மீராவோ ஆதவ், நிரூஜோ வீட்டில் இல்லை என்ற நிம்மதி மதுராவிற்கு. அதிலும் மீரா; அவளில்லையே என்றதில் நிம்மதி மூச்சே வெளியேறியது.
“உன்ர அம்மாவுக்கு விருப்பமில்ல. எங்கள் எல்லாருக்கும் தான். முக்கியமா, ஒரு கணம் சரி உன்ன அவனோட இணைச்சுப் பார்க்கவே முடியேல்ல. பயம் தான் வருதம்மா!”
எப்போதும் கண்டிப்போடு இருக்கும் மதுரா, மீராவைக் கட்டியணைத்து அழுதே விட்டார்.
“எங்கட குழந்தை வாழ்க்கை நல்லா இருக்க வேணும் எண்டு நினைக்கிறது பிழையா சொல்லு பார்ப்பம்? அதே போல, உனக்கு உன்ர நியாயம் எண்டு ஒண்டு இருந்தாலும், எல்லாரும் கோவத்தில இருக்கேக்கத் திரும்ப திரும்ப, ‘என்ர முடிவில இருந்து மாறப் போறதில்ல!’ எண்ட மாதிரிக் கதைக்கிறத நிப்பாட்டு!” என்றிருந்தார்.
அவரின் அழுகையோடு சேர்ந்த கண்டிப்பு வேலை செய்திருந்தது.
எதுக்குமே வாய்திறக்காது நடமாடினாள், மீரா.
மதுராவிற்கு நடந்ததை கேள்விப்பட்டதும், நிச்சயம் அவள் மனம் மாறும் என்றே நம்பினார்கள் அனைவரும்.
‘அப்படியிருக்கேக்க, இவேட வரவு எல்லாத்தையும் திரும்பவும் கிளறுறது போல இல்லயா?
நிச்சயம் அவன் பற்றித்தானே கதைக்கப் போகினம். இந்த நிலையில அவள் இல்லாததே பெருத்த நிம்மதி!’ தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டார், மதுரா.
ஆனாலும் நித்தியை நினைத்தாலும் கலக்கமே பிறந்தது.
‘அவளிட கோபத்தக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுற இந்த நேரத்தில இவே ஏன் வந்தவே? சதீஷ் இருந்தாலும் பரவாயில்ல. அவர் வேலையால வர இரவாகுமே!’
இப்படி, மனதில் குழப்பமிருந்தாலும் வீடு தேடி வந்தவரை உபசரிக்கும் முகமாக, அவர்களின் விருப்பைக் கேட்டுவிட்டு கஃபே கொண்டு வந்து பரிமாறினார்.
கஃபேயை உறிஞ்சியபடியே மணமக்கள் பற்றி அன்பாக விசாரித்தார் ஹெலன். பெரும்பாலும் கார்த்திகேயன் தான் கதைத்தார்.
“அவுஸ்திரேலியா போகமுதல் எங்கட வீட்டுக்கு ஒரு தடவை வரவேணும்.” மணமக்களுக்கு அன்போடு அழைப்பும் வைத்தார்.
வரவைத்த முறுவலோடு அமைதி காத்தனர், கார்த்திகேயனும் மதுராவும்.
நித்தியின் பார்வையோ அவர்களைச் சுட்டுக்கொண்டிருந்தது. நல்ல காலமாக வாய் திறக்கவில்லை என்ற நிம்மதியில் இருந்தார்கள் மற்றவர்கள்.
அதற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டாரே ஹெலன்.
மணமக்களை அன்போடு வரவேற்றதோடு விட்டாரா? இல்லையே!
“அண்டைக்குத் திருமணவரவேற்புக்கு வந்தது தெரிஞ்சவே எண்ட முறையில. இண்டைக்கோ, அப்பிடியில்லயே! அந்தப்பிள்ளைகள் ரெண்டு பேருமே ஜோரிக்கிட தங்கச்சிகள் தானே? அதை அறிஞ்சதில இருந்து எங்களுக்கும் நல்ல சந்தோசம். நிக்கிட்டயும் சொன்னன்…”
இப்படி, வேகமாகச் சொல்லிச் சென்றவரை, வாய்மூட வைத்தது நித்தியின் பேச்சு.
“இங்க பாருங்க, எங்க வந்து என்ன கதை கதைக்கிறீங்க? அவன் எப்பிடி எங்கட வீட்டுப் பிள்ளைகளுக்கு அண்ணன் ஆவான்.”
நித்தியின் சீறல் பேச்சு மட்டுமில்லாது, முகமே கோபத்தில் ஜிவுஜிவுத்திருந்தது. அமர்ந்திருந்த ஹெலன் எழுந்தும் விட்டார்.
என்ன இருந்தாலும் வெளியாட்கள் அல்லவா? அதிலும் வயது போனவர்கள். அதைக்கருத்தில் கொண்டே மரியாதையாகப் பேசிக்கொண்டிருந்த கார்த்திகேயன், “நித்தி!” தானும் எழுந்தார்.
