20
“போயிட்டு வாறம் பா!”
மீண்டும் மீண்டும் செவிகளில் எதிரொலிக்கும் மகள்களின் குரல், எதிர்காலத்தில் அவர்களைக் காணப் போகும் தருணத்துக்கான ஏக்கத்தை உருவாக்கி நின்றது.
‘இந்தா, அம்ஸ்டர்டாம் விமான நிலையிலிருந்து விமானம் புறப்பட்டுச் சிலநிமிடங்கள் தான் ஆகியிருக்கும், அதுக்குள்ளயே இப்படியெண்டால்? இனி வரும் நாட்களின்ட கதி?’
முனகிய மனதிற்கு இதுதான் வாழ்க்கையின் நியதி எனப் புரியாதா என்ன?
‘உங்கட வாழ்க்கையில மறக்கவே முடியாத தருணம் எது?’ இப்படி, இவரிடம் கேட்டால், சற்றும் யோசியாது பதில் சொல்லிவிடுவார்.
‘தருணம் அல்ல தருணங்கள்… அதுவும் ரெண்டு!
முதல் முதல், பிறந்து சிலமாதங்களிலேயே என்ர மகள்கள் என்னட்ட இருந்து பிரிஞ்சு போயிருந்த அந்த ரெண்டு வருசங்கள்.
அடுத்து, என்ர மகள்களின்ட அன்பில், ஏன், என்னில நானே சந்தேகம் கொண்டுவிட்ட இந்த சில நாட்கள்!
என்ர வாழ்வில் இனி வரவே கூடாத தருணங்கள் இவை!’ என்று விடுவார் அவர்.
அந்தளவுக்கு இரு சந்தர்ப்பங்களுமே அவரை ஆட்டிப் பதம் பார்த்திருந்தன.
இன்றோ, மகள்களை கணவன்மாருடன் அவுஸ்திரேலியா அனுப்பி வைத்துவிட்டு, நிறைவு ஒருபுறமும் பிரிவின் பழு மறுபுறமுமாக நெஞ்சம் கனக்க வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கிறார்.
“பெற்றுப் பேணிக்காத்து வளர்க்கிற குழந்தைகள் எண்டைக்குமே நம்மோட இருப்பீனமா என்ன? அவே அவேட வாழ்க்கையைப் பார்க்க வேணாமா? ம்ம்..”
இவரின் மனநிலைதானே மதுராவுக்கும், வாய்விட்டே சொல்லிவிட்டார்.
அழுதழுது விழிகளும் நாசிநுனியும் போட்டியிட்டுச் சிவந்து வீங்கியிருக்க, ஏதோ காய்ச்சலில் கிடந்தவர் போலிருந்தார், மதுரா.
இத்தனைநாளும் கணவருக்கு ஆறுதல் சொன்னவர், இன்றோ, கட்டுப்படுத்த முடியாது தவிக்கிறார்.
தளம்பிய விழிகளைத் துடைத்த மனைவியைப் பரிவோடு பார்த்தார் கார்த்திகேயன். அவரின் வலக்கரம் நகர்ந்து மனைவியின் கரத்தை ஆறுதலாகப் பற்றிவிட்டுத் திரும்பியது.
“கொஞ்ச நாளில் நாம போய்ட்டு வருவம் ராது!”
தன் கலக்கத்தை மறைத்து மனைவியைச் சமாதானம் செய்ய முயன்றார்.
“அய்யோ! மாமா மாமி என்ன நீங்க? அதுதான் ஆரணி ஆரபிக்கும் சேர்த்து நானிருக்கிறனே! பிறகென்ன கவலை? நான் அப்பப்போ அவே ரெண்டு பேர் போலவும் நடமாடுறன். கவலைப்படவே வேணாம்.”
இந்த இடைப்பட்ட நாட்களில் தேவைக்கு மட்டுமே வாய்திறப்பதாக விரதம் இருக்கும் மீராதான் படபடத்தாள். அவள் குரலில், அவர்களைத் தேற்றிட வேண்டுமென்ற ஆவல்!
திரும்பி, மருமகளைப் பார்த்து மென்மையாக முறுவலித்தார், கார்த்திகேயன்.
“எங்களுக்கு அந்த ஆறுதல் ஒண்டுதான் மீரா? நீங்க மூண்டு பேரும் தான் அஞ்சு பேருக்குமாக இருக்க வேணும்.” அன்போடு சொல்லவும் செய்தார்.
