ரோசி கஜனின் மீரா 7 – 1

7

 

 

“இதுதான் என்ர மாமா வீடு!”

“ஓ!” என்றவன் பார்வை அவ்வீட்டில் பட்டும் படாமலும் பதிந்து விலகியது.

“அந்தா அங்க ஒரு சைக்கிள் நிக்குதே, அதுதான் எங்கட வீடு!”

அவள் சில வீடுகளுக்கு முன்பே காட்டிவிட்டதில், அவ்வீட்டு வாயிலருகில் காரை நிறுத்திவிட்டு, அவளைப் பார்த்தான் ஜோரிக்.

“நேற்றிலிருந்து, இப்ப வரைக்கும் எவ்வளவோ உதவி செய்திட்ட ஜோரிக்.”

“இதையே எத்தின தடவைகள் சொல்லிக் காட்டுவ?” பட்டென்று சலிப்போடு இடையிட்டான், அவன்.

“உன்ர இடத்தில ஆர் இருந்திருந்தாலும், ஏன் என்ர இடத்தில வேற ஒருத்தர் இருந்திருந்தாலும் உதவி செய்துதான் இருப்பீனம். நீ என்ர தாத்தா, பாட்டிக்குத் தெரிஞ்சவள் எண்டதால அங்க கூட்டிக்கொண்டு போனன். அதனால திரும்ப திரும்பப் பெரிசா எதையோ செய்திட்டன் போலச் சொல்லிக் காட்டாத!”

அவள் அப்படிச் சொல்லிக் காட்டுவதைச் சற்றும் இரசிக்கவில்லை எனும் நோக்கில் இருந்தது, அவன் சொன்னவிதம். இருந்தாலும், ஏதோ கடமையைச் செய்யும் பாவனையில் தான் இருந்தான் அவன்.

மீரா அதையெல்லாம் கவனிக்கவில்லை.

“சரி சரி…சொல்லி எல்லாம் காட்டேல்ல.” இலகுவாகச் சொல்லி, அழகாக முறுவலித்தாள்.

“ஆனால், விடியவெள்ளனவே என்னோட இங்க வரை வந்தவனுக்கு ஒரு கப் காஃபி குடுக்கலாம் தானே?”

தலையைச்சரித்து, விழிகளிரண்டும் குறும்பில் மின்ன அவள் கேட்ட பாவனையில், அவனையும் மீறி இலேசாக முறுவலித்தான், ஜோரிக்.

பீட்டர், ஹெலனிடம் விடைபெற்றுக் காரில் ஏறியதிலிருந்து இவள் தானே லொடலொடத்தபடி வந்தாள். பலவேளைகளில் அவனிடமிருந்து ‘ம்’ தான். மிகச்சில சமயங்கள் “அப்பிடியா?” அவ்வளவும் தானே? அப்படியிருக்க, இப்போ இலகுவாக முறுவல் செய்தானல்லவா?

“நீயும் உள்ளுக்கு வா ஜோரிக்.” சட்டென்று கேட்டுவிட்டாள், இவள்.

முதல்நாள் நடந்தவற்றைச் சொல்லி, அவனை நல்லபடி அறிமுகம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்க, கணமும் யோசியாது பதில் வந்தது.

“இல்ல மீரா, இன்னொரு நாளைக்குப் பார்ப்பம். எனக்கு நிறைய வேலைகள் இருக்கு!” மறுத்துவிட்டான்.

சட்டென்று மோதிய ஏமாற்றத்தோடு அவனை ஒரு பார்வை பார்த்தாள் அவள். அதை, வெகு இயல்பான பார்வையால் தாங்கிக் கொண்டான் அவன். அச்செய்கை வேறு அவள் மனதைச் சுருங்கச் செய்தது.

மறுவார்த்தை பேசாது இறங்கிவிட்டாள். தானும் இறங்கி, அவளது பைகளை வெளியில் எடுத்தவன், “நான் கொண்டுவந்து தரவா?” என்றதும், இவள் முகத்தில் கோபத்தைத்தான் காட்டினாள்.

