அதேநேரம், ‘என்ர தங்கைகளின் கணவன்மார்!’ என்றும் மனதுள் சொல்லிக் கொண்டான்.
“அட! அப்படியெண்டா உங்கட கலியாண வீட்டுக்கு வந்திருந்தனே. இப்ப, சட்டென்று பார்த்தோன்ன அடையாளம் தெரியேல்ல.” இயல்பாகக் கதைக்க ஆரம்பிக்க, சந்துரு, ராகுலனும் அதே இயல்போடு அளவளாவினர்.
“ம்ம்…போய்க்கொண்டே கதைக்கலாம்.” ஜோரிக்கோடு முன்னால் நடந்தான், ராகுலன்.
“நான் கொண்டுவாறன் தாங்கோ சித்தி.”
நித்தியின் பயணப்பை சந்துருவின் கரத்துக்கு மாறியிருக்க, கதைத்தபடி பின்தொடர்ந்தார்கள்.
“நாங்க வாறது மீராக்குத் தெரியாதுதானே?” நித்திதான் வினவினார் .
“இல்ல இல்ல…மாமா ஆட்கள் சொல்ல வேணாம் என்றவே .” என்றான் ராகுலன்.
“அதையேன் சித்தி கேட்கிறீங்க? நேற்று அங்க இருந்து வந்ததும் வராததுமாக நெதர்லாந்துக்கு எடுத்தாள். இவ்வளவுக்கும் ‘இங்க இப்பிடி நடந்தது எண்டு எதையும் நாங்க உங்களுக்குச் சொல்லேல்ல, பயந்து போவீனம் தானே?’ எண்டுதான் சொல்லியிருந்தம்.” என்ற சந்துரு,
“அப்பவும் அந்தக்கள்ளி, பக்கத்தில இருக்கிற எங்களை விட்டுட்டு, உங்க எல்லாரையும் விட்டுட்டு, இவருக்குப் ஃபோன் பண்ணியதையோ மெசேஜ் போட்டதையோ சொல்லவே இல்ல எண்டாப் பார்த்துக்கொளுங்க.” என்றான், பொய்க் கோபத்தோடு.
இதைச் சொன்ன பிறகுதான் ‘ஹையோ!’ என்றிருந்தது, அவனுக்கு.
ஜோரிக் என்பவனை, தன் சிறியதாயாருக்குக் கண்ணிலும் காட்டக் கூடாது என்று தெரிந்தும் சொல்லிவிட்டானே!
சங்கடமாக ராகுலனைப் பார்த்துவிட்டு ஜோரிக்கைப் பார்த்தான், சந்துரு.
இந்த விசயத்தில் என்னதான் மனத்தைச் சமாதானம் செய்திருந்தாலும் மகளின் அச்செயல் ஆழமாகவே அடி போட்டிருந்ததே! இப்பவும் வலித்தது நித்திக்கு! அதுவே, அவர் முகத்தையும் சுருங்க வைத்தது. சமாளித்துக்கொண்டார்.
‘இனி என்ன செய்யிறது? எல்லாத்தையும் பொறுக்க வேண்டியதுதான்.’ தன்னைத்தானே சமாதானப்படுத்தினார்.
‘என்ர மகள் நேற்று எப்பேர்ப்பட்ட ஆபத்தில சிக்கியிருந்தவள்? அதில அவளுக்கு ஏதாவது நடந்திருந்தால்?’ நினைத்துப் பார்க்கவே அத்தனை கொடுமையாக இருந்தது.
‘இத்தனை நாட்களாக எங்களை எந்த விதத்திலும் ஏமாற்றாமல் பெருமைப்படுத்திய பிள்ளைகள். இப்ப, இதுதான் தங்கட சந்தோசம் எண்டு சொல்லினம், அதுவும் இவ்வளவு உறுதியாக. அதுக்கு நான் தடையா நிற்க மாட்டன். ரெண்டு பேரும் சந்தோசமா வாழ்ந்தால் மட்டும் போதும்!’ மனதுள் முணுமுணுத்துக் கொண்டார்.
அமோகமாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையும் வந்திருந்தது.
ஜோரிக், அவர் மகள் மீது கொண்டுள்ள அன்பு அந்த நம்பிக்கையைத் தூவியிருந்தது
இந்த எண்ணமே, சங்கடமாகப் பார்த்து முறுவலிக்க முயன்ற ஜோரிக்குக்கு, பதில் முறுவல் புரிய வைத்தது.
அதைப்பார்த்த சந்துருவும் ராகுலனும் “அப்பாடா!” வாய்விட்டே சொல்லிவிட்டார்கள். அருகில் வந்தவரை, “சித்தி!” அன்பாக அணைத்துக்கொண்டான், சந்துரு.
என்னதான், “சமாதானம் செய்து ரெண்டு பேரையும் ஒண்டா அனுப்பி வச்சிருக்கிறம்” என்று, மதுரா ஆட்கள் சொன்னாலும், இவர்களுக்கு இங்கே எத்தனை பதைபதைப்பு?
காதலிக்கு ஆபத்து என்றதும் பதறிப்போய் புறப்பட்டு வருபவனோடு இங்கு வைத்து மனஸ்தாபம் உருவானால்?
‘பேராபத்தில, அவ்வளவு தூரத்தில் இருக்கிறவனை அழைத்து அவன் மீது தனக்குள்ள விருப்பை, நேசத்தை அழுந்தச் சொன்ன மீரா அதை எப்பிடி எதிர்கொள்வாள்?’ என்றெல்லாம் தவித்தவர்கள், இக்குழப்பங்கள் தேவையில்லையென்றானதில் மிகுந்த நிம்மதியாக உணர்ந்தார்கள்.
“ம்ம்…பிறகு என்ன நடந்திச்சு? அங்க எல்லாரோடும் கதைச்சிட்டு நான் இல்லையெண்டதும் சந்தேகம் வந்திருக்குமே!” இயல்பாகப் பேச்சை நகர்த்தினார், நித்தி.
“ம்ம்…பின்ன? அங்க, அவே அதையும் இதையும் சொல்லிச் சமாளிச்சிப் போட்டீனம். இங்க, இப்பிடி நடந்தது எண்டு நாங்க சொல்லேல்ல எண்டத்தில அவளும் அமைதியா இருந்திட்டாள்.
‘இப்பச் சொன்னால் அடிச்சுப் பிடிச்சுக்கொண்டு வர வெளிக்கிடுவீனம். நாலைஞ்சு நாட்களுக்குப் பிறகு சொல்லலாம்’ எண்டு வேற சொன்னவள்.” என்ற சந்துரு,
“இண்டைக்குக் காலேல இருந்து, ‘அம்மா பள்ளியால வர, கதைச்சிட்டுத்தான் தூங்க வேணும்.’ எண்டு சொல்லிக்கொண்டு இருக்கிறாள்.” தொடர்ந்து சொல்ல, கசிந்த விழிகளைத் துடைத்துக்கொண்டார், நித்தி.
“இப்ப நேரில் கண்டதும்…திக்கு முக்காடிப்போவா சித்தி..” சொல்லிக்கொண்டே, பயணப்பைகளை வைத்துவிட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான், ராகுலன்.
அவனுக்கருகில் ஜோரிக் அமர, நித்தியும் சந்துருவும் பின்புறம் அமர்ந்துகொண்டார்கள்.
காரை இயக்கி, பாதையில் விரைந்த போக்குவரத்தில் கலந்தான் ராகுலன்.
சந்துருவும் நித்தியும் அளவளாவிக்கொண்டு வர, இடையிடை ராகுலனும் சேர்ந்துகொண்டான். ஜோரிக்கோ, நகரும் கட்டடங்களைக் கருத்தின்றிப் பார்த்திருந்தான்.