சட்டென்று, கணவனைப் பார்த்துவிட்டு மீராவிடம் திரும்பினார், மதுரா!
“ஆரணியும் ஆரபியும் நான் சொன்ன சொல்லத் தட்டுறதில்ல எண்டதையும் மறந்திர மாட்ட தானேம்மா?” கேட்டவர் கண்களில் நீர்க்கசிவு; நேர்மாறாக, குரலில் கண்டிப்பு!
‘இவள் பிரச்சினை அப்பிடியே நிற்குதே! தன்ர நல்லதுக்குச் சொல்லுறம் எண்டதைப் புரிஞ்சு நடப்பாளா?’ எண்ணிய மதுரா தொடர்ந்து எதையோ சொல்லப் போக, சட்டென்று, ஒரு அழுத்தத்தோடு மனைவியின் கரத்தில் படிந்தது கார்த்திகேயனின் கரம். தன்னை நோக்கிய மனைவிக்கு, ‘வேணாம் . ஒண்ணும் கதைக்க வேணாம்!’ என்று சைகையில் சொல்லவும் செய்தார்.
மீரா தான், “மாமி!” சற்றே தடுமாறிப்போனாள்.
கார்த்திகேயனின் செயலையும் கவனித்தாள் தான். மைத்துனிமார் அவுஸ்திரேலியா புறப்படுகிறார்கள் என்றதும் அவளுள் இருந்த ஜோரிக்கின் நினைவுகள், குழப்பங்கள், கவலைகள் என அனைத்தும் ஒதுங்கிப் போய்விட, பிரிவுத்துயரின் பிடியில் சிக்கியிருந்தது அவளுள்ளம்.
இளகிப் போயிருந்தது அவள் வதனம். தாயின் பாராமுகத்தை அமைதியாகவே கடக்கவும் முடிந்திருந்தது.
தம்பியும் மைத்துனனும் அளவாகக் கதைப்பதைப் பெரிதுபடுத்தாது விடவும் செய்திருந்தாள். ஆரம்பத்தில், அது தந்த வலி கூட மரத்திருந்தது.
அதுவும், அதிக நெருக்கம் காட்டும் ஆதவ்வின் ஒதுக்கம், அது மனதில் அடித்த அடி…அவனைப் புரிந்து கொள்ள முடியும் போலவும் இருந்தது.
தினம் தொலைபேசியில் அழைத்துவிடும் யோகம் பாட்டி; அன்பில் குளிப்பாட்டி புத்தி சொல்கையில் எழும் எரிச்சலும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
அன்பு கலந்து, பட்டும் படாமலும், ‘அவனை மறந்திட்ட தானே?’ என வினவும் தந்தை, மாமாவினது அணுகுமுறையில் சுணங்கிப் போகும் மனமோ, இப்போதோ, அதை இலகுவாக எடுத்து நகைக்கவும் செய்தது.
இது எல்லாவற்றுக்கும் காரணம் அவள் மைத்துனிமார்! அவளை, அவளாக ஏற்கும், புரிந்து கொள்ளும் அவர்கள் சுபாவம்! சிறுவயதிலிருந்து இணைபிரியாது வளர்ந்தவர்களின் பிரிவென்பது உருவாக்கிய வேதனை மற்றவற்றைப் பெரிதாக எண்ண வைக்கவில்லை.
இப்போதோ, மதுராவின் பேச்சு அவள் உள்ளத்தை இறுக வைத்தது.
‘அங்க சுத்தி இங்க சுத்தி, உன்ர விருப்பத்துக்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டம் எண்டதை வலியுறுத்திறதிலயே நிற்கினமே!’ என்றெண்ணியவளுள் எழுந்த பிடிவாதத்தை, மிகமிகத் தெளிவாகவே பிரதிபலித்தது, அவள் பார்வை!
ரிவ்யு மிரரில் அவளைத்தான் பார்த்திருந்தார், கார்த்திகேயன்.
அவரையும் அறியாது மனதில் பாரம் ஏறியமர்ந்து கொண்டது. மீண்டும் எதுவோ சொல்ல முயன்ற மனைவியை பார்வையால் அடக்கியவர், சாதாரணமாக, மீராவின் படிப்பு, பயிற்சி வேலை என உரையாடியபடியே காரைச் செலுத்தினார்.
