18
ஹெலன், பீட்டர் வந்து சென்றதை இளையவர்கள் அறியாமலேயே அடுத்த சில நாட்கள் கடந்து சென்றன.
இப்படியிருக்கையில் …
“ஆரபி ஃப்ரியா ?”
வாட்ஸப்பில் வந்த மைத்துனியின் குறுஞ்செய்திக்குப் பதிலாக, அழைப்பை ஏற்படுத்தினாள், ஆரபி.
“மீரா! என்ன நீ? எத்தின தடவைகள் எடுத்தம் தெரியுமா? உன்னத்தான் பிடிக்கவே முடியயேல்ல. ஃபோன் யூஸ் பண்ணுறதை விட்டுட்ட எண்டல்லோ நினைச்சம்!”
அவள் ஹலோ சொல்ல முதல் படபடத்தாள், ஆரபி.
“நித்தி அத்தை சொல்லேல்லையா? எத்தின தடவைகள் எடுத்தம் தெரியுமா?” தொடர்ந்தாள்.
“நாங்க ஃபோன் எல்லாம் யூஸ் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறம்!” மைத்துனியின் குரலே மீராவினுள் புத்துணர்வைக் கொண்டு வந்தது.
“பாவம் பார்த்துத்தான் எடுக்கேல்ல தெரியுமா?” நக்கலாகத் தொடர்ந்தவளை, இடைமறித்தது ஆரபியின் குரல்.
“பாவம் பார்த்தியா? என்னடி விளங்கேல்ல.”
“ம்ம்…அது என்னெண்டா…புதுப் பொம்பள மாப்பிள்ளையை ஏன் குழப்புவான் எண்ட நல்ல எண்ணத்தில தான்…” மீண்டும் பகிடி செய்ய, ஆரபியின் வதனம் செம்மையைப் பூசிக்கொண்டது.
“போடி! நாங்க ஃப்ரீயாக இருக்கேக்க தானே உனக்கு எடுத்தம். புதுப்பொம்பள மாப்பிள்ள! உனக்கு நல்ல சாட்டுத்தான் போ! இந்தப் பத்துநாட்களுக்கே இப்படியெண்டா அவுஸ்ரேலியா போன பிறகு நீங்க எல்லாம் கதைக்கவே மாட்டீங்க போல! நீ எண்டு இல்லை, வீட்டில யாருமே வடிவாக்(சரியாகக்) கதைக்கேல்லத் தெரியுமா? அது, ஆரணிக்கும் எனக்கும் சரியான கவலை!”
வீட்டில் நடந்தவை தெரியாதவள் படபடத்துக் கொண்டிருக்கையில், அவள் இருந்த அறைக்கதவைத் தட்டினாள்,ஆரணி.
“கொஞ்சம் இரடி, ஆரணி வாறாள் போல!” என்று சென்று கதவைத் திறக்க, “ஆர் ?” என்றபடி உள்ளே வந்தாள், ஆரணி.
“இந்தா!” தமக்கையிடம் கைப்பேசியைக் கொடுத்துவிட்டு, “மீரா கதைக்கிறாள். நீ கதையக்கா, இன்னும் கொஞ்சம் சாமான்கள் எடுத்து வைக்கோணும்.” என்று நகர்ந்தாள்.
“ஏர்போட் போக இன்னும் ரெண்டு மணித்தியாலங்கள் இருக்கு ஆரபி, அவசரப்படாம எடுத்து வை!”
தங்கையிடம் சொல்லிவிட்டு, “ம்ம் சொல்லுங்கோ…மேடம்!” மீராவோடு உரையாடத் தொடங்கினாள், ஆரணி.
“எங்க அண்ணாக்கள்ட சத்தத்தக் காணேல்ல?” என்று, ஆரணியோடு பேச்சைத் தொடர்ந்தாள், மீரா.
“அங்க சந்துரு குளிக்கிறார். இங்க வந்தால் ராகுலும் பாத்ரூமுக்குள்ள! உள்ள போனா லேசில வரமாட்டீனம் எண்டு தெரியும் தானே? நாங்க வெளிக்கிட்டிட்டம். அவேயும் வெளிக்கிட்டிட்டா மெல்ல மெல்ல போகச் சரியா இருக்கும்.” என்றவள், “அதுசரி, எத்தின தரங்கள் ஃபோன் பண்ணினம், ஏன் எடுக்கேல்ல?” ஆரபி கேட்ட கேள்விதான் இவளிடமிருந்தும்.