“அண்ணா! தயவு செஞ்சு நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்கோ!” வந்தவர்களுக்குப் புரியும் வகையில் நெதர்லாந்து மொழியிலேயே தொடர்ந்தார், நித்தி.
“இவே இங்க நம்மட வீட்டில வந்திருந்து இப்பிடி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுக் கதைக்கிறதைப் பாக்கேக்க ஈ எண்டு சிரிச்சுக்கொண்டு தலையாட்டச் சொல்லுறீங்களா?
இங்க பாருங்க, உங்கட வயசுக்கும் அனுபவத்துக்கும் இப்பிடிக் கதைச்சுக்கொண்டு வாறது சரியெண்டு நினைக்கிறீங்களா?”
தமையனிடம் ஆரம்பித்து ஹெலனிடம் முடித்தார், நித்தி.
“இல்லம்மா…வந்து…அவேக்கும் தகப்பன் ஒண்டுதானே எண்டு சொல்ல வந்தன்.” குரல் இறங்கியிருந்தாலும் தயங்காது சொல்லிவிட்டார், ஹெலன்.
‘உண்மை அதுதானே? மறுத்து விடுவாயா?’ என்றது அவர் பார்வை.
அந்தப் பார்வை நித்தியின் கோபத்தை நன்றாகவே விசிறிவிட்டது.
மதுரா கார்த்திகேயனுக்கும் தான் முகம் சுண்டிப் போயிற்று!
அந்த வார்த்தைகளுக்கு இத்தனை வலிதரும் சக்தியுண்டா? இத்தனை வருடங்களுக்குப் பிறகு இருவருமே வலியில் துடித்துப் போனார்கள்.
அண்ணன், அண்ணியை ஒரு பார்வை பார்த்த நித்தியினுள்ளோ உக்கிரம்.
“ஆருக்கும் ஆருக்கும் தகப்பன் ஒண்டு? உங்கட பேரன்ட அப்பன் ஒரு கிரிமினல். கொலைகாரன். அவன் எங்கட வீட்டுப் பிள்ளைகளுக்குத் தகப்பனா? எங்கயாவது ஒரு தகப்பனால பிறக்க முதலே அந்தக் குழந்தைகளைக் கொல்லப் பார்க்க ஏலுமா?
அவன்…அந்த கணேஷ் அதைச் செய்யப் பார்த்தவன்.” வார்த்தைகள் சீற, பார்வையால் சுட்டார், நித்தி.
நம்ப முடியாது பார்த்தார் ஹெலன். எதையோ சொல்லவும் முயன்றார்.
அதற்குச் சற்றும் இடம்கொடாது படபடவென்று கதைத்தார், நித்தி. அவரை யாருமே தடுக்க நினைக்கவில்லை. அன்றைய நினைவின் பிடியில் அகபட்டிருந்தவர்களால் அது முடியவும் இல்லை.
“நான் ஒண்டும் பொய் சொல்லேல்ல…” என்று ஆரம்பித்து, மதுரா அனுபவித்த துன்பங்களைச் சுருக்கமாகத்தான் சொன்னார்.
கேட்டிருந்த ஹெலன் பீட்டரின் முகங்கள் கன்றிக் கறுத்துப் போயிற்று! இங்கெல்லாம் இப்படியென்றால் அவன் கதி சரியே!
‘விருப்பம் இல்லையோ ஒதுங்கு! ஒதுங்கிப் போறவளையும் அவள் வழியில விட்டிரு!’ இங்கு இப்படித்தானே?
தன் பேத்தி கணேஷ் வாழ்வில் இருப்பது தெரிய வந்ததில் மதுரா பிரிந்தாள் என்றுதான் அறிந்திருந்தார், ஹெலன். அதுவும் ஜோரிக்கின் தாய் சொல்லி.
“அவள் மட்டும் பிரியேல்லையோ கணேஷ் உயிரோட இருந்திருப்பான்; எங்கட வாழ்வும் நிர்க்கதி ஆகியிராது.” என்றுதான், அப்போதெல்லாம் இவர் பேத்தி புலம்புவது.
ஆனால் மதுரா துன்புறுத்தப்பட்டது இவர்களுக்குத் தெரியாது. இப்போது அவர்களின் கோபத்தை உணரவும் முடிந்தது.
“இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதம்மா!” கலங்கிய கண்களைத் துடைத்தபடி சொன்னார், ஹெலன்.
“இப்பத் தெரிஞ்சிட்டுத் தானே? அரையும் குறையுமாத் தெரிஞ்சத மீராட்டச் சொல்லி இருக்கிறீங்க!”
ஒரு மாதிரிக்குரலில் தொடர்ந்தார், நித்தி. நிச்சயம் குற்றச்சாட்டு!
“இப்ப நாங்க நடந்த எல்லாத்தையும் விளக்கமாகச் சொல்லிட்டம். அதனால, இனி நமக்குள்ள போக்குவரத்தோ பழக்கமோ தேவையில்ல. அதெல்லாம் கொஞ்சமும் சரிவராது ஹெலன்.”
