‘இதுநாள்வரை இல்லாத புதுப்பழக்கம் இது!’ என்ற எண்ணத்தை மேவி, ‘தெரிந்தவர் வீடே எண்டாலும் ஒரு வார்த்தை சொல்லாமல் கொள்ளாமல் தங்கியிருந்துவிட்டு வந்திருக்கிறாளே!’ என்றதில் ஆத்திரம் தான் எகிறியது.
இத்தனைக்கும் கண்டிப்பும் கறாருமான தாயும் அல்லவே அவர்.
மகளை அவர் பார்த்த பார்வையில் வருத்தமே வெளிப்பட்டது.
“இத்தனை நடந்திருக்க, அம்மா அப்பாட்டச் சொல்ல வேணும் எண்டு நீ நினைக்கேல்லத் தானே?” கேட்டவர் குரலிலும் வலி!
“அம்மா…அது வந்தம்மா…” பதற்றத்தோடு குறுக்கிட்டாள், மீரா.
“மாமி, கார் அக்சிடென்ட் ஆனதும் எனக்குச் சொல்லீட்டாள். பீட்டர் வீட்ட போகும் போதே சொல்லி, பிறகு அவரோடும் கதைச்சனான்.” பெரியவனாகக் குறுக்கிட்டான், ஆதவ்.
“நீ இங்க ஒண்டும் கதைக்கத் தேவையில்லை ஆதவ்!” கண்டிப்போடு இடையிட்டார், மதுரா.
“உங்களுக்கு எல்லாம் மனசில என்ன நினைப்பு? கொஞ்சம் வளர்ந்தால் எல்லாமே நீங்களாக முடிவெடுக்கலாம் எண்டு நினைச்சிட்டீங்க போல! அவள் தான் சொல்ல வேணாம் எண்டால், நீயும் மறைக்கிறதா?” தொடர்ந்து சீறினார்.
அவர் மகனிடமிருந்து இந்தச் செயலை சற்றும் எதிர்பார்க்கவில்லையே!
“இல்லம்மா; நேற்று இங்க சொல்லியிருக்க, நீங்க எல்லாரும் பயந்து அங்க போக வெளிக்கிட்டிருப்பீங்க!”
“அதுக்காக? இதெல்லாம் சாட்டு ஆதவ். இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கட்டும்!” அவரின் எச்சரிக்கையில் முகம் சுருங்கிப் போனான், ஆதவ்.
இது நாள் வரை, தாய் கடிந்து கொள்ளும் வகையில் நடந்து கொண்டவன் இல்லை. தாயின் கடுமை மனத்தில் வெகுவாகத் தாக்கி விழிகளைக் கலக்கியது. அதை மறைக்கப் பெரும் பிரயத்தனம் செய்தான், அவன்.
இதையெல்லாம் அவதானித்த மீராவுக்கு வருத்தமே மிஞ்சியது. அவளால் அல்லவா?
“ஹையோ மாமி, என்ன ஏசிறது எண்டாலும் என்னச் சொல்லுங்கோ, ஆதவ் பாவம்!” பரிந்துகொண்டு வந்தாள்.
“நீ வாயைத் திறக்காதே சொல்லிப்போட்டன்!” நித்தியின் சீறல்.
“எல்லாம் உங்கப்பா குடுக்கிற செல்லம். எல்லாரும் வீட்டில இருந்து படிக்கப் போனா நீ மட்டும் அறையெடுத்திருந்து படிப்பு. இப்பப் பார். சரி, சொல்லுறதக் கேட்டாலும் பரவாயில்லை. யாரோ எவனோ வெள்ளைக்காரன் வீட்டில போய்த் தங்கியிருக்கிறயே!”
“யாரோ எல்லாம் இல்லை மாமி, பீட்டர் ஹெலன். எனக்கும் அவையளைத் தெரியும், வயது போன ஆக்கள்.” மீண்டும் ஆதவ்.
“வயது போனவர்களோ இளமையானவர்களோ அது இல்லை பிரச்சினை. இன்னொரு வீட்டில போய்த் தங்க முதல் அம்மா அப்பாட்டச் சொல்ல வேணும் எண்டு நினைக்கேல்லையே இவள்.”
