“இவன் குளிச்சிட்டு வரட்டும் எண்டுதான் பாத்துக்கொண்டிருந்தன்.” என்ற ஹெலன், “எங்க உன்ர பாக்? கையில கொண்டு வந்தியே!” என்றபடி, அங்குமிங்குமாகப் பார்க்க, “அங்க மேல நிக்கிட ரூமில வச்சிருக்கிறன்.” என்றுவிட்டு, “சீசர்!” என்றழைத்தபடி நகர்ந்தான், ஜோரிக்.
“நீ வா!” மாடிப்படியேறிய ஹெலன், “சின்ன வீடுதான் மீரா; கீழ ஒரு அறை; மேல ரெண்டு.” என்றபடி, முன்னால் செல்ல, பின்தொடர்ந்தாள் இவள்.
“எங்களுக்கு ஒரேயொரு மகன் மா; சின்னக்குடும்பம்; அப்ப எல்லாம் இந்த வீடு சரியான பெரிசு போல இருக்கும்; பிறகு, அவன் பெற்ற மகள் எங்களோட இருந்தாள்; அப்பவும் சின்னக்குடும்பம் தானே?
பிறகு, அவளிட ரெண்டு பிள்ளைகள் ஜோரிக், நிக்கி. அவே வந்த பிறகுதான் வீடு நிறைஞ்ச மாதிரி இருந்திச்சு. அவேயும் கொஞ்சம் பெரியவர்களாக, தங்க தங்கட பாட்டில போய்ட்டீனம்.
நிக்கி அப்படியே இலண்டனில தங்கிட்டாள். இவன் தான் அப்பப்ப இந்த வயது போனவர்களை நினைவு வச்சு வந்து போவான்.” என்றவர் குரலில் தனிமையின் சாயல் இல்லாதும் இல்லை.
“அதனால் என்ன ஹெலன்? நீங்களும் பீட்டரும் ஹாயா…ஹப்பியா இருக்கலாம் தானே?”
கண்சிமிட்டிக் குறும்பாகச் சொல்லி, அவரைச் சமாதானம் செய்ய முயன்றாள், மீரா.
“அதுவும் சரிதான். எண்டாலும், எங்கட மகனுக்கு, தள்ளித் தூரமாக இருந்தாலும் வருசத்துக்கு ஒருநாள் சரி வந்து எட்டிப் பார்க்க விருப்பமில்ல.” என்றவர் குரலில், மகன் மீதான பாசம் தெளிவாகத் தெரிந்தது. மகனைக் காணும் ஆர்வமும் தான்.
“ஸ்பெயினில் தான் இருக்கிறான் மீரா. நினைச்சா வந்து போக முடியாதா என்ன?” பெருமூச்சுடன் தொடர்ந்தார்.
“அவன் பெற்றவள் அவனுக்கும் மேலே! ஃபோனில கூடக் கதைக்க மாட்டாள். பச்!” தன்பாட்டில் முணுமுணுத்தவர், “சரி அதைவிடு, முதல் இந்த ரூமில ஜோரிக்கிட தங்கச்சி இருந்தாள், அவள் லண்டன் போன பிறகு இப்பிடி ஆராவது வந்தால் தங்குவதோடு சரி.” என்று, அங்கிருந்த இரு அறைகளில் ஒன்றைத் திறந்தார்.
“அது ஜோரிக்கிட அறை. இரண்டு ரூமுக்கும் ஒரே பாத்ரூம் தான்.” என்றுவிட்டு, “நீ போய்க் குளிச்சிட்டு வா, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறன்.” கீழே சென்றுவிட்டார்.
அறையைச் சுற்றி விழிகளைச் சுழற்றியபடி, தனது பையை அங்கிருந்த மேசையில் தூக்கி வைத்தாள், மீரா. ஆட்கள் பாவிக்காத அறை என்பதை அலுங்காமல் நலுங்காமல் இருந்த அதன் கோலம் உணர்த்தியது.
‘மூடியே இருக்கும் போல!’ முணுமுணுத்தபடி சென்று யன்னலை இலேசாகத் திறந்துவிட்டாள்.
மறுநொடி, மழைத்துளிகளோடு போட்டிபோட்டுக்கொண்டு சில்லென்று உள்ளே நுழைந்த காற்று, அதுவரை அங்கிருந்த ஒருவித வாசனையை அடித்து விரட்டியது.
‘ம்ம்…குளிச்சிட்டு வந்து மூடுவம்.’ என்றெண்ணியபடி, மாற்றுடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்ற பின்னரே, சோப் பிரஷ் என எதையுமே எடுத்துவரவில்லை என்பது நினைவில் வந்தது.
