ரோசி கஜனின் மீரா 2- 1

2

 

 

பெண்கள் ஒரு புறம் நகர, ஆண்கள் புறமாகச் சென்ற ஆதவன், நிரூஜன், சதீஷ் மூவரும் மீண்டும் அந்தக் கார்க்காரனைச் சந்தித்தனர்.

நேருக்கு நேராக வந்தவனைப் பார்த்து மெலிதாக முறுவலித்தார்கள், ஆதவனும் நிரூஜனும். அவனோ, வெடுசுடு பார்வையோடு கடந்து சென்றான்.

“சில்லறையாக இல்ல நிரூஜ், உங்களிட்ட ஐம்பது சதம் இருக்கா?” கழிப்பறைக்குள் செல்ல டிக்கட் எடுப்பதில் கவனமாக நின்ற சதீஷ், அக்கார்க்காரனின் பார்வையையோ, அவன் சென்ற தோரணையையோ அவ்வளவாகக் கவனிக்கவில்லை.

“இந்தா என்னட்ட இருக்கு மாமா!” காசைக் கொடுத்த ஆதவனும் நிரூஜனும், ஒரு தோள் குலுக்கலோடு அக்கார்காரன் பற்றிய எண்ணத்துக்கு விடுதலை கொடுத்துக்கொண்டனர்.

ரெஸ்ட் ரூமிலிருந்து முதலில் வந்த மீரா, “அப்பா, எனக்கு ஒரு டோஸ்ட். ம்ம்… வேற…மங்னம் ஐஸ்…”

படபடவென்று தனக்கு வேண்டியதைத் தெரிவு செய்ய, ஆரணி, ஆரபியும் சேர்ந்து கொண்டார்கள்.

“எங்களுக்கு ரெண்டு பேருக்கும் பனீர்.” ஆதவ், நிரூஜும் தமக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டார்கள். தமக்கும் கார்த்திகேயன் மதுராவுக்குமாகத் தேவையானதை வாங்கிக்கொண்டார், நித்தி.

“காரில வச்சே சாப்பிடலாம் வாங்க.” காசைக்கொடுத்துவிட்டு நடந்தார், சதீஷ்.

கலகலத்துக்கொண்டே நகர்ந்தவர்கள், அங்கு, ஒரு ஓரமாகக் கிடந்த சிறு வட்டமேசையில் அமர்ந்திருந்தவனைக் கண்டும் காணாதவர்களாகக் கடந்து செல்ல, மீராவால் மட்டும் அது முடியவில்லை; மிக இயல்பாகப் பின்தங்கினாள்.

அதுவரை, அவர்கள் அங்கு நின்று சலசலத்ததைப் பார்த்தும் பாராது தனது டோஸ்டியை உண்டு கொண்டிருந்தான், அவன்; அதே கார்க்காரன்தான். இப்பொழுதும், அவர்கள் அந்தப்பக்கமாக வருவதைப் பார்த்துவிட்டுச் சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான். இருந்தும், கடைசியாக வந்த மீரா தன்னருகில் மெல்லத் தயங்கியதும் தன்னையும் அறியாது தான் திரும்பிப் பார்த்தான்.

அவனையே பார்த்தபடி வந்த மீராவின் பார்வையும், அவன் பார்வையும் சரேலென்று மோதிக்கொண்டன.

அவனின் சுளித்த புருவங்களிடையே பளிச்சிட்ட கடும் பார்வையை, அசட்டையாக எதிர்கொண்டன, இவளின் அழகிய விழிகள்.

அவற்றில் எப்போதும் துள்ளித்திரியும் வேடிக்கையும் குறும்பும் தற்காலிக விடுமுறை பெற்றிருக்க, அவ்விடத்தில் மினுமினுங்கியது கோபமேதான்!

பார்வையில் கோபத்தை வெளிப்படுத்திவிட்டு நகர்ந்து செல்லவில்லை, அவள்.

