஜோரிக்கில் படிந்து, அவன் இருக்கும் நிலைபார்த்து இரகசியச் சிரிப்பில் குலுங்கின.

“ஜோரிக் சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பார்!”

சிற்றுண்டித்தட்டை அவன் புறமாகத் தள்ளிவைத்தார், ஹெலன்.

இலேசாகத் திடுக்கிட்டுப் பார்த்தான் அவன்.

“இல்ல…எனக்கு இப்ப வேணாம் பாட்டி.” என்றவன் பார்வை மீண்டும் மீராவில். பெரியவர்கள் தம்முள் முறுவலித்துக் கொண்டனர்.

மீராவுக்கு அவனில் ஆர்வமுண்டு என்பதை அறிந்திருந்தவர்களுக்கு, அவனுக்கும் அவளில் ஆர்வமுண்டு என்பது ஊர்ஜிதமாகியதில் மிக்க திருப்தியே!

இப்படியே நடன ஆரவாரங்கள் முடிய, மணமக்கள் கேக் வெட்டினார்கள். இரட்டையர் அல்லவா? தம் சோடிகளோடு நின்றவர்கள் கண்களை நிறைத்தார்கள்.

கேக் வெட்டிய கையோடு நெருங்கிய உறவுகள் குடும்பம் குடும்பமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். மணமக்கள், வந்திருந்த நண்பர்கள் உறவுகளுக்கு நன்றி கூறினர். இடையில் சிலர் திரைப்படப் பாடல்களையும் பாடினர். வாழ்த்துப் பாடல்களும் ஒலித்த வண்ணமிருந்தன.

நேரம் போவது தெரியாது கலகலத்துக்கொண்டிருக்கையில் மண்டபத்தில் கடைசியில் இருந்த பகுதியில் புப்ஃபே முறையில் சைவ, அசைவ உணவுகள் தயாராக வைக்கப்பட்டுக் கொண்டிருக்க, சற்றே ஆறுதலாக நின்ற மீரா, “ப்பா…” அப்பகுதியால் வந்த தந்தை சதீஷின் கரத்தைப் பற்றி நிறுத்தினாள்.

“என்னம்மா?” என்றவரிடம், “நீங்க ஜோரிக்கோட கதைக்கேல்ல தானே?” எனக்கேட்டாள்.

இதுவரை அவனோடு கதைக்கும் சந்தர்ப்பம் சதீஷுக்கு அமையவில்லை.

“இல்லயம்மா. வா, இப்பப் போய்க் கதைப்பம்.”

தந்தையும் மகளும் அவர்களை நெருங்குகையில், அவன் அங்கில்லாததில் மீராவின் நெற்றி சுருங்கியது.

‘எங்க போய்ட்டான்? கொஞ்சம் முதல் பார்க்கேக்க இருந்தானே!’ யோசித்தபடி வந்து, “ஜோரிக் எங்க?” அவள் முடிக்க முதலே, “அவசரமா ஒரு வேலை எண்டு இப்பத்தான் மா போனான். முடிச்சிட்டு வந்திருவான்.” என்றார் பீட்டர்.

“ஒஹ்! அப்பாவ அறிமுகம் செய்யலாம் எண்டு வந்தன்.” என்றாள் மீரா, ஏமாற்றத்தோடு!

“வந்ததும் கதைக்கிறன் மா…” என்ற சதீஷ், அவர்களோடு அமர்ந்து உரையாடத் தொடங்க, அங்கிருந்து நகர்ந்தவள், தன்னையும் மீறி அவனுக்கு அழைத்தாள்.

அவன் வழமைபோலவே அவளின் அழைப்பைப் புறக்கணித்துவிட்டான்.

அதேநேரம் பீட்டருக்கு அழைத்தவன், “எனக்கு அங்க வரக்கிடைக்காது தாத்தா. டாக்ஸ்சிக்குச் சொல்லியிருக்கிறன், நம்பர் அனுப்பி விடுறன், நீங்க அங்க இருந்து வெளிக்கிடேக்க சொன்னா வந்து கூட்டிக்கொண்டு வருவினம்.” என்றுவிட்டு, அவர்களுக்குக் கதைக்க நேரம் தராது வைத்துவிட்டான்.

 

 

error: Alert: Content selection is disabled!!