திடமாகவும் தீர்மானமாகவும் சொன்ன நித்தியை, கெஞ்சல் பார்வை பார்த்தார் ஹெலன்.
‘அப்படியெல்லாம் சொல்லாதே பெண்ணே!’ என்றது அவர் பார்வை!
“ஜோரிக் நாங்க பார்க்க வளர்ந்தவன். நல்லவன். எல்லாத்துக்கும் மேலா மீராவ விரும்புறான். எண்டைக்குமே அவளுக்கு நல்ல துணையா இருப்பான். மீராவும்…” அவதியோடு படபடவென்று சொன்னவர் முன்னால் நீண்டிருந்தது நித்தியின் கரம், ‘போதும் நிறுத்து!’ என்பதாக.
“போதும் ஹெலன், இந்தக் கதைய இதோட விட்டிருங்க!” கடினமாகச் சொல்லவும் செய்தார்.
மனைவியின் கரத்தைப் பற்றிய பீட்டர் அங்கிருந்து கிளம்பத்தான் முயன்றார். அவருக்கு அவமானமாகவும் இருந்தது. ஹெலன் தான் அதைச் சற்றும் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு, அவர் பேரன் நன்றாக வாழ வேண்டும், அவ்வளவும்தான்.
மீராவின் நேசத்தின் மீதுள்ள நம்பிக்கையே அவரை இத்தனை தூரம் இழுத்து வந்தது. துணிவாகப் பேசவும் வைக்குது.
‘நான் உயிரோட இருக்கேக்க ரெண்டு பேரும் ஒண்டாச் சந்தோசமா வாழுறதப் பார்க்க வேணும்!’ மனதில் முணுமுணுத்துக்கொண்டார்.
“இல்லம்மா அது…” இலேசில் விடபோவதில்லை என ஆரம்பித்தார்.
“இங்க பாருங்க ஹெலன்…மீரா உங்கட பேரன விரும்பிறாள் எண்டெல்லாம் சொல்லேலாது. ஒண்டை நாங்க வேணாம் எண்டு கண்டிச்சா செய்தே தீருவன் எண்டு அடம்பிடிக்கிறது அவள்ட குணம். அப்படிப்பட்டவளே அந்த கணேஷ் பற்றிச் சொன்னோன்ன அமைதியாகீட்டாள்.
நெருப்பு எண்டு தெரிஞ்ச பிறகும், ‘குதிச்சு விளையாடிப் பார்த்தால் என்ன?’ எண்டு நினைக்கிற அளவுக்கு அவள் முட்டாள் இல்ல.
அதனால, அவே ஒருத்தர ஒருத்தர் விரும்பினம், காலம் காலமா ஒண்டா இருப்பீனம் எண்டு சாத்திரம் சொல்லுறத விட்டிருங்கோ!” என்றவர் பார்வை, பீட்டர் ஹெலனை கூர்மையாகத் தொட்டு நின்றது.
“நித்தி, நாம என்ன சொல்லுறம் எண்டு அவேக்குத் தெளிவாவே விளங்கியிருக்கும். இனிப் போதும்!” சுதாகரித்து, இடையிட்டார் கார்த்திகேயன்.
“இல்ல அண்ணா…” என்று அவர் ஆரம்பிக்கக் கையமர்த்தியவர், “உங்கட பேரன் ஏற்கனவே ஒரு பெண்ணோட வாழ்ந்தவனாமே!” நிதானமாகக் கேட்டார்.
“ஓம், அதுக்கு என்ன?” என்ற ஹெலன், “அவன் ஃப்ரெண்டோட ஒரு ஆறு வருசங்கள் சேர்ந்திருந்தான். இப்ப, ரசனைகள் ஒத்துப் போகாததால பிரிஞ்சிட்டினம். அந்தப்பெண் கணவன், குழந்தை எண்டு நல்லா இருக்கிறாள். அதைப்பற்றி நீங்க யோசிக்கவே வேணாம்.” ஆறுதல் சொல்லும் வகையில் சொன்னார்.
“இங்க பாருங்க அண்ணா இவேட கதைய!” மீண்டும் நித்தி.
‘இதுகளோட இதைப் பற்றியெல்லாம் கதைக்க முடியுமா? விளங்குமா என்ன? எல்லாம் காலம். இவள் மீரா செய்த வேலையால வந்தது.’ மகளில் அடங்கேன் என்ற கோபம் முணுமுணுக்க வைத்தது.
தங்கையைக் கையமர்த்திவிட்டு அவர்களிடம் திரும்பினார் கார்த்திகேயன்.
அதற்கிடையில் இடையிட்டார், நித்தி.
“இங்க பாருங்க…உங்கட பேரன் ஆரோட எத்தினை வருசங்கள் சேர்ந்து இருந்திருந்தால் தான் என்ன? இனியும் எத்தினை பேரோட இருந்தாலும் என்ன? எங்களுக்கு அதெல்லாம் தேவையே இல்ல. அவன் சம்பந்தமான கதையே இந்த வீட்டுக்கு வேணாம்.” என்றவர் கரம், வாயிலை நோக்கி நீண்டிருந்தது.

