29
நெதர்லாந்தில் இருந்து மலேசியா வரையிலான பயணம் அப்படியே நீண்டு கொண்டு போவதாய்!
இருவருக்குமே இவ்வுணர்வுதான்!
சாதாரணமாகவே நீண்டதொரு பயணம் தானே? இங்கோ, கனத்த இதயத்தோடு இருப்பவர்களுக்கு முடிவுறாதா என்ற ஏக்கத்தை உருவாக்கிவிட்டது.
இருவருமே கடக்கும் ஒவ்வொரு கணமும் மூச்சு முட்டுவதாய் அவஸ்த்தைப்பட்டார்கள்.
இருக்கைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்திருந்தன. நித்தியின் அருகில் இருந்த மனிதரோடு கதைத்து, அவரைத் தன்னிடத்தில் அமர்த்திவிட்டு நித்தியின் அருகில் வந்தமர்ந்துவிட்டான், ஜோரிக்.
அதைச் சற்றும் இரசிக்கவில்லை, நித்தி. அதேநேரம், தன் மனத்தைப் பார்வையால் கூட வெளிப்படுத்தவில்லை. சொல்லப்போனால், அதற்கெல்லாம் சக்தி இருக்கவில்லை. அவன் பக்கமே திரும்பாது அப்படியே சோர்ந்து அமர்ந்துவிட்டார்.
மகளை நினைத்து நினைத்து அழுதுகொண்டே வந்தவரை ஆறுதல் படுத்தும் வழி புரியாது தடுமாறினான், ஜோரிக். அதற்கென்று அமைதியாகவும் இருக்க முடியவில்லை.
“அவளுக்கு எதுவும் நடக்காது, பயப்பட வேணாம்!” தன்னைமீறிச் சொன்னவன் குரலோ நடுங்கியது. விழிகளும் கண்ணீரில் நிறைந்துவிட்டன.
அவன் குரலில் வெடுக்கென்று திரும்பி ஒரு பார்வை பார்த்தார், நித்தி.
நெஞ்சில் புரண்ட துக்கமும் பயமும் கட்டுக்கடங்கேன் என்றதில் வாயைப் பொத்திக்கொண்டு விம்மியவருள், அவன்பால் இருந்த கோபமும் வெறுப்பும் சேர்ந்து பலத்த எரிச்சல் ஏற்படுத்தியது.
பிறகு? ‘என்ர மகளுக்காக, நான் அறவே வெறுக்கிறவன் இப்பிடித் துடிக்கிறானே! அவளும் தான் ஆபத்தில இவனத்தானே தேடினாள்!’ முணுக் முணுக்கென்று வலி தந்தது, இந்நினைவு!
இவனுக்கு மகள் மீதுள்ள பாசம் புரிந்தாலும் அதைத்தான் ஏற்கவே முடியவில்லையே!
‘இவன் மட்டும் என்ர மகள் வாழ்வில வரேல்லையோ, அவள் இப்பிடி அவுஸ்திரேலியா போய் தங்கி நிக்கிற முடிவையே எடுத்திருக்க மாட்டாள். இண்டைக்கு இப்பிடி ஒரு நிலையும் வந்திராது!’ என்றுதான் எண்ணினார்.
என்னதான் வீட்டில் மற்றவர்கள் தம் மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டாலும், இவனை ஏற்றுக் கொண்டாலும், ‘மீண்டும் மகள் வாழ்வில் இவன் வரவா?’ அதை அறவே வெறுத்தார், நித்தி.
இருந்தும், அந்த வெறுப்பைக் காட்ட இதுவா சந்தர்ப்பம்? அவரால் காட்ட முடியவில்லை.
மகளை நினைத்து அழுதபடியே மலேசியா வந்தவரை, அக்கறையும் கவனமுமாக அழைத்துக்கொண்டே இறங்கினான், ஜோரிக்.
பரிவோடு நின்று அழைத்துவர முயன்றவனோடு முரண்டு பிடிக்காது வெளியே வந்த வேகத்தில் கைப்பேசியை எடுத்தவர், அதற்கிடையில் அவன் அழைத்து விட்டதைப் பார்த்து முகம் சுளித்தார்.
‘நிச்சயம் அவுஸ்திரேலியாவுக்குத்தான்!’ மனதில் முணுமுணுத்துக்கொண்டே, “ஆருக்கு?” கேட்கவும் செய்தார்.
