22
மீரா என்பவளின் சிறுசிறு அசைவுகள், செய்கைகள், வார்த்தைகள் என ஒவ்வொன்றுமே ஜோரிக்கின் மீதான அன்பைப் பறைசாற்றி நின்றன.
அதைத் தெள்ளத் தெளிவாகவே உணர்ந்து கொண்டது அவனுள்ளம்.
அதுவே, அதுவரை தான் நிரப்பியிருந்த அத்தனை கோபமும் கடந்து ஒரு வித இறுமாப்பையும் கொள்ள வைத்தது. எதிலோ வென்றுவிட்ட உணர்வு அவன் தேகமெல்லாம் பரவி நின்றது.
அப்படி எதில் வெற்றி கொண்டதில் இத்தனை உவகை?
தன்னுள், அவள்பால் எழுந்த நேசத்துக்குக் கிடைத்த பிரதிபலிப்புத் தந்த உவகையல்லவா அது? அந்த நிஜத்தை மட்டும் உணர மறுத்தது அவனுள்ளம். உணர்ந்தாலும் ஏற்க மனமேயில்லை.
மாறாக, ‘அவன் துஷ்டன்! அவனைவிட்டு ஒதுங்கு!’ என்ற அவள் வீட்டவரின் தீர்க்கமான கண்டிப்பை மீறியிருக்கிறாள் அல்லவா? அதிலேதான் சுகம் கண்டான், அவன்.
அவள் வீட்டினரின் முகங்களில் கரி பூச முடியுமே! அதுவே அவனுக்கு ஆனந்தம் தந்தது.
இக்கணம், ‘இப்படி என்ர கைவளைக்குள் இவள் நிற்கிறதை இவளிட தாய் கண்டால்!’
என்ன நடக்கலாம் என்று மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தவன் உதடுகளில் கர்வ முறுவல்.
அவர்களில் அத்தனை எரிச்சல்! முதல் முதல், அந்தத் திருமண வரவேற்பில் அவர்கள் இன்னார் என்று அறிந்த போதே அதிர்வுதான். சிறுவயதில், தன் தாய், மதுரா என்ற பெண்ணைக் கண்டபடி திட்டுவதை ஓரமாக ஒதுங்கி நின்று பார்த்திருந்திருக்கிறான்.
“உன்ர அப்பா எண்டவன் செத்துப் போகக் காரணமே மதுரா எண்டவள் தான்.” சொல்லி சொல்லி மாயந்திருக்கிறாள், இவன் தாய்.
“வேணாம் எண்டு தூக்கியெறிஞ்சிட்டு ஒதுங்கிப் போனவளையும், அவள் பெற்ற இரட்டைக் குழந்தைகளையும் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தே தீருவன் எண்டு சபதம் செய்தான் உன்ர அப்பா. அதே சிந்தனையில தானே அடிபட்டும் செத்தான்.” என்று, சொல்லிச் சொல்லியே இவன் நினைவுகளில் அன்றைய நிகழ்வுகளை அழுந்தப் பதித்திருந்தாள், இவன் தாய்.
இதையெல்லாம் எண்ணுகையில் மீராவுடனான பழக்கம் சரிவராது என்றுதானே இவனே எண்ணினான்.
சொல்லப் போனால், அவள் யார்? அவளுக்கும் தனக்குமான தொடர்பு என்ன? என்றெல்லாம் அறிய முன்னரே அவளை விட்டு ஒதுங்கிட வேண்டும் என்று தீர்மானித்தவன் ஆச்சே!
அதன்பின் நடந்தவையோ!
‘இண்டைக்கு எனக்குள்ள புகையிற இந்தளவு கோவமும் எரிச்சலும் அவையளே உருவாக்கினது.’ முனகியது அவனுள்ளம்.
‘ஒருநாளுமே அறிந்திராத என்னை, என்ர நடத்தையை அல்லவா வரையறுத்துவிட்டார்கள்.’
மனத்தின் கடுகடுப்பை மறைத்து மீராவைப் பார்த்தன அவன் கண்கள்.
அவளோ, தன்னைக் கண்டதும் இன்முகம் காட்டி வரவேற்கவில்லை என்றாலும், இக்கணம் இளகி நிற்பவனின் அன்பின் நிழலில் சொகுசாக இளைப்பாறிக்கொண்டிருந்தாள்.
அவன் செய்கைக்கு முரணான மனத்தின் குரலை எங்கே கேட்டாள்?
இமைக்காது அவள் வதனத்தை வருடிய அவன் விழிகள், மனதை இதப்படுத்தாது எரிச்சலே கொள்ள வைத்தது.
‘இவள்…இவளும் தானே அவே சொன்னதைக் கேட்டு என்னையும் தாத்தா, பாட்டியையும் ஒதுக்கினவள். இப்ப வந்து பல்லைக் காட்டினா இடையில கடந்த நாட்கள் இல்லையெண்டு ஆகிருமா?’ வீண்பழி சுமத்தினான்.