‘உள்ள வா எண்டா முடியாதாமே! என்ர பாக்கை என்னால தூக்க முடியாது எண்டு இவர் கொண்டுவந்து தரப் போறாராம்! பெரிய அக்கறை!’ மனம் சிடுசிடுத்தது.

“உனக்குத்தான் நிறைய வேலைகள் இருக்கே! பிறகென்ன? இதுவரை கொண்டுவந்து விட்டதற்கு மிக்க மிக்க நன்றி!” பைகள் இரண்டையும் வாங்கிக் கொண்டாள்.

“நானே கொண்டு போவேன், நீ போயிட்டு வா!” என்றுவிட்டு, விறுவிறுவென்று நகர்ந்தவள், தன்னையும் அறியாதுதான் திரும்பிப்பார்த்தாள்.

அதுவரை அப்படியே நின்றிருந்தவன் இவள் பார்த்ததும், “பை” என்ற வேகத்தில் காரில் ஏறியமர்ந்து கிளம்பிச் சென்று விட்டான்.

“இல்ல..நானே கொண்டு வந்து தாறன் வா!” என்று வருவான், அப்படியே உள்ளே அழைத்துச் செல்லலாம் என்று தன்னையுமறியாது எதிர்பார்த்த இவள் மனம் தான் ஏமாந்து போனது!

அந்த ஏமாற்றமே முகத்தைச் சுருங்க வைத்தது மட்டுமில்லாது, ‘அப்படியொரு எதிர்பார்ப்பு எனக்கு எப்படி வரலாம்?’ என, தன்னையே தான் கடிந்தும் கொண்டாள்.

“என்ர வீட்டில யாருக்குமே உன்னில அவ்வளவு நல்லெண்ணம் இல்லையே எண்டு அறிமுகம் செய்து வைக்க நினைச்சன். அதுகூட ஏன்? அந்தரம் ஆபத்தில் இத்தனை உதவிகள் செய்தாய் என்றதால் தான். ஆனால், நீயோ? பச்! பெரிய இவன் கணக்கில நடந்து கொள்ளுற!” முணுமுணுத்தவளுக்கு, அவனோடு இயல்பாகக் கதைத்துப் பேசும் தன்னில்தான் கோபம் வந்தது.

“அண்டைக்கு டோவரில அந்தக் குதிகுதிச்சவன் தானே? அதோடு, சாப்பிட வந்தால் அதைப் பார்த்திட்டுப் போக வேணும் அப்பிடி இப்பிடியெல்லாம் பீட்டரிட்டச் சொன்னதாக அவே சொல்லேல்லையா? உன்னில நல்லெண்ணம் இல்லாத ஆளோடு உனக்கென்ன கதை வேண்டிக் கிடக்கு?” முணுமுணுத்தபடிதான் வீடு நோக்கி நடந்தாள்.

கேட்டிலிருந்து சற்றே உள்ளே அமைந்திருந்தது இவள் வீடு.

கரமிரண்டிலும் பைகள் நல்ல கணமும் தான். தோளில் கைப்பை. மனதிலும் ஏனோ பாரம். நேற்று நடந்ததை மறைத்துவிட்டோமே என்ற சஞ்சலம். இப்படிக் கலவையான உணர்வுகளோடு முன்வாயிலை அணுகி, கையிலிருந்த பையைக் கீழே வைத்துவிட்டு அழைப்புமணியை அழுத்த முனைகையில், கதவு திறந்து கொண்டது.

“மீரா…வந்திட்டாயாம்மா? இவ்வளவு வெள்ளணத்தோட வந்திட்ட!”

மகளைக் கண்டதும் அன்போடு அழைத்தபடி அவளின் பைகளைத் தூக்கிய நித்தியின் முகத்தில் யோசனை!

