ரோசி கஜனின் மீரா 19 – 3

“களைச்சுப் போய் வந்திருக்கீனம் ராசா, நாளைக்குக் கதைக்கலாம் எண்டு அப்பா சொன்னவர். நீ வா.” என்று தாய் சொன்னதிற்கு அமைதி காத்தான், அவன்.

எப்போதடா இந்த விசயம் எல்லோருக்கும் தெரிந்து, ‘ப்பூ’ இதெல்லாம் அப்படி என்ன பெரிய விசயம் என்று ஒன்றுமே இல்லையென்றாகும் என்றிருந்தது அவனுக்கு! உண்மையும் அதுதானே!

அதைத் தாயிடம் சொல்லவில்லை. “இன்னும் கொஞ்சத்தில வாறன் மா. என்னட்டத் திறப்பு இருக்குத்தானே, நீங்க தூங்குங்க!” என்று சொல்லிவிட்டான்.

அதன் பின்னரே, கணவரைத் தேடி வந்தார், மதுரா.

கணவர் இப்படித்தான் இருப்பார் என்பதை எதிர்பார்த்தார் தான். இயலாமை ஏற்படுத்திய நெடுமூச்சுடன் அவரை நெருங்கி, அருகில் அமர்ந்து கொண்டார்.

திடீரென்று அருகில் ஆளரவம் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் கார்த்திகேயன். அவர் விழிகளின் கலக்கம் மதுராவையும் கலங்கச் செய்தது.

“என்னப்பா இது? எவ்வளவுதான் சொன்னாலும் தேவையில்லாம ஏன் உங்கட மனசப் போட்டுக் குழப்பிக் கொள்ளுறீங்க?” குரலே எழவில்லை அவருக்கு!

“இல்ல ராது, குழம்ப எல்லாம் இல்ல. சும்மா தான் இருந்தன்.” அழகாகச் சமாளிக்கப் பார்த்தார், கார்த்திகேயன்.

“பிள்ளைகள் தூங்கப் போய்ட்டீனமா? ஆதவ் வந்திட்டானா?” தொடர்ந்து கேட்ட கணவரின் தோளில் சாய்ந்து கொண்ட மதுரா, அவரின் இடக்கரத்தைப் பற்றியபடி மௌனம் காத்தார்.

வார்த்தைகளால் கதைத்து கதைத்துக் களைத்துப் போன விசயங்கள் தானே? மனங்கள் ஒன்றுடன் ஒன்று உரையாட இருவரும் இருந்த நிலைபார்த்து, விரைந்து வந்த ஆரணி, ஆரபி சட்டென்று நின்றார்கள்.

அன்னை, தந்தையை மகிழ்வாக மட்டுமே பார்த்து வளர்ந்தவர்களுக்கு, அவர்களின் இத்தளர்ந்த, தவிப்பான தோற்றமோ காணச் சகிக்காததாக இருந்தது.

‘எண்டைக்கோ நடந்து முடிஞ்ச விசயங்களில இவேட தப்பென்று என்ன இருக்கிது? அதிலும் அப்பா பெருமைப்பட வேணும் எல்லா? அப்படியிருக்க, இவ்வளவு தவிப்பும் துடிப்பும் ஏனாம்?

இத்தனையும் எங்களில கொண்ட சந்தேகத்தால வந்தது தானே?

விளங்கிக் கொள்ள முடியாதவர்களா நாங்க ரெண்டு பேரும்? என்ர மகள்கள் இதைக் கேட்டாப் புரிஞ்சு கொள்ளுவீனம். அவே என்ர மகள்கள் எண்டு நெஞ்சை நிமிர்த்திச் சொல்லியிருக்க வேணாமா? அவே என்ன நினைப்பீனமோ எண்ட சந்தேகம் அவர்ட மனசில எப்பிடி வரலாம்?’

இந்த எண்ணமே, சகோதரிகள் இருவருக்குமே மிகுந்த மனத்தாங்கலைக் கொடுத்தது. ஏன்? தந்தையில் கோபத்தையும் உண்டு பண்ணியது.

மீரா சொல்லி இந்த விசயம் கேள்விப்பட்டதில் இருந்து கலங்கி, கசிந்து, தேறி, சமாதானம் அடைந்து, தவிக்கும் பெற்றோரைச் சமாதானம் செய்யும் திடத்தோடு வந்த இருவருள்ளங்களும் மீண்டும் கனத்துப் போயிற்று!

இந்த நரக வேதனைக்கு முற்றுப் புள்ளியிடாது காலம் தாழ்த்துவதா?

தம்முள் பார்த்துக்கொண்ட சகோதரிகள், கசியும் விழிகளைத் துடைக்கும் எண்ணமின்றியே தந்தை, தாயை நெருங்கினார்கள்.

