ரோசி கஜனின் மீரா 18 – 2

தம்முள் பார்த்துக் கொண்டார்கள் சகோதரிகள்.

“இன்னும் என்னடி இருக்கு?” என்றாள், ஆரபி.

“அந்த கணேஷ், இப்படி எண்டதும் அவனோட இருக்க முடியாது எண்டு விவாகரத்து வாங்கி விலகிய பெண்ணைப் பற்றிச் சொன்னனே!”

“ம்ம்…”

“அவர் தன்ர குழந்தையோட தனியா இருந்திட்டுக் கொஞ்சக் காலத்திற்குப் பிறகு தன்ன விரும்பியவரைக் கலியாணம் செய்து இண்டைக்கு நல்லா இருக்கிறாவாம்.”

“சரிதான்; பின்ன? அவன நினைச்சுக் கொண்டிருக்கிறதா?” ஆரபி சொல்ல,

“என்னைக் கேட்டால் அந்த கணேஷ் இப்பிடி அற்ப ஆயுளில போயிருக்கவே கூடாது. சொத்தியாவோ முடமாவோ இழுத்துக்கொண்டு கிடந்திருக்க வேணும். அந்தப் பெண் இன்னொருவரோட நல்ல சந்தோசமா வாழுறதப் பாத்து அழுந்தி இருக்க வேணும்!” ஆரணியின் குரல் கோபத்தோடு வந்தது.

“நீங்க சொல்லுறது சரிதான்…” இழுத்த மீரா, “நான் இப்ப என்ன சொல்ல வந்தன் எண்டா, அந்தப் பெண்ணையும் அவரிட மகளையும் அம்மாக்கு நல்லாவே தெரியுமாம்.”

“ஓ!” சகோதரிகளின் குரல் இணைந்து வந்தது.

“ஆரடி? நமக்கும் தெரியுமா?” ஆவலோடு கேட்டாள், ஆரபி.

அதற்குப் பதில் சொல்லாது தொடர்ந்தாள், மீரா.

“அந்தப் பிள்ளைக்குத் தன்ர அப்பா வேறொரு ஆள் எண்டோ, அதிலும் இப்பிடியானவன், உயிரோடவும் இல்ல எண்ட விபரமெதுவுமே தெரியாதாம். இப்ப இருக்கிறவர்தான் தன்ர அப்பா எண்டு நினைச்சுக்கொண்டு இருக்கிறாவாம்.”

“அடக்கடவுளே!” இதுவும் ஆரபி தான்.

“அதுவும் நல்லது தானேடி? அவனப் பற்றித் தெரிஞ்சு தான் என்ன பிரயோசனம்? இப்பச் சந்தோசமா இருக்கினம் தானே? பிறகென்ன?” என்றாள் தொடர்ந்து.

“இல்ல ஆரபி, நான் என்ன நினச்சன் எண்டா, இந்த உண்மையெல்லாம் அந்தப் பிள்ளைக்குத் தெரிய வந்தா அந்தப் பிள்ளேட மனநிலை என்னவா இருக்கும் சொல்லு பார்ப்பம்?”

இதைக் கேட்டபோது மீராவின் குரல் நடுங்கியதை அவளே உணர்ந்தாள்.

இதற்காகத்தானே வீடியோவைப் போடாதிருந்தாள். அவள் முகம் மொத்தமாகப் பதற்றத்தைப் பூசியிருந்தது. முகத்தில் அரும்பிவிட்ட வியர்வையைக் குளிர்ந்து கிடந்த கரத்தால் துடைத்துக் கொண்டவளின் மனதின் நடுக்கத்தைப் பிரதிபலித்தன விரல்கள்.

“என்னடி நீ? சம்பந்தம் இல்லாமல் கதைக்கிற?”

இதுவரை அமைதியாக இருந்த ஆரணிதான் குறுக்கிட்டாள்.

“அந்தப்பிள்ளேட மனநிலை எப்பிடி இருந்தாலும் நமக்கென்ன? நாம உன்ர பிரச்சினையைப் பார்ப்பம்.”

‘விசயத்துக்கு வா…’ எனும் ரீதியில் இருந்தது, ஆரணியின் குரல்.