“என்னம்மா ரெண்டு பாக்? ரூமில இருந்த எல்லாத்தையும் கொண்டு வந்திட்டியா?” என்றவாறே மகளிடம் திரும்ப, அவளோ, நுழைந்த வேகத்தில் கைப்பையை ஒற்றைச் சோஃபாவில் போட்டுவிட்டு எதிர்புறமிருந்த இரட்டைச் சோஃபாவில் குப்புற விழுந்து விட்டாள்.

தாயைக் கண்டதும் முதல் நாள் நடந்தவற்றை மறைத்தது மட்டும் தான் நினைவில். மிச்சமெல்லாம் சத்தமே போடாது ஓடிப்போயிருந்தன.

கரத்திலிருந்த பைகளை அங்கே ஓரமாக வைத்துவிட்டு, “இங்க பார் மீரா…என்னம்மா?” பரிவாகக் கேட்டபடி, மகளிடம் விரைந்தார், நித்தி.

 

முதல் நாள், ‘வீட்ட வரப்போறன்.’ என்று வெளிக்கிட்டவளை, ‘வேணாம்; நாளைக்கு வா!’ என்று சொன்னதால் தான், அவள் கோபம் கொண்டுள்ளாள் என்ற நினைவில், மகளைச் சமாதானம் செய்யும் வகையில் பேச்சை ஆரம்பித்தார்.

“நேற்று அந்தப் புயலில வெளிக்கிட்டு வந்து, நடுவழியில் ஏதாவது நடந்திருந்தா? கொஞ்சம் யோசிச்சுப் பார் பார்ப்பம்.

எத்தின இடங்களில் விபத்து நடந்திருக்கு? நிறையப்பேர் காயப்பட்டிருக்கீனம். சிலர் செத்துப் போயிருக்கீனம். வீடுகள், வாகனங்கள் எண்டு எவ்வளவோ சேதமாம். பல மில்லியன் ரூபாய்கள் எண்டு செய்தியில் சொன்னவே, நீயும் கேட்டிருப்பத் தானே?

எத்தனையோ வருசங்களுக்குப் பிறகு, புயல் மழையால இப்பிடி ஒரு சேதம் எண்டு சொல்லீனம். அதையெல்லாம் பார்த்துப் பயந்து, உன்ர நல்லத்துக்குத்தானே வர வேணாம் எண்டனான். அதுக்கு அம்மாவோட கோபம் போல!”

கனிவோடு சொன்னவாறே, பாசமாய்த் தலை வருடிய தாய்க்கு, ‘நடந்ததைச் சொன்னால்?’ மிகையாய்த் தவித்துப் போனாள், மீரா.

நிச்சயம் கோபித்துக் கொள்வார். மனம் வருந்துவார். தம் நியாயமான ஆசைகளுக்கு என்றுமே குறுக்கே நிற்காத தாய், தந்தையை வருத்தும் வகையில் நடப்பதில் சிறு உடன்பாடும் இல்லாதவளுக்கு, முதல் நாள் அந்த மழையில் வீடு வரப் புறப்பட்ட தன் மீது தான் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

‘அப்பாவையும் காணேல்லையே! இப்ப நான் என்ன செய்யிறது? இப்பிடியே இருந்தா அம்மா என்னவோ ஏதோவெண்டு பயப்படுவார். மெல்ல மெல்ல நடந்ததைச் சொல்லீருவம்.’ மனதின் முடிவுக்கிணங்க, தடுமாறியபடி மெல்லத் தலையை உயர்த்தித் தாயைப் பார்த்து வாய் திறக்க முனைய, குறுக்கிட்டது, கார்த்திகேயனின் குரல்.

“அட…மீரா வந்திட்டயாம்மா?” என்றபடி வந்தவரைத் தொடர்ந்து, மதுரா, ஆரணி, ஆரபி கடைசியாக ஆதவ் என உள்ளிட்டார்கள்.

“மாமா!” சட்டென்று எழுந்தமர்ந்தாள், மீரா.

