அவனோ உணர்வின்றிப் பார்த்தான்.
‘எதுவுமே நடவாத மாதிரிக் கதைக்கிறாளே!’
அவன் மனம் கடும் வெம்மையை உணர்ந்தது. அதன் அனல், விழி வழி கசிவதையும் உணராது தொடர்ந்தாள், மீரா.
“நம்மட விசயம் வீட்டிலும் தெரிஞ்சிட்டு காண்டீப்! பச்… அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல, அதை விடு!” அது ஒரு விசயமே இல்லை என்ற கணக்கில் தொடர்ந்தாள்
“இப்பவும் நான் வந்ததும் முதலில என்னமாதிரி முறைச்சனி? ஏன் நீயாகவே அதையும் இதையும் நினைச்சுக்கொண்டு உன்னை நீயே கஷ்டப்படுத்திக் கொள்ளுற?” என்றவளிடமிருந்து தன் கரங்களை விடுவித்துக் கொண்டவனுக்கு, “அப்ப, உன்ர வீடு தேடி வந்த வயசு போனவைய என்ன சொல்லி அனுப்பி வச்சீங்க?” என்று கேட்க வேண்டும் போலிருந்தது.
அதைவிட, எதுவென்றாலும் சட்டென்று சாதகமாக எடுத்துப் பதில் சொல்லும் அவளை நோகடிக்க வேண்டும் போல் ஒரு பரபரப்பு அவனில் உருவானது.
தன்னில் தானும் கோபம் கொண்டான், அவன். பின் என்ன? எவ்வளவு கோபம் கொண்டாலும் அவள் பேச்சும் செய்கைகளும் தன்னில் மிகையாகவே பாதிப்பு உருவாக்கி வாயடைக்க வைக்குதே! தன்னை அவள் குளிர்விக்கிறாள் என்றதையே கசப்போடுதான் உணர்ந்து கொண்டான், அவன்.
“நான் எதையோ சொல்ல வர, நீயோ, உன்ர விருப்பத்துக்கு அப்பிடியே கதைச்சுகொண்டு போற மீரா. நான் சொல்லுறதையும் கொஞ்சம் கேளன்!” என்றவன் குரலில் கடினம் மட்டுமே.
“சொல்லு…கேட்கிறன்.”
“உன்ர வீட்டை விடு, அவே சொல்லுறதை எல்லாம் நீ கேட்க வேணுமெண்டு இல்லைதான்…” என்றவனை, ஒருமாதிரிப் பார்த்தாள் அவள்.
அவனோ அதைப் பொருட்படுத்தாது தொடர்ந்தான்.
“என்னைப்பற்றி முழுமையாத் தெரிஞ்ச உன்னால, எப்பிடிக் கலியாணம் எண்டெல்லாம் கதைக்க முடிஞ்சிது எண்டுதான் எனக்கு விளங்கேல்ல மீரா.” என்றவன் நெற்றி நெரிந்து கிடந்தது. முகம் மாறி, வெளிப்படையாகவே இவளுக்கு வேறுபாடு தெரிந்தது.
“நீ என்ன சொல்ல வாற என்று விளங்கேல்லை.”
“இப்ப நீ தானே சொன்ன, ஒண்டு ரெண்டு வருசங்களில கலியாணம் செய்து கொள்ளுவமென்று…அதைத்தான் சொன்னன்.”
“அய்யோ! இப்பவும் விளங்கேல்லை காண்டீபன். எதைச் சொல்லுறது எண்டாலும் இப்பிடி அப்பிடி இழுக்காமல் டப்பென்று சொல்லிரு!” என்று நகர்ந்த மீரா, “முதல் நீ சாப்பிடு!” எட்டி அவன் கரம் பற்றி உணவு மேசையருகே நடத்திச் செல்ல முன்றாள்.
“எனக்கு இப்பப் பசிக்கேல்ல மீரா.” கரத்தை விடுவித்துக் கொண்டான், அவன்.