எந்த விசயமென்றாலும் ஆரபியை விட நிதானமாகக் கையாளுபவள் ஆரணி தான். அதேவேளை, உன்னிப்பாகக் கதைத்து ஊகித்தும் விடுவாள். அதனால், சட்டென்று அமைதி காத்தாள், மீரா.
அவளின் அமைதி ஆரணிக்கு எதுவோ போலிருந்திருக்க வேண்டும்.
“மீரா! வீடியோவைப் போடு பாப்பம்!” என்றபடி, தான் வீடியோவை இயக்கினாள்.
கைபேசித்திரையில் ஆரணியைப் பார்த்ததும் மீராவால் அடக்க முடியவில்லை. தன் அறைக்குள் இருந்த ஒற்றைச் சோஃபாவிலிருந்து கதைத்துக் கொண்டிருந்தவள், மடியில் கைபேசியைப் போட்டுவிட்டு இரு கரங்களாலும் வாயை இறுக்கப் பொத்தி கேவல் சத்தத்தை மறைக்க முயன்றாள்.
“மீரா…வீடியோவைப் போடு என்றன்!”
ஆரணியின் குரலில் இருந்த கண்டிப்பும் தீவிரமும், ஆரபியை, தமக்கை அருகில் அழைத்து வந்தது.
“என்னக்கா? என்ன சொல்லுறாள்?”
“அதுதானே எனக்கும் தெரியேல்ல. அவள் குரலே சரியில்ல ஆரபி. அங்க என்னவோ நடந்திருக்கு. கொஞ்சம் யோசிச்சுப் பார், நாம வந்து ரெண்டு மூண்டு நாட்களுக்குப் பிறகு ஆருமே சாதாரணமாக் கதைக்கேல்ல. கேட்டதுக்குப் பதில், ‘கவனம்! சந்தோசமா இரு!’ இவ்வளவும் தான். ம்ம்…”
தங்கையிடம் அவள் சொன்னது மீராவின் காதில் விழவே செய்தது.
மீராவோ, தன்னுள் தானே பிரயத்தனம் செய்து தயாரானாள். இவர்கள் இங்கு வந்த பின், தம் தாயின் வாழ்வில் முன்னர் நடந்ததைத் தெரிந்துகொள்ளத்தான் போகிறார்கள். இனியும், எதையும், அவர்கள் இருவருக்குமாக மறைக்கும் எண்ணம் இங்கு யாருக்குமே இல்லையே!
அப்படியிருக்கையில், ‘திடீரென்று தெரியவர, மாமா பயப்படும் படி, ‘அப்ப… நீங்க எங்கட அப்பா இல்லையா?’ என்று ஒரு கணமேனும் நினைத்துவிட்டால்?’
அதிர்வான விசயத்தைத் திடுதிப்பென்று அறிந்துகொள்கையில் இப்படி நிகழ்ந்து விடுவதும் உண்டு தானே?
‘பிள்ளைகளுக்குத் தெரியத்தேவையில்லை எண்டோ, தெரியவேண்டியளவுக்கு முக்கியம் இல்லையெண்டோ நினைச்சு, இத்தின வருசங்களாச் சொல்லப்படாத விசயம் இப்ப வெளியே வரக் காரணமே நான் தானே?
இதைக் காரணமாக வச்சு, வீட்டில எந்தவித மனக்கசப்பும் வர கடைசிவரை விட மாட்டன்.
அதேநேரம், ஆரபி, ஆரணி என்ர மாமான்ட பிள்ளைகள் எண்டதையும் ஒருக்காலும் நான் விட்டுக் கொடுக்கவும் தயாரா இல்ல!’
தன்னுள் மிக மிக உறுதியாகவே முணுமுணுத்துக்கொண்டாள், மீரா.
‘அதுக்குச் செய்ய வேண்டியது ஒண்டுதான். இவேட்ட இப்பவே நடந்ததைச் சொல்லீர வேணும். அப்ப, இங்க வந்து சேரேக்க எப்பிடியும் அண்ணாக்கள் அவையளத் தேற்றி விடுவீனம்.’
‘ஆரபி ஃப்ரீயா?’ என்று குறுந்தகவல் தட்டும் பொழுதே மனதில் எடுத்திருந்த இம்முடிவு, இப்போதோ, ஐயமற ஊர்ஜிதமானது.
தைரியத்தைக் கூட்டிக்கொண்டு, மைத்துனிமாரை எதிர்கொள்ளத் தயாரானாள்.
“ஆரணி உங்களிட்ட ஒண்டு சொல்ல வேணும். அதுக்குத்தான் இப்ப எடுத்தன். நேரமிருக்குத்தானே?” என்றாள், மெதுவாக.