அவள் விழிகள் அவசரம் அவசரமாக மைத்துனன் ஆதவ்வை நாடி, அவன் விழிகள் சொன்ன செய்தியைக் கிரகித்துக்கொண்டது.

முதல் நாள் நடந்தவை கார்த்திகேயனுக்குத் தெரியும் என்பதை உணர்ந்தவளுக்கு, மனத்திலிருந்த அத்தனை தவிப்பும் பதற்றமும் வடிந்து போயின!

‘அப்பாடா! இனி மாமா பார்த்துக் கொள்ளுவார்.’ என்ற எண்ணத்தோடு, “வாங்கோ மாமா, இப்பத்தான் வந்தன்.” மலர்வோடு சொல்பவளை உற்றுப் பார்த்தார், நித்தி.

அதோடு, எதுவோ தோன்ற, சட்டென்று விரைந்து வெளியில் எட்டிப் பார்த்தவர் வாயிலில் நின்றே மகளை ஆராய்ந்தார்.

தாயின் பார்வை உணர்ந்து, “அம்மாக்கு மூக்கில வேர்த்திட்டு!” அருகில் வந்தமர்ந்த மைத்துனிமாரிடம் முணுமுணுத்தாள், மீரா.

“வாயைத் திறக்காத எரும மாடே! பெரிய கெட்டித்தனமான வேலைதானே செய்தனி!” அடிக்குரலில் சீறினாள், ஆரணி.

“அம்மா, அப்பாவுக்கும் சரியான கோபம். இனி உன்னோட கத்திறதால என்ன பிரயோசனம் எண்டு பேசாமல் இருக்கீனம். இப்பக் கொஞ்ச முதல் தான் ஆதவ் சொன்னவன். அம்மாட்ட நல்ல குட்டு வாங்கினவன் தெரியுமா?” கடிந்து கொண்டாள், ஆரபி.

“ஐயோ பாவம் ஆதவ்! நான் தான் சொல்ல வேணாம் எண்டனான்.” என்றதைக் கேட்டபடி வந்தமர்ந்த மதுரா, ஒரு பார்வையால் மீராவைத் தடுமாற வைத்தார்.

“வீட்டுப் பெரியவே ஒண்டு சொன்னால் அதைக் கேட்டு நடக்கிறதால ஒண்டும் நட்டம் வந்திராது. இது உனக்கு நல்ல பாடம் மீரா. இனிமேல் பட்டு வேணாம் எண்ட ஒண்டைச் செய்ய நினைக்காத!” எச்சரிக்கை.

‘இவள் எதையோ நடத்தியிருக்கிறாள். அது அண்ணா ஆட்களுக்கும் தெரிஞ்சிருக்கு!’ நிச்சயப்படுத்திக் கொண்டார், நித்தி.

“என்ன அண்ணி நடந்தது? மீரா உன்ர கார் எங்க? உன்னைக் கண்ட சந்தோசத்தில வந்த சத்தம் கேட்கேல்லயே எண்ட நினைப்பே வரேல்ல. அதோட, காரை எப்பவும் உள்ள தானே நிற்பாட்டுவ? எங்க காணேல்ல?” என்றபடி, மகளை அணுகினார், அவர்.

“நித்தி! கொஞ்சம் அமைதியாச் சொல்லுறதக் கேள். இனி அவளப் பேசுறதால(திட்டுவதால்) எந்தப் பிரயோசனமும் இல்ல.” என்று ஆரம்பித்து, நடந்ததைச் சொன்னார் கார்த்திகேயன்.

தமையனை அதிர்வோடு பார்த்திருந்த நித்தியால், அவ்வளவு இலகுவில் மகளுக்கு நடந்த விபத்தையே சீரணிக்க முடியவில்லை.

அப்படியிருக்கையில், அதைச் சொல்லாமல் மறைத்தும் இருக்கிறாள்.

error: Alert: Content selection is disabled!!