5
அறையெடுத்துத் தங்கியிருந்த வீட்டில் இடமில்லை. அவளுக்கோ, பக்கத்துவீடுகளில் தங்குவதில் சற்றும் விருப்பமில்லை. இரு வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்தாலும் நேருக்கு நேராகச் சந்திக்கையில் சிறு முறுவல், ஒரு ஹாய் சொல்வதோடு சரி.
‘ஒரு இரவுக்கெண்டாலும் அவேட வீட்டில எப்பிடி?’ இவள் குழம்பி நிற்கையில் தான், “என்ர தாத்தாவ இவளுக்கு நல்லாவே தெரியும்.” என்றிருந்தான், ஜோரிக்.
‘என்ன சொல்லுறான்? இவனையே ஆரெண்டு தெரியாது! இவன்ட தாத்தாவ எப்பிடி? ஒருவேளை அம்மா அப்பாவையளுக்குத் தெரிந்தவையாக இருப்பீனமோ! மாமாக்கு? அப்பம்மாவையளுக்கு?’
அவளின் குழப்பமான பார்வை அவன் மீது திரும்ப, அவன் விழிகளில் சிக்கனமாக முறுவலொன்று பளிச்சிட்டு மறைந்தது.
“ஓம் மீரா, அவையள உனக்கு நல்லாவே தெரியும்; ‘ஆலீவ் இத்தாலியானா’ ரெஸ்டாரன்ட், அதிண்ட உரிமையாளர் பீட்டர், அவர்ட மனைவி ஹெலன், இவையள, உனக்கு நல்லாத் தெரியும் தானே?”
நிறுத்தி, நிதானித்து, அழுத்தமாக அவன் உச்சரித்ததில் இவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
கரம் வேறு வாயைப் பொத்தியது. பலத்த ஆச்சரியம் காட்டினாள், மீரா.
“நீ..நீ…அவேட பேரனா?” சற்றே பலமான சந்தேகம்தான்.
அது அவனுக்கும் விளங்கியது.
“இதில எல்லாம் உன்னட்டப் பொய் சொல்லி எனக்கென்ன வரப் போகுது?” ஒரு மாதிரிக் குரலில் சொன்னவன், “பேரன் இல்ல, அவரின்ட பேத்தின்ட மகன்.” என்றான், சற்றே கடினமாக!
அதைச் சொல்லவே அவன் விரும்பவில்லை போலும்!
அதன்பின், இவள் சற்றும் யோசிக்கவில்லை.
“ஓ! அப்ப நான் இவரோட போறன்!” என்று வீட்டுக்காரப்பெண்மணியிடம் கூறிட்டு, “ஒரு அஞ்சு நிமிசம் நிக்க ஏலுமா ஜோரிக்? மேல, எங்கட அறையில இருக்கிற சாமான்களை என்ன செய்யலாம் எண்டு பார்த்திட்டு வாறன்.” என்று நகர்ந்தாள்.
“நான் ஏதாவது செய்து தர வேணும் எண்டா சொல்லு!” என்றுவிட்டு, அங்கிருந்த கதிரையில்(இருக்கை) அமர்ந்து விட்டான் அவன்.
வீட்டுக்காரப்பெண்மணியோடு மேலே சென்றவள், அறையிருந்த அலங்கோலத்தில் சிறிது நேரம் மலைத்து நின்றுவிட்டாள் தான்.
பின் சுதாகரித்து, “நல்ல காலம், எல்லாம் அலுமாரிக்குள்ள இருக்கப் போய் நனையாமல் தப்பிச்சுது!” என்றபடி, தனது ஆடைகள், புத்தகங்கள் என அலுமாரியில் இருந்தவற்றை ஒரு பையில் போட்டுச் சேகரிக்கத் தொடங்கினாள்.
“உண்மைதான் மீரா, அட! பொருட்களை விடு, நீ அறையில இருந்திருந்தா…எண்டுறத யோசிச்சுப் பார்க்கவும் பயமாக் கிடக்கு!” அப்பெண்மணிக்கு, இன்னமும் பதற்றம் மறையவில்லை.
மீராவுக்கு உதவியாக, அவளோடு தங்கியிருந்த நண்பிகளின் பொருட்களை அங்கிருந்த அவர்களின் பயணப்பைகளில் சேகரிக்கத் தொடங்கினார், அவர்.
“என் பாக்கை நான் கொண்டு போறன் மரியா. இந்த ரெண்டு பாக்கையும் கீழ கராஜில வைப்பமா? ஃப்ரெண்ட்ஸிட்ட சொன்னால் வந்து எடுப்பீனம்.” என்றதற்குச் சம்மதித்த வீட்டுக்காரப்பெண்மணி, யோசனையாக அவளைப் பார்த்தார்.
“என்ன மரியா?”
“இல்ல மீரா, உங்களுக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க ஒரு கிழமைதானே இருக்கு? அதுக்குள்ள அறையைத் திருத்த முடியுமா எண்டு பாக்கிறன். இல்லையோ, வேற இடம் தான் பார்க்க வேணும்.”
“இன்னும் ஒரு வருசத்துக்கு வேற இடமா? அதெல்லாம் சிரமம் மரியா. எங்களுக்கு இங்க பழகீட்டு! ஒரு கிழமை இருக்குத்தானே? அதுக்குள்ள திருத்தப் பாருங்க மரியா.” என்றாள் இவள், கெஞ்சலாக!
“எனக்கும் உங்களப் போல பிரச்சனை இல்லாத பிள்ளைகளை விட்டிர விருப்பம் இல்லை தான். எப்படியும் மழை விட்டதும் வேலையைத் தொடங்கலாம்.” நம்பிக்கையாகச் சொல்லிவிட்டு, கீழே சென்றுவிட்டார், அவர்.
இவளும், தோழிகளின் பயணப்பைகளை இரு கரங்களிலும் தூக்கிக்கொண்டு வெளியேறியவள், அறை வாயிலைத் தாண்டியதும் கீழே வைத்து விட்டாள்.
“பச்! இந்தக் கனம் கனக்குதே! முதல் ஒண்டைக் கொண்டு போய் வச்சிட்டு வருவம்.” முணுமுணுத்தபடி, ஒரு பையை எடுத்துக்கொண்டு படிகளால் இறங்க ஆரம்பிக்கையில், “தேவையெண்டா கூப்பிடு எண்டு சொன்னனே!” என்றபடி விரைந்து வந்தான், ஜோரிக்.
“இல்ல பரவாயில்ல, நானே கொண்டு வருவன்.” அவள் மறுக்க, “விடு!” என்று அவளிடமிருந்த பையை வாங்கிக் கொண்டவன், “அதில உள்ளதும் கீழ கொண்டு போகவா வேணும்?” வினவினான்.
“ம்ம்…என்னோட தங்கியிருக்கிற ஃப்ரெண்ட்ஸின்ட பேக்ஸ். இங்க கராஜில வச்சு விட்டா வந்து எடுப்பீனம். என்ர சாமான்கள் எண்டு பெரிசா இல்லை, இந்தச் சின்னப்பை தான்.” என்றவளிடம், “அதையும் தா!” மற்றப் பெரிய பையையும் தூக்கிக்கொண்டு இறங்கியவன், கராஜில் மரியா காட்டிய இடத்தில் வைத்துவிட்டு வர, தன் பையோடு வந்து சேர்ந்தாள், மீரா.
“நீ இப்படியே நனைஞ்ச உடுப்போட தான் வரப் போறியா?” மேலே சென்றவள் ஆடையை மாற்றுவாள் என்று எதிர்பார்த்திருந்தவன், அவள் அப்படியே நனைந்த ஆடையோடு வரவும் கேட்டான்.
“ம்ம்…திரும்பவும் நனையத்தானே போறம், ஒரேயடியாக மாற்றலாம்.” என்றபடி வந்தவளுள், காரில் ஏறப்போகும் தருணம், ‘இவனோடு போக முடிவெடுத்தது சரியா?’ உள்மனத்தில் ஒரு எச்சரிக்கையுடனான கேள்வி தோன்றிற்று! அது, சட்டென்று காரினுள் ஏற விட்டுவிடுமா என்ன?
அதோடு, ‘அப்பா அம்மாவுக்கோ, மாமா மாமி ஆருக்குமே சொல்லாமல்…’ மனத்தில் முணுமுணுப்போடு, மழையில் நனைந்தபடி நின்றவளை, “மீரா!” சற்றே அதட்டினான் அவன்.
“உனக்கு இப்ப என்னதான் பிரச்சினை?” என்றவனை, தீர்க்கமாகப் பார்த்தாள், மீரா.
“அப்படியெண்டா… என்னை உனக்கு முதலிலயே தெரியுமா?”
ஏற்கனவே மழையில் நன்றாகவே நனைந்திருந்தவள், மீண்டும் நனைவதைப் பற்றிய அக்கறையின்றிக் கேள்வி கேட்பதை, ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தான் ஏறியமர்ந்தவன், “மழையில் நனைந்தபடிதான் விசாரணை செய்யோணுமா?” என்றான், சற்றே அவள் புறம் குனிந்து.
முகத்தில் தீவிர பாவனையோடு அவள் கேட்ட தோரணை என்னவோ விசாரணை போல் தான் இருந்தது.
அவளோ, பதில் சொல்லாது, ‘கேட்டதிற்குப் பதில் சொல்?’ என்றவகையில் நின்றாள்.
“என்னை நீ நம்பேல்ல போல!” என்றபடி, கைபேசியை எடுத்தான், ஜோரிக்.
“இங்க பார், தாத்தா பாட்டியோட நான் நிக்கிற ஃபோட்டோ! உன்னை ஏமாற்றிக் கடத்த முடிவு செய்து, உனக்குப் பழக்கமானவையோட நிண்டு பொய்யா ஃபோட்டோ எடுத்துத் தயாரித்து, உன்ர காருக்கு இப்பிடி நடக்கும் எண்டு தெரிஞ்சு, பிளான் பண்ணி வந்து உன்ர வீட்டில அந்த மரத்தைப் பெயர்த்துப் போட்டு, இப்பிடியே உன்னைக் கடத்தி…” படபடவென்று சொன்னவனை முறைத்தபடி ஏறியமர்ந்து, கதவைச் சாத்திய வேகத்தில் சீற் பெல்ட்டை மாட்டினாள், மீரா.
அதோடு, ‘போதும்!’ என்பதாகக் கையையும் உயர்த்திக் காண்பித்தாள்.
‘பீட்டர், ஹெலன் என்ன மாதிரியான இனிமையான மனிதர்கள்! அவர்களுக்குப் போய் இப்படியொரு…’ மனதில் முணுமுணுத்தபடி அவனைப் பார்த்தவளுக்கு, ‘ஏன்? இவனில் என்னதான் குறை?’ என்றுதான் தோன்றிற்று!
‘சற்றும் இளக்கமின்றிப் படபடவென்று கதைக்கிறான் தான். ஆனாலும், அப்படியே போகாது உதவிக்கு வந்து…இது எல்லாம் அவனுக்குத் தேவையா என்ன? இந்தத் தயாள குணம் பீட்டர் ஹெலனோடது.’ என்றெண்ணியவள், தோள்களைக் குலுக்கியபடி காரை எடுத்தவனை நோக்கினாள்.
அவனும் அந்த நேரம் அவளைத்தான் பார்த்தான்.
“நீ யோசிக்கிறது ஒண்டும் பிழையும் இல்லை. தெரியாதவர் வீட்டுக்கு எப்படிப் போறது? எங்க என்ன எப்படி எண்டு ஆருக்குத் தெரியும்? இந்தக் காலத்தில ஆரையும் நம்பேலாது தான்.” என்றவன், அவளை நேருக்கு நேராகப் பார்த்தான்.
“நான் ஒண்டும் அந்தளவு கெட்டவன் இல்ல. அதோட, உன்னைக் கொண்டுபோய்விட்டுட்டுக் கொஞ்ச நேரத்தில திரும்பி வந்திருவன்.” என்றான், சிறு முறுவலோடு.
“நான் ஒண்டும் உன்னச் சந்தேகப்படேல்ல. அப்பிடி நினைச்சிருந்தா இந்தக் காரில ஏறியிருக்க மாட்டன்.” என்றாள், இவள்.
“வீட்டில இண்டைக்கு அங்க வர வேணாம் எண்டவே. ரூமை விட்டு வெளிக்கிட வேணவே வேணாம் எண்டவே. அதைக் கேட்காம வெளிக்கிட்டு இத்தினை நடந்திட்டு. அதையும், இதுவரை அவேட்ட சொல்லேல்ல.” என்றவளை, ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பாதையில் கவனம் பதித்தான், அவன்.
“இப்ப மட்டும் நடந்ததைச் சொன்னா மாமாவோ அப்பாவோ உடனே வரப் பார்ப்பீனம். அதனாலதான் சொல்லேல்ல. அப்பிடி அவேக்கும் சொல்லாம…அதுதான் யோசிச்சன்.” என்று உண்மையைச் சொன்னவள், கையிலிலிருந்த பேசியையும் வெளிப்புறத்தையும் மாறி மாறிப் பார்த்தாள், இரு மனதாக!
அவன் எதுவும் சொல்லவில்லை. இதில் அவன் என்ன சொல்வது? அவளாச்சு அவள் வீட்டினராச்சு!
அவள் என்ன செய்கிறாள் என்றதை மட்டும் கவனித்தபடி வாகனத்தைச் செலுத்துவதில் முனைந்திருந்தான், ஜோரிக்.
‘ஆரணி, ஆரபிக்கு மட்டுமாக மெசேஜ் போட்டால்!’ என்ற எண்ணம் தோன்றிய கணமே மறைந்தது.
‘வேற வினையே வேணாம்! முதல் வேலையாக மாமிக்குப் போகும்.’
‘நிரூஜ்? பச்! கேட்கவே வேணாம். ஒன்றுக்குப் பத்தாக்கி வத்தி வைப்பான். ராஸ்கல்!’ அடிக்கடி சகோதரனோடு அடிபாடுதான்.
‘ஆதவ்…ம்ம்ம்..’ யோசித்தாள். ஆதவன் அப்படியே அவள் மாமா கார்த்திகேயன் போல்! அக்கறையும் அன்புமாகக் கவனித்துக் கொள்வதில் அவனுக்கு நிகர் அவனேதான்.
‘யாருக்கும் சொல்லாது இருப்பதை விட..’ யோசித்தவாறே, நடந்ததை மிகச் சுருக்கமாகத் தெரிவித்துக் குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டி விட்டாள்.
மறுகணம், அழைத்துவிட்டான், ஆதவ்.
“ஏய் மீரா! என்னடி சொல்லுற? நீ எப்பிடி இருக்கிற? உனக்குக் காயம் எதுவும் இல்லையே? முதல் வீடியோ ஓன் பண்ணு பாப்பம். இதுக்குத்தானே இண்டைக்கு இங்க வர வேணாம் எண்டது. சொல்லுறதைக் கேட்டிட்டா நீதான் மீரா இல்லையே! ‘அவள்ட நன்மைக்குத்தானே சொல்லுறம் எண்டு இந்தப் பிள்ளைக்கு விளங்கின மாதிரித் தெரியேல்ல. வந்தாலும் வருவாள்’ என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்…” படபடத்தான்.
“டேய்! கொஞ்சம் பொறு. சொல்லுறதக் கேள்! எனக்கு ஒண்டும் இல்ல எண்டு சொல்லுறன். பிறகென்ன?” அவசமாகக் குறுக்கிட்டவள், “இப்ப நீ எங்க இருந்து கதைக்கிற?” ஜாக்கிரதையாக வினவினாள்.
“வீட்டிலதான்; பயப்படாத! என்ர ரூமில.”
“வீட்ட சொல்லாதடா ஆதவ். நாளைக்கு வந்து சொல்லுறன். இப்பத் தெரிஞ்சா அப்பாவோ மாமாவோ வர நிப்பீனம்.”
“உனக்குச் சொல்லுறதக் கேட்கேலாது. பிறகு, அதையும் இதையும் சொல்லிச் சாமாளி. உனக்கு ஏதாவது ஆகியிருந்தா…” கடிந்து கொண்டான் ஆதவ்.
அவர்கள் இருவரும் நெதர்லாந்து மொழியில் தான் உரையாடிக் கொண்டார்கள். அதைச் செவிமடுத்திருந்த ஜோரிக் உதடுகளில் முறுவலின் பூச்சு!
‘வீட்டில நல்லாவே வாங்குவாள் போல் இருக்கே!’ என்றஎண்ணம் தந்த முறுவல் அது.