“இல்லடி…சொல்லன். எனக்கு இதெல்லாம் கேட்டதிலிருந்து இதே யோசன. இப்ப இருக்கிறவர் தன்ர அப்பா இல்லையெண்டு தெரியவந்தா அந்தப்பிள்ளைக்கு எப்பிடி இருக்கும்? இத்தின நாட்கள் இதை ஏன் என்னட்டச் சொல்லேல்ல எண்டெல்லாம் சண்டை போடுவாவோ!”

“இவள் என்ன? யாரோ எவரோ அவே பற்றிக் கவலைப்படுறாள்?” ஆரணி, அருகிலிருந்த ஆரபியிடம் முணுமுணுத்தாள்.

“உண்மைதான்!” சகோதரியை ஆதரித்தவள், “அதுசரி; உனக்கு உன்ர விசயத்தைப் பற்றிய யோசனையில்ல. ஊரான் பற்றித்தான் இப்ப முக்கியம்!” எரிச்சலோடு சொன்னாள், ஆரபி.

“ஒருவகையில பார்த்தால் அந்தப் பிள்ளை ஊரார் இல்லையே! ஜோரிக்கிட தங்கச்சிதானே? அதுவோ என்னவோ, எனக்கு அந்தப் பிள்ளேட மனநிலை எப்பிடி இருக்கும், இருக்க வேணும் எண்டு அறிய ஆவலாக இருக்கு!” மீராவும் விடேன் என்று நின்றாள்.

“ஓ! அப்பிடிப் போகுதோ கதை?” ஆரபியின் குரலில் நக்கல்!

“இங்க பார் மீரா! விளையாடாத! வீட்டில உறுதியாச் சம்மதம் சொல்லேல்ல எண்டா வீணாக் கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாத!” எப்போதும் போலவே பெரியவளாகக் கண்டித்தாள், ஆரணி.

‘ஜோரிக்கின் சொந்தம் என்ர சொந்தம் எண்டு சொல்லுறாளே! அந்தளவு உறுதியா இருக்கிறாளே!’ என்றதே அவளுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது.

வீட்டில் ஒருமனதாகச் சம்மத்தித்தால் வேறு கதை. அப்படியில்லை என்றால் வீண் குழப்பங்களும் மனக்கஷ்டங்களும் வருமே என்கின்ற பயம் அவளுள்.

ஒரு நிமிடம் சத்தமில்லாது இருந்தாள் மீரா. அவள் மனதில் ஜோரிக் தான் வந்து போனான்.

‘ஆரணி, ஆரபிக்கு உண்மை தெரிஞ்சு வீட்டில எந்தப்பிரச்சனையும் இல்லாமல் அமைதியடைஞ்சு விடுவீனம் எண்ட நம்பிக்கை எனக்கிருக்கு!

ஆனால்…நம்மட கலியாணம்… பச்! அது ஒண்டும் அவ்வளவு சுலபம் இல்ல. அதுதான், நீயே ‘வேணாம் போயிரு!’ என்று சொல்லீட்டாயே, பிறகென்ன!’ மனம் முணுமுணுக்க, சூடாக இமைகடந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டவள், திரையில் தெரிந்த மைத்துனிமாரோடு உரையாடலைத் தொடரத் தயாரானாள்.

அப்போதும், ‘அவ்வளவு சுலபமா என்னட்ட இருந்து தப்பேலாது! நினைவில வச்சிரு!’ மனதுள் இருந்தவனுக்கு எச்சரிக்கை பறந்தது.

“என்ன மீரா சத்தமே இல்லை?” ஆரணி.

“ம்ம்…ஒண்ணுமில்ல. சரி, நீ சொல்லு பார்ப்பம், இப்ப உண்மை தெரிஞ்சா அந்தப்பிள்ள என்ன செய்யும் எண்டு நினைக்கிற?”

அவள் மீண்டும் இப்படிக் கேட்டதும் ஆரணியின் முகத்தில் யோசனை!

அதே யோசனையோடு சகோதரியைப் பார்த்தாள்.

“நமக்கு ஏன் மற்றவேண்ட கதை எண்டு சொன்னாலும் விடுற இல்ல நீ!” என்ற ஆரபி, “இதில அந்தப் பிள்ள கோபப்படவோ கவலைப்படவோ என்ன இருக்குச் சொல்லு பார்ப்பம்?” என்றாள்.

“அதுதானே மீரா! என்னைக் கேட்டாச் சந்தோசப்பட வேணும் எண்டு சொல்லுவன். செத்தவன் ஒண்டும் நல்லவன் இல்லையே! அதனால எப்பிடிப் பார்த்தாலும் அவன நினைச்சுக் கவலைப்படமாட்டா எண்டுதான் நினைக்கிறன்.