இவர்களின் பாத ஒலியில் சட்டென்று அங்கே போனது கார்த்திகேயன் மதுராவின் பார்வை. மகள்களைக் கண்டதும் நிமிர்ந்தமர முயல்கையில், “அப்பா!” என்ற கேவலோடு ஓடிவந்து கட்டிக் கொண்டார்கள், இருவரும்.

கார்த்திகேயனை ஆரணியும் மதுராவை ஆரபியும் இறுகக் கட்டிக்கொண்டு, அவர்களின் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டவர்கள், அழுகிறார்கள் என்றது அவர்களின் உடலசைவு.

பதறிப் போனார்கள் மதுராவும் கார்த்திகேயனும்.

“ஆரணி! என்னாச்சம்மா?

“இங்க பார் ஆரபி! செல்லம் என்னடா?” இருவர் குரல்களிலும் தெளிவான நடுக்கம்.

அதையுணர்ந்த மகள்களுக்குள்ளோ கோபம் கொப்பளித்தது.

விசுக்கென்று தலையை உயர்த்தி, கண்ணீரில் மிதக்கும் விழிகளால் தந்தையைப் பார்த்தாள், ஆரணி. அந்தப் பார்வை அவரைச் சாடி நின்றது. கார்த்திகேயன் மனதுள் துணுக்கிட்டு விட்டார்.

‘பிள்ளைகளுக்குத் தெரிஞ்சிட்டுதோ! எப்பிடி? கொஞ்ச முதல் தூங்கப் போகும் வரைக்கும் சாதாரணமாத்தானே இருந்தவே? நான் தான் கவனிக்கேல்லையோ!’ மின்னலாக, மனம் அலறியது.

மனைவியைப் பார்க்க, மதுராவின் பார்வையோ ஆரபியில்!

அதைத்தொடர்ந்து சின்னமகளைப் பார்த்த கார்த்திகேயன், அவளும் தன்னை அதே கோபப்பார்வை பார்ப்பதைக் கண்டு, ‘இவேக்கு விசயம் தெரிஞ்சிட்டு.’ முடிவே செய்துவிட்டார்.

ஆனாலும் சமாளிக்க முயன்றார். “என்னம்மா இப்படிப் பார்க்கிறீங்க? அப்பாவில என்னமோ கோபம் போலக் கிடக்கே!” இதைச் சொல்கையில் அவர் குரல் தழுதழுத்துவிட்டது.

“கோபமா? உங்…க…ள…” ஒரே நேரத்தில் இரு மகள்கள் கரமும் கார்த்திகேயனின் கழுத்தை நெரிப்பது போல வளைத்துக் கொண்டன. அழுத்தமும் கொடுத்தன.

அதற்கு எதிர்மாறாக அவர்கள் விழிகளோ தாரை தாரையாகக் கசிந்தன!

பிறந்ததில் இருந்து சிறு விழிக்கசிவுக்கும் அனுமதியாத தந்தையின் மனதில், இப்படியொரு சந்தேகம் வரலாமா என்ற ஏக்கமே, கோபமாக விழிகளால் உருண்டு தெறித்தது.

“எப்பிடிப்பா? அப்பிடியெல்லாம் ஒரு சந்தேகம் உங்களுக்கு வரலாமா?” அழுகையில் திணறியபடி கேட்டாள், ஆரணி. இதைக்கேட்ட தாய், தந்தை தான் குழம்பிப் போனார்கள்.

“என்ன…சந்தேகமா?” தன்னையும் மீறி வார்த்தைகளை உதிர்த்தவர், மனதிலோ, ‘வேற ஏதாவது பிரச்சனையோ!’ பதற்றம் கொண்டது போலவே, மதுராவினுள்ளும் எண்ணமோடியது.

அவர் பார்வை கணவர் விழிகளை உராய்ந்தது, பதற்றத்தோடு!

“என்ன எண்டு சொல்லுங்கம்மா? இப்பிடித் திடுதிப்பெண்டு வந்து சொன்னால் நாங்க என்ன எண்டு நினைக்கிறது? அப்பா சும்மாவே குழம்பிப் போயிருக்கிறார்.”

தன்னையும் மீறிச் சொன்ன தாயையும் சேர்த்து முறைத்தனர்.

“என்ன எண்டு எங்களிட்டக் கேட்டால்? அதை நீங்க தானே சொல்ல வேணும்!” ஒரு மாதிரிக்குரலில் சொன்னாள், ஆரபி.

அவள் அப்படியெல்லாம் கதைப்பவள் இல்லையே! அதிரக் கூடக் கதைக்க மாட்டாள்.

“பச்! அவே தான் இழுத்தடிக்கினம் எண்டா நீயுமா ஆரபி?” கணீரென்று வந்தது ஆரணியின் குரல்.

“எங்களுக்கு மீரா எல்லாம் சொல்லிப்போட்டாள்!” தொடர்ந்து சொன்ன ஆரணியின் கோபப்பார்வை அவள் தந்தை மீது!

