ரோசி கஜனின் மீரா 24 – 2

‘பேசாமல் வீட்ட போயிருக்க வேணும். அம்மாட்ட எல்லாத்தையும் சொல்லியிருக்க வேணும்.’ மனம் அரற்ற, கலங்கவா என்று கேட்டன விழிகள்.

‘இல்ல. இல்லவே இல்ல.’ கடுமையாகக் கட்டளையிட்டாள், இவள்.

இந்தப் போராட்டம் எத்தனை மணிவரை நீடித்ததோ அப்படியே சோர்ந்து அயர்ந்துவிட்டவளை விழிக்க வைத்தது கைபேசியின் உறுமல்!.

திடுக்கிட்டு எழுந்து கைபேசித்திரையைப் பார்த்தவள், “ஆதவ்” முணுமுணுத்தபடி அழைப்பை ஏற்று, “சொல்லடா!” என்றாள் தாழ்ந்த குரலில், அறையின் மறுபுறம் இருந்த ஸ்டெப் பெட்டில் உறங்கும் தோழிகள் எழுந்து கொண்டார்களோ என்று பார்த்தபடி,

“கொஞ்சம் பொறு ஆதவ், நான் வெளியில வாறன்.” என்று சொல்லிவிட்டு எழுந்து, அறையை விட்டு வெளியேறி அங்கிருந்த சிறுவராண்டாவில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டவள், “ம்ம் சொல்லு, என்ன இந்த நேரம்?” என்றாள், குற்றவுணர்வோடு.

“என்ன சொல்லுறது? நீதான் சொல்ல வேணும்.” ஆதவ்விடமிருந்து அமர்த்தலாகப் பதில் வந்தது.

“ஆதவ்… கோபமாடா?

“உன்னோட கோவிச்சு எனக்கு என்ன வரப்போகுது? முதல் ஏன் கோபம்?” அப்போதும் குரலில் அதே ஒதுக்கமும் அமர்த்தலும்.

“ஏன்டா இப்பிடி ஆரோ போலக் கதைக்கிற? ஃப்ரெண்ஸுக்கு பார்ட்டி குடுத்திட்டு வீட்ட வர எண்டுதான் இருந்தன். ஒரே தலையிடிடா! அதுதான் நாளைக்குக் காலையில போகலாம் எண்டு இங்க வந்திட்டன்.” மெல்லிய தயக்கத்தோடு சொன்னாள்.

“ஓ!” அந்த ஒற்றை எழுத்தே, இவள் பதில் அத்தனை உவப்பானதில்லை என்றது.

முகம் கன்றியது மீராக்கு. ‘நினைவு தெரிஞ்ச நாளில இருந்து கடைப்பிடிக்கிற வழக்கம் ஒண்டு இண்டைக்கு என்னால மீறப்பட்டிருக்கு. அதுவும் ஒரு கடன்காரனால். ச்சே!’ தன்னைத்தானே கண்டித்தாள்.

ஐவரின் பிறந்தநாட்கள் மட்டுமில்லாது இரு குடும்பத்துப் பெரியவர்களின் பிறந்தநாட்களுமே இவர்களுக்கு விசேசம்தான். இரு குடும்பங்கள் மட்டுமே என்றாலும் இரவுணவு வேளை விருந்தாக, மகிழ்வாகக் கழியும். அதை இன்று இவளே தவிர்த்து விட்டாளே!

“மீரா!”

“சொல்லடா. எல்லாரும் சாப்பிட்டினம் தானே?”

எப்போதுமே திடமாக ஒலிக்கும் அவள் குரல், இன்று, குற்றவுணர்வில் தத்தளித்தது.

அதை ஆதவ்வாலும் உணர முடிந்தது. ‘அப்படி என்ன நடந்தது?’ நேரடியாகக் கேட்க நினைத்துவிட்டு மிகவும் பொறுமை காத்தான்.

“நீயில்ல எண்டோன்ன எல்லாருக்கும் ஒரு மாதிரித்தான் மீரா. அக்காக்கள் வேற இல்லையா?” சற்றே மௌனம்.

