ரோசி கஜனின் மீரா 16 – 2

அவருள்ளத்திலும் அதே எண்ணம்தான்!

அன்று, சுதா மிஸ்ஸின் அக்கா மகனாக வந்திருந்தவன் முதல் பார்வை, அதில் பளிச்சிட்ட பச்சாத்தாபம், ‘அய்யோ! உனக்கா இப்பிடி நடந்தது?’ என்ற இரங்கல்! தன் பார்வையுணர்ந்து, மனதில் சுரந்த பரிதாபத்தை மின்னலாய் மறைத்துக்கொண்டு, அண்ணனும் தங்கையுமாகப் பேச்சால் தன்னை வென்று தம்மோடு அழைத்துச் சென்றதுதான், மதுராவின் நினைவில் கண்டபடி ஆடி ஓடித் திரிந்தன.

அதன் தாக்கமாக விழிகளோரம் கண்ணீர் கோடுகள்!

ஆரணி, ஆரபி பிறந்த அன்று, அதைத்தொடர்ந்த நாட்கள் என்றெண்ணியவர் விழிகளில் பிரவாகமாகக் கண்ணீர்.

“ராது…ஸ்ஸ்…” மனைவியைத் தேற்ற முயன்றாலும் முடியாது கண்கள் கலங்கின, கார்த்திகேயனுக்கு!

‘மருமகள் சின்னவள்; அன்பா எடுத்துச் சொன்னால் தம் மறுப்பைப் புரிஞ்சு கொள்வாள்.’ என்று ஓரளவேனும் தன்னைச் சமாதானம் செய்ய முடிந்த கார்த்திகேயனால், மனதை வாட்டியெடுக்கும் இன்னொரு பயத்தைத்தான் போக்க முடியவில்லை.

செய்வதறியாது தவித்த உள்ளம் விழிகளைக் கலங்கடிக்க, அவர்களைப் பார்த்திருந்த நித்தி, சட்டென்று எழுந்துவிட்டார்.

“ண்ணா..என்ன இது? இப்ப என்ன நடந்திட்டு எண்டு இப்பிடி இருக்கிறீங்க?” அவர்களை நோக்கி வந்தார்.

“இல்ல நித்தி… இந்த விசயம் ஆரணி, ஆரபிக்குத் தெரிய வரேக்க கொஞ்சம் யோசிச்சுப் பாரன்! ஒரு கணம் ஒரே ஒரு கணம் சரி ‘அப்ப நீ எங்கட அப்பா இல்லையா?’ என்று கேட்க வேணாம், பார்த்தாலே போதும், என்னால அதைத் தாங்க ஏலாது!” கரகரத்தது அவர் குரல்.

சட்டென்று மனைவியை விலத்தி எழுந்தவர், தன்னுள் தலைவிரித்தாடும் மொத்த உணர்வுகளையும் அங்கு கொட்டிட விரும்பவில்லை.

“ராது…நான் வீட்டுக்குப் போறன்!”

மனைவியின் பதிலுக்குக் காத்திராது விறுவிறுவென்று வெளியேறினார்.

“கார்த்தி…இப்பிடியெல்லாம் ஏன் நினைக்கிறீங்க? அவே உங்கட மகள்கள்!” பொலபொலவென்று கண்ணீர் வழியக் கணவரைத் தொடர்ந்தார், மதுரா.

தம் பிரச்சனையில் உழன்றதில் இந்தக் கோணத்தில் யோசித்திராத நித்தியுட்பட அனைவரும் அதிர்ந்துதான் போனார்கள்.

கார்த்திகேயன் சொன்னது மீராவின் காதுகளிலும் விழத்தான் செய்தது.

பாட்டியின் மடியில் இருந்து விருட்டென்று எழுந்தவளைச் சலனமின்றிப் பார்த்தார்கள், ஆதவ் நிருஜ். அங்கு, எப்போதும் இருக்கும் நெருக்கமும் நேசமும் கூட இல்லாதிருந்தது, இவள் உள்ளத்தில் சுருக்கென்ற வலியைத் தந்தது.

‘அவன் யாரெண்டு தெரிய முதலே எனக்குள்ள சலனம் உண்டு பண்ணிட்டான்! அவன் இன்னாரின்ட மகன் எண்டு தெரிஞ்சு, வேண்டுமென்றேவா விரும்பினன்? அப்பிடியல்லோ இவேட பார்வையும் பேச்சும் இருக்கு?’ இவள் மனதுள்ளும் கொந்தளிப்பு!