குற்றம் சாட்டிய நித்தி, “மீரா!” என்ற குரலில் வாயிலைப் பார்க்க, எல்லோர் பார்வையும் அங்கேதான் சென்றது.
அங்கு, ஜோரிக் நின்றிருந்தான்.
ஒரே பார்வையில் வீட்டினுள் நிலைமை சரியில்லையென்று உணர்ந்தவன், நேரம் கடத்த முனையவில்லை.
“உன்ர ஃபோனைக் காரில விட்டுட்ட. ஆதவ் கோல் பண்ணியதில தான் நானே கவனிச்சன். அதுதான் தந்திட்டுப் போக வந்தன்.” வாயிலில் நின்றே கைப்பேசியை நீட்டினான்.
“வா…வா…உள்ள வா ஜோரிக்!” விரைந்தவளின் கரம் கைப்பேசியை வாங்கிக் கொள்ள, “ப்ளீஸ் ஜோரிக், ரெண்டு நிமிசம் உள்ளுக்கு வந்திருந்திட்டுப் போ!” அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொன்னவளின் சுண்டிப்போயிருந்த முகம் பார்த்து என்ன நினைத்தானோ, அவளோடு உள்ளே வந்தான், அவன்.
அவனை அனைவருக்குமே அடையாளம் தெரிந்தது. அதோடு, இவனை அங்கு யாருமே சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்றைக்குமே!
‘மனங்களின் உணர்வுக்கோலங்களைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிவிடும் கண்ணாடி நாம்’ என்று பறைசாற்றும் அவர்களின் முகபாவங்களே அதைச் சுட்டி நின்றன.
சற்றுமுன், மீரா புறப்பட்டு விட்டாளா? எதில் வருகிறாள்? என்று கேட்கத் தான் அழைத்திருந்தான், ஆதவ். அப்போது, அந்த அழைப்பை ஏற்றுக் கதைத்திருந்தான், ஜோரிக். மீரா வீடு வந்துவிட்டதைச் சொன்னவனும் அவனே!
“ஃபோனைக் காரில விட்டுட்டுப் போய்ட்டாள். இதோ, கொண்டுவந்து தாறன்.” என்றும் சொல்லியிருந்தான் தான்.
வீட்டில் அடுத்தடுத்து நடந்தவற்றில் அதை மறந்து விட்டான் ஆதவ். அப்போதும் ‘டாக்சியில் வந்தாளோ!’ என்றுதான் நினைத்திருந்தான்.
அது பார்த்தால்?
‘இந்த டோவர் சிடுமூஞ்சியோட மீராவா?’ என்ற ஆச்சரியம் அவனுக்கு மட்டுமா என்ன? மொத்தக் குடும்பத்துக்கும் தான்.
மீராவோடு உள்ளே வந்த ஜோரிக், “ஹாய்…நான் ஜோரிக்!” முதலில் எதிர்ப்பட்ட கார்த்திகேயனோடு அறிமுகம் செய்து கொண்டான்.
சிடுசிடு என்று நின்ற மதுரா, நித்தி இருவரிடமும் புன்னகையோடு “ஹை” சொன்னான்.
“இரு ஜோரிக்!” மீராவின் குரலில் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
மீரா அதற்குப் பிறகு கணமும் தாமதிக்கவில்லை. முதல் நாள் வீடு வரப் புறப்பட்டதிலிருந்து நடந்ததைக் கடகடவென்று சொல்லச் சொல்ல, ஒவ்வொருவருள்ளும் ஒவ்வொருவகை உணர்வு.
“அடி கள்ளி! பொய்யா சொன்னனீ? பீட்டர் பீட்டர் எண்டதை நம்பினனே!”
மீராவின் கழுத்தைப் பிடித்து நெரிப்பது போல பாவனை செய்தான், ஆதவ்.
“இல்லடா ஆதவ்; அப்ப மட்டும் இவன் எண்டு சொல்லியிருந்தால் இவன் டோவரில் செய்த கூத்திட நினைவில நீயே வெளிக்கிட்டு வந்திருப்ப எல்லா? அதுதான் சொல்லேல்ல.”
வெட்டும் பார்வை ஜோரிக்கைத் தொட்டுவர, நெதர்லாந்து மொழியில் அவள் சொன்ன விதத்தில், ‘பார் இவளிட துணிச்சலை?!’ மனதில் தான் முறுக்கினான், ஜோரிக்.
வீட்டினரைச் சமாளிக்க மீரா படும் அவஸ்தையைப் பார்த்து ஒருபுறம் பாவமாகக் கூட இருந்தது.
வாழ்வில் இதுவரை, அவனுக்கோ அவன் தங்கைக்கோ இப்படியொரு சந்தர்ப்பம் நிகழ்ந்ததே இல்லையே! யாருக்கும் எதற்கும் பதில் சொல்லும் தேவையின்றியே வளர்ந்தார்கள் இல்லையா?
மறுபுறமோ, மீரா என்பவளில், அங்குள்ள அவளின் உறவுகளின் அக்கறையின் வெளிப்பாடாகவே இந்தக் கண்டிப்பைக் கண்டவனுக்கு இலேசாக ஒரு ஏக்கம்!
கண்டிப்பையோ, அன்பையோ அள்ளித் தந்த உறவினரின்றி வளர்ந்தவர்கள் அவர்கள். என்னதான் பீட்டர், ஹெலன் இருந்தாலும் என்றைக்குமே இவர்களின் சுதந்திரத்தில் எட்டிப் பார்த்தவர்கள் இல்லை.
தொடர்ந்து அங்கிருந்து நடப்பவற்றைப் பார்க்கப் பிடிக்கவில்லை, அவனுக்கு. அங்கிருந்தோர் பார்வையில் இருந்தே, தன் வரவை அவர்கள் விரும்பவில்லை என்றுமுணர்ந்தவன், சட்டென்று எழுந்து விட்டான்.
“எனக்கு மீராவை முதலே தெரியும். மீராவுக்கு என்னைத் தெரியாது. என்ர தாத்தாட ரெஸ்ட்டோரண்டில சாப்பிட வரேக்கக் கண்டிருக்கிறன்.” என்றவன், “அண்டைக்கு டோவரில உங்கட மனம் நோகும் படி நடந்திருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்க!” கார்த்திகேயனின் கரம் பற்றிச் சொன்னான்.
“மற்றும் படி, தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மீரா எண்டால் நல்ல விருப்பம். நேற்றே இங்க வர முடிஞ்சிருந்தாக் கூட்டிக் கொண்டு வந்து விட்டிருப்பன். முடியாததால் தான் தாத்தா பாட்டி வீட்டில கொண்டு போய்விட்டன்.” என்றவனோடு எப்படி முகத்தை நீட்டுவது? நன்றிதானே சொல்ல வேண்டும் .
அதைத்தான் செய்தார், கார்த்திகேயன்.
“கஃபே குடிச்சிட்டுப் போங்களேன்.” என்ற அவரின் உபசரிப்பையும் மறுத்த வேகத்தில் அவன் வெளியேற, மாறி மாறி நன்றாகவே திட்டு வாங்கிக் கொண்டாலும் மனதில் ஒருவகை அமைதி மீராவுக்கு!
இல்லையோ, ஜோரிக் பற்றி எப்படிச் சொல்வதென்று குழம்பி, அதற்காகத் தனியாகத் திட்டு வாங்கியிருப்பாளே!
‘இப்பவோ எல்லாம் சொல்லியாச்சு. அப்பாடா! இனிமேல் பட்டு சின்ன விசயமும் வீட்டுக்கு மறைக்கக் கூடாது.’ என்ற முடிவோடுதான் தன்னறை நோக்கிச் சென்றாள் அவள்.
“இனி, திரும்ப திரும்ப இதையே கதைக்க வேணாம் நித்தி!”
தங்கைக்குச் சொன்ன கார்த்திகேயன் குடும்பம் விடைபெற்றுச் சென்றபின்னும் அசையாது அமர்ந்திருந்தார், நித்தி.