“நான் ஒருத்தியைக் காதலிச்சன்; அவள்ட பெயர் …”
“தெரியும். லின்…ஹெலன் சொல்லி இருக்கிறார். உன்ர கடந்த காலம் எனக்குத் தேவையில்ல.” பட்டென்று குறுக்கிட்டாள், அவள்.
“மீரா! என்னைக் கொஞ்சம் கதைக்க விடு!”
“சரி சொல்லு!” என்றவள், “ஆனால், இந்த லின் கின் கதை வேணாம்! உன்ர முடிஞ்சு போன காதல் காவியம் எனக்குத் தேவையில்லாத விசயம்.” வாயை அப்படியும் இப்படியும் சுழித்தவளுக்கு அதைக் கேட்கவே பிடிக்கவில்லை; அதுவும் அவன் வாயால்.
அவள் சொன்ன விதத்தில் அவன் பார்வை கூர்மையாகி அவளில் படிந்து விலகியது.
“அவள் என்னோட படிச்சவள். என்ர நல்ல நண்பி. பிறகு, ரெண்டுபேருக்குமே ஒத்துப் போய்ச் சேர்ந்து வாழ்ந்தம், ஆறு வருசங்கள்.” நிதானமாகச் சொன்னான்.
கேட்கப் பிடிக்கவில்லை என்றாலும், ‘மனசைத் திறந்து சொல்ல நினைக்கிறான் போல!’ என எண்ணிச் செவிமடுத்தாள் இவள். அவனைப் பார்க்கப் பாவமாகக் கூட இருந்தது. ‘இந்தளவுக்கு வெளிப்படையாக இருப்பவனைப் போய்க் கெட்டவனாமே!’ தாயை நினைக்கையில் எரிச்சலும் வந்தது.
“சந்தோசமாகத்தான் இருந்தம். ஏன் பிரிஞ்சம் தெரியுமா?” அவள் நினைவுகளில் குறுக்கிட்டது, அவன் குரல்.
“இப்ப நான் தெரியும் எண்டு சொன்னாலும் நீ உன்ர வாயால சொல்லப் போற. பிறகு என்ன கேள்வி? கெதியாச் சொல்லி முடி!’ மீராவின் சிடுசிடுப்பைப் பார்த்தவாறே தொடர்ந்தான்.
“லின்… கலியாணம், குழந்தை எண்டு கதைக்க ஆரம்பிச்சாள். அதுதான் எங்கட பிரிவுக்குக் காரணம்.” மிக அமைதியாக, அழுந்தச் சொன்னான் அவன்.
விசுக்கென்று நிமிர்ந்தது மீராவின் உடல்! அவள் விழிகளில் இதுவரை இருந்த குறும்பு முற்றிலும் மறைந்திருந்தது. கூர்மையாக அவனைப் பார்த்தாள்.
“என்…ன…சொல்…லுற?” இது அவளுக்குத் தெரியாது. இப்போதோ, அவன் சொல்வது புரிந்த அதிர்வில் தட்டுத் தடுமாறி வந்தன வார்த்தைகள்.
“கலியாணம், கட்டுப்பாடுகள், குழந்தைகள் எண்டதில எல்லாம் எனக்கு எப்பவுமே உடன்பாடோ ஆர்வமோ இல்ல. ஆரம்பத்தில அவளுக்கும் அப்படித்தான். நாள் செல்ல செல்ல வந்த ஆசைதான் எங்கள வேற வேறாக்கியது.” என்றவன் பார்வை இவளில் அர்த்தத்தோடு படிந்தது.
அவள் முகத்திலோ சினமும் சிடுசிடுப்பும்.
“அப்ப, இப்பக் கொஞ்ச முதல் என்னை இங்கயே தங்கச் சொன்னியே, அது என்ன அர்த்தத்தில?”
