அவனுக்கும் ஒரு தங்கை உண்டு தான். இப்போ, திருமணமாகி இலண்டனில் இருக்கிறாள். குழந்தையும் உண்டு. அவளிடம் சென்றுவிட்டு வரும் போதுதான் டோவரில் வைத்து மீராவைச் சந்தித்திருந்தான்.
தானும் சகோதரியும் இப்படி எல்லாம் அன்னியோன்யமாகக் கதைத்துக் கொண்டதே இல்லை என்ற எண்ணம் அவனுள் தோன்றாதில்லை.
‘குடுத்து வச்சவள்!’ மீராவைப் பார்த்து அப்படித்தான் எண்ணிக் கொண்டான். அன்று டோவரில் வைத்து அவளின் மொத்தக் குடும்பத்தையும் காண்கையிலும் இவ்வெண்ணம் வராது இல்லை.
“டேய்! கனக்கக் கதைக்காத!(அதிகம் பேசாதே!) ஏதோ நான் வேண்டுமெண்டே செய்யிறது போலவும் வீட்டுக்கு மறைச்சு வேற எங்கயோ போக வெளிக்கிட்டது போலவும் சொல்லுற நீ. அங்க வரத்தானே வெளிக்கிட்டன். என்னைப் போலத் தனியா ரூமில இருந்தா நீயும் அதைத்தான் செய்வ.” காட்டமாகச் சொன்னாள்.
“அதை விடு! ரூமிலும் மரம் விழுந்திருக்கு எண்டா இப்ப நீ எங்க தங்கப் போற? முதல் வீடியோவை ஓன் பண்ணு பாப்பம்” குறுக்கிட்டான், ஆதவ்.
“அது வந்தடா…பீட்டர்…ஹெலன். நான் சொல்லியிருக்கிறன். நினைவிருக்கா?”
“அந்த ரெஸ்ட்டோரண்ட் வச்சிருக்கிறவே தானே? நான் கூட உன்னோட ஒருநாள் போய்ச் சாப்பிட்டிருக்கிறன்.”
“அவர்களேதான்டா. அவையளோட தான் இண்டைக்குத் தங்கப் போறன். விடிஞ்சதும் அங்க வாறன்.”
“அவேண்ட வீடு எங்க இருக்கு? திடீரெண்டு அங்க ஏன் போற?”
“ஆதவ்! இதுதான் ஒருவருக்கும் ஒண்டும் சொல்லாமல் இருப்பம் எண்டு நினைச்சது.”
“நினைப்ப நினைப்ப. நாளைக்கு வீட்ட வாவன் இருக்கு மங்களம்!”
“அது அந்த நேரம் பார்த்துக் கொள்ளலாம்.” என்றவளுக்கு, ஜோரிக் பற்றிச் சொல்ல மனம் வரவில்லை. வீடியோ ஆன் பண்ணவும் தான். தன் வீட்டினரின் மனதில் ஜோரிக் என்பவன் மீது அத்தனை நல்லெண்ணம் இல்லையே!
அப்படியிருக்க, ‘இவன மட்டும் ஆதவ் கண்டாலே கேள்வி கேட்டே கொன்று போடுவான்!’ என்றே எண்ணினாள்.
“கார் அக்சிடென்ட் ஆன நேரம் தற்செயலா பீட்டர் அந்த வழியால வந்தாரடா. அவரோடதான் ரூமுக்கும் வந்தன். இங்கயும் இப்பிடி எண்டதும் தங்கட வீட்ட வரச் சொன்னவர். இப்ப அங்க தான் போய்க் கொண்டிருகிறன்.” தமிழில் சொல்லி, பீட்டர் வீடு இருக்கும் இடத்தையும் சொன்னாள்.
“ஓ! அவரிட்ட ஒருக்காக் குடு!” என்றான், அவனும் விடாக் கண்டனாக!
“அவர்…காரோட்டிக் கொண்டிருக்கிறார். வீட்ட போனதும் கதைப்பாராம். கேள்வி கேட்டது போதும், வை! நான் அங்க போயிட்டு எடுக்கிறன்.” என்ற வேகத்தில் அழைப்பதைத் துண்டித்துவிட்டு, ஆசுவாச மூச்சு விட்டவளை ஒற்றைப் புருவம் உயர்த்தி, ‘என்ன?’ என்பதாகப் பார்த்தான் அவன்.