சற்றும் யோசியாது, அவளைச் சாடுவதை அவ்வளவு இலகுவாகச் செய்தது அவனுள்ளம்.
இப்படி, இதத்துக்கும் கொதிப்புக்கும் இடையில் இவன் இழுபறிப்பட, இதத்தை மட்டுமே தழுவி நின்றவளோ, தம்மிடையே நிலவிய சில நிமிட அமைதியே அதிகம் என்றளவில் நிமிர்ந்தாள்.
அவன் கூரிய பார்வையில் வந்து மென்மையாக மோதியது அவள் விழிப்பார்வை!
இதம் கனியும் அவ்விழிகளோடு உறவாட முடியாது தடுமாறி விலகியது அவனின் வெறுப்பை உமிழும் பார்வை.
அவன் தவிப்பை உணர்ந்தவள், அது தன் மீதான வெறுப்பெனத் துளியும் எண்ணவில்லை.
‘இந்தத் தவிப்பு எல்லாம் தேவையே இல்ல. உன்ர பிறப்புப் பற்றிய எந்த விசயமும் என்னைப் பாதிக்காது. மற்றவே எவரையும் பாதிச்சாலும் எனக்குக் கவலையே இல்ல.’ மனதுள் சொல்லியவாறே, அவன் கன்னம் பற்றித் திருப்பி நேருக்கு நேராகப் பார்த்தாள்.
அவள் மனதின் குரலே விரல்களில் அழுத்தமாக அவன் கன்னங்களில் பதிந்தது. அந்த ஆதரவான சிறு செயலையோ அவள் பார்வையில் வெளிப்பட்ட நெருக்கமான நேசத்தையோ உணர மறுத்தது, அவன் மனம்.
“சாப்பாடு ஆறிப் போயிரும் காண்டீபன்…” மென்மையாக ஆரம்பிக்க, “நீ ஜோரிக் எண்டே கூப்பிடு, இது வேணாம்.” முகம் சுளித்தான்,அவன்.
“ஆங்! அதெப்பிடி? காண்டீபன் எனக்கு மட்டும். மற்றவேக்கு நீ ஜோரிக்காக இரு! எனக்குக் காண்டீபன். இதில எந்த மாற்றமும் இல்லை காண்டீபா!” அவன் மூக்கைத் திருகியவளின் கரத்தைத் தன்னையும் மறந்து பற்றிக் கொண்டவன், தன் கன்னத்தில் வைத்து அழுத்தியபடி அவள் விழிகளுள் உற்றுப் பார்த்தான்.
“அப்ப நீ என்னை விரும்புற அப்பிடித்தானே?” ஆழ்ந்து, மிக மெதுவாகவே கேட்டான்.
அவன் பார்வையும் பேச்சும், அப்படியே தன்னை அவனுள் இழுத்துக்கொள்ளும் அபாயம் உணர்ந்தாலும், அதிலிருந்து மீள முடியாது துவண்டது மீராவின் உள்ளம், விரும்பியேதான்.
அவன் இப்படியெல்லாம் பேசிப் பழகுகிறான் இல்லையே என்பது, உள்ளத்தில் பெருங்குறையாக இருந்ததை அப்போதுதான் உணர்ந்து கொண்டாள், அவள்.
“இதென்ன கேள்விடா? ஏதோ உனக்கு என்னில விருப்பமே இல்லாத மாதிரியும், நான் மட்டும் உன்ன விரும்புறன் எண்ட மாதிரியும் கேட்கிற!” என்றவளை, வளைத்து,தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டவன் உதடுகளில் ஒரு கர்வ முறுவல்; அதில் விசமத்தின் சாயலும் ஜொலித்தது.
“மீரா! இங்க பாரேன்.” அவளின் முகத்தை நிமிர்த்தி நேருக்கு நேராகப் பார்த்தவன், “அப்ப நீ இங்கயே என்னோட இருந்திரன்.” என்றான் வெகு இலகுவாக.
இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றதை அவள் முகபாவனையே காட்டி நின்றது.
அவள் விழிகள் விரிந்ததைப் பார்த்தபடி, “இண்டைக்கு உன்ர பிறந்தநாள், இண்டில இருந்து என்னோட இங்கயே தங்கியிருக்கிறியா?” கேட்டவன் குரலில், நிச்சயம் இருப்பாள் என்ற நம்பிக்கை.
‘வீட்டாக்கள் அவ்வளவுக்கு எதிர்த்த பிறகும் வந்திருக்கிறாள் எண்டால் இதைச் செய்யமாட்டாளா என்ன?’ இப்படித்தான் எண்ணினான், அவன்.
‘இவள் மட்டும் இங்க தங்க வேணும், அப்ப இவளிட தாய் என்ன செய்வாராம்? பார்ப்பமே!’ அவர்களுக்கும் சவால்.