அவர் விழிகள் அதிர்வைக் காட்டிய வேளையில் உடலில் ஓடிய நடுக்கத்தை இவர்களால் உணர முடிந்தது.

மகள்களின் பார்வையைத் தாங்க முடியாது தம்முள் பார்த்துக் கொண்ட கார்த்திகேயன், மதுராவுக்கு வார்த்தைகள் வராது தடுமாறியது.

‘இவேக்குத் தெரிஞ்சிட்டா?’ அவர்கள் யோசித்த கணம் மகள்கள் இருவரும் கார்த்திகேயனின் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டார்கள்.

அவரையும் அறியாது எழுந்த கரமிரண்டும் மகள்களின் தலைகளைக் கோத சிறுபொழுது அங்கே பேச்சுக்கு இடமிருக்கவில்லை.

“எங்களுக்கு எல்லாம் தெரியும்” என்றபின், அவர்கள் பார்த்த பார்வையும் மடியில் குறண்டிவிட்ட விதத்திலுமே மகள்களின் மனம் புரிந்து போக, சடசடவென்று வெளியேறியது, கார்த்திகேயனின் மனச்சுமை.

‘ஓம்! இவே என்ர குழந்தைகள்!’ பிறந்த குழந்தைகளை கையில் ஏந்திக்கொண்ட தருணம் மனதில் வலம் வர, அவர் விழிகள் குளம் கட்டிவிட்டன.

உணர்வுகளின் சலசலப்பு கண்ணீருக்கு வடிகால் அமைத்துக்கொடுக்க, கன்னத்தால் வழிந்த கண்ணீர்த்துளிகள் மகள்களின் கன்னம் பட்டுத் தெறித்தது.

“ப்பா!” பதறிக்கொண்டெழுந்தனர், இருவரும்.

அவர் கண்களைத் துடைத்த மகள்களின் கண்களிலும் பிரவாகம் தான்.

“நீங்க எங்கட அப்பா! நாங்க பிறக்கேக்க பக்கத்தில நீங்க நிண்டு பட்ட பாடுகளை அம்மா சொல்லியும் ஃபோட்டோவில பார்த்தும் நாங்களே உங்களைப் பகிடி பண்ணியிருக்கிறமே!” விசும்பலோடு சொன்னபடி அவர் நெஞ்சில் சலுகையோடு ஒன்றினாள், ஆரபி.

“தவிப்போட நிண்டு எங்களக் கைகளில வாங்கிக் கொண்டபோது எதையோ வென்றுவிட்ட மாதிரி சந்தோசத்தைப் பிரதிபலித்து…அதெல்லாம் பொய்யெண்டு சொல்ல முடியுமாப்பா!

எங்கட அப்பா நீங்க இல்லை எண்டு சொல்ல ஏதாவது ஒண்டு இருக்கா சொல்லுங்கோ பார்ப்பம்?

ம்ம்… இவர் எங்கட அப்பா எண்டு சொல்ல எங்களிட்ட இலட்சம் இலட்சமான தருணங்கள் இருக்கப்பா! அப்படியிருக்கேக்க உங்களுக்கு ஏனிந்த வேண்டாத கவலை?”

ஆரணியின் தலையும் அவர் நெஞ்சில் இடம் பிடித்துக்கொள்ள, கணவரையும் பிள்ளைகளையும் அணைத்தபடி தானும் சாய்ந்தார், மதுரா!

இப்படி, சுமக்க முடியாத கனம் என்று நினைத்தது ஒரு விசயமே இல்லை என்று ஊதிவிட்டு, நால்வரும் பாசத்தில் கட்டுண்டிருக்க, “அதெப்படி என்னை மட்டும் மறக்கலாம்? ம்ம்..” கேட்டபடி, பாய்ந்து வந்து கட்டிக் கொண்டான், ஆதவ்.

“டோய்! ஏன்டா இப்படி வந்து விழுற?” என்று ஆரணியும்,

“பெரிய படிப்பாளிக்கு இப்பதான் எங்கள நினைவு வந்திச்சோ!” என்று ஆரபியும்,

“குஞ்சன் பார்த்துடா! அம்மாட கால்…” என்று மதுராவும் சொன்னாலும் ஐவரும் ஒன்றாகக் இறுகக் கட்டியணைத்துக் கொண்டனர்.

ஐவர் விழிகளும் கண்ணீரைச் சிந்தினாலும், கசியும் விழிகளுக்குப் போட்டியாக மலர்ந்திருந்தன, அவர்களின் வதனங்கள்!

இந்த அழகிய காட்சியைக் கண்ணுற்றதும், முன் வாடிக்கிடந்த அச்சூழல் சீரான சுவாசம் கிடைக்கப் பெற்றுத் தானும் மலர்ந்து மணத்தது.

 

error: Alert: Content selection is disabled!!