“என்ன சொல்ல வேணும்? தாராளமாச் சொல்லலாம். முதல் வீடியோவைப் போடு!” இப்போ ஆரபியின் குரல்.
அப்போதும் மீராவின் உருவம் அவர்கள் பார்வைக்கு வரவில்லை.
சகோதரிகள் இருவரும் தம்முள் பார்த்துக் கொண்டார்கள்.
“வீட்டில எல்லாரும் சுகமா இருக்கீனம் தானே மீரா? லண்டனுக்குப் போன அம்மம்மா வந்திட்டாவா? அப்பம்மா, தாத்தா நல்லா இருக்கீனமா?” அடிமனதில் கலவரத்தோடு கேட்டாள், ஆரபி.
“கமலா அம்மம்மா அடுத்த கிழமைதான் வருவார். அவவின் இன்னொரு ஒன்றுவிட்ட தம்பி வீட்ட ‘ஸ்காட்லன்ட்யார்ட்’க்குப் போய்ட்டாவாம்.” என்றவள், “அப்பம்மா, தாத்தா ரெண்டு பேருமே சுகமா இருக்கீனம். வீட்டிலயும் எல்லாரும் நல்ல சுகம்.” என்றாள், மெதுவாக!
“ம்ம்…பிறகு? என்ன சொல்ல வேணும் எண்டனி? சொல்லன்டி, என்ன புதிசாப் பதுங்கிற?” இது ஆரணி.
“நான்…நான் ஒருத்தர விரும்புறன்!”
எப்போதும் ஓங்கி ஒலிக்கும் அவள் குரல் கிசுகிசுப்பாக வர, சட்டென்று எழுந்துவிட்டாள், ஆரணி.
“என்ன சொன்னனி மீரா?”
அதற்கும் பதில் இல்லை.
“இங்க பார் மீரா…வாயைத் திறந்து கதை! முதல் வீடியோவைப் போடு! என்னடி உனக்கு நடந்தது? எனக்கு இங்க பதை பதைக்குது! கடகடவென்று சொல்லு பார்ப்பம்!”
ஆரணியின் குரலில் வெளிப்படையாகவே கோபமும் தவிப்பும்.
“அதுதான் சொன்னனே, நான் ஒருத்தர விரும்பிறன்.”
“ஓ! அதுதான் எங்கள மறந்திட்ட போல! அதுசரி, என்ன திடீரெண்டு? முதல் ஆரு அந்த ஒருத்தர்? எங்களுக்குத் தெரிஞ்சவரா?” ஆரபியின் குரல்!
“வந்ததும் வராததுமா எங்களை விட்டு எங்கட செல்ல மச்சாளைப் பிரிக்கப் பார்க்கிற வில்லன் ஆர்? எப்ப இருந்து? வீட்டில தெரியுமா?” கேள்விகளை தொடர்ந்து பறக்க விட்டாள், அவள்.
ஆரணியின் முகத்திலோ தீவிர யோசனை!
“மீரா!” என்று வந்த அவள் அழைப்பிலும் அதே தீவிரம் தான்.
“சொல்லு ஆரணி”
“ஜோரிக் என்று சொல்லீர மாட்ட தானே?” என்றவள் குரலில் அவன் மீதான முகச்சுளிப்பும், இவள் மீதான சந்தேகமும்!
மீண்டும் பலத்த அமைதி. ஆரணிக்கு மறுப்பெதுவும் சொல்லவில்லையே மீரா.
பிறகென்ன? இதற்குப் பிறகும் புரியாதா என்ன?
“மீரா!” ஆரணியின் அதட்டலோடு ஆரபியின் குரலுமே சேர்ந்து ஒலித்தது.
அதேநேரம், குளியலறைக் கதவு திறந்து கொள்ள, வெளிப்பட்டான் ஆரபியின் கணவன் ராகுலன்.
“ஃபோனில ஆர் ஆரபி?” அவர்கள் இருவரும் நின்ற நிலைபார்த்துக் கேட்டவன், “என்ன ஏதாவது பிரச்சினையா?” தணிந்த குரலில் கேட்க, அவனைத் தள்ளிக்கொண்டு அப்பால் சென்ற ஆரபி, “ஸ்ஸ்..சத்தம் போட வேணாம். நீங்க ரெடியாகுங்க, அது மீரா!” எனச் சொன்ன பாவனையில் அவன் முகம் சுருங்கியது.
“என்னவாவது பிரச்சினையா ஆரபி?”