‘யாரோ எவனோ! முன்னப்பின்னப் பார்த்ததில்ல. பழகியதில்ல. எந்தவித அறிமுகமோ, உறவோ, பகையோ எண்டு எதுவுமேயில்ல. அப்பிடியிருக்கேக்க, காரில சாஞ்சு நிண்ட மகாப் பொல்லாத குற்றத்துக்காக எங்கட குடும்பத்த இழுத்து, ஒரு வார்த்த எண்டாலும் சொல்லுறதா?

அதுவும், அந்தச் சின்ன விசயத்துக்கு அப்பாவும், மாமாவும் எவ்வளவு பதற்றத்தோட மன்னிப்புக் கேட்டவே?

அதைக் கொஞ்சம் சரி மதிச்சானா?

என்ன ஒரு இகழ்ச்சிப் பார்வை பார்த்தான்?

அட! எங்களோட நிண்டு கதைச்சா பைத்தியம் என்று நினைப்பீனமாமே!

நல்ல பகிடிதான் போ!

அப்பிடி, இவன் என்ன பெரிய கொம்பனா என்ன?

ஏதோ நாங்க எல்லாரும் கட்டவிழ்த்துத் திரியிறது போலவும், அதனால இந்த ஊருக்கே நட்டம் போலவும், இவன், ஒவ்வொருவருக்கும் பின்னால அலைஞ்சு திரிஞ்சு படாத பாடுபட்டு ஊரைக் காத்து எங்களையும் திருத்தப் போறது போலவும்…’

கடகடவென்று அடிக்குரலில் கூவிய மனதோடு நாக்கும் புரள, வார்த்தைகள் ஏற்ற இறக்கங்களுடன் துள்ளி வந்தன.

“முழியப் பாரு முழிய!” மெல்ல முணுமுணுத்த வேகத்தில், “கொரில்லா! இலையும் குலையும் வச்சுக் கொறிக்குது! லூசு!” என்றாள்.

அவள் இப்படித் தமிழில் முணுமுணுத்து அவன் முகத்தைச் சுருங்கச் செய்தது.

எதுவோ தனக்குத்தான் சொல்கிறாள், அதுவும் திட்டுகிறாள் என்று புரிந்தாலும் என்னவென்று விளங்கவில்லையே!

அவன் குறையறிந்துவிட்ட கணக்கில் நெதர்லாந்தில் படபடத்தாள் மீரா.

“முன்னப் பின்ன பழக்கம் இல்லாத ஆக்களப் பாத்து, குடும்பம் அது இது எண்டு பெரிய கதை கதைச்சிட்டாய் நீ!

ஏதோ நாங்க உன்னோட கதைக்க ஆசைப்பட்டு இழுத்து வச்சுக் கதைச்சது போல, எங்களோட கதைச்சா பைத்தியம் எண்டு நினைப்பீனமோ!

இவ்வளவும் ஏன்? காரில லேசாச் சாஞ்சு நிண்டதுக்குத்தானே? அந்த ஒண்டுக்கு இத்தின பாடா?”

வேண்டுமென்றே அவனை வெறுப்பேத்தும் நோக்கில் தொடர்ந்தவளை, ஒரே இழுவையில் வெளியில் இழுத்துச் சென்றிருந்தாள், ஆரபி.

“பின்னால வந்தவளைக் காணேல்லையே எண்டு பார்த்தால்…அவனோட என்னடி கதை? அடங்க மாட்டாய்டி எரும! இது இப்ப அம்மாவுக்குத் தெரியோணும், எல்லாருக்கும் சேர்த்துத்தானே பேச்சுவிழும்? நாம செய்ததும் பிழைத்தானேடி?”

மைத்துனியைத் திட்டிக்கொண்டே தள்ளிக்கொண்டு வர, மகளைச் சூடாகப் பார்த்தார், நித்தி.

நடந்தது அறிந்து, மதுராவிடம் வாங்கிக் கட்டமுன் அவ்வளவாகக் கோபப்படாத நித்தியிடமே வாங்கிக் கட்டிக்கொண்டாள் மீரா; நன்றாகத்தான்.