அவரின் முகச்சுழிப்பை அவதானித்தாலும் பொருட்படுத்தவில்லை, அவன்.
“ஆரணிக்கு!” என்றவன், மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட்டிருக்கவே, “ஹலோ!” என்ற அவள் குரலைச் செவிமடுத்தவாறே ஒரு கணம் தயங்கினான்.
‘ஆரணி! என்ர தங்கச்சி!’ அழையாமல் வந்தது இந்நினைவு. விழிகளை மூடித் திறந்தவன், “நான் ஜோரிக்…மீரா பற்றி ஏதாவது…”
“அண்ணா!” தன்னை மீறி அழைத்து விட்டாள், ஆரணி. இவர்கள் விமானம் ஏறியதும் மதுராவும் கார்த்திகேயனும் எடுத்துக் கதைத்திருந்தார்களே!
தமிழில் பரிச்சயம் இல்லை என்றாலும் ‘அண்ணா’ என்பதன் அர்த்தம் தெரியாதவனும் இல்லை. அத்தனை துக்கத்தையும் கடந்த ஒருவகை இதம் அவனுள்! நாவசையாது தடுமாறி நின்றான், ஜோரிக்.
அவன் அமைதியைப் பொருட்படுத்தாது தொடர்ந்தாள், ஆரணி.
“மலேசியா வந்து சேர்ந்திட்டீங்களா? நீங்க ஃபிளைட் ஏறினோன்ன அப்பா ஃபோன் பண்ணிச் சொன்னவர்.” என்றவள், “அய்யோ! முதல் சந்தோசமான விசயத்தைச் சொல்லாமல் பாருங்க…நம்மட மீரா வீட்ட வந்திட்டாள் அண்ணா!” இதைச் சொல்கையில் கேவி அழுதுவிட்டாள்.
“என்ன!? உண்மையாவா? எப்ப? எப்பிடி இருக்கிறாள்? பிரச்சனை ஒண்டுமில்லையே!” கடகடவென்று அடுக்கியவன் உடலோ, சக்தியெல்லாம் வடிந்து போய்த் தள்ளாடியது. அருகில் இருந்த தூணில் சாய்ந்துகொண்டான்.
“ஓம் அண்ணா! அவளுக்கு ஒண்டுமில்ல. நல்லா இருக்கிறாள். நல்ல காலம் ஆருக்குமே உயிராபத்து எண்டு இல்ல.
இருபத்தியஞ்சு ஆட்களில நாலு பேருக்குச் சின்னச் சின்னக் காயங்கள், அவ்வளவும் தான். இப்பக் கொஞ்சத்துக்கு முதல் தான் வீட்ட வந்தம். அந்த இரண்டு தீவிரவாதிகளையும் சுட்டாச்சு!” படபடவென்று சொன்னவள், “நித்தி அத்த எங்க? உங்களோட வாறா எண்டு சொன்னவே…”
“இந்தா பக்கத்தில் நிக்கிறா…” என்றவன், “மீரா எங்க? பக்கத்தில இருக்கிறாளா?” ஆவலாகக் கேட்டான். அவள் குரலைக் கேட்டுவிட்டால் மிகுதிப் பயணத்தைச் சற்றே நிம்மதியாகக் கழிக்கலாமே.
“அவள் நித்திர கொள்ளுறாள் ணா…” சொல்லிக் கொண்டிருக்கையில் கைப்பேசியை வாங்கிவிட்டார், நித்தி.
தாயல்லவா? மீரா வந்துவிட்டாள் என்று இவர்களின் பேச்சில் புரிந்துகொண்டவருக்கு தலை சுற்றுவது போலிருந்தது. பல்லைக்கடித்துச் சமாளித்தபடி, கைப்பேசியை அவன் கொடுக்கமுதலே கிட்டத்தட்டப் பறித்தெடுத்துவிட்டார்.
அவர் மனம் புரிந்து கைப்பேசியைக் கொடுத்துவிட்டுச் சற்றுத் தள்ளிச் சென்று நின்று கொண்டான், ஜோரிக்.
‘என்ர மீரா வந்திட்டாள். அவளுக்கு எந்த ஆபத்தும் இல்ல!’ அப்படியே பெரும் குரலில் கத்த வேண்டும் போலிருந்தது, அவனுக்கு.