இக்கார்ப்பயணம், இதுவரை பயணித்த நீண்ட பயணத்தைவிடவும் தொலைதூரப்பயணம் போல் அவனை உணர வைத்தது. மீராவைக் காணபோகும் அக்கணத்தைத் தாமதமின்றிப் ஸ்பரிசிக்க ஆவல் கொண்ட உள்ளத்தின் பரபரப்பை, அடக்க முடியாது தவித்துக்கொண்டிருந்தான்.
சிலநிமிடங்கள் தான் கடந்திருக்கும் ராகுலனைத் திரும்பிப் பார்த்தான்.
“இன்னும் எவ்வளவு நேரம் போக வேணும்?” கேட்டவனின் குரலில் இருந்த தவிப்பை மற்ற மூவராலுமே உணர முடிந்தது.
முறுவலித்தான் ராகுலன். “ஹா..ஹா..அவ்வளவு அவசரமா?” சிநேகத்தோடு அவன் தோளில் தட்டிவிட்டு, திரும்பி, சந்துருவைப் பார்த்துக் கண்சிமிட்டினான்.
அவனும் முறுவலித்தபடியே, “ஒரு ஐம்பது நிமிடங்கள்…ம்ம் எப்படியும் ஒரு மணித்தியாலம்..” என்று சொல்ல, “எங்கட மீராவப் பற்றி உங்களுக்கு நல்லாவே தெரியும் தானே?” சந்தேகம் கேட்டான், ராகுலன்.
புரியாது பார்த்தான், ஜோரிக். சட்டென்று திரும்பி நித்தியையும் பார்த்தான்.
அவர் பார்வை ராகுலனையும் சந்துருவையும் கேள்வியோடு தொட்டு வந்தது.
“இல்ல..அவளுக்கு உங்களில நிச்சயம் ஏதோ கோபமிருக்கு எண்டு நினைக்கிறன்.” அவன் இழுக்க, அந்தக் கோபத்துக்கு காரணமான நாள் படீரென்று அறைந்தது இவன் உள்ளத்தில். பெருமூச்செறிந்தான், ஜோரிக்.
“இல்ல…இங்க வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருசங்களாகப் போகுதே! உங்களப் பற்றி ஒருநாளும் கதைச்சுக் காணேல்ல. அப்படியிருக்க, உங்களுக்குப் ஃபோன் பண்ணினாள் எண்டதும் அதிர்ந்து போய்ட்டம் தெரியுமா?” என்ற ராகுலன்,
“நீங்களும் பதறி அடிச்சுக்கொண்டு வாறீங்க!” என்று சொல்ல, சங்கட முறுவலோடு, மீண்டும் நித்தியைப் பார்த்தான், ஜோரிக்.
ராகுலன் சொன்ன பாவனையே ‘இத்தனை நாள் பிரிவு தேவையற்ற ஒன்றா?’ என்று கேலியாகக் கேட்பது போலிருந்தது.
ஜோரிக் பதில் சொல்லத் தடுமாற, “விடும் ராகுலன், அது அவே ரெண்டு பேரினதும் பாடு!” சட்டென்று இடையிட்டான், சந்துரு.
“அட! ஆர் இல்லை எண்டது? எண்டாலும் இப்பிடி அடிச்சுப் பிடிச்சுக் கொண்டு வந்தவரக் கொஞ்சம் சரி எச்சரிக்கை செய்து வைக்க வேண்டியது நம்மட பொறுப்பில்லையா?”
நமுட்டுச் சிரிப்போடு சொல்ல, சந்துருவும் சேர்ந்து முறுவலித்தான்.
நித்திக்கு ஓரளவு விளங்கிவிட்டது. விளங்காத பாவனையில் வெளிப்புறத்தை நோட்டம் விட்டார்.
