ரோசி கஜனின் மீரா 2- 2

ஆரணி, ஆரபி பாராவண்ணம், அவர்களோடு அளவளாவியபடியே பல தடவைகள் அவன் கார்ப்பக்கம் போய் வந்தது, மீராவின் பார்வை.

இவளுக்கு, இப்படிக் கோபமும் தடுமாற்றமும் நிறைந்த தத்தளிக்கும் மன நிலையெல்லாம் முற்றிலும் புதிது. ஏதோ ஒருவகையில் அந்தச் சிடுமூஞ்சிக் கார்க்காரன் அவளைப் பாதித்தான்.

வேறு என்ன? அவளை, அவள் செய்கைகளை விமர்சித்திருக்கிறான்.

அதுவும் சும்மாவும் இல்லையே! மொத்தக் குடும்பமே என்னவோ அரை லூசுகள் போலவல்லவா அவன் பார்வையும் நடத்தையும் இருந்தன.

‘அப்பிடி இருக்கேக்க கோபம் வராம இருந்தால் தான் ஆச்சரியம்!’ மனதுள் சிடுசிடுத்தபடி இருந்தவள், “மீரா, இந்தத் தண்ணிப்போத்தல உன்ர பாக்குக்குள்ள வைக்க ஏலுமா?” என்று ஆரபி அழைத்ததில், அவன் பற்றிய எண்ணங்களில் இருந்து விடுபட்டுப் போனாள்.

அதன்பின், வரிசையாக நகர்ந்த கார்களைப் போலவே அவன் பற்றிய எண்ணமும் நகர்ந்து, ஓர் ஓரமாகித்தான் போயிற்று!

இப்படி, ஐவரும் ஒன்றாகப் புறப்பட்டுவிட்டால் போதும்; மாறி மாறிக் கலகலத்து ஒரு வழி பண்ணி விடுவார்கள்.

இம்முறை, கோடை விடுமுறையில் கார்த்திகேயனின் தந்தை வழியில் நெருங்கிய உறவில் திருமணமொன்று, ‘இலண்டனில்’.

ஒரு கிழமைக்கு முன்னரே புறப்பட்டவர்கள், அங்கு சுற்றித் திரிந்து விட்டு, திருமணம் முடிய, அப்படியே இரு கிழமைகள் ‘ஸ்காட்லண்ட்யார்ட்’ சென்றுவிட்டு, திரும்பி வரும் வழியில் டோவர் கஸ்டலையும் பார்த்துவிட்டு, இதோ, வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தும், சற்றும் அலுக்கவில்லை. ஒன்றரை மணி நேர ஃபெர்ரி பயணத்தையும் அனுபவிக்க ஆயத்தமாகினர்.

ஃபெர்ரியின் அடித்தளத்தில்…காரை நிறுத்தியதும் இறங்கிய வேகத்தில் “நாங்க மேலே போறம்; ஆதவ், நிரூஜ் வாங்கடா!” முன்னால் விரைந்தாள், மீரா.

ஆரணி, ஆரபியை விடச் சின்னவளாக இருந்தாலும் இப்படியான நேரங்களில் ஐவரையும் வழிநடத்துவது என்னவோ அவள்தான்.

நிறுத்தியிருந்த கார்களால் புகுந்து நடந்தவளைத் தொடர்ந்த மற்றவர்கள், “ஆரணி, ஆரபி, டெக் அஞ்சில கார் நிக்குது; அஞ்சு பேருமாக வந்து சேருங்க!” என்று, பின்னால் துரத்திய கார்த்திகேயனின் குரலைக் காதில் வாங்கிக்கொண்டே, உள்ளே நுழைந்து படிகளில் தாவியேறினார்கள்.

அவர்கள் அருகில் தான் அந்தக் கார்க்காரனும் காரை நிறுத்த வேண்டி வந்தது.

‘அதெல்லாம் முடியவே முடியாது. அந்தக் குரங்குப் பெட்ட(பெண்) திரும்பவும் வம்புக்கு வந்திட்டாலும் எண்டு சொல்லி, வேற இடத்தில நிப்பாட்டவா(நிறுத்தவா) ஏலும்?’

இப்படி எண்ணிக்கொண்டே காரை நிறுத்தியவன், அவர்கள் தடதடவென்று சென்ற விதம் பார்த்து என்ன வகையில் எண்ணுவதென்று தெரியாது அமர்ந்திருந்தான்.

‘ஒருவகையில பார்த்தால் இளவயசுக்கேயுரிய துடிப்பிது! இப்பிடியில்லையெண்டால் தான் விசனம் கொள்ளோணும். நீதான் எண்டைக்குமே இப்பிடி ஊர்ரென்று இருந்தாய் எண்டால் எல்லோரும் அப்பிடியா இருக்கோணும்?’ இடித்தது, அவன் மனசாட்சி.