நெஞ்சில் அடைத்திருந்த அத்தனை துக்கத்தையும் துளியின்றி வெளியேற்றிட ஆவல் கொண்டது, அவனுள்ளம்.
இரு கைகளையும் சிகைக்குள் போட்டு அழுந்தக் கோதிக்கொண்டே விசுக்விசுக்கென்று அப்படியும் இப்படியும் நடந்தவனை அருகில் உள்ளவர்கள் ஒரு மாதிரிப் பார்த்தார்கள்.
அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை அவன். விழிகள் வேறு கசிந்து தொலைத்தது. ஆனந்தக்கண்ணீர்!
‘என்ர உயிர் அவள்! அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா நான் என்னவாகியிருப்பன்?’ அவனிடம் பதிலில்லை.
ஆனால், “இந்த ஜோரிக்…என்ர மீராட காண்டீப் நிச்சயம் உருக்குழைஞ்சிருப்பான்!” காய்ந்து போன உதடுகள் முணுமுணுத்தன.
பிரவாகம் எடுத்த கண்ணீரைச் சிறுவன் போல துடைத்தவனை, கண்ணீரோடு பார்த்து நின்ற நித்திக்கு, அவன் மனத்தைத் தெள்ளத் தெளிவாகவே புரிந்துகொள்ள முடிந்தது.
இதோ கடந்த கணம் வரை, நெஞ்சாங்கூட்டில் இருந்து வலிக்க வலிக்க உயிரைப் பறிக்கும் வேதனையில் துடித்தவர் தானே?
இப்போதோ, மகள் பாதுகாப்பாக வீடு வந்துவிட்டாள் என்று கேட்கையில் பதைபதைத்த உயிர்ப்பு ஆசுவாசமானதே!
பட்டென்று வடிந்த மனத்தின் கனம் அவருடலைத் தள்ளாடவைக்க, அருகிலிருந்த இருக்கையின் பின்புறத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு சாய்ந்து நின்றவர் பார்வை ஜோரிக்கில் தான்.
‘தான் வெறுக்கும் ஒருவன், தாம் அனுபவித்த அதேயளவு வேதனையைத் தம் மகளுக்காக அனுபவித்திருக்கிறானே!’
கணேஷின் மகன் அவன் என்ற கோபம், அடங்கா எரிச்சல், வெறுப்பு என எல்லாம் கடந்து, சிறிதாகப் பரிதாபப்பார்வை அவன் மீது விழுந்தது.
ஒன்றாகப் பயணித்த இந்த சிலமணிகளில், தன் வெறுப்புப் பார்வையைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாது, தன்னைப் பார்த்து பார்த்துக் கவனித்து அழைத்து வந்ததும் நினைவிலாட, மெல்ல அவனை நோக்கிச் சென்றார், நித்தி.
‘அவளும் நானும் சந்திச்சுக்கொண்டதே ஒரு மாபெரும் விபத்து! எப்பிடியாவது அவள் பற்றின நினைவுகள மனசிலிருந்து கொய்து எறிஞ்சிர வேணும்’ என்று படாதபாடு பட்டுக்கொண்டிருந்தவன், இக்கணமோ, இந்தப் பூகோளத்தின் உச்சபட்ச மகிழ்வனைத்தும் தன் வசமானதாய் பரவசப்பட்டுப் போனான்.
“மீரா! என்னத் திடீரெண்டு கண்டதும் என்னடி செய்வ? நான் வருவன் எண்டு கொஞ்சமும் நினைச்சிருக்க மாட்ட தானே?” மந்தகாச முறுவலோடு சொல்லிக்கொண்டே, கன்னங்கள் இரண்டையும் தடவினான். “அப்ப்ப்பா!” அன்று வாங்கியதன் ஸ்பரிசம் புத்தம் புதிதாகத் தன்னை உணர்த்தியது.
அவனையே பார்த்துக்கொண்டு நெருங்கிய நித்தி, வித்தியாசமாகப் பார்த்தார்.
“அழுதான். கண்ணீரோட சிரிக்கிறான். தனியக் கதைக்கிறான்…” முணுமுணுப்போடு, “ஜோரிக்!” மெல்ல அழைத்தார்.
திடுக்கிட்டுப் போய்த் திரும்பினான், அவன். முதல் முதல் நித்தியின் வாயிலிருந்து அவன் பெயர் வருகின்றதே! அவர். அவனை எந்தளவு வெறுக்கிறார் என்று நன்றாகத் தெரிந்திருந்தவன் அல்லவா?