“இல்ல இல்ல, பிறகு சொல்லுறன். நீங்க வெளிக்கிடுங்க!” என்றுவிட்டுத் தமக்கை அருகில் வந்தமர்ந்தவள், மீண்டும் ஆரணி கண்டிப்போடு கேட்ட பின்னர் வாய் திறந்த மீராவிடமிருந்து வந்த, “ஜோரிக் தான். அவனத்தான் விரும்புறன்!” என்ற வார்த்தைகளில் அதிர்ந்து போனாள்.
அதே அதிர்வோடு பார்த்த தமக்கையிடம், “என்னக்கா இவள் இப்பிடிச் சொல்லுறாள்? அவன் எந்த ஊரோ நாடோ? முதல்…வீட்டுக்குத் தெரிஞ்சா ஒருநாளும் சம்மதிக்க மாட்டீனம்.” என்றாள், கலவரத்தோடு!
அவர்களை வீடியோவில் பார்த்திருந்த மீராவுக்கு இருவரினதும் அதிர்வு துல்லியமாகத் தெரிந்தது. அவர்கள் தம்முள் கதைத்தவையும் கேட்டது.
அவர்களைத் தொடர்ந்து கதைக்கவிடாது, சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட முடிவெடுத்தவள், படபடவென்று தொடர்ந்தாள்.
“ஜோரிக்கின்ட உண்மையான பெயர் காண்டீபன்…” என்று ஆரம்பித்து, அவர்களின் ஆச்சரியத்தைக் குறித்துக்கொண்டே, அவன் பற்றி விலாவாரியாகச் சொன்னாள்.
“அவன்ட குடும்பத்த அப்பம்மா ஆட்களுக்கு நல்லாவே தெரியும். பக்கத்தில இருந்தவையாம்.” என்ற போதும், மதுராவைப் பற்றிச் சொல்லாது கணேஷ் பற்றி முழுக்கதையும் சொன்னவள், “அவன்ட தகப்பன் அப்பிடி எண்டதால அவனும் கெட்டவனாத்தானே இருப்பான் எண்டு சொல்லி வீட்டில ஒரே பிரச்சினை!” என்றபோது, அவளையும் மீறி குரல் கரகரத்தது.
“மீரா! வீட்டிலும் சொல்லிட்டியா?”
“சொல்லீட்டன் ஆரபி. அதில கொஞ்சம் பிரச்சனை!”
“ஏதோ நடந்திருக்கு எண்டு நான் சொன்னனா இல்லையா? அம்மாட்டக் கேட்கக் கதைய மாற்றிட்டார்.” என்ற ஆரணிக்கு, என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அதேநேரம் ஜோரிக் விசயத்தில், அவனில் நேசம் என்ற விசயத்தில் மீரா அவசரப்படுவது போலவே இருந்தது, அவளுக்கு!
“மீரா! இங்க பாரப்பா, இதெல்லாம் அவசரம் அவசரமா முடிவெடுக்கிற விசயம் இல்ல!” ஆரம்பித்த ஆரணியை தடுத்தாள், மீரா.
“ஜோரிக்கை விரும்புறன் எண்டதில அவசர முடிவு எதுவும் இல்லை ஆரணி. என்னப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? நிதானமா யோசிச்சு என்ர மனச நான் உணர்ந்த பிறகுதான் அம்மாட்டச் சொன்னன்!”
“எங்களிட்டக் கதைக்க வேணும் எண்டெல்லாம் உனக்குத் தோன்றேல்ல போல! அந்தளவுக்கு அவசரம் ஏன் மீரா? அதை நினைச்சாத் தான் ஒரு மாதிரி இருக்கு! நாங்க வந்தப் பிறகு பொறுமையா அத்தையிட்ட சொல்லியிருக்க, பிரச்சனைகளத் தவிர்த்திருக்கலாம்.” மனத்தாங்கலோடு சொன்னாள், ஆரணி.
‘முதல் பார்வையிலயே அவன எங்களுக்கும் பிடிக்கேல்லை!’ என்றதைச் சொல்லாது விட்டுவிட்டாள்.
மைத்துனி தான் தீர்மானமாகச் சொல்கிறாளே! பிறகென்ன? அப்படிச் சொல்லி அவளை வருத்த வேண்டாமே என்றெண்ணியது அவர்கள் மனம்.
“அண்டைக்கு உண்மையாவே சொல்ல இருக்கேல்ல. ஏதோ சொல்லுற மாதிரி அமைஞ்சிட்டு! அதுக்கு முதல், நான் ஒண்டு கேட்பன், ரெண்டு பேரும் மனசில படுறதச் சொல்லவேணும் சரியா?”
அவசரமும் அவதியுமாகக் கேட்டாள், மீரா.