அப்போதும் ஜோரிக் எனும் காண்டீபனை யாரிடமும் விட்டுக் கொடுக்க அவள் மனம் இடம் கொடேன் என்றது.

“அண்ணா தேவையில்லாமல் கலங்கிறார். இங்க யாருக்குமே ஆரணி, ஆரபி அவர்ட பிள்ளைகள் இல்லை எண்ட எண்ணம் துளியும் இல்ல. இதெல்லாம் என்ன கதை?”

கண்ணீரோடு சொன்ன நித்திக்கு, மகளை இழுத்து இன்னும் நாலு சாத்துச் சாத்தவேண்டும் போலவே இருந்தது.

கலங்கித் தளும்பிய விழிகளைத் துடைத்துவிட்ட யோகமோ, அன்று நடந்தவற்றைச் சொல்வதைத் தொடர்ந்தார்.

அவர் சொல்லி முடிக்கையில் அங்கு கனத்த மௌனம் படிந்திருந்தது.

மீரா, மீண்டும் பாட்டியின் மடியில் தஞ்சமடைந்திருந்தாள்.

தன் அத்தையின் அன்றைய நிலையை நினைத்தால் அவளிதயம் கசங்கிப் போயிற்று. ஆனாலும், அதோடு எந்தவிதத்திலும் தன் இதயத்தில் இருப்பனைத் தொடர்புபடுத்த முடியவில்லையே!

‘ஏன் எல்லாருமே அந்தப்பிரச்சனையோட இவனத் தொடர்புபடுத்தினம்? அதில என்ன நியாயம் இருக்கு?’ அவளுக்கு, உரத்துக் கேட்க வேண்டும் போலிருந்தது.

‘ஆரணி, ஆரபி வேற்றான் வீட்டுப்பிள்ளைகள் எண்டு யாராலும் நினைக்கவும் முடியாது எண்டது அப்பழுக்கற்ற உண்மைதான். அதையும் இங்க இருக்கிற எல்லாரும் ஒருமனமாவே ஏற்றுக்கொள்ளினம்! அப்ப, காண்டீபனை மட்டும் ஏன் கெட்டதோட தொடர்புபடுத்துவான்? அவன்ட தகப்பன் கெட்டவன் எண்டா அவனும் அப்பிடியேதான் இருக்க வேணுமா? பீட்டர் ஹெலனின்ட இரத்த சம்பந்தமானவன் அவேட நல்ல குணங்களைக் கொண்டிருக்கக் கூடாதா?’

கலைந்து கிடந்து முனகிய மனம், கண்ணீர் விட்டதேயொழிய வீடிருக்கும் நிலையில் இதை வெளியில் சொல்லி வாதிட முடியுமா?

மீராவால் அதற்கு மேலும் அங்கிருக்க முடியவில்லை. எழுந்து, யாரையுமே பார்க்காது விருட்டென்று தன்னறைக்குள் தஞ்சமடைந்து கொண்டாள்.

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு எழுந்தான், ஆதவ்.

அவனாலும் யாரையும் பார்க்க முடியவில்லை. விறுவிறுவென்று வீடு நோக்கிச் சென்றவன், வரவேற்பறையில் தாய், தந்தை இல்லை என்றதும் தேடிக்கொண்டு அவர்களின் அறைக்குச் சென்றான்.

விசும்பிக்கொண்டிருந்த மனைவிக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்த கார்த்திகேயன், மகனைக் கண்டதும், அதுவும் அவன் விழிகள் கசிந்துள்ளதைப் பார்த்ததும் துணுக்கிட்டுவிட்டார்.

‘இவன மறந்தே போனனே!’ என எண்ணியவருக்கு, அதன் காரணம் நல்லாவே புரிந்தது. மீரா மூலம் இந்த விசயம் வெளிவந்ததும் நித்தியை அடக்கும் முகமாகத் தான் கார்த்திகேயனை அழைத்திருந்தான், நிரூஜ்.

உடனே எல்லோரும் நித்தி வீட்டைச் சென்றடைந்திருந்தார்கள்.

