ரோசி கஜனின் மீரா 20 – 2

“மீராம்மா!”

சில நாட்களின் பின்னரான கனிந்த அழைப்பில் பட்டென்று திரும்பினாள், மீரா.

“சொறிடா! என்னையும் அறியாது அப்பிடிச் சொல்லிட்டன். சொறி!” இப்படி மதுரா சொன்னதை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

விழிகளில் உணர்வுகள் போட்டியிட, “அய்யோ மாமி!” பதற்றமாக இடையிட்டாள்.

“இல்லம்மா, நீயும் ஆரணி, ஆரபி போலவே நாங்க வளர்த்த குழந்தைதானே? அப்பிடியிருக்க, இப்பிடியொரு கேள்வி தேவையே இல்லாதது எண்டு எனக்கு விளங்காமல் போயிட்டு. மனசில வச்சுக்கொள்ளாத!”

சற்றே சரிந்து அவள் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுக்க, சட்டென்று கலங்கிவிட்டன, மீராவின் விழிகள்.

மூக்கு விடைத்து இதோ அழுகை வெடிக்கிறேன் என்றது!

“நான் நான்…” தடுமாறியவளுக்கு, ‘ஜோரிக்க என்னால மறக்க முடியாது மாமி!’ என்று தொண்டை வரை வந்ததை மட்டும் சொல்ல முடியவில்லை.

‘அதை அவ்வளவு உறுதியாச் சொல்லி இவேண்ட மனத்தை வேதனைப்படுத்திறதால என்னதான் பயன்?’ என்ற சலிப்பே வாய் திறக்க விடேன் என்றது.

“அவனே உன்ன விரும்புறன் எண்டு சொல்லேல்லையாம்; அப்படியிருக்க, எந்த நம்பிக்கையில் இப்பிடித் தீர்மானமாக் கதைக்கிற?

‘வேணாம் போயிரு’ எண்டவன் பின்னால போகத்தான் வேணுமா எண்டு ஒண்டுக்குப் பத்தா யோசிச்சுப் பார் மீரா!

நீ அப்பிடி எந்தவிதத்தில குறைஞ்சு போன? உனக்காக எதையும் செய்ய இத்தின பேர் இருக்க, அத்தின பேரையும் வருத்தி, வேணாம் எண்டவன் தான் வேணும் எண்டு அங்க போய்க் கெஞ்சிக்கொண்டு நிற்கப் போறியா?”

இந்த ரீதியில் தான் மாறி மாறிக் கதைத்திருந்தார்கள், ஆரணி ஆரபி.

அவளின் மௌனத்தைப் பார்த்துவிட்டு, தானே தொடர்ந்தார், மதுரா.

“உன்னில எங்களுக்குப் பூரண நம்பிக்கையிருக்கு மீரா. அம்மா கதைக்கிறா இல்லையே எண்டு குறை நினைக்காத! நித்திக்குத் தன்ர மகள் பற்றி விளங்காதா என்ன? பழசுகள் நினைவில வந்ததில தான் அப்பிடியெல்லாம் கோபப்படுறாள்.” என்றவர்,

“அவள் கதைக்கேல்லையே எண்டு நீயும் அமைதியா ஒதுங்கிப் போகாமல் நீயாகப் போய்க் கதை ராசாத்தி!” என, அவள் ஆறுதல் படும் படியே கதைத்துக் கொண்டு வந்தார்.

இப்படியே நாட்கள் உருண்டன.

மதுராவும் கார்த்திகேயனும் வீட்டில் மற்றவர்களோடு கதைத்ததில், அவர்களும் மீராவோடு எப்போதும் போலவே பழகத் தொடங்கினாலும் நித்தியின் பார்வையில் சந்தேகமே முதன்மையாக நின்றது.

மகளின் அமைதியை அவரால் நம்பவே முடியவில்லை. அவளின் சின்னச் சின்ன அசைவுகளையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்.

அதை மகளுக்குத் தெரியாதவண்ணமும் பார்த்துக் கொண்டார்.