மதுராவும் தன்னை மீறித்தான் அப்படிச் சொல்லிவிட்டார். கணவர் எச்சரித்த பின்னரே, முதல் நாள் மகள்கள் எடுத்துச் சொன்னவை நினைவில் பளிச்சிட்டது.
இத்தாலியிலிருந்து வந்தபின், மீராவுக்கு எதிராகத் திரும்பிவிட்ட வீட்டினரை அவதானித்த ஆரணி ஆரபி, கவலைதான் கொண்டார்கள்.
அவர்களுக்குமே அவள் விருப்பில் துளியும் சம்மதம் இல்லைதான். பார்த்த முதல் பார்வையில் ஒருவர் மீது உண்டாகும் அபிப்பிராயம் அத்தனை சுலபத்தில் மாறுவதும் இல்லைதானே?
அதையும் கடந்து, ஜோரிக் என்பவனின் பிறப்புப்பற்றி அறிந்த பின்னர் பிரத்தியேக வெறுப்பெல்லாம் உருவாகவில்லை. மாறாக, ‘அட!’ என்ற ஒரு சுவாரஸ்சியம் உருவானதையும் தவிர்க்க முடியவில்லை. அதையே, சகோதரிகள் இருவரும் தமக்குள்ளேயும் கதைத்துக் கொள்ளவில்லை.
அப்படியிருக்கையில் மீராவில் கோபம் வராது தானே? மனஸ்தாபம் உண்டுதான். கண்டதும் காதலா? இத்தனை விரைவில், மாறா நேசம் அது இது என்று அவள் சொல்வதை ஏனோ ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லைதான்.
அதுவும், வீட்டினரின் மறுப்பில் பூக்கும் நேசமலரின் வாசத்தை, முழுமையாக நுகர்ந்து அனுபவிக்க முடியும் என்பது உண்மையில்லையே!
அம்மலர் நிச்சயம் கூரிய முட்களோடுதான் மலரும். அப்பப்போ அவை குத்திப் பதம் பார்க்கும்.
‘அந்த வலி உனக்குத் தேவையா? உன்ர வேதனை கண்டு உன் உற்றவர் வருந்துவதைப் பார்க்க ஆசையா?’ என்ற கேள்விகளே, மீராவை நிதானப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தி நின்றது.
அதற்காக, அவள் விருப்பை ஒன்றுமேயில்லை என்று ஒதுக்கவும் மனம் வரவில்லை. அது அவளின் சொந்த விருப்பு. அதுவும், தனக்குப் பிடித்த விசயங்களைச் செய்ய, மற்றவர்களின் மறுப்பு எழுந்தாலும் கவலை கொள்ளாதவள் அவள். மறுப்புகளை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டு, தனக்கு விருப்பமானதைச் செய்து விட்டுப் போய்க்கொண்டே இருப்பவள்.
‘இன்றோ, பேசாமடந்தையாக வலம் வருகிறாளே!’ சகோதரிகளின் கவலை அதிகரித்தது.
அவளோடு மனம் விட்டுக் கதைத்தவர்களால் அவள் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஜோரிக் என்பவன் யார் என்றதில் உருவான எரிச்சல், கோபத்தை ஒதுக்கி வைத்து விட்டால், வீட்டிலுள்ள எல்லோருக்குமே இது சாத்தியம் தான். அதற்குத்தான் யாருமே தயார் இல்லையே!
இந்நிலையை நீடிக்க விட்டுவிட்டு அவுஸ்திரேலியா புறப்பட மனம் வரவில்லை, அவர்களுக்கு.
“நித்தி அத்தை இந்தப் பேச்சை எடுத்தாலே கத்துறார் ஆரணி. நாம அம்மா அப்பாவோட கதைச்சுப் பார்ப்பமே!” ஆரபி சொன்னதற்கிணங்க, தாய் தந்தையை அணுகியிருந்தார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே மீராவின் அழைப்புகள், குறுஞ்செய்திகள் எதனையும் ஜோரிக் வரவேற்றதில்லையே! அதை, மைத்துனிமார்களிடம் மறைக்காது கூறியிருந்தாள், மீரா.
அதோடு, தம் குடும்பங்களிடையேயுள்ள தொடர்பு அறிந்தவன், உன்னோடு எந்த விதத்திலும் தொடர்பு வைத்துக்கொள்வதில் எனக்கு நாட்டமில்லை என்று நேராகவே சொல்லிவிட்டிருந்தானல்லவா? அதையும் அவள் மறைக்கவில்லை.