“என்ர மாமாட மகன் ஆதவ்.” என்றவள், “ஆரோட போற எண்டு அவன் கேட்டோன்ன உன்னோட எண்டு சொல்ல முடியேல்ல!” வெட்டும் பார்வையோடு சொன்னவளை, ஒற்றைப் புருவ உயர்த்துதலோடு பார்த்தான், அவன்.
“ஏன்?” என்ற கேள்வியும் உதிர்ந்து விழுந்தது.
“ஏனா? உன்னக் கண்டுட்டாலும் எண்டுதான் வீடியோவையே ஓன் பண்ணேல்ல. அவன் மட்டும் தப்பித் தவறி உன்ர முகத்தைக் கண்டுட்டா என்ன செய்வானோ எனக்குத் தெரியாது.” என்று சொல்ல, விளங்காது பார்த்தான், அவன்.
“பின்ன? அண்டைக்கு டோவரில வச்சு நீ நடந்து கொண்ட முறையில அவ்வளவு நல்ல பெயர் உனக்கு!”
இப்போது அவன் முறைத்தான்.
“ஹலோ! நான் அண்டைக்கு அப்பிடி என்னதான் பிழையாக் கதைச்சன் சொல்லு பாப்பம்!”
“அதையேதான் நானும் கேட்கிறன். அண்டைக்கு, அப்பிடி என்ன பிழையாச் செய்தன் எண்டு அந்தக் குதி குதிச்ச? ஒரு சின்ன விசயம், உன்ர காரில்…” என்றுவிட்டு, காரினுள்ளே விழிகளை ஓட்டியவள், “வாங்கி எத்தின காலம்? அரதப் பழசு போலக் கிடக்கு! இந்த வடிவில இதில சாஞ்சு நின்றன் எண்டு என்ன மாதிரி எல்லாம் கதைச்சனி?”
“ஹலோ! அந்தப் பழையகார் தான் இண்டைக்கு உனக்கு உதவி இருக்கு எண்டத மறந்திராத!”
அவள் கதைக்கும்(பேசும்) பாவனையில் உள்ளே மலர்ந்த நகைப்பை மறைத்து, விழிகளில் கேலியோடு சீண்டினான், ஜோரிக்.
“இப்ப நீ உதவி செய்யேல்லையோ நான் என்ன அந்த இடத்திலயே நின்றிருப்பனா என்ன? எப்பிடியோ வந்திருப்பன் தானே! ஜோரிக் இல்லையோ ஒரு டாவிட் உதவியிருக்கப் போறான். அந்தப் பொலீஸ் கேட்கேல்லையா?” எடுவலாகச்(கெத்தாகச்) சொன்னவளை, என்ன செய்யலாம் என்ற மாதிரிப் பார்த்தான், அவன்.
போன போக்கில் போயிருக்க இப்போ வீட்டில் அல்லவா இருந்திருப்பான்?
‘பாவம், தாத்தா பாட்டிக்கு மிகத் தெரிஞ்சவள் எண்ட ஒண்டுக்காக இவளோட இழுபட, இவள் கொழுப்புக்கதை கதைக்கிறாளே!’ அவன் மனதின் முணுமுணுப்பைப் பொருட்படுத்தாது, தொடர்ந்தாள் மீரா.
“இப்ப நினைச்சுப் பார்த்தா என்னை உனக்கு ஆரெண்டும் தெரியும் தானே? அண்டைக்கு டோவரில நீ என்ன செய்திருக்க வேணும்?”
“அதையும் நீயே சொல்லிரு!” என்றான் அவன் அடிக்குரலில். முறைப்போடுதான். அவனுக்கே வகுப்பெடுக்கிறாளே!
அதையெல்லாம் அவள் கவனிக்கவேயில்லை. நினைத்ததைச் சொல்லத்தானே போகிறாள். பிறகென்ன?