“உனக்கு என்னப் பிடிச்சிருக்கு. நானே ஒதுங்கிப் போனாலும் விடாமல் சுத்திச் சுத்தி வாற.” ஒற்றைப் புருவம் உயர, ஒரு எள்ளல் முறுவல் அவன் உதடுகளை அலங்கரித்திருந்தது.
“ஜோரிக்!”
“இப்போ கொஞ்ச முதல் வேற பெயரில கூப்பிட்டியே!” விழிகளில் அளவில்லாத விசமமும் சேர்ந்துகொண்டது.
“இப்ப அதுவா முக்கியம்? இங்க பார், நீ வெள்ளக்காரன் முறையில வளர்ந்திருக்கலாம், நான் அப்படியில்லை. சேர்ந்து வாழுறது எல்லாம் நமக்குச் சரிவராது. இன்னும் ரெண்டு வருசங்கள் பொறுத்துக் கொள். வீட்டாக்கள் சம்மதத்தோடு நம்மட கலியாணம் நடக்கும். அதுக்குப் பிறகு உன்னை விட்டு எங்கும் போகமாட்டன்.” என்று சொல்லிக்கொண்டே , அவனை இறுக அணைத்துக் கொண்டவளை, வலுக்கட்டாயமாகப் பிரித்து நிறுத்தினான், அவன்.
“எனக்கும் உன்னப் பிடிச்சுத்தான் இருக்கு மீரா. ஒதுங்கிப்போக நினைச்சாலும் முடியாமல் தான் இருக்கு. அதுக்காக, இந்தக் கலியாணம் எண்டதைக் கேட்க முடியேல்ல. இனி அந்தப் பேச்சே வேணாம்.” என்றவனிடமிருந்து சரேலென்று விலகிக் கொண்டாள், அவள்.
அவனோ, “நமக்குள்ள இருக்கிற இந்தப் பிடிப்பு இருக்கிற வரைக்கும் ஒண்டா இருப்பமே! எப்ப நம்மட மனம் மாறுதோ அவரவர் வழியில போகலாம். என்ன சொல்லுற? உனக்குச் சம்மதம் எண்டால் இண்டைக்கே இங்க தங்கிக் கொள்ளலாம் மீரா.” என்றபடி, எட்டி அவளை அணைத்துக் கொள்ள முன்றான்.
அவன் கரத்தில் பிடிபடாது விலகியவள், ‘பளார்’ என்று அறைந்து விட்டாள்.
பிறந்த நாளும் அதுவுமாக அவனிடம் ஒரு வாழ்த்து வாங்க என்று எத்தனை ஆசையாக வந்தாள். அவனோ, அவள் நேசத்துக்கே வேறு வடிவம் அல்லவா தரப் பார்க்கிறான்.
‘மனம் மாற வேற வேற வழி பார்க்கலாம். இப்ப சேர்ந்திருப்பம் வா எண்டு சொல்லிட்டானே!’ கொதித்தது அவள் மனம்.
அவளிடமிருந்து இத்தகைய ஒரு பிரதிபலிப்பை எதிர்பாராதவன் அதிர்ந்து போனான். அவன் சுதாகரிக்க முதல் பளார் பளார் என்று மீண்டும் மீண்டும் உரசி வந்தது, அவள் கரம் .
அடித்தவள், கரத்தின் எரிச்சலும் மனத்தின் கொதிப்புமாக அவனைப் பார்த்தாள்.
“இந்தக் கணத்தில இருந்து உன்னப் போன்ற ஒருத்தன நான் சந்திக்கவே இல்லையெண்டு நினைச்சுக் கொள்ளுறன். ச்சே!” ஆட்காட்டி விரல் அவன் முகத்தின் எதிரே நீண்டிருக்க உறுமினாள்.
மறுநொடி, சோஃபாவில் கிடந்த கைப்பையை எடுத்த வேகத்தில் வெளியேறியிருந்தாள், மீரா.