“அடக்கடவுளே! இப்ப என்ன செய்யிறது? அறையிலிருந்த உடுப்புகளையும் புத்தகங்கள் சிலதுகளையும் எடுத்தனான், பாத்ரூமிலிருந்த எதையும் எடுக்கேல்லையே!” முணுமுணுத்த உதடுகளைக் கடித்துக்கொண்டே, அக்குளியலறையை நோட்டம் விட்டாள்.
அங்கோ, சற்றுமுன் தான் உபயோகப்படுத்தியதன் அடையாளமாக, கதகதப்பும் ஆண்கள் பாவிக்கும் சோப், கிரீமின் வாசனையும் கலந்திருந்தது.
சிறிதாகவும் நேர்த்தியாகவும் இருந்த அறையைச் சுற்றி விழிகளைச் சுழற்றியவள், அங்கிருந்த பொருட்கள் அனைத்துமே ஜோரிக்கினது என்பதைப் புரிந்து கொண்டாள்.
‘இப்ப என்ன செய்யிறது? இப்ப எண்டாலும் பரவாயில்ல; நாளைக்குக் காலேல? பச்! பல்லு விளக்காம வீட்ட போக வேண்டியதுதான்.’ என்ற எண்ணத்தோடு குளிக்க ஆயத்தமாகப் போனவள், கதவில் தட்டுப்படவே, “ஆரது?” கேள்வியோடு நிதானித்தாள்.
“நான் தான் மீரா!”
“ஜோரிக்!” கதவைத் திறந்தவள், என்ன என்று கேட்க நினைத்தாள் தான், அதற்கு முன்னரே அவன் வந்த காரணம் தான் புரிந்து விட்டதே!
“இங்க இருக்கிறது எல்லாமே ஆம்பளைகள் பாவிக்கிறது. உன்னட்ட இருக்கோ தெரியாது எண்டு கொண்டு வந்தன்.” என்றவாறே, “புதிய சோப், கிரீம், பேஸ்ட், பிரஸ், சம்போ என்று அவள் கரத்தில் வைத்தவன், “கொஞ்சம் தள்ளு!” என்றுவிட்டு உள்ளே வந்து, அங்கிருந்த சிறு அலுமாரியைத் திறந்து, அதனுள்ளிருந்து ஒரு மென்நீல நிறத் துவாயை எடுத்தான்.
‘துவாய் என்னட்ட இருக்கு!’ நினைத்தவள் சொல்ல முதல், “இதுவும் புதுசுதான்; நீ பாவிக்கலாம்!” என்று அவளின் தோளில் போட்டுவிட்டு, “குளிச்சிட்டு வா!” விடுவிடுவென்று சென்றுவிட்டான்.
இவளோ, அவன் சென்று மறையும் வரை பார்த்திருந்தாள்.
‘ஒருவர் பற்றிய நம் கணிப்பு, நமது வரையறை, ஒரு சில மணித்தியாலங்களில் தலைகீழாக மாறுவது இத்தனை சுலபமா?’ அவளால் வியக்காதிருக்க முடியவில்லை.
அப்படியென்றால் என்ன அர்த்தமாம்? இனிமேல் பட்டு, அடுத்தவரை, அவர்தம் குணாதிசியங்களை மதிப்பிடுகையில் நிதானம் தேவை என்பதுதானே?
அந்தளவுக்கு, முதலில் இவன் சார்பில் நல்லெண்ணமே இருக்கவில்லையல்லவா?
இக்கணமோ, அவனைத் தவறாக எண்ணியதற்காகத் தன் மீதே எரிச்சல் கொண்டாள் அவள்.
‘நான் மட்டுமா? இவன் சார்பில வீட்டில எல்லோர் மனதிலும் அந்த எண்ணம்தானே?’
ஏனோ, அதை அவளால் அத்தனை இலகுவாக எடுக்க முடியவில்லை. மனச்சுணக்கத்தைக் கொடுத்தது.
அவசர உதவி தேவையாக இருந்த போது ஓடி வந்து செய்தான். எங்கே போவதென்ற இக்கட்டான நேரத்தில் ஒரு பாதுக்காப்பான இடத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறான்.
அப்படியிருக்க, ‘இவனை என்ர வீட்டில நல்ல முறையில அறிமுகம் செய்து வைக்க வேணாமா? அது சாத்தியமா? எப்படி?’
இந்த எண்ணத்தோடுதான் குளித்து முடித்துக் கீழே வந்தாள், மீரா.
அங்கே, மூவரும் உணவு மேசையில் இவளுக்காகக் காத்திருந்தார்கள்.
“வாவ்! வெளியில மழைக்குளிருக்கு இதமாக எத்தனை ஐட்டம்!” கரமிரண்டையும் ஒன்றாகத் தேய்த்தபடி வந்தமர்ந்தவளை, சிறு முறுவலோடு பார்த்தான், ஜோரிக்.
ரெஸ்ட்டோரண்டில் சாப்பிட வரும் போதும் அவளின் இந்தப் பழக்கத்தைக் கவனித்திருக்கிறானே! ‘சாப்பாட்டு ராமி!’ மனதுள் சொல்லிக் கொண்டவன், அவள் தன்னைப் பார்த்ததும் பார்வையை விலத்தி, பதார்த்தங்களை ஆராய்ந்தான்.
அதேநேரம், பீப் பீப் எனச் சத்தமிட்டது, ஓவன்.
எழப் போன பீட்டரை கையமர்த்திவிட்டு எழுந்து சென்று, பெரிய ‘சீ புட் பிட்ஸா’ ஒன்றை எடுத்து வந்து அவளுக்கருகில் வைத்தான், ஜோரிக்.
“ஹையோ பீட்டர்! லவ் யூ!” என்றாள், அவள்.
“இது நல்ல கதையாகக் கிடக்கே! உனக்குச் சரியான விருப்பமெண்டு இந்தப் பிட்ஸாவைக் கொண்டுவந்து வச்சவன் என்ர பேரன். நீ என்ர புருசனுக்கு லவ் யூ சொல்லுற!” என்றார் ஹெலன், பேரனையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தபடி.
காது கேளாத பாவனையில் சென்றமர்ந்துகொண்டான், ஜோரிக்.
“ஹா…ஹா…ஹெலன்! நோ பொறாமை! ஆர் கொண்டு வந்து வச்சாலும் என்ன? எனக்குப் பிடிக்குமே எண்டு இதை ஓவனில வைத்தவர் பீட்டராத்தான் இருக்கும்.” என்றாள் இவள், சரியாக!
அருகில் அமர்ந்திருந்தவளின் தலையில் பாசமாக வருடினார், பீட்டர்.
“சாப்பிடு! ஹொட் சில்லி சோசும் இருக்கு.” அதை, இவள் புறமாகத்தள்ளி வைத்தார்.
“இது ஹொட் எண்டு பெயர் தான் பீட்டர், இனிக்கும். ஹ்ம்…பரவாயில்லை.” சொல்லிக்கொண்டே, பிளேட்டில் இருந்த பெரிய பிட்ஸாவில் ஒரு துண்டைத் தன் பிளேட்டில் வைத்துவிட்டு, “நீங்களும் எடுங்க!” தட்டைத் தள்ளி வைத்தவள், “எனக்குச் சரியான பசி! அதுவும் இவ்வளவு வகைச் சாப்பாடுகள்! முதலில் சாப்பாடு. பிறகுதான் எது எண்டாலும்.” என்றபடி, பிட்ஸாவில் ஒரு கடிகடித்தாள்.
அவளை முறுவலோடு பார்த்த ஹெலன், “இத்தனையையும் பார்த்து பார்த்துச் செய்ததே என்ர பேரன்ட பிறந்தநாள் எண்டுதான், ஒரு வார்த்தை விஷ் பண்ணலாமே மீரா!” என்றார்.
“ஓ!” வாய்க்குள் இருந்த பிட்ஸாவை விழுங்கியபடி ஜோரிக்கைப் பார்த்தாள்.
அவனோ, அவளைப் பார்க்கவே இல்லை. அங்கேயுள்ள உணவுகளை உண்டுவிட்டு, இடத்தைக் காலி பண்ணும் நோக்கில் கருமமே கண்ணாக இருந்தான்.
‘இப்ப இவனப் பற்றித்தானே சொன்னவே! இப்பத்தான் சோமாலியாவில இருந்து வந்த கணக்கில, உள்ள தள்ளுறதிலயே குறியா இருக்கிறான்.’ மனதில் புறுபுறுப்போடு, “சொல்லவே இல்ல ஹெலன்.” சட்டென்று எழுந்தாள்.
தனக்கு நேரெதிரே இருந்தவனருகில் சென்று, பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி, கரம் பற்றிக் குலுக்க, “நன்றி!” சிக்கனமாகச் சொல்லிவிட்டு உண்பதைத் தொடர்ந்தான், அவன்.