“சின்னதா யன்னலில் தட்டி, ‘கொஞ்சம் தள்ளு; நான் இறங்க வேணும்.’ என்றிருக்க, தள்ளியிருக்கப் போறன். அதைவிட்டுட்டு எப்படி? எப்படி? பைத்தியக்காரக் குடும்பம் அது இது எண்டு எல்லாம் சொல்லேல்லையா?
அதுவும் என்ர அப்பாவும் மாமாவும் மன்னிப்பும் கேட்ட பிறகும். ஹ்ம்ம்… காரில சாயிறது என்ன அப்பிடி மன்னிப்புக் கேட்க வேண்டிய பிழையோ?” மீண்டும் ஒரு வெட்டும் பார்வையால் அவனைப் பார்த்தாள்.
“அண்டைக்கு மட்டும் என்ர மச்சாள் இழுத்துக்கொண்டு போகேல்லையோ, பைத்தியம் என்ன செய்யும் எண்டு உனக்குக் காட்டியிருப்பன்!” எச்சரிக்கைப் போல் சொன்னவளை, தன்னைமீறிய முறுவலோடு பார்த்தான், அவன்.
அவள் உதடுகளையும் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஏற்ப பாவனை காட்டும் விழிகளையும், துணைபோகும் விற்புருவங்களையும் இத்தனை அருகில் பார்த்தவனால், சிலகணங்கள், அவள் வதனத்தில் ஒட்டிக்கொண்ட பார்வையை அகற்ற முடியவில்லை.
எந்தத் தயக்கமுமின்றி ஆழ நோக்கிவிட்டுப் பாதையில் கவனம் பதித்தவன், “என்னட்ட இப்பிடியெல்லாம் கதைக்க …உனக்கு நல்ல துணிவுதான்!” என்றான், மீண்டும் வீசிய கூர் பார்வையோடு! அதற்கு நேர்மாறாகக் குரலில் நகைப்பே ஒட்டியிருந்தது.
“எங்கட துணிவுக்கு என்ன குறைச்சல்?” சவாலாகக் கேட்டவளை மீண்டும் ஒரு பார்வை பார்த்தவன், எதுவோ சொல்ல முயல, அவளே முந்திக்கொண்டாள்.
“கிட்டத்தட்ட ரெண்டு வருசங்களா ரெஸ்ட்டோரண்டுக்கு வந்து போறம். ஒருநாள் சரி உன்ன அங்க கண்டதில்லையே!” நம்பமுடியாத ஆச்சரியத்தோடு கேட்டாள்.
“நீ அங்க வாறது பிட்ஸாவை ஒரு கை பார்க்க. அப்ப, அக்கம் பக்கம் எப்பவாவது பாத்திருக்கிறயா என்ன? அதோட நீ செய்யிற ஆர்ப்பாட்டத்தில உன்னத்தான் மற்றவே பார்ப்பீனம். போதாக்குறைக்கு அப்பப்ப செல்ஃபி!” முகச்சுழிப்போடு சொல்லிவிட்டான்.
“ஹலோ! ஹலோ! என்ர காசைக் குடுத்துச் சாப்பிடுறன். என்னைத்தானே செல்ஃபி எடுக்கிறன்? இதில உனக்கு என்ன நட்டம் வந்திட்டு?” மல்லுக்கு நின்றாள், இவள்.
“பீட்டரே ஒரு வார்த்தை சொல்ல மாட்டார். ‘நீ வந்தால் தான் இந்த ரெஸ்ட்டோண்டே களை கட்டும்!’ எண்டு சொல்லுறவர், நீ வேற!” நிறுத்தாது தொடர, இதுவரை கதைத்ததே அதிகம் என்ற கணக்கில் பேச்சை நிறுத்தியிருந்தான், அவன்.
அதையெல்லாம் அவள் கவனிக்கவில்லை.
“உனக்குச் சந்தோசமாக, கலகலப்பாகக் கதைக்கப் பேசப் பிடிக்காது எண்டா அதைச் செய்யிறவே எல்லாருமே உதவாத ஆக்களோ? இது நல்ல கதையாக் கிடக்கே!” அவனை வம்பிழுக்கும் வகையில் தொடர்ந்தாள்.