“யார் எவன் எண்டு தெரியாதவன், ஏதோ கோபத்தில சொல்லீட்டான்; அதை அப்பிடியே விட்டுட்டுப் போகாமல், திரும்பவும் ஏன் கதை வச்சுக் கொள்ளுற?

முதல், நீயும் செய்தது பிழை தானே? பிறகென்ன? நாங்க எல்லாருமே கண்டும் காணாத மாதிரி வர, நீ நிண்டு கதை வளர்க்கிற மீரா!”

தாயின் அன்பான கண்டிப்புக்கு, மிக அசட்டையாக ஒரு முறுவலைச் சிந்தினாள், மீரா.

“இங்க பாரும்மா, எல்லாமே பகிடியில்லை தெரிஞ்சுகொள்ளு!” கண்டிப்போடு ஆரம்பித்தார், நித்தி. அவளோ, முறுவலை அதிகரித்தாள்.

“காலம் கெட்டுக் கிடக்கு நித்தி. ஒண்டு கிடக்க ஒண்டு நடந்தால்? யார் எப்படிப்பட்டவன் எண்டு நமக்குத் தெரியுமா என்ன?”

அதட்டல் போட்டவருக்கு, மகளின் துடுக்குத்தனம் மனதுள் பதற்றத்தைப் பூசிச் சென்றது. இருந்தும், அன்பும் கண்டிப்புமாகச் சொல்லிக்கொண்டு வந்தவர், அவள் நாக்கை துருத்திக் காட்டித் தோள்களை ஏற்றியிறக்கிய அசட்டையீனத்தில், மிகையாகவே எரிச்சலுற்றார். மறுநொடி, மகள் தலையில் ஒரு கொட்டுக் கொடுத்தார்.

“ம்மா…தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைய இப்பிடியாக் குட்டுறது!?” தலையைத் தேய்ந்துக் கொண்டாள்.

“ஸ்ஸ்… நோகுது நித்தி, நோகுது! அதோட, ஊரே பாக்குது!” மீண்டும் திட்ட முயன்ற தாயைத் தோளோடு வளைத்துப் பிடித்துச் செல்லம் கொஞ்சியபடியே கார் நிறுத்தம் நோக்கி நகர்ந்தாள்.

அவள் தன்னருகில் வந்து நின்ற விதத்திலும், புரியாத மொழியில் படபடவென்று ஆரம்பித்து, பின் நெதர்லாந்தில் மல்லுக்கு நின்ற விதத்திலும் ஏற்பட்ட திகைப்பிலிருந்து விடுபட்டு, சூடாகவே பதில் கொடுக்க நினைத்தவனுக்கு அச்சிரமத்தைக் கொடுக்காது அழைத்துச் சென்று விட்டார்களே!

மனம் கோண அவர்களையே பார்த்திருந்தவன், அவள் திட்டு வாங்குறாள் என்பதைப் புரிந்து கொண்டதும் தன்னையும் மீறி முறுவல் செய்தான்.

இதுவரை அவன் கண்ட பெண்களுள் ‘இவள் சற்றே வித்தியாசமானவள்’ என்ற எண்ணமும், அந்த முறுவலோடு கைகோர்த்துக் கொண்டது.

 

ஃபெர்ரி கேட் திறந்து, கார்கள் மெதுவாக நகரத் தொடங்கின. அப்போதுதான், விறுவிறுவென்று வந்து தன் காருக்குள் நுழைந்தான், அவன். ஒரு முறைப்போடு அவனைப் பார்த்தாள், மீரா. அவனோ, இவர்கள் புறமும் பார்க்கவில்லை.

அவளும் தான் அவன் காரின் பக்கமே திரும்பக் கூடாதென்று பல தடவைகள் எண்ணிவிட்டாள். அது எங்கே? அவளையுமறியாது அவள் விழிகள் சதிச்செயலில் இறங்கினால் என்ன செய்வதாம்?

error: Alert: Content selection is disabled!!