21
ஆரவாரமாகக் கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு என, நடப்பவற்றைப் பார்த்திருந்த ஜோரிக்கின் முகம் கணத்துக்குக் கணம் இறுகிக் கொண்டிருந்தது.
இவன் நன்றாக பார்க்கக் கூடியவாறு தான் அமர்ந்திருந்தாள் மீரா. குறும்பு கொப்பளிக்கும் விழிகள் மினுங்க, வதனமோ, அவள் உள்ளத்தில் உணரும் சந்தோசத்தைப் பளிச்சென்று காட்டியது.
அவள் வதனத்தையே பார்த்திருந்தவனோ எரிமலையாகிக் கொண்டிருந்தான். கோபத்தில் குமுறியது அவனுள்ளம்.
சிலநாட்கள் இடைவெளியில், திடீரென்று அவளைக் கண்டதும் ஒருவகைப் புரியாத உணர்வொன்று தாக்காதும் இல்லைதான்.
ஆனால் என்ன? அவள் மேல் கொண்ட நேசத்தைப் போலவே, அந்த உணர்வுக்கும் ஆயுள் மிக மிகக் குறைவாக இருந்து போயிற்றே!
அப்போ, ‘அவள் மீதான நேசத்துக்கு ஆயுள் குறைவேதானா?’ நேரகாலம் தெரியாது குறுக்கிட்டு முணுமுணுத்த மனத்திற்குப் பதில் சொல்வதே வீண்!
‘அந்த வீண் கதையேன்? சொல்லப் போனால் இவளாத்தானே என்னை விடாது நெருங்கினவள்.
அவள் என்ர மனசில இடம் பிடிச்சாளா இல்லையா எண்டதே வேற கதை; வேண்டாத கதை!
ஆபத்தில் உதவிவிட்டு அப்பிடியே ஒதுங்கிப் போனவனைத் தேடி வந்தது யாராம்? விடாது எத்தனை அழைப்புகள்? குறுஞ்செய்திகள்!
இத்தனைக்கும் பிறகு, என்ர பிறப்புப் பற்றி, நடத்தையைப் பற்றித் தீர்மானிக்கிற இவள்ட வீட்டாக்கள என்ன சொல்லுறது?’
இதை நினைக்கையில் எழும் கடுமையான எரிச்சலை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
‘பாட்டியும் தாத்தாவும் அவேட வீட்ட தேடிப்போனது சரியெண்டு நான் சொல்லேல்லை. நான் அவ்வளவு சொல்லியும் போயிருக்கினம் எண்டால் அது இவளில கொண்ட நம்பிக்கையில் தானே?
அதுக்குப் பதிலா இவள் என்ன செய்தாளாம்?
சரி, அவே அங்க போன நேரம் தான் வீட்டில இருக்கேல்லை; அதுக்குப்பிறகு சரி, அவே வந்து போனதை அறிஞ்சு தங்களோட எடுத்துக் கதைப்பாள் எண்டு எவ்வளவு எதிர்பார்த்திருந்தவே தாத்தாவும் பாட்டியும்.
வயது போனவே, அத்தனை தூரம் மனம் நொந்து திரும்பி வந்த பிறகும் எடுத்துக் கதைச்சாளா என்ன?’
இதை எண்ணுகையில் அவன் உள்ளக் கொதிப்பு அதிகரித்தது.
‘பிரதிபலன் பார்க்காம அன்பைப் பொழியிற முதியவர்களில பாசம் உள்ளவள் போல நடந்ததும் நடிப்பா என்ன?’ குழம்பினான்.
‘ இதில சந்தேகம் எல்லாம் ஏன்? எல்லாம் நடிப்பேதான்.’ என்ற உறுதியான முடிவுக்கும் வந்தான்.
‘நான் கெட்டவனாகவே இருந்திட்டுப் போறன். அதைப்பற்றி நீயோ உன்ர குடும்பமோ கவலைப்படத் தேவையில்ல. உன்னை அன்போடு அரவணைச்ச பெரியவேய எல்லா அவமரியாதை செய்திட்ட?’ என்று கொதித்துப் போனான்.
‘ஹையோ இவன் அந்தக் கணேஷிட மகனா? அப்ப, உலகமகாக் கெட்ட அயோக்கியனாத்தான் இருப்பான். அவன்ட நிழல் பட்டாலே உன்ர வாழ்க்கை பாழாகிடும்.’ எண்டு வீட்டில சொன்னதும் அவளுக்கு ஞானக்கண் திறந்திட்டாமே!’
பற்கள் நறநறக்க மேசையில் ஓங்கி ஒரு குத்துவிட்டான்.