அப்போதிருந்தே ஆதவ் வாய் திறக்கவில்லை. அவன் அங்கிருக்கிறான் என்பதே தெரியாதவாறு ஒரு ஓரத்தில் நின்று கொண்டான். உண்மையிலேயே, அந்தளவுக்கு அவன் அதிர்ந்து போயிருந்தான்.

தன் தாய், தந்தை, தமக்கைமார் என்ற கண்ணையும் கருத்தையும் கவரும் அழகிய குருவிக்கூட்டினுள் இத்தனை பெரிய விசயம் மறைந்திருந்ததா? என்ற, ஆச்சரியமும் அதிர்வும் அவனை வாயடைக்க வைத்திருந்தது.

இப்போதோ, தான், அம்மா அப்பா என்று தினம் தினம் அழைப்பவர்கள் அவனுக்குத் தெய்வமாகத் தெரிந்தார்கள்.

அவன் இந்நாட்டில் தானே வாழ்கிறான்? உறவுகள் மிகச் சுலபமாகத் தூக்கி எறியப்படுவதும், மனம் இணையாது உடலால் இணைந்திருப்பவர்கள் அதைச் சுலபமாக மாற்றிக் கொள்வதையும் கண்டும் கேட்டும் வளர்பவன் அல்லவா?

அப்படியிருக்க, ‘என்ர அப்பா போல ஒரு ஆம்பிளை! எந்தக் கஷ்டத்திலும் குழந்தைகள் மட்டுமே போதும், அவர்கள வளர்த்து ஆளாக்குவன் எண்டு தனிமையை நாடிப் போன அம்மா!’

இதுவரை கண்கள் கலங்கி அறியாதவன், இக்கணமோ, பொல பொலவென்று வழியும் கண்ணீரோடு பாய்ந்து சென்று தாயையும் தந்தையும் இறுக அணைத்துக் கொண்டவன், வெடித்து அழுதுவிட்டான்.

அது நிச்சயம் மனதின் இரணமோ, கவலையோ தந்த அழுகை இல்லை; நடந்ததைக் கேட்டவனுக்கு அதிர்விருந்தாலும் அதையும் மேவி சந்தோசமும் பெருமையுமே எஞ்சியது. அதன் உச்சமாகவே தேம்பினான் அவன்.

மகனின் அழுகையில் கார்த்திகேயனும் மதுராவும் தான் நெஞ்சம் நடுங்கிப் போனார்கள்.

‘ஏன் அழுகிறான்?’ வரையறை செய்ய முடியாது தத்தளித்தும் விட்டார்கள்.

அந்தத் தவிப்பும் தத்தளிப்பும், “நீங்க என்ர அப்பா அம்மா எண்டத்தில எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமா?” என்ற மகனின் சொற்கள் வந்து மோதும் வரைதான்.

மகனின் அழுகையும் கண்ணீரும் கூட ரோஜா இதழ்களின் ஸ்பரிசத்தையும் சுகந்தத்தையும் அவர்களுக்கு உணர்த்தி நின்றது.

அப்பாசம் மிகுந்த கணத்தின் தளர்விலிருந்து முதலில் சுதாகரித்துக் கொண்டவர், மதுராதான்.

“டேய் செல்லம்! இதென்ன அழுகை? ச்சே! ச்சே! என்ர மகனுக்கு அழவும் தெரியுமா என்ன? இதை மட்டும் உன்ர அக்காக்கள் கண்டால் போச்சு! கண்ணைத் துடை ராசா!” என்றவர், மகள்கள் நினைவில் கண்ணீர் விட்டார்

தாய் தந்தையின் கண்ணீரை அவசரமாகத் துடைத்தன, ஆதவ்வின் கரங்கள்.

“அக்காக்கள் பற்றி எதுவும் கலங்கவே வேணாம்பா! நடந்தது எல்லாம் தெரிய வரேக்க, என்ர அக்காக்களும் இப்ப நான் சொன்னதையேதான் சொல்லுவீனம். நீங்க அதைப்பற்றித் துளியும் யோசிக்க வேணாம். ஏனெண்டா,அவே இந்த அம்மா அப்பாட பிள்ளைகளாக்கும்.” சொன்னவன், மீண்டும் இருவரையும் இறுக அணைத்துக்கொண்டான்.

 

 

error: Alert: Content selection is disabled!!