‘சொந்த மகளில நம்பிக்கையற்று இப்படிச் சந்தேகிக்க வேண்டியுள்ளதே!’ என்று வருந்தினாலும், ‘அவனைக் காதலிக்கிறன் எண்டனான் தான்; அவனுக்கு அப்பிடியொரு எண்ணம் இல்லையாம்; நானும் போடா எண்டு ஒதுங்கிட்டன்’ என்று சொல்லேல்லையே! இடையில இப்பிடியொரு விசயம் நடவாத பாவனையில் எல்லா திரியிறாள்?’ என்ற யோசனையும்,

‘தப்பித் தவறிச் சரி ஹெலன் பீட்டரோடு கதைச்சு, அண்டைக்கு அவே இங்க வந்திட்டுப் போனதை அறிஞ்சா? அவனுக்கும் இவளில நேசம் இருக்கு எண்டு உறுதி செய்திருவாளே’ என்ற பயமுமாக அவர் நாட்கள் நகர்ந்தன.

அவர் மகளோ, அது தெரியாதபோதே அவன் நேசத்தை உறுதியாக இனம் கண்டுவிட்டாள் என்று தெரியாதே!

இப்படியே நகர்ந்த நாட்களில், இறுதி வருடமாகையால், அடுத்தடுத்துச் சில பரீட்சைகள் வரவே, அமைதியாக, படிப்பில் கவனம் செலுத்தினாள் மீரா. என்னதான் முயன்றாலும் மனம் மட்டும் சொல் கேட்டு விடவில்லைத்தான். தினம் தினம் தன்னுள் வந்தமர்ந்தவனை நாடி ஓடிடத்தான் ஆவல் கொண்டது அது.

எத்தனையோ தடவைகள் கைபேசியில் அவன் இலக்கத்தை எடுத்து வைத்துக்கொண்டிருந்துவிட்டு, பிறகு, தொடர்பு கொள்ளும் எண்ணத்தை விட்டு விடுவாள்.

‘அப்படியே எடுத்திட்டாலும்!’ என்ற முகச்சுளிப்போடு!

‘இவனுக்கு எல்லாம் அதிரடியா நேரில போய்த்தான்…’ என்ற முடிவில் இருந்தவள், அது எப்போது என்றும் கணித்து வைத்திருந்தாள்.

இடையில் ஒரு தடவை ஹெலனுக்கும் அழைத்திருந்தாள். வீட்டில் விருந்தினர் வந்திருந்தார்கள் போலும் அவ்வளவாகக் கதைக்கவில்லை; நலம் விசாரித்து விட்டு வைத்துவிட்டார், அவர்.

இப்படியிருக்கையில், இரு மாதங்களின் பின்னரே அவனைக் காணச் செல்லும் சந்தர்ப்பமும் வந்தது.

அன்று பல்கலை முடியவே நான்கு மணியாகியிருந்தது.

“நிறைய நாட்களாச்சு…என்ன மகளே மறந்திட்டியா எண்டு கேட்பார்” தன்னுள்ளே சொன்னபடி பீட்டருக்கு அழைத்தாள், மீரா.

அழைப்பை ஏற்றவரோ, மீரா என்றதும் ஒரு கணம் அமைதியாகிவிட்டார்.

அன்று அவர்கள் வீடு சென்று வந்த பின்னர் இவள் அழைத்துக் கதைப்பாள் என்று மிகவும் எதிர்பார்த்திருந்தார்களே! அந்தளவுக்கு ஒன்றும் அந்நியமாகப் பழகவில்லையே! இத்தனைக்கும் அவள் வீட்டில் இருந்து நல்ல மனநிலையிலும் இவர்கள் வரவில்லை. அப்படியிருக்க, அவள் அழைக்கவே இல்லை. அதில் நிறையவே மனச் சுணக்கம், இவர்களிற்கு.

அதன்பின் பல நாட்கள் கடந்த பின்னர் இவள் ஒரு முறை அழைத்துக் கதைத்ததையும் ஹெலன் இவரிடம் சொல்லவில்லை. அவரே அதிகம் கதைக்கவில்லையே! பேரன் சொன்னது போல அவர்கள் பேச்சே வேணாம் என்றளவுக்கு மனம் நொந்திருந்தார், ஹெலன்.

“என்ன பீட்டர் சத்தமே இல்லை? எனக்கு இண்டைக்குப் பிறந்தநாள் எண்டதையும் மறந்திட்டிங்க தானே?

“அய்யோம்மா! மறந்தே போனன் பார்த்தியா?” என்றவர், அன்போடு வாழ்த்துச் சொன்னார்.

“போன வருடம் ஹெலன் தானே நினைவு படுத்தினவள். இந்த முறை அவளே மறந்து போனாள்.” சமாதானமும் சொன்னார்.