“நிறைய யோசிக்க வேணாம் ஜோரிக். உங்களக் கண்டதும் சந்தோச மிகுதியில கன்னம் கன்னமாக விளாசித் தள்ளினாலும் தள்ளுவா…” மீண்டும் கண்ணடித்தான், ராகுலன்.
அவன் கேலி புரிந்து முறுவலித்தாலும், தன் கன்னமிரண்டையும் பொத்திக்கொண்டான், ஜோரிக்.
“உங்கட செய்கையைப் பார்த்தா ஏற்கனவே வாங்கிய அனுபவம் இருக்குப் போல!” என்ற சந்துருவின் தொடையில் பட்டென்று ஒரு அடி போட்டார், நித்தி.
“பச்! பகிடிக்குத்தானே சித்தி. அவருக்கு இங்க நாம எல்லாருமே புதுசு. அது தெரியாமல் இருக்கக் கலகலக்கிறம், அவ்வளவும் தான்.” சந்துரு சொல்ல, “ம்ம்…இதோ வந்தாச்சு, என்ன நடக்கப் போகுதெண்டு நேரிலயே பார்ப்பமே!” என்றபடி, காரை வீட்டின் முன்னால் நிறுத்தினான், ராகுலன்.
ஆரணி, ஆரபி, இவர்களின் வரவை எதிர்பார்த்திருந்தார்கள் போலும். காரை விட்டு இறங்க முதல் ஓடி வந்து நித்தியைக் கட்டிப் பிடித்தவர்கள் ஒத்தவார்த்தை பேசவில்லை. சரசரவென்று கண்ணீர் வடிக்க, மருமகள்களைக் கட்டிக்கொண்டு விம்மினார், நித்தி.
“ஆரணி, ஆரபி என்ன இது? அதுவும் வந்தவர்களை உள்ள வரவிடாமல்…” கடிந்து கொண்டான், ராகுலன்.
“ஜோரிக், நீங்க உள்ள வாங்க!” என்று, நடந்தான், சந்துரு.
சட்டென்று நித்தியை விட்டு விலகிய சகோதரிகளின் பார்வை தம்மையே பார்த்தபடி நின்றவனில்.
“வாங்கோ…அண்ணா!” இருபுறமும் கரம்பற்றியவர்களை கலங்கிய விழிகளோடு பார்த்தவன், இருவரையும் அணைத்துக்கொண்டான்.
ஒரே வயிற்றில் பிறந்து ஒன்றாக வளரவில்லை என்றாலும் இக்கணம் ஒரே இரத்தம் என்ற உணர்வு அவர்களுள் இல்லாதும் இல்லை.
“நீங்க இங்க வந்ததில நல்ல சந்தோசம்; எங்கள விடப் பல மடங்கு சந்தோசப்படுவாள் மீரா!” கண்ணீரோடு சொன்ன ஆரணி, அவன் கரம்பற்றியபடி நடக்க, அவர்களை முந்திக்கொண்டு விரைந்தார், தயங்கி நின்ற நித்தி.
வீட்டு வாயிலால் நுழைந்த நித்தியை ஓடி வந்து வரவேற்றார், அவரின் தமக்கை. அதோடு…தங்கையைக் கட்டிக்கொண்டே, “மீரா…ஓடி வந்து ஆர் வந்திருக்கினம் எண்டு பாரன்!” அழைத்தார்.
வாயிலில் இருந்த சிறு ஓடையைத் தாண்டினால் அரைச்சுவற்றோடு பெரிய வரவேற்பறை. அங்குதான் அமர்ந்திருந்தாள்,மீரா. இருதடவைகள் தாய்க்கு அழைத்தும் கதைக்கக் கிடைக்கவில்லை என்ற விசனத்தில் இருந்தவள், பெரிய தாயாரின் சந்தோச அழைப்பில் எழுந்து யாரென்று எட்டிப்பார்த்தாள்.
அவ்வளவும் தான்.