“உனக்கு வாயே நோகாதா என்ன? எனக்குக் காது வலிக்குது!” காதைத் தேய்த்து விட்டுக்கொண்டான், ஜோரிக்.
முறைத்தாள் மீரா. அதைக் கவனிக்காத பாவனையில், “இந்தா வீடும் வந்திட்டு. இனிச்சரி கொஞ்சம் கதைக்கிறத நிப்பாட்டு!” சொல்லிக்கொண்டே காரை நிறுத்தினான், அவன்.
“என்ன? கதைக்கிறத நிப்பாட்டுறதா? ஹா…ஹா…உள்ள போனதும் வீடே கலகலக்கும் பாரன். பீட்டர், ஹெலன் என்ன உன்னப்போல வெடுசுடு மூஞ்சிகளா என்ன?” வாயடித்தபடிதான் இறங்க ஆயத்தமானாள், மீரா.
அவள் இப்படிப் கதைப்பதொன்றும் அவனுக்கு அதிசயமாக இருக்கவில்லை. எல்லோரோடும் மிகச் சாதாரணமாகக் கதைத்துப் பழகுபவள் என்று அவனுக்குத்தான் தெரியுமே! அதுவும் எப்படி? மற்றவர்கள் பேசச் சந்தர்ப்பமே கொடாமல். லொட…லொடப்பான்!
ஒருவகையில் பார்த்தால் இவளின் இந்த பேச்சுத் தான் அவனுக்கு அவளையே பிடிக்காமல் போகச் செய்ததும்.
பல்கலைக்கும் இவள் தங்கியிருக்கும் ரூமுக்கும் இடையில் உள்ளது இவர்களின் ரெஸ்ட்டோரன்ட். இவளும் இவள் நண்பிகளும், மாதத்தில் ஆறு ஏழு தடவைகளுக்கு மேலாக அங்கு ஆஜர் ஆகிவிடுவார்கள்..
இவள் வந்துவிட்டுப் போகும் வரை அந்த ரெஸ்ட்டோரன்ட் இவள் கட்டுப் பாட்டில்தான் இருக்கும். பின்னாலுள்ள அலுவலக அறையிலிருந்து CCT கமராவில் எல்லாவற்றையும் பார்ப்பவனுக்கு ஏனோ அப்போதெல்லாம் எரிச்சலே வரும்.
“வந்தா சாப்பிட்டுட்டுப் போக வேணும் தாத்தா. பல்கலைப் பிள்ளைகளுக்கு இப்பிடிக் கண்டபடி இடம் கொடுக்க வேணாம்!” என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறான்.
“வேலை செய்யிற ஆட்களை எல்லாம் கெடுக்கீனம். சிரிப்பும் சத்தமும் மற்றவேக்கு இடைஞ்சல் ஆகவும் இருக்கும்.”
இப்படி என்ன சொன்னாலும் இவன் தாத்தா காதில் வாங்கிக் கொள்ளமாட்டார் .
அவருக்கு ஏனோ, இவளிலும் இவள் நண்பிகளிலும் அந்தளவுக்குப் பாசம். அதிலும், இவள் நண்பியொருத்தி அவரின் நெருங்கிய நண்பனின் பேத்தி. அப்போ கேட்கவும் வேண்டுமா?
“இரண்டு பாக்கையும் எடுக்கப் போறயா?” என்றபடி, இறங்கினான் ஜோரிக்.
“இல்ல இல்ல…சின்ன பாக் மட்டும் போதும்!” அவனோடு வந்து, தான் இப்போது அறையிலிருந்து எடுத்த பையை எடுக்க, “தா! நான் கொண்டு வாரன்.” கை நீட்டினான் அவன்.
“இல்ல பரவாயில்லை.” என்றபடி அவள் நகர, காரைப் பூட்டிக்கொண்டு வந்தவன், பாதையோரமாகவே இருந்த வீட்டின் பிரதான வாயிலைத் தன்னிடம் இருந்த சாவியைப் போட்டுத் திறந்து, “ம்ம்… உள்ளே போ!” அவளுக்கு இடம் விட்டு ஒதுங்கி நின்றான்.