“இதைவிட அப்பிடி என்ன முக்கிய வேலை எண்டு யோகம் பாட்டி சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்குச் சரியான கவலை. நாங்க எண்டாலும் உன்னைக் காலேல கண்டு வாழ்த்துச் சொன்னம். தாத்தா பாட்டி…” என்றவனை இடைமறித்தாள், மீரா.

“அய்யோடா! அவேயோட போனில கதச்சன் டா. வர முடிஞ்சு வராமல் விட்டனாடா?

“என்னைக் கேட்டால்? எனக்கு எப்படித் தெரியும்? நீதான் சொல்ல வேணும்? கம்பஸ் எப்பவோ முடிஞ்சிட்டுத்தானே? ஃப்ரெண்ட்ஸோடு ரெஸ்ட்டொரண்ட் போகேக்க நித்தி அத்தையோட கதைச்சியாமே! அப்ப ‘வீட்ட வருவன்’ எண்டவளுக்குத் திடீர்த் தலைவலி! ம்ம்” அவன் குரலில் வெளிப்படையாகவே சந்தேகம்.

‘இவனிட்ட என்ன சொல்லுறது? நடந்ததைச் சொன்னால் என்ன நினைப்பான்? இவனைவிட வயசில பெரியவளும் கூட..’ மிகுந்த அவமானமாக இருந்தது, அவளுக்கு.

‘இவ்வளவு அவமானமும் அவனோட பழகத் துணிஞ்சதுக்கு. ச்சே! அவனை மனசில நினைத்ததுக்கு. தேவைதான், எனக்கு.’

மீண்டும் மீண்டும் தன்னைத் தானே சாடிக்கொண்டாள்.

“சொல்லுறதுக்கு என்னடா இருக்கு? அதுதான் சொன்னனே தலையிடி. பார்ட்டி முடிய இருட்டியும் போச்சு. காரோடி வர அலுப்பாக் கிடந்திச்சு.” சமாளிப்பாகச் சொன்னவளுக்குப் பதில் சொல்லாது அமைதி காத்தான், அவன்.

சில வினாடிகள் மௌனம்.

“இப்ப தலையிடி எப்பிடி இருக்கு? சாப்பிட்ட தானே?” கோபம் இருந்தாலும் கேட்டான்.

“ம்ம்… பரவாயில்லைடா. பார்ட்டியில சாப்பிட்டன்.”

“ஓ! அவனோட சாப்பிட்டியா? அவனும் பார்டிக்கு வந்திருந்தானா? இல்ல நீ திரும்பவும் அவன்ட வீட்டுக்குப் போனியா மீரா? வீட்டில அவ்வளவு சொன்ன பிறகும், அமைதியாக இருந்திட்டு நீ நினைக்கிறதைச் செய்வன் எண்டு செய்யிற என்ன?” சட்டென்று கேட்டுவிட்டான். மிகுந்த குறையோடு ஒலித்தது அவன் குரல்

சட்டென்று எழுந்து நின்றாள் மீரா.

‘இது எப்பிடி இவனுக்குத் தெரிஞ்சிது ?’

“ஆதவ்…உனக்கு …எப்பிடிடா?”

“அதுசரி…இப்பவெல்லாம் எங்களுக்குத் தெரியாமத் தானே எல்லாம் செய்ய நினைக்கிற…என்ன ?

“அய்யோ அப்பிடியெல்லாம் இல்லையடா! இத்தாலியானாவில தான் பார்ட்டி குடுத்தன். பிறகு அவனை …” என்றவள், இப்போது அமைதி காத்தாள்.

இனிமேல் வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்திருந்தாள். தோழிகளிடமும் சொல்லியிருந்தாள். அவன் செய்கை தந்த கோபத்தில் விறைத்திருந்த மனதில் இந்த முடிவெடுக்கும் போது வலி ஏற்படவில்லை. அதேநேரம், இப்படி மொத்தமாக அவனை வெறுக்கும் வீட்டினரிடம் சொல்கையிலோ மனம் பிராண்டியது.