அதுவும், தாயில பாசமிருந்தால், துளியும் அப்பிடியெல்லாம் நினைக்க ஏலாது.

ஆனால், இப்ப இருக்கிற அப்பாவோட நல்ல உறவில்லை எண்டா ஒருவேள, ‘நம்மட அப்பா இருந்திருந்தால்…’ எண்டு நினைப்பாவோ எண்டு இருக்கு!” யோசனையாகச் சொன்னது ஆரணிதான்.

“அதைத்தான் நானும் நினச்சன் ஆரணி.” மீண்டும் இழுத்த மீரா, சட்டென்று வீடியோவை இயக்கவும், ஆரணியின் கணவன் சந்துரு வந்து சேரவும் சரியாக இருந்தது.

திரையில் அவனைக் கண்டதும், “ஹாய் சந்துருண்ணா!” என்றாள் மீரா.

“அதுசரி, இவ்வளவு நேரமா நானொருத்தன் அப்பிடியும் இப்பிடியும் நடந்து திரிஞ்சன்; கண்ணில விழேல்ல போல!” என்றபடி, ஆரபியின் அருகில் வந்தமர்ந்தான், அவள் கணவன் ராகுல்.

முறுவலோடு வந்து மனைவியின் அருகில் அமர்ந்துகொண்டான், சந்துரு!

“எப்பிடிச் செல்லக்குட்டி இருக்கிற? ஃபோன் பண்ணினா எடுக்கிற இல்ல எண்டு உன்ர மச்சாள்மார் ஒரே புறுபுறுப்பு!(முணுமுணுப்பு) கூடை கூடையாத் திட்டினது கேட்கேல்லையா உனக்கு?”

சித்தியின் மகள் என்றாலும், சொந்தத்தங்கை என்றே எண்ணுபவன் கடித்ததில், மீராவின் முகம் முறுவலைத் தொட்டுச் செல்ல, ஆரணி ஆரபியோ யோசனையோடு அமர்ந்திருந்தார்கள்.

வழமையாக இப்படிச் சிறிதாகத் தான் தொடங்கினாலே எகிறும் மீராவின் அமைதி சந்துருவைத் தாக்கி அவளை உற்றுப் பார்க்க வைத்தது என்றால், மனைவியும் ஆரபியும் இருக்கும் விதம் வேறு அவன் நெற்றியைச் சுருங்க வைத்து.

“ஏய் மீரா! என்ன ஒரு மாதிரி இருக்கிற?” கேட்டவன், அருகிலிருந்த மனைவியின் தோளில் இடித்து, ‘என்ன?’ என்பதாகப் பார்த்தான்.

அவளோ அப்படியே இருந்தாள். இப்போ என்னவென்று சொல்வதென்ற குழப்பம் அவளுக்கு!

‘இன்னும் கொஞ்ச நேரத்தில ஏர்போர்ட் போக வேணுமே! அப்பிடியிருக்க, இதையெல்லாம் இப்ப எடுத்துச் சொல்லியிருக்கிறாள் எண்டால்?’ ஆரணியின் மனதில் இதுதான் என்று வரையறை செய்யமுடியாத ஒரு உணர்வு!

ஆரபியின் கணவன் பின்பக்கமாகச் சாய்ந்து, “சந்துரு!” அழைத்தான்.

“ம்ம்…” என்று திரும்பியவனிடம், “இப்பக் கொஞ்ச நேரமா இதுதான் நடக்குது! அந்தம்மா அந்தப் பக்கமிருந்து எதையோ குசுகுசுக்க, இவே இந்தப் பக்கம்… அப்பிடி என்ன ரகசியமோ! என்னை நெருங்கவே விடேல்ல.” ஆரபியின் தோளில் இடித்தான், அவன்.

அவளோ அவனை முறைத்தாள். “மனிசர் இருக்கிற விசருக்கு நீங்க வேற!” என்று சொல்லவும் செய்தாள்.

சட்டென்று சந்துருவின் பார்வை மீராவிடம் செல்ல, “மீரா என்னம்மா? அங்க ஏதாவது பிரச்சினையா? உன்ர முகமேன் இப்பிடி இருக்கு? அழுதியா என்ன?” என்றபடி, முன்னால் வைத்திருந்த கைபேசியை எடுத்து அவளை உற்றுப் பார்க்க, அவளோ கேவி விட்டாள்.