தன்னையுமறியாது, அவர் விழிகளில் அந்த வெறுப்பைத் தேடினான். சற்று முன்வரை அதிலிருந்த வெறுப்பின் சாயல் நிச்சயம் வலுவிழந்துதான் இருந்தது.
“ஃபோன்…” கைப்பேசியை அவன் முன்னால் நீட்டியவர், “அதுதான் அவளுக்கு ஒண்டுமில்லை எண்டு ஆரணி சொன்னாளே! கண்ணத் துடைச்சுக்கொள்! எல்லாரும் ஒரு மாதிரிப் பார்க்கினம்.” என்றார், தாழ்ந்த குரலில்.
அதுவே போதுமே இவனுக்கு! அவன் விழிகளால் இன்னும் இன்னும் கண்ணீர் வழிந்தது. நித்தியின் கரமிரண்டையும் பற்றிகொண்டவனின் கரங்கள் நடுநடுங்கின.
“நன்றி…ம்மா!” குரல் நடுங்கச் சொன்னவன் தோளில் மெல்லத் தட்டிவிட்டு, “வா…அங்க போயிருப்பம்.” நடந்தார் நித்தி. சேர்ந்துகொண்டான், அவன்.
நெதர்லாந்தில் இருந்து மலேசியா வந்ததற்கும், மலேசியாவில் இருந்து அவுஸ்திரேலியா போவதற்கும் நிறையவே வேறுபாடு!
இருவர் உள்ளங்களும் பரபரப்பில் துடித்தாலும் அங்கு கனம் இருக்கவில்லை.
அதிலும், அமைதியாக இராது பொதுவாகக் கதைத்தபடி வந்தான் ஜோரிக். நித்தியிடமிருந்தும் சிலவார்த்தைகளில் என்றாலும் பதிலும் வந்தது.
இப்படியே சென்று, சிட்னி சர்வதேச விமானநிலையத்தில் இறங்கியவர்களை வரவேற்கவென சந்துருவும் ராகுலனும் வந்திருந்தார்கள்.
இருவருமே மிகவும் களைத்துத்தான் தெரிந்தார்கள். முதல் நாள் நடந்த நிகழ்வின் தாக்கம் அப்படியே அவர்களில் தெரிந்தது.
இவர்களைக் கண்டதும் விரைந்து வந்த சந்துரு “சித்தி!” என்றவாறே நித்தியை அணைத்துக்கொள்ள, அவரோ விம்மிவிட்டார்.
“ஸ்ஸ்…சித்தி…அதுதான் ஒண்டுமில்லையே! அவள்…நம்மட மீரா…நல்லா இருக்கிறாள் சித்தி.” என்றவனும் கலங்கிவிட்டான்.
தயங்கி நின்ற ஜோரிக்கைப் பார்த்துவிட்டு முன்னேறிய ஆரபியின் கணவன், “ஹலோ! நான் ராகுலன்!” தமிழில் சொன்னபடி, வரவேற்பு முறுவலோடு கரம் பற்றிக் குலுக்கினான்.
அவன் வரவேற்பை ஏற்றாலும், ஜோரிக் முகத்தில் சிறு சங்கட முறுவல்! பற்றிய ராகுலனின் கரத்தை விடாமலேயே, “நீங்க?” ஆங்கிலத்தில் வினவினான்.
‘தமிழ் தெரியாது.” ஆங்கிலத்திலேயே சொல்லவும் செய்தான்.
“ஒஹ்…சொறி சொறி!” மறுகரத்தால் தோளோடு அணைத்துக்கொண்டான்.
“இவன் சந்துரு! அண்ணாவின்ட மூத்த மகள் ஆரணிட கணவன்.
இவர் ராகுலன்! அண்ணாட ரெண்டாவது மகள் ஆரபிட கணவன்.” சட்டென்று அறிமுகம் செய்து வைத்தார், நித்தி.
அண்ணாவின் என்று சொல்கையில் அவர் குரல் அழுத்தத்தோடு ஒலித்ததோ என்றிருந்தது, ஜோரிக்குக்கு. அவன் பார்வைக்கும் நிச்சயமாய் அவர்கள் கார்த்திகேயனின் மகள்மார்தான்.