“பிறகு அவனிட்ட போனாய் போல!” இப்போது, சீறலாக வந்தது, அவன் குரல்.

“ஆதவ்..இனிமேல் அவனச் சந்திக்க மாட்டன்டா. அவன் பற்றின கதை என்ர வாயில இருந்து வராதடா!”

சொல்கையில் அடக்க முடியாது விம்மிவிட்டாள்.

மறுபுறமிருந்த ஆதவ் தான் பதறிப் போனான்.

இவளின் இந்த கலக்கத்துக்கும் ஜோரிக் வந்த நின்ற நிலைக்கும் தொடர்பை ஏற்படுத்த முயன்றான், அவன்.

“என்ன நடந்தது மீரா?”

“பச்! ஒண்டும் இல்லயடா!”

“இங்க பார், நீ எதையோ மறைக்கிற. என்ன எண்டு சொல்லு, இல்லையோ, நான் இப்ப அங்க வருவன்.”

“அய்யோடா சொன்னால் கேளன். அவன்..அவன் அவன் எனக்கு வேணாம் எண்டு முடிவு செய்திட்டன். பிறகு என்னத்துக்குக் கதை? விடு! இதை என்ர வாயால கேட்டால் அம்மா எவ்வளவு சந்தோசப்படுவார். அந்தளவோட போதும்டா. கெட்ட கனவா மறக்கப் பார்க்கிறன்.”

“ஏய்! என்னடி உளறுற? அப்பிடி என்ன நடந்திச்சு எண்டு சொல்லன்? அவன் உனக்கு வேணாம் எண்டு சொல்லச் சொல்ல வாய் திறவாது நடமாடிட்டு, இண்டைக்கு அங்க போயிருக்கிற. பிறகு இப்பிடிச் சொல்றயே!”

“போன படியால் தானே அவன்ட குணம் தெரிஞ்சிது! கள்ள ராஸ்கல் அவன்.”

“மீரா! உன்னோட ஏதாவது தேவையில்லாமல் கதைச்சானா? சேட்டை எதுவும்…”

“ச்சே! ச்சே! அப்படியெல்லாம் இல்லை.”

ஆதவ் கேட்டு முடிக்க முன்னரே பட்டென்று சொல்லிவிட்டாள்.

‘எண்டைக்குமே அவன் அப்பிடியெல்லாம் நடந்து கொண்டதில்லையே, பார்வையில் கூட!’ வீணாக இடையிட்டு முணுமுணுத்த மனத்தை அடக்கியவள், “என்ன நீ? நானே அவன் வேணாம் எண்டு ஒதுங்கப் பார்க்க, நீ பிடிச்சு இழுத்து விடுற.” என்றாள்.

அமைதி காத்தான் ஆதவ். ‘ஜோரிக் இங்க வந்ததைச் சொன்னால்…’ கணம் யோசித்தவன் அதைச் சொல்லாது விட்டான்.

ஆனால் அவளோ, “அதுசரி, நான் இத்தாலியானா போனது உனக்கு எப்படித் தெரியும்?” என்றாள்.

“அது வந்து…” சட்டென்று பதில் சொல்லத் தெரியாது தடுமாறியவன், “அங்க என்னமோ நடந்திருக்கு மீரா. சொல்ல விருப்பமில்ல எண்டால் சொல்ல வேணாம். அவன் உனக்குச் சரிவரமாட்டான் எண்டு எல்லாரும் சொல்லேக்க கேட்காமல் இருந்திட்டு, நீயே அந்த முடிவை எடுத்தது சந்தோசம் தான். ஆனால், இனிமேல்பட்டு என்ன எண்டாலும் பெரியாக்களிட்ட சொல்லாட்டியும் பரவாயில்ல, என்னட்டச் சரி சொல்லடி. ஒண்டு கிடக்க ஒண்டு நடந்து வீண் பிரச்சனை வேணாம் மீரா!”