“மீரா! முதல், என்ன நடந்திச்சு எண்டு சொல்லு பார்ப்பம்!” இப்போ சந்துருவின் குரலில் அதட்டல்.

“மூண்டு பேரும் முகத்தத் தூக்கி வச்சுக்கொண்டிருந்தா என்ன அர்த்தம்? நாங்கள் என்னெண்டு நினைக்கிறது?” தொடர்ந்து கோபமடைந்த தொனியில் கதைக்க, சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டாள், மீரா.

“அண்ணா அப்பிடியெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. இப்ப நான் எடுத்ததே நீங்க இங்க வர முதல் உங்களிட்ட ஒரு முக்கியமான விசயத்தச் சொல்லத்தான்!” என்றவள் பார்வை நால்வரையும் தவிப்போடு பார்த்தாலும்,

“கொஞ்ச முதல் ஜோரிக்கிட அப்பாவைக் கலியாணம் செய்து விலகின பெண் எண்டு ஒருவரைச் சொன்னனே ஆரணி…” அவர்களிடம் பார்வையைப் பதித்தாள்.

“ம்ம்…நீ அந்தக் கதையை விட மாட்டன் எண்டு நிக்கிற. சொல்லு, அவருக்கு என்ன?” ஆரணியின் குரலில் அடங்க மறுத்த எரிச்சல்.

“அவவை நமக்கு நல்லாவே தெரியும்!”

“என்ன?” ஆரணியின் நெற்றி சுருங்கியது.

“நமக்குத் தெரியுமா? ஆர் ?” ஆரபியின் முகத்தில் குழப்பம்.

“அவர்…அவர்..” என்னதான் துணிவாகச் சொல்ல முயன்றாலும் முடியாது தடுமாறினாள், மீரா.

“சந்துரு அண்ணா! நீங்க இங்க வர இதெல்லாம் தெரியத்தான் போகுது! சொல்லப் போனா உங்களுக்குத் தெரிஞ்சப் பிறகு என்ன மாதிரி அதை எடுத்துக் கொள்வீங்க எண்ட பயம் எல்லாருக்கும் இருக்கு! குறிப்பா மாமா…மாமா பாவம். நிறையவே குழம்பிப் போயிருக்கிறார்.”

“அப்பாவுக்கு என்ன? ஏன் குழம்பி இருக்கிறார்? இப்பக் கொஞ்ச முதலும் கதைச்சனே!” படபடத்தாள், ஆரபி.

“இங்க பார் மீரா, ஏதாவது சொல்ல வந்தால் சட்டுப்புட்டெண்டு சொல்லீட்டுக் கதையை முடி! நீ எப்பவும் அப்பிடித்தானே? இதென்ன புதுப்பழக்கம்?” அதட்டினாள், ஆரணி.

“இல்ல…சொல்லுறன்; அந்தப்பெண்ணுக்கு ஒரு மகள் இல்ல; இரட்டையர்!” என்றவளின் ஆட்காட்டி விரல் உயர்ந்து ஆரணி ஆரபியைச் சுட்டி நின்றது.

“இவள் என்ன சொல்லுறாள்?” சந்துரு வாய்விட்டே சொல்ல, “என்ன மீரா சொல்லுறீர்?” ஆரபியின் கணவன் சந்தேகம் கேட்க, “நீ…நீ என்னடி சொல்லுற? ஆரபி இருந்த இடம் விட்டெழ,

“உனக்கு என்ன விசரே மீரா? அலட்டுற!” உச்சஸ்தானியில் சீறியபடி எழுந்தாள், ஆரணி.

“இல்ல ஆரணி, நான் சொல்லுறது உண்மை. இப்பதான் எனக்குத் தெரியும்.; ஜோரிக்கிட பாட்டி ஹெலன் சொன்னவர். அண்டைக்கு, அப்பாவையும் அப்பம்மாவையும் கண்டுட்டுத்தான் அவன் கலியாணத்தில இருந்து எழும்பிப் போயிட்டானாம்.” என, மீரா சொன்னதை கேட்கும் நிலையில் இருக்கவில்லை ஆரணி, ஆரபி.

தொப்பென்று அமர்ந்து கொண்டவர்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்திருந்தார்கள். இருவர் கண்களிலிருந்தும் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

 

error: Alert: Content selection is disabled!!