“பரவாயில்லை பீட்டர், அடுத்த முறை மறக்காமல் வாழ்த்துச் சொல்லுங்க!”

“கட்டாயம் கட்டாயம்…”

“நாங்க ஒரு அரைமணித்தியாலத்தில வருவம் பீட்டர். பதினைஞ்சு பேர்.” என்று சொல்லி, என்னென்ன தேவை என்று பொதுவாகச் சொன்னவள், “தயாராக வைப்பீங்க தானே? பிறகு நான் வீட்ட போகவும் வேணும்.” என்றதும், “சரிடா வா!” என்றுவிட்டு வைத்தார், அவர்.

மீராவோடு கதைத்து, அலைபேசியை வைத்துவிட்டு நகர்ந்த பீட்டர் அவள் தேவையென்ற உணவுப்பட்டியலை சமையலறையில் கொடுத்துவிட்டு வந்தவர், எதிர்ப்பட்ட ஜோரிக்கிடம் சிறு முறுவலோடு நகர்ந்து விட்டார்.

‘நின்று நிதானித்து அவனோட அளவளாவி மீரா வாறாள் எண்டதைச் சொல்லிவிட்டால்…கொம்பேறி மூக்கண் போல எல்லா நடந்து கொள்வான்!’ பேரனில் மிகுந்த மனஸ்தாபம் இவருக்கு.

“ ‘அவளையா? நானா? விரும்பினனா? என்ன ஒரு பைத்தியக்காரக் கற்பனை?’ சளைக்காது சொல்பவன், பலசமயங்களில பைத்தியம் போலத்தான் நடந்துகொள்கிறான்.” என்று முணுமுணுத்தபடி நகர்ந்தவர், தன் பரிசாக மீராவுக்கு ஒரு கேக் கொடுப்போம் என்ற எண்ணத்தில் அதே பாதையில் சற்றே தள்ளியிருந்த பேக்கரிக்குச் சென்று சொக்லேட் கரமல் கேக் ஒன்றை வாங்கி வந்தார்.

நினைவு வந்தவராக மனைவிக்கு அழைத்து, “இண்டைக்கு மீராட பிறந்தநாள் எல்லா ஹெலன்?” என்று கேட்க, “அட! நான் மறந்தே போனன்.” என்றவரோ, “ம்ம்…எடுத்து வாழ்த்திட்டு வைக்கலாம் பீட்டர். ஆனாலும், தேவையா எண்டு யோசிக்கிறன்…” என்று இழுத்தார்.

“ஹா..ஹா…” மனைவியின் மனச்சுணக்கம் அறிந்து வாய்விட்டுச் சிரித்தார் பீட்டர்.

“நாம போய் வந்தது அவளுக்கு தெரியாது போலிருக்கு ஹெலன்…” என்று ஆரம்பித்து, அவள் வரப் போவதைச் சொல்லிவிட்டு வைக்க, மறுநிமிடம் அவளுக்கு அழைப்பு விடுத்தார், ஹெலன்.

அவளும் எப்போதும் போலவே கலகலத்துவிட்டு வைக்க இங்கே ஹெலனின் மனமோ இலேசாகியிருந்தது. பேரன் என்னதான் மறைத்தாலும் அவன் மனமறிந்து மீரா வீடு சென்றவர்கள், அங்கே, அவர்களோ எதையும் அத்தனை சுலபமாக எடுக்கத் தயாரில்லை என்று திட்டவட்டமாகச் சொன்னதில் மனமுடைந்துதான் போனார்கள்.

அதிலும், மீராவும் இத்தனை நாட்களும் தொடர்பு கொள்ளவில்லையே! அவள் தொடர்பாக எழுந்த அனைத்து எண்ணங்களையும் விலக்கிவிடத்தான் முனைந்தார்கள்.

அந்த நேரம் பார்த்து மீண்டும் அவள் வருகை.

‘அவேட வீட்டில சொன்ன மாதிரி ஜோரிக்கை விட்டு ஒதுங்க நினைச்சா இப்ப வருவாளா?’ என்று எண்ணியவருக்கு அப்போதும் சந்தேகம் தான்.

‘வேணாம், இனிமேலும் தேவையற்ற கற்பனைகள் மட்டும் வேண்டவே வேண்டாம்.’ மனதைக் கட்டுப்படுத்த முனைந்தவருக்கு, மீரா மீதின்றி தம் ஜோரிக் மீதுதான் நம்பிக்கையே இல்லாது போயிருந்தது.