‘சரி, உன்ர காரில சாஞ்சது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?’ தொடர்ந்து முணுமுணுத்த மனசாட்சி, அவன் முறைப்பில் அடங்கிக் கொண்டது.

‘ஓடுற காரில தலையை வெளியில நீட்டி, பல்லைக் காட்டிக்கொண்டு செல்ஃபி எடுக்க வேண்டியது, பிறகு எதுவும் நடந்தால் குய்யோ முறையோ என்று ஆர்ப்பாட்டம். பெரியவே எண்டு கூடவே வாறவே இதையெல்லாம் சொல்லக் கூடாதா?’ மனதுள் சிடுசிடுத்தான்.

மறுபக்கம் பார்த்தால், ‘சொல்லித் திருத்திற வயதா?’ எனும் எண்ணமும் எழுந்தது.

தொடர்ந்து கோபத்துக்கான காரணம் தேட முயன்றான். அதையும் தொடர முடியவில்லை.

“பச்! யாரோ எப்பிடியோ போகட்டும்!” சலிப்போடு அந்த எண்ணத்தை உதறிவிட்டுக் காரை விட்டிறங்கி உள்ளே நடந்தான்.

மீராவோ அவனை மறந்தே போனாள். உள்ளே சென்றவர்கள் கலகலத்தபடி ஒவ்வொரு தளமாக நகர்ந்து மேல்தட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

“ஹப்பா என்ன காத்து!” விரித்திருந்த கூந்தல் அப்படியே முழு முகத்தையும் மூட, காற்றுக்கு வாகாகத் திரும்பி நின்று தலையை ஒதுக்கினாள், மீரா.

“கா…தலைக்கு ஒரு பாண்ட் போடுங்கோவன்; முகத்தில எல்லாம் படுது.” அவள் கூந்தலை விலக்கிவிட்டு அப்பால் தள்ளி நின்றான், நிரூஜ்.

“சரிதான் போடா!” அவன் முதுகில் செல்லமாக மொத்திவிட்டு இவளும் நகர்ந்தவள், “இதில என்னைத் தனியா ஒரு ஃபோட்டோ ப்ளீஸ்!” ஆரணியிடம் கைப்பேசியைக் கொடுத்துவிட்டு அப்படியே நகர்ந்து சென்று, வாகாகக் கப்பல் கைப்பிடியைப் பற்றியபடி நின்றாள்.

இப்போது அவள் முகத்துக்கு அடித்த காற்று அவளின் அடர்ந்த சிகையை அப்படியே பின்புறமாக அலைய விட்டது.

“அழகா இருக்கப்பா அப்பிடியே நில்லும்!” என்றபடி, சில புகைப்படங்களை எடுத்த ஆரணியின் முகம் சட்டென்று நிறம் மாறியது.

பின்னால் ஒரெட்டு எடுத்து வைத்தபடி, “மீரா போதும்டி வா!” எனச் சொல்லிக்கொண்டிருக்கையில், தன் கூந்தலில் தொடுகையையும் மைத்துனியின் பார்வையையும் உணர்ந்து திரும்பிப் பார்த்தாள், மீரா.

அங்கே, தன் முகத்தில் மோதிய அவளின் முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட்டபடி விறைப்போடு நின்றான், அவன்; அதே கார்க்காரன்.

அவனைக் கண்டதும் ஒரு கணம்…ஒரேயொரு கணம் திக்கென்று ஆகிப்போனது இவளுக்கு!

‘இவன் எங்க இங்க? நான் கவனிக்காம நிண்டுட்டனோ! கடலைப் பார்த்துக்கொண்டு நின்றான் போல!’ மனம் படபடவென்று அடித்துக்கொண்டது.

மறுகணம், “சொறி! சொறி!” தாராளமாகச் சொன்ன வேகத்தில், ஆரபியின் கரத்தையும் பற்றிக்கொண்டு முன்னே சென்றுவிட்டவர்களை நாடி ஓடினாள்.

‘எப்பவுமே பக்கத்தில நிக்கிற மற்றவே பற்றி அக்கறையே இராது போல!’ என்று கோபத்தோடு கடிந்து கொள்ள முயன்றவன், அவள் மன்னிப்பு வேண்டிக்கொண்டு நகர்ந்த வேகத்தைப் பார்த்ததும் தன்னையும் அறியாது முறுவல் பூத்தான்.

“ஆள் வளர்ந்தால் போதுமா?” உதடுகள் முணுமுணுக்க, மீண்டும் கடல்புறம் திரும்பியவன், பரந்து கிடந்த கடலையும், சற்றே தொலைவில் தெரியும் மறுகரையான ஃபிரான்சின் ‘கலைஸ்’ துறைமுகத்தையும் கருத்தின்றிப் பார்த்திருந்தான்.

 

error: Alert: Content selection is disabled!!