அவள் மீதான அக்கறையும் அன்பும் அவன் குரலில் ஒட்டியிருந்தது.

மீண்டும் ஜோரிக் வந்து நின்ற தோற்றமே இவன் நினைவில்.

‘இவள் செய்கையை அவன் மட்டும் கோபமாக எடுத்துக் கொண்டிருந்தால்? பழிக்கு பழியெண்டு எதையாவது செய்ய முனைந்தால்? ஏன் வீண் பிரச்சனை?’ என்ற ரீதியில் சென்றது அவன் சிந்தனை.

“ஆதவ்! நான் உன்னட்ட என்ன கேட்டன்? நான் அங்க போனது எப்படித் தெரியும் எண்டு கேட்க, நீ வேற சொல்லுற?” அவன் சிந்தனையில் இடையிட்டாள், மீரா.

“அது வந்து…” மீண்டும் தடுமாற, எதுவோ இருக்கு என்று புரிந்து கொண்டவள், அதன் பிறகு விடுவாளா?

ஒரு வழியாக அவன் அங்கு வந்ததை, கதைத்ததைச் சொல்ல, அசைவற்றுக் கேட்டிருந்தாள்.

‘அவ்வளவு கேவலமாக் கதைச்சிட்டு பெரிய அக்கறையில பின்னால போனானா? அதுவும் அவன்?’

உண்மையாகவே நம்பமுடியாதிருந்தது அவளுக்கு!

சட்டென்று பீட்டரின் நினைவு வந்தது. ‘பெரியவரின் கண்டிப்பில பின்னால வந்திருப்பான், கள்ளன் ராஸ்கல்!’ நறும்பினாள்.

“இப்பச் சரி சொல்லு, அங்க என்ன நடந்திச்சு? உனக்கு ஏன் அவ்வளவு கோபம் வந்திச்சு?” ஆதவ் விடவில்லை.

வற்புறுத்தி, நடந்ததை அறிந்து கொண்டவனோ கொதித்துப் போனான்.

“இதைத்தானே வீட்டில எல்லாரும் சொன்னவே? அவன் வளர்ந்த விதம் வேற மீரா. அவனுக்கும் நமக்கும் சரிபட்டு வராது.

இப்படி அவனைக் கேட்க வைத்தது நீ.

போதும் டி, இனி அவன் பக்கமே போகாதே!

ரூமில இருந்ததும் போதும். இன்னும் கொஞ்ச நாட்கள் தானே? வீட்டில இருந்தே போகலாம்.” படபடத்தான் ஆதவ்.

“பச்! அவனுக்குப் பயப்படுற போலக் கிடக்கே!”

“அப்படியில்ல மீரா…ஏன் வீணா?”

“இங்க பார் ஆதவ், நான் இதைவேற ஆரிட்டயும் சொல்ல மாட்டன். பெருமையாச் சொல்லுற விசயமும் இல்லை தானே?”

சின்னக் குரலில் சொன்னாள், ‘நீயும் சொல்லிவிடாதே!’ என்ற மறைமுக வேண்டலோடு!

“இதை மட்டும் வீட்டில் கேட்டால்…நீ சரிடி!” என்றவன், “இது நமக்குள்ளயே இருக்கட்டும். நீ இனி அவனைக் கண்டால் திரும்பியும் பாராதே!” கண்டிப்போடு சொன்னான்.

அதன்பின், சிறிது நேரம் கதைத்துவிட்டு வைத்தவளுக்கு மனப்பாரம் சற்றே குறைந்திருந்தது.

அதேநேரம், ஜோரிக் என்பவன் என் வாழ்வில் இனி இல்லவே இல்லை என்பது மிக உறுதியாகியும் இருந்தது.

முதல் வேலையாகத் தன் கைப்பேசியில் இருந்த அவன் தொடர்புகளை நீக்கிவிட்டே கண்ணயர்ந்தாள்.

 

error: Alert: Content selection is disabled!!