அவன் தான் இப்போதெல்லாம் நெருப்பை விழுங்கியவன் போல் போய் வருகிறானே!

அதுவும், தாம் மீரா வீடு சென்று வந்ததை ஜோரிக்கின் தங்கை நிக்கியிடம் சொல்லியிருந்தார் ஹெலன். அவளோ, ஒன்றுவிடாது தமையனிடம் சொல்லி விட்டாள்.

“அதைக் கேட்டதில இருந்து சந்தர்ப்பம் கிடைச்சாக் கடிச்சுக் குதறிடுவான் போல எல்லா திரியிறான்.” எரிச்சலோடுதான் முணுமுணுத்துக்கொண்டார்.

“ம்ம்…அவன் கோபத்த மீரா அடக்கிருவாள்.” தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டவர், “ரெஸ்டாரண்ட் வந்தால் நிச்சயம் அவனையும் சந்திப்பாள். அப்ப என்னதான் செய்யிறான் பார்ப்பமே!” என்றவருக்கோ இருப்புக் கொள்ளவில்லை.

மாலையில் கணவன் வந்து சொல்லப் போகும் செய்திகளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினார்.

மனைவியோடு உரையாடிவிட்டு இவர் அப்பால் செல்ல, மீராவும் அவளின் நண்பர்களுமாக வந்திறங்கினார்கள்.

மீராவும் இரு நண்பிகளுமாக வந்தாலே களை கட்டும் ரெஸ்டாரண்ட் இப்போது ஆணும் பெண்ணுமாக பதினைந்து பேருக்கும் மேலாக வந்தால்!

பாதையின் இருமருங்கிலும் கிடைத்த இடங்களில் கார்களை நிறுத்திவிட்டு கூட்டமாக வந்தவர்கள், கடைக்குள் நின்ற ஜோரிக்கின் பார்வையைத் தம் புறம் திருப்பியிருந்தார்கள். அதேநேரம், மீரா கலகலப்பாக சொற்களை உதிர்த்தாலும் அவள் பார்வையும் அவன் கடையைத்தான் துளாவியது.

மாலை நான்கு மணி கடந்திருந்த வேளையில், வெளிப்புறத்தை விட அவன் கடையினுள் பளீரென்ற வெளிச்சம். அதன் உபயத்தில் கடைக்குள் நின்ற ஜோரிக்கின் உருவமும், அவன் தம்மைப் பார்ப்பதையும் கண்டுகொண்டாள், மீரா. மறுநொடி, மிக இயல்பாகப் பின் தங்கி, நண்பர்களில் மறைந்தபடிதான் ரெஸ்டாரண்டினுள் நுழைந்தாள்.

அப்படியிருந்தாலும் மீராவின் தோழிகளில் ஒருத்தியைக் கண்டுவிட்ட ஜோரிக்கின் நெற்றி சுருங்கியது. அடுத்தநொடி, செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு விறுவிறுவென்று சென்றமர்ந்த இடம் CCTV கமரா முன்.

அங்கே மீராவோ, பீட்டரின் அமோக வரவேற்பில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தாள்.

அவர்களிற்கென்று இரண்டு நீள மேசைகளை ஒழுங்கு செய்திருந்தார் பீட்டர். உள்ளே நுழைந்த வேகத்தில் ஆரவாரத்தோடு சென்றமர்ந்து கொள்வதிலிருந்தே அவள் வருவதை இவர் எதிர்பார்த்திருந்தார் என்பதைப் புரிந்துகொண்டான், இவன்.

அடுத்து, அங்கு வேலை செய்பவன் காதில் குசுகுசுக்க, சிறிது நேரத்தில் பெரிய கேக்குடன் வந்தான், அவன்.

மீரா அமர்ந்திருந்த மேசையில் அவளருகில் வைத்துவிட்டு அவன் நகர, “ஓ! இவளுக்கு இண்டைக்குப் பிறந்தநாளா?” முணுமுணுத்தவன், அவளுக்குத்தானா பிறந்தநாள் என்று ஊர்ஜிதம் செய்வதற்காய்த் தொடர்ந்து நடப்பதை அவதானித்தான்.

அதேநேரம், அவளின் கலகலப்புப் பேச்சும் சிரிப்பும் இவனுள் அடங்கிக் கிடந்த கோபக்கனலை விசிறி விடும் வேலையையும் செவ்வனே செய்து வைத்தது.

 

 

error: Alert: Content selection is disabled!!