இங்கே, இவன் இருந்த கொதிநிலைக்கு நேர் மாறாக, அங்கே அவளோ, பளீரென்று நகைத்தாள்; மற்றவர்களையும் நகைக்க வைத்தாள்.
“ச்சே! என்ன பிறப்பு?” அடிக்குரலில் உறுமினான், ஜோரிக்.
“இவ்வளவு நடந்த பிறகும் வந்திருந்து இத்தின ஆர்ப்பாட்டம் செய்யிறாள் எண்டா இவள் எப்பிடிப்பட்டவளாக இருக்க வேணும்?
இந்தத் தாத்தாவுக்கு இவளப் பற்றி இன்னும் தெரியேல்லையா? எத்தினதரம் சொல்லியும் கேட்க மாட்டார். ச்சே!” அடிக்குரலில் சீறினான்.
இப்படி இவன் கறுவிக்கொண்டிருக்க, அதற்கு எண்ணை வார்ப்பது போலவே கேக் கிரீமை எடுத்து அவள் முகத்தில் தடவி ஆரவாரித்தார்கள் அவளின் தோழியரும் தோழரும்.
விசுக்கென்று எழுந்தே விட்டான், ஜோரிக்.
விறுவிறுவென்று அவள் முன்னால் சென்று நின்று ‘பளார்’ என்று ஒரு அறை விட்டு ‘என்னை, என்ர குணத்தைத் தீர்மானிக்க உன்ர வீட்டினர் யாரடி? கெட்டவனோ நல்லவனோ என்னைப் பெற்றவன் பற்றி உங்களுக்கென்ன கவலை? உன்னோட பழகிற ஆசையில நானாக உன்னை நெருங்கினனா என்ன?”
கேட்டுவிடும் உந்துதலில் சில அடிகள் கூட எடுத்து வைத்திருப்பான்.
ஆனாலும் தொடரவில்லை. கனத்த, கனன்ற இதயம் ஏனோ சட்டென்று நிதானிக்கச் செய்தது.
தலையை உலுக்கிக்கொண்டவன், தன்னைத்தான் கட்டுப்படுத்தப் போராடிப்போனான்.
‘இந்த இடத்தில வச்சு அவள எதிர்கொள்வது சரியில்ல.’ அழுத்திச் சொன்னது அவன் இதயம்.
தேவையற்ற இரசவாதங்களை உருவாக்குவதில் எப்போதுமே நாட்டமில்லாதவன் அவன். அதுவும் தொழில் நடக்கும் இடத்தில். ம்ம்..
இந்த மனநிலையில், கடைக்குள் செல்லவோ தொடர்ந்து யாரையும் பார்த்துப் பேசவோ பிரியப்படாதவன் மேலே வீட்டுக்குச் செல்ல முயன்றான்.
அந்நேரம் பார்த்துத் தன்னிருப்பை உணர்த்தியது, அவன் கைபேசி.
எரிச்சலின் உச்ச கட்டத்தில் தான் அதை எடுத்தான். அடுத்த கணமோ, முகம் விகாரமாகிப் போயிற்று.
இத்தனை நேரமாக, யாரை, உள்ளமெனும் நெருப்பிலிட்டு கருக கருக சுட்டுக் பொசுக்கிக் கொண்டிருந்தானோ அவளேதான்!
வேறு என்ன? குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். அதுவும், கண்ணடிக்கும் ஸ்மைலியோடு ஆரம்பித்திருந்தது அச்செய்தி.
“இன்றைக்கு என்னை பைத்தியக்காரனாக்கீட்டுத்தான் மறுவேல பார்ப்பாள் போலிருக்கே!”
சத்தமாகச் சொன்னபடி விறுவிறுவென்று நகர்ந்து மாடியேறி வீட்டினுள் புகுந்துகொண்டவனின் கோபமனைத்தும் வாயில் கதவில் இறங்க முயன்றது.
கதவை அறைந்து சாத்திய வேகத்தில் அங்கு கிடந்த சோஃபாவில் தஞ்சம் புகுந்து கொண்டான், அவன்.
அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை மட்டும் வாசித்திருந்தால் என்னவாகி இருக்குமோ!
கீழே, அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியவள் முகமோ, இதைப்பற்றி எந்தக் கவலையுமின்றிக் கனிந்து கிடந்தது.
தூரமாக என்றாலும் இத்தனை நாட்களுக்குப்பின் அவனைக் கண்டிருந்தாள். அதுமட்டுமா? இதோ சில வினாடிகளுள் சென்று சந்திக்கும் தூரத்தில் அல்லவா இருக்கிறான்.
‘அவன் நிழல் கூட உன்னில விழுந்திரக் கூடாது!’ என்ற, உற்றவர்களின் எச்சரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுக்காத உள்ளத்தில் மகிழ்வுக் குமுழிகளோ எக்கச்சக்கம்; ‘நீங்க எல்லாரும் இந்த விசயத்தில என்னை எச்சரிக்க முதலே, அவன்ட நிழல் மட்டுமில்ல, அவனே எனக்குள்ள வந்திட்டானே !’ என்ற சந்தோசக் கிசுகிசுப்போடு!
என்னதான், தான், நண்பர்கள் பின்னால் மறைந்துவிட்டாலும் தன் வரவை அவன் அறிந்திருப்பான் என்றே மனம் சொன்னதில், இதழ்களில் உறைந்த முறுவலே விரல்களுள் புகுந்து இயக்கியிருந்தது.
‘நீ நேரில இங்க வராட்டாலும் CCTV கமராவில என்னைத்தானே பார்க்கிற? உன்ர கள்ளம் பிடிபட்டிட்டிதடா!’ என்று தட்டியவள், நாக்கைத் துருத்திக் காட்டுவது போலொரு ஸ்மைலி போட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.
இதற்கு அவனிடமிருந்து பதில் வராது என்பது என்ன புதிய விசயமா? அவள் தான் எதிர்பார்க்கவும் இல்லையே!
நண்பர்களின் கலகலப்போடு சுட சுட வந்து சேர்ந்த உணவுகளில் ஒரு கைபார்க்கத் தொடங்கினாள்.
உணவின் பின் நண்பர்கள் விடைபெற்றுச் சென்றார்கள்.
“நீ வீட்ட தானே மீரா?” அவள் அறையில் தங்கியிருக்கும் தோழிகள் கேட்க, “ஓம்.” என்று அவர்களை அனுப்பி விட்டு வந்து, உணவுகளுக்கான பணத்தைச் செலுத்தியவள்,
“இந்தக் கேக்கையும் சின்னதா ஒரு பெட்டியில வச்சுத் தாங்கோ பீட்டர்.” அவனுக்கெனக் கவனமாக ஒதுக்கிவைத்த கேக் துண்டுகளைச் சிறு பெட்டியிலிட்டு, அவர் கொண்டு வந்த உணவுகளோடு சேர்த்து வாங்கிக் கொண்டாள்.
“கடையில நிற்கிறானா?” அவள் ஆரம்பிக்க, “கடையில தான் நிற்பான்.” தானும் சொன்னார், பீட்டர்.
அழகாகச் சிரித்தாள், மீரா.
“பிறந்தநாளும் அதுவுமா, இந்தச் சாப்பாடுகளைக் குடுத்திட்டு ஒரு வாழ்த்து வாங்கிக்கொண்டு, நாலு வார்த்தைகள் சந்தோசமாக் கதைச்சிட்டு வருவம் எண்டு போறன் பீட்டர். அண்டைக்கு மாதிரி அப்பிடி இப்பிடிக் கதைச்சு என்னைக் குழப்பினானோ, ஒரே அறை. பிறகு என்னில குறை நினைக்க வேணாம். இப்பவே சொல்லிப்போட்டன்.” என்றுவிட்டுத்தான் சென்றாள்.
ரெஸ்ட்டோரண்டின் பின்புறமாக வெளியேறி அவன் கடைப்பக்கமாகச் செல்பவளை முறுவலோடு பார்த்திருந்த பீட்டர், ‘இன்னாருக்கு இன்னார் எண்டு போட்ட முடிச்சை அவ்வளவு கெதியா அறுத்தெறிய முடியுமா ஜோரிக்? நீ என்னதான் சொன்னாலும் ஒதுங்க நினைச்சாலும் இவள் தான் உன்ர வாழ்க்கைத் துணை!’
மனமகிழ்வோடு எண்ணிக்கொண்டே, மனைவிக்கு அழைத்தார்.
கைக்கடிகாரத்தில் ஒரு பார்வையோடுதான் ஜோரிக்கின் கடைக்குள் நுழைந்தாள், மீரா.
‘இப்பவே நல்லா நேரம் போயிட்டு. ஒரு பத்து நிமிசம் நின்றுட்டு வெளிக்கிடச் சரியாக இருக்கும்.’ என்ற எண்ணமோட, விழிகளோ கடையைச்சுற்றி வந்தன.
“ம்ம்…எங்க போனான்? என்ர மெசேஜ் பார்த்திட்டு சந்திக்க விருப்பம் இல்லாமல் வெளியில எங்கயும் போயிட்டானோ!” கோபத்தோடு முணுமுணுத்துக்கொண்டன, அவளிதழ்கள்!