அவனையே பார்த்திருந்த மீராவோ, “என்ன? நீ இப்ப என்ன சொன்னனி?” விலக முயன்றாள். அதற்கு அனுமதிக்கவில்லை அவன். தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.
“இங்க பார் மீரா, கம்பசுக்கு இங்க இருந்து போறதும் உன்ர ரூமில இருந்து போறதும் ஒரு பத்து நிமிச வித்தியாசம் எண்டு வச்சுக்கொள்ளன்; பிறகு ஏன் அங்கயும் இங்கயுமாக இருக்க வேணும்? இங்கயே என்னோட இரன். நானும் தனியத்தானே இருக்கிறன்.”
“அதுக்காக? உனக்கு என்ன விசராடா? இந்த வருசத்தோடு டிக்ரி முடிய மேல படிக்கவும் வேணும். இப்ப… கலியாணத்துக்கு என்ன அவசரம்? போனால் போகட்டும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருசங்களில செய்வமே!”
ஏற்கனவே மனதில் நினைத்து வைத்திருப்பவள் போன்று சொன்னாள்.
கேட்டவன் முகத்தில் இருந்த முறுவல் மறைந்து தீவிரம் குடிகொண்டது.
அதைக் கவனியாது அவன் நெஞ்சில் மீண்டும் சாய்ந்து கொண்டாள், மீரா.
அவனுக்குத் தன்னில் நேசமுண்டு என்று அறிந்திருந்தாலும், அவன், மாறி மாறி நடந்துக்கொள்ளும் முறையில் தடுமாறி நின்றவள் அல்லவா?
இங்கேயே இரேன் என்றதிலும், அதைச் சொன்னபோது அவன் குரலில் இருந்த ஏக்கமும், முகம் பிரதிபலித்த உணர்வுகளிலும் தன்னை அவன் எந்தளவுக்கு விரும்புகிறான் என்றுணர்ந்து சந்தோசித்தாள் அவள்.
மனம் நிறைந்திருந்தவளால் அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனிக்க முடியவில்லை. அவன் அமைதியையும் பாராது தானே தொடர்ந்தாள்.
“அதுவரைக்கும் உன்ன நான் லவ் பண்ணப் போறன் காண்டீப். நீ ஒருநாளைக்கு முறைச்சுக்கொண்டிரு. அடுத்த நாள் சிரி…இப்பிடி…” என்று, அவன் வாயை இருபுறமும் இழுத்துப் பிடித்துக் காட்டினாலும் மனக்குறையை சொல்லவும் தயங்கவில்லை.
இப்போது தானாகவே அவளை விலத்தி நிறுத்தினான், ஜோரிக். முகம் வேறு நன்றாக இறுகிக் கிடந்தது. சற்றே நகர்ந்து அங்கிருந்த தண்ணீர் போத்தலைத் திறந்து நீரைக் குடித்துவிட்டு நிதானமாக மூடிவைத்துவிட்டுத் திரும்பியவன், “என்னை விரும்புறாயே, என்னப்பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்றான் ஒரு மாதிரிக்குரலில்.
அவன் கேட்ட தொனியே இவள் முகத்திலிருந்த விளையாட்டுத் தனத்தை விரட்டியிருந்தது. சற்று முன்வரையிருந்த மயக்கமும் அகன்றிருந்தது. விழிகளில் குறும்புமட்டும் அப்படியேதான் மின்னின.
“உன்னப்பற்றி என்ன தெரிய வேணும் எண்டு நினைக்கிற? அதெல்லாம் நல்லாவே எல்லாம் தெரியும். அதோட கூடவே நீ காண்டீபன் எண்டும் தெரிஞ்சதில எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா?” என்றாள், குழந்தையாக.
அவன் முகமோ கடுகடுவென்றானது.
“அப்ப நடத்தை சரியில்லாதவன் எண்டு தெரிஞ்சே தான் விரும்புகிற…”
“காண்டீபன் போதும் டா!” எழுந்து அவனை நெருங்கி கரமிரண்டையும் அன்போடு பற்றிக் கொண்டாள், அவள் .
“அப்பிடி யாரும் உன்னட்டச் சொன்னவையா என்ன?”
தன் வீட்டில் கதைத்தது இவனுக்குத் தெரியவா போகுது என்ற நினைவில் கதைத்தாள்.
“நீயாகத்தானே அண்டைக்குக் கலியாணத்தில இருந்து ஓடி வந்திட்ட. பிறகு, உன்னத் தேடி வந்த என்னையும் அதையும் இதையும் சொல்லிக் கலைச்சு விட்ட. அந்தக் கோவத்திலதான் நான் இடையில் உனக்கு எடுக்கேல்லை. அப்பிடியே நான் எடுத்தாலும் நீ கதைச்சிருவ பார்!” உதடுகளைச் சுழித்தாள்.