“அப்ப என்ன நம்பிக்கையில ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர விரும்புறம் எண்டு வீட்டில சொன்னனி?” கடிந்து கொண்டார்கள், ஆரணி, ஆரபி.
அப்போது மீரா பார்த்த பார்வையில் அவர்கள் திகைத்துவிட்டார்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் இரகமில்லையே அவள்.
“உங்களுக்கு என்னில நம்பிக்கை இல்லையா ஆரணி? அவனுக்கு என்னில நல்ல விருப்பம். ஏனோ அதை வெளியில காட்டுறான் இல்ல. ஆரம்பத்தில இருந்து அப்பிடித்தான் இருந்தான். இப்ப, அவன் ஆர் எண்டு தெரிஞ்ச பிறகு…பச்…நாம ஆரு எண்டு தெரிஞ்ச பிறகோ ஒரேயடியாக …பச்!”
சலித்துக் கொண்டாலும், அவனுக்குத் தன்னிலுள்ள நேசத்தில் கொண்டிருந்த நம்பிக்கையை அவள் வதனமே பறை சாற்றியது!
அதை அவ்வளவாக இரசிக்காவிட்டாலும் , ‘உன்னில எனக்கு விருப்பம் இல்லை எண்டு சொல்லி இருக்கிறானே! நிச்சயம் இல்லாத ஒன்றிற்காகவா இந்த வீட்டில இத்தின பிரச்சினை? செய்யத்தகாத குற்றம் புரிந்தவள் போல அவள் எதிர்ப்படுகையில் எல்லாம் எரி பார்வை?’ என்றெண்ணிய சகோதரிகள், இதையெல்லாம் தம் பெற்றோரிடம் எடுத்துச் சொல்லியிருந்தார்கள்.
“ஜோரிக், ‘உன்னில அப்படியொரு எண்ணமில்ல’ எண்டு சொல்லீட்டார். அதுக்குப் பிறகும், இவள் எத்தனைக்கென்று பின்னால் போவாள் சொல்லுங்க? இவள்ட குணத்துக்குக் கடைசிவரை அதெல்லாம் சரிவராது. வேண்டாத நினைவுகள் எண்டு உதறிட்டுத் தன்ர வேலையைப் பார்ப்பாள்.
தன்ர பாட்டில முடியிற விசயத்தை நீங்களாப் பெரிசுபடுத்தி விடாதீங்க!
நீங்க வேணாம் வேணாம் எண்டு சொல்லச் சொல்ல, அதை எப்படியும் நடத்தியே காட்ட வேணும் எண்ட ஆவேசம் தான் அவளுள் வளரும்.” என்றிருந்தார்கள்.
ஜோரிக், இவள் வேண்டாம் என்று ஒதுங்குவான், அவனுக்கு மீரா மீது நாட்டமில்லை என்றதைக் கார்த்திகேயன், மதுராவால் நம்பக் கடினமாக இருந்தது. அது உண்மையெனில் பீட்டர் தம்பதிகளின் வருகை எதற்காம்? அவர்களும் இருவருக்கும் விருப்பம் என்றுதானே சொன்னார்கள்.
குழப்பமே மிஞ்சினாலும், மீராவிடம் தன் இசைவை அவன் வெளிப்படுத்தவில்லை என்றதில் ஆறுதலே அடைந்தார்கள்.
“வீட்டுக்குத் தலைகுனிவு வரும்படியான எதையும் செய்யமாட்டன் எண்டு எங்களுக்குச் சத்தியம் செய்திருக்கிறாள் மீரா. இப்பப் படிப்புத்தான் எனக்கு முக்கியம் என்றும் சொன்னவள். அவள் நம்மட மீரா பா!” என்று, மகள்கள் சொன்னதை ஏற்காதிருக்க முடியவில்லை.
மீராவை அன்பால் தம் வசமாக்க வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்திருந்தார்கள்.
நித்திக்கும் மற்றவர்களுக்கு இதைப் புரியவைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தும், இப்போதோ, தன்னையும் மீறியல்லவா வாய்விட்டு விட்டார் மதுரா.
மெல்ல அவளைத் திரும்பிப் பார்த்தார்.
அவள் முகம் இறுகிப் போயிருந்தது. வெளியில் பார்வை பதிந்திருந்தாலும் அவள் கருத்தில் எதுவும் விழும் போலவே தெரியவில்லை. சிந்தனை எங்கோ இருக்க அமர்ந்திருந